கிராம ஊராட்சிகளை அழித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. நகரமயமாக்கலால் பறி போகும் விளை நிலங்கள், நீர் நிலைகள், இயற்கை வளங்கள்.. விஸ்வரூபமெடுக்கும் ரியல் எஸ்டேட் மாபியாக்கள்..! ராஜிவ் காந்தியின் லட்சியக் கனவானபஞ்சாயத்து ராஜ் சிதைந்து கொண்டிருப்பதை எப்படி வேடிக்கை பார்க்கிறது காங்கிரஸ்?
தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே திருத்தணி வரை பல நூறு கிராம ஊராட்சிகளை வலுக்கட்டாயமாக நகர்ப்புறமாக மாற்றி வரும் நிலையில், தங்கள் ஊராட்சி ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என மக்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கிறது சத்தியமூர்த்தி பவன்.
ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் பேச வேண்டும்?
இன்றைக்கு இந்தியா முழுவதும் கிராம ஊராட்சிகள் வலுவாக நம் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற உள்ளூர் அரசாங்கங்களாக இருக்கிறது என்றால், அதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் பல எதிர்ப்புகளை மீறி பஞ்சாயத்து ராஜ் கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் தான் முக்கிய காரணம் என்பது நாடறியும். மறந்து விட முடியாத வரலாற்று முன்னெடுப்பு அது. சாமானிய மனிதரும் தன் அதிகாரத்தை உறுதி செய்யும் கிராம சபையில் பங்கெடுக்க முடிகிறது என்றால், அது நேருவின் வழித் தோன்றலான ராஜிவ் காந்தியின் முயற்சியினால் வந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினால் தான். அவர் மறைவுக்குப் பின் கொண்டு வரப்பட்ட 73 வது சட்ட திருத்தத்தினால் தான் இன்று கிராம பஞ்சாயத்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வாய்மூடி இருக்கிறது பஞ்சாயத்து ராஜ் கொண்டு வந்த கட்சி!
பல கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சிகள் அல்லது நகராட்சிகள் அல்லது மாநகராட்சிகளோடு வலுக்கட்டாயமாக இணைக்க மிக வேகமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அரசு. இதனை எதிர்த்து அப் பகுதிகளின் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் குழுக்கள், இளைஞர்கள் எனப் பலர் போராடி வருகிறார்கள். மக்களின் எதிர்ப்பையும் மீறி மாநில அரசு இந்த வலுக்கட்டாயமான நகரமயமாக்கலை நோக்கி அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கள் ஊராட்சி, ஊராட்சியாகவே இருக்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட கிராமசபை தீர்மானங்கள் மதிக்கப்படுவதில்லை. ஊராட்சி மன்ற தீர்மானங்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றன. அரசமைப்புச் சட்டம் ஊராட்சிக்கு வழங்கியுள்ள கூறுகளை மதிக்காமல் வலுக்கட்டாயமாக ஊராட்சி தலைவர்களிடம் தீர்மானங்களைக் கேட்டு வாங்கும் அரசுக்கு எதிராகப் பஞ்சாயத்து ராஜ் கொண்டு வந்த கட்சி தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்றால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் அதிகாரங்களை, கிராமசபை அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா தமிழ்நாடு காங்கிரஸ், என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
பறிபோகும் 100 நாள் வேலை! வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்
பல சமூக அமைப்புகளின் முயற்சியால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு சட்டம். இன்று ஊரகப்பகுதிகளில் பல மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாகவும், வள ஆதாரங்களை உருவாக்குவதற்கான காரணமாகவும் இருந்து வரும் இந்த திட்டத்தினை முழுமையாக இழக்கப் போகிறோம் எனப் பாதிப்புக்கு உள்ளாகும் ஊராட்சிகளின் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். எங்கள் ஊராட்சி ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என்று எங்கெல்லாம் போராட்டங்கள் நடக்கின்றதோ அங்கெல்லாம் முதல் வரிசையில் இருப்பவர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்தான். எந்த சூழ்நிலையிலும் இந்த வேலையை இழக்க நாங்கள் தயாராக இல்லை என்று போராடும் லட்சக்கணக்கான பெண்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு காங்கிரஸ் ஏன் ஒரு அறிக்கையினை கூட வெளியிடவில்லை?
பறிபோகும் அரசமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரம்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசமைப்புச் சட்டத்தினை பேசு பொருள் ஆக்கியதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. ராகுல் காந்தி அவர்கள் செல்லும் இடமெல்லாம் இன்றைக்கும் அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புச் சட்ட புத்தகத்தைக் கையில் ஏந்தியபடியே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதைப் பார்த்தோம். அதே அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஊராட்சி அதிகாரங்களை, கிராமசபை அதிகாரங்களை, 100 நாள் வேலைத் திட்ட அதிகாரங்களை மக்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள், அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டாமா? அரசமைப்பு வழங்கிய அதிகாரங்கள் சாமானிய மக்களின் கண் முன்னே பறிக்கப்படும் போது அதனைக் காக்க முன் வர வேண்டாமா இப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள்.
கொந்தளிப்பில் குமரி மாவட்டம்
தமிழகத்தில் இயற்கை எழில் ததும்பி விளையாடும் மாவட்டங்களில் முதன்மையானது குமரி. தற்போது அதி சிதைக்கும் நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. இதனால் குமரி மாவட்ட ஊராட்சிகளை வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி உருவானத்ற்கே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது 95 கிராம ஊராட்சிகள், 51 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சி ஆகியவை உள்ளது. இந்த நிலையில் 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும், 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதைக் கேட்டு அதிர்ந்த ஊராட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான போராட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடந்த நிலையில் அவ்வாறு அரசிடம் திட்டம் ஏதும் இல்லை என்று பொய் வாக்குறுதி தந்து நயவஞ்சமாக அமல்படுத்தி வருவதை எதிர்த்து மீண்டும் மக்கள் போராட்டம் நடந்து கொண்டுள்ளது.
இன்னொரு வயநாட்டு பேரழிவை தமிழகத்தில் பார்க்க வேண்டுமா?

மலைகளின் அரசி எனப்படும் உதகை தற்போது நகராட்சி அந்தஸ்தில் உள்ளது. இங்கு 36 வார்டுகள் உள்ளன. 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இருக்கும் உதகையின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் ஆகும். தற்போது உதகை நகராட்சியில், மொத்தமே ஒன்றேகால் லட்சம் பேர் தான் வசிக்கின்றனர். இதை மா நகராட்சியாக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதே தேவையற்ற அதிக வணிக நிறுவனங்கள் சுமார் 3,500 இங்கு உள்ளது. மா ந்கராட்சியாக்கப் பெற்றால், இது ஐந்து மடங்காகும்.இந்தப் பகுதியின் இயற்கை எழில் அடியோடு நாசமாகும். அடுத்த வய நாடாக இது மாறும் ஆபத்தை நாமே ஏற்படுத்தக் கூடாது.
ஜுன் மாதம் 5-ம் தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆணையாளர் ஏகராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் மாநகராட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதானது பேரதிர்ர்சியாக உள்ளது. இதன்படி உதகை நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி மற்றும் இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை உதகை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
Also read
இதற்கு, கேத்தி உள்ளிட்ட அனைத்து கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கண்ட கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாக்குபெட்டா படுகர் நல அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், உதகை நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள் உதகை நகராட்சியின் மாநகராட்சி விரிவாக்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள், இத்தலாரில் கடைகளை அடைத்து, ஆர்பாட்டம் போன்ற பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல கனவுகளோடு பஞ்சாயத்து அதிகாரங்களை பெற்றுத்தந்த ராஜீவ்காந்தி அவர்கள் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்ட இடம் ஸ்ரீபெரும்புதூர். அதன் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சித் தலைவரும் தமிழ்நாட்டில் தற்போது ஆபத்துக்குள்ளாகி இருக்கும் பஞ்சாயத்துகளைக் காக்கக் குரல் குரல் கொடுக்க வேண்டும்! போராடி கொண்டிருக்கும் பல நூறு பஞ்சாயத்துகளைக் காக்க முன்வர வேண்டும் பஞ்சாயத்து ராஜ் கொண்டு வந்த கட்சி!
கட்டுரையாளர்; நந்தகுமார் சிவா
சமூக செயல்பாட்டாளர்
நாட்டில் வசிக்கும் மக்கள் எல்லோரும் ஒன்று தான் என்பது உண்மையானால் மகாமாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊர்ராட்சி, நகரம், கிராமம் என்ற பாகுபாட்டுடன் வசதி வாய்ப்பு ஏற்ற தாழ்வுகளுடன் உள்ளதேன்?
ஆனால் மேற்குறிப்பிட்ட ஊரகம் நகரம் ஊராட்சி மகா மாநகராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய எம்எல்ஏ தொகுதிகள் எம்பி தொகுதிகள் இவற்றின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றனவே இதில் ஏன் பாகுபாடு இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு பாகுபாடு அற்ற வசதி வாய்ப்புகள் இருக்கும் பொழுது தேர்ந்தெடுக்கும் குடியுரிமையாளர்களுக்கு வசதி வாய்ப்புகளில் பாகுபாடுகள் உள்ளது இதற்கு யார் குரல் கொடுப்பார்.