திமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?

-சாவித்திரி கண்ணன்

என்ன நடந்து கொண்டுள்ளது தமிழக அரசியலில்? திசை மாறிப் பயணிக்கிறதா திமுக? உண்மை நிலவரம் என்ன..? கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டின் பின்னணியில் நடந்த சம்பவங்கள் என்ன..?

இது வரை 1964 தொடங்கி தற்போது வரை சுமார் 150-க்கும் மேற்ப்பட்ட நினைவு நாணயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம், பண்டிட் தீன தயாளு உபாத்யாயா, பேறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்..போன்ற பலருக்கு நினைவு நாணயம் வெளிவந்துள்ளன. அந்த வகையில் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட நூறு ரூபாய் நாணயம் என்பது ஒரு சாதாரண நிகழ்வே. ஆனால், எந்த நாணய வெளியீடும் இவ்வளவு ஆடம்பரமாக, மிகுந்த பொருட் செலவில் நடத்தப்பட்டதேயில்லை. இப்படி வெளியிடப்படும் நாணயங்கள் வெறும் அடையாளச் சின்னங்கள் தாம். அதனால், இவற்றை பெருவாரியாக அச்சிட்டு மக்களின் புழக்கத்திற்கு விடுவதில்லை.

பிரம்மாண்டமான முறையில் இந்த நிகழ்வுக்கு சென்னையை மிரட்டும் வண்ணம் ஏகப்பட்ட கிராமபுறக் கலைஞர்கள், ஐம்பதடிக்கு ஒரு மேடை என்பதாக அண்ணாசாலை அண்ணா சிலை தொடங்கி கருணாநிதி சமாதி வரை பல இடங்களில் அலங்கார மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதற்காக ஆள் பிடிக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக தலைக்கு ஐநூறு ரூபாய் தந்து மக்கள் அழைத்து வரப்பட்டு சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டனர். கண்ணைக் கவரும் ஒளிவிளக்கு அலங்காரங்களால் மெரீனா கடற்கரை சாலை முழுக்கவும் தகதகத்தது. எல்லாமே மக்கள் வரிப்பணத்தில் அரங்கேற்றப்பட்டன. அண்ணா அவர்களின் நினைவு நாணய வெளியீடு எப்படி விளம்பரமின்றி நடத்தப்பட்டது என்பதை இன்றைய திமுக தலைமை உணர வேண்டும். எம்.ஜி.ஆர் நினைவு நாணய வெளியீடு கூட பாஜக தலைவர்களை அழைத்து வெளியிடப்படவில்லை.

இத்தனை ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு பின்னணியில் உள்ள சம்பவங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. திமுகவின் வேண்டுகோளுக்கு இணங்கவே மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில்  கருணாநிதி நினைவு நாணயம் கொண்டு வரப்பட்டது. எனவே, திமுகவினர் முதல் சாய்சாக நிர்மலா சீதாராமனைத் தான் அழைத்தார்கள். அந்தம்மா ஒரு சிறிது கூட நேரம் எடுத்துக் கொள்ளாமல் சட்டென்று, ”நான் வர முடியாது. என்னை அழைக்காதீர்கள்” என முகத்தில் அறைந்தது போல பதில் சொல்லிவிட்டாராம். அடுத்ததாக ராஜ்நாத் சிங்கை அழைக்கும் பொறுப்பை துரைமுருஅக்ன் தான் முன்னெடுத்துள்ளார். ராஜ் நாத் அவர்களோ, ”மோடியிடம் கலந்து பேசி சொல்கிறேன்” என்றாராம். மோடியோ, ”ராஜய சபையில் நமக்கு பலம் குறைவாக உள்ளது. சில மசோதாக்களை நிறைவேற்றும் போது ஆதரிக்காவிட்டாலும் வெளி நடப்பு செய்வதன் மூலம் அந்த மசோதாவை கரையேற்ற நமக்கு திமுகவின் 10 ராஜ்யசபா உறுப்பினர் ஆதரவு தேவை. ஆகையால் தானே வந்து வலையில் சிக்கும் மீனை நழுவவிடுவானேன் போய் வாருங்க.., பிரச்சினை இல்லை’’ என்ற பிறகு ஒகே சொல்லி உள்ளார்.

செப்டம்பர் 20 தொடங்கி 25க்குள் ஒரு தேதி ராஜ்நாத்திடம் திமுகவினர் கேட்டுள்ளனர். அவரோ, ”ஆகஸ்ட் 18 நான் வர வாய்ப்புள்ளது. வேறு எந்த தேதியிலும் வாய்ப்பில்லை” என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். ”அப்படியானால் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நீங்க வந்தாலே போதுமானது” என ஒத்துக் கொண்டே இந்த நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது. இந்த நிகழ்வை ராஜ்நாத் சிங், ‘கருணாநிதிக்கும், பாஜகவிற்கும் உள்ள உறவையும், வாய்பாய் ஆட்சி தொடர கருணாநிதி கொடுத்த ஆதரவுகளையும் நினைவு கூர்ந்து சூசகமாக பாஜக- திமுக உறவு என்பது நிகழ முடியாத ஒன்றல்ல..’ என்பதை உணர்த்தினார்.

இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனத்திற்கு உரியதாகும். பாஜக தலைவர்களை திமுக தலைவர்கள் வரவேற்ற விதம், அவர்களிடம் குழைந்து பேசிய விதம், அவர்களை உபசரித்த விதம், தாங்கள் அவர்களுக்கு பெரு முக்கியத்துவம் தருவதாக உணத்திய விதம்.. என யாவற்றிலும் மிகையான அக்கறை வெளிப்பட்டது கண் கூடாகவே தெரிந்தது. அதுவும் அண்ணாமலையை விசேசமாக உபசரித்து முக்கியத்துவம் தந்தனர். நினைவு நாணயம் வெளியிட வந்த ராஜ் நாத் சிங் கலைஞர் சமாதிக்கு வர வேண்டிய அவசியம் என்ன? கருணாநிதியின் புகைப்படக் கண்காட்சியை அனைத்து பாஜக தலைவர்களையும் அழைத்து திமுகவினர் காட்ட வேண்டிய தேவை என்ன?

அதுவும் கருணாநிதி சமாதியில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்த போது இரண்டாம் வரிசையில் நின்ற அண்ணாமலையை முன்புறம் வர வேண்டி ஸ்டாலின் ஒரு முறைக்கு இருமுறை அழைத்து முக்கியத்துவம் தந்ததென்ன…? இந்த நிகழ்வின் இறுதியில் அண்ணாமலையிடம் கார் பார்க்ங்கில் நின்றபடி அமைச்சர்கள் எ.வ.வேலுவும், உதயநிதியும்  நீண்ட நேரம் பேசியது என்ன..? நாளும், பொழுதும் திமுகவின் மீது வசை மழையையும், வன்மத்தையும் பொழிந்து வரும் அண்ணாமலையிடம் திமுக தலைமை பொதுவெளியில் காட்டிய அக்கறை இன்றைய திமுக தலைமை எந்த அளவுக்கு சோரம் போய்விட்டது என்பதன் அத்தாட்சியாகவே திகழ்ந்தது. இந்த நிகழ்வுகள் அங்கிருந்த திமுக தொண்டர்களிடம் வெறுப்பையும், வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்தின.

சில நாட்களுக்கு முன்பாக தன் பதவி காலம் முடிந்தும் ராஜ்பவனை காலி செய்து கொடுத்து வெளியேறாமல் அழிச்சாட்டியத்துடன் அமர்ந்திருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்திய தேனீர் விருந்தை கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் புறக்கணித்துவிட்ட நிலையில் ஸ்டாலின் எட்டு அமைச்சர்களுடன் சென்று கலந்து கொண்டார். அடுத்த நாளே ஆர்.என்.ரவி, ’திராவிடம் நாட்டை துண்டாடுகிறது’’ என்று பேசியதையும் திமுக பொருட்படுத்தவில்லை.

ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் இங்கு நடக்கும் எந்த ஒரு விளையாட்டு நிகழ்விலும் பிரதமர் மோடியை அழைத்து வந்து விழா நடத்தியது நினைவிருக்கலாம். அந்த நிகழ்வுகளில் மோடியும், ஸ்டாலினும் நெருங்கி உறவாடியதும் நினைவிருக்கலாம்.

இவை யாவும் பாஜக தலைவர்களுக்கு திமுக தலைமை நாங்கள் உங்கள் விசுவாசிகள் என்பதை உணர்த்தும் சிக்னல்கள் தாம்.

ஆனால், இதைக் கடந்து நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால்..,

# தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவது.

# தொழிலாளர் விரோத சட்டங்களை – அதாவது 12 மணி நேர வேலை – உள்ளிட்டவற்றை அமல்படுத்தி வருவது,

# அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து, ஒப்பந்தக் கூலிகளாக வேலை வாய்ப்பை மாற்றி வருவது

# ஆலோசகர்கள் என்ற பெயரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையாக ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ஊதியத்தில் அனைத்து துறைகளிலும் தனியார் துறை வல்லுனர்களை அமர்த்தும் போக்கு.

# கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தடங்களின்றி தருவதற்கு தோதாக கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்ப்பு மசோதா.

# இயற்கை வளங்களை சூறையாடி, தொழிற்சாலைகள் நிறுவத் தோதாக அதி தீவிர நகரமயாக்கல்.

# பழவேற்காடு தொடங்கி தமிழகத்தின் பல இடங்களில் அதானி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட நிலங்கள்.

# மின்சாரத் துறையில் அதானியின் ஏகபோகத்தை ஏற்று மிக அதிக விலைக்கு அதானியிடம் மின்சாரம் கொள்முதல் செய்வது.

# கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி கற்பழித்து கொலையானது  தொடங்கி வேங்கை வயல் குடி நீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, ஆம்ஸ்டிராங் கொலை என அனைத்திலும் சம்பந்தப்பட்ட பாஜகவினரை காப்பாற்றும் விதமாக காவல்துறை செயல்படுவது.

# தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பது.

# தமிழ்நாடு இந்து அற நிலையத் துறையில் சனாதனிகளின் கைகள் ஓங்கி இருப்பது.

# பக்தி பரவசத்தை உருவாக்கி ஓட்டு வேட்டையாட முருகக் கடவுள் மாநாட்டை நடத்துவது..

என திமுக எப்போதோ திசைமாறி பயணிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, இனி பாஜக திமுக உறவை கள்ள உறவென்றோ, ரகசிய உறவென்றோ நாம் அழைக்க வேண்டியதில்லை.

எடப்பாடிப் பழனிச்சாமியும், ஜெயக்குமாரும் பேசுவது டூ லேட். திமுக பாஜகவுடன் கள்ள உறவில் இருப்பதை கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம் நாம்.

தமிழ் நாட்டில் முன்பு அதிமுகவானது பாஜகவிற்கு பணிந்து போகும் ஆட்சியை நடத்தியதை விமர்சித்து தான் நம்மை போன்றவர்கள் சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க நேர்ந்தது. ஆனால், தற்போதோ திமுகவின் பெயரால், பாஜகவே இங்கு ஆட்சி செய்கிறதோ.. என்று கலவரப்படும் அளவுக்கு நிலைமை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நகர்விலும் காணக் கிடைக்கிறது.

தாங்கள் அடிக்கும் கொள்ளைகள், ஊழல்களுக்கு பிராசினையில்லாத ஒரு அரசியல் உறவை பேண வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு  ஏற்பட்டுள்ளது. மேலும், இளவரசர் உதயநிதிக்கு முடி சூட்டி அவரை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு தடையற்ற சூழலை உருவாக்கவும் இந்த உறவு திமுகவுக்கு அவசியப்பட்டிருக்கலாம்.

எது எப்படியானாலும்,  உடனடியாக திமுக- பாஜக கூட்டணி என்பது பகிரங்கமாக வெளிப்படாது. ஏனென்றால், அது திமுகவின் இமேஜை பாதிக்கும். ஆகவே, 2026 தேர்தல் நெருக்கத்தில் அதிமுக ஒத்துவராத பட்சத்தில் திமுகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க பாஜக எந்த மாதிரியான அஸ்திரத்தை கையில் எடுக்கிறது என்பதை பொறுத்தே திமுகவின் எதிர்காலம் உள்ளது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time