கொல்கத்தாவில் மருத்துவ மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதிக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் கொந்தளித்தது. கிருஷ்ணகிரி பள்ளியின் 13 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும், எங்குமே போராட்டம் நடத்தவில்லை. என்ன நடந்து கொண்டு இருக்கிறது..?
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள கந்தி குப்பத்தில் இயங்கும் பிரபல தனியார் பள்ளியான கிங்ஸ்லி கார்டன் பள்ளியில் என்.சி.சி முகாம் என்பதாக போலியான ஆட்களை வைத்து நடத்தப்பட்ட முகாமில் 13 பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் பள்ளி ஆசிரியர்களிடமும், முதல்வரிடமும் முறையிட்ட போது வெளியில் தெரியக் கூடாது. வீட்டில் பெற்றோரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லி மறைக்க முயன்றதும், இதில் பாதிக்கப்பட்ட மாணவி உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விஷயம் பொது வெளிக்கு வந்து அம்பலமானதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் 5 பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் 4 பேரும் மற்றும் இருவருமாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. அது வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
விஷயம் பெரிதாவதை உணர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகள் எடுக்க ஐஜி பவானீஸ்வரி. தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்திட ஆணையிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்து என்.சி.சி தலைமையகம் அந்தப் பள்ளியில் நாங்கள் என்.சி.சி.கேம்ப் எதுவும் நடத்தவில்லை என்று சொல்லிய பிறகு தான் போலியான நபர்களான சிவராமன், சுதாகர் போன்றோர் என்.சி.சி பேனரில் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளின் கற்பை சூறையாடி உள்ளனர் எனத் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை ஆழமாக உள்வாங்கி ஆதியோடந்தமாக யோசித்துப் பார்க்கையில் பொதுவாக இது போன்று மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் சம்பவங்களில் எல்லாம் தனியார் பள்ளிகள் ஒரே விதமாகவே செயல்பட்டு வருவது தெள்ளெனத் தெரிகிறது.
அது என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை பெற்றோரிடமோ, வெளியிலோ தெரிவித்துவிட வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். இதன் மூலம் தங்கள் பள்ளியின் இமேஜ் பாதிக்கப் படக் கூடாது என்பதில் மட்டுமே அவர்கள் குறியாக உள்ளனர். அதற்காக சகலவித தற்காப்பு தந்திரங்களையும் செய்கிறார்கள். ஏனென்றால், வெளியில் தெரிந்துவிட்டால் தாங்கள் இது வரை கட்டமைத்துள்ள இமேஜ் சரிந்து அட்மிஷன் குறைந்து விடும். அது வருமான இழப்பிலும் கொண்டு விடும் என நினைக்கிறார்கள். வானாளவிய தங்கள் செல்வாக்கால் அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள். ஊடகங்கள் அனைத்திலும் ஆனவரை தங்கள் பள்ளியின் பெயர் வராமல் ஒரு தனியார் பள்ளி என எழுதும்படி கேட்கிறார்கள். கிட்டத்தட்ட அதில் தனியார் பள்ளிகள் வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.
எனது 39 வருட இதழியல் துறை அனுபவத்தில் இதையே மீண்டும், மீண்டும் பார்க்கிறேன். சமீப கால உதாரணங்களைச் சொல்ல வேண்டும் என்றால், சென்னை அசோக் நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபால் என்பவர் பல்லாண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களை தொடர்ந்து செய்துள்ளார். இது பலமுறை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் கவனத்திற்கு சம்பந்தப்பட்ட மாணவிகளால் கொண்டு செல்லப்பட்ட போதும் மூடிமறைத்தே அலட்சியம் காட்டியுள்ளனர். அதில் ஒரே ஒரு மாணவியும், அவள் குடும்பமும் அநீதியை துணிச்சலாக தட்டிக் கேட்டது கவனம் பெற்றதும் பழைய மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான மாணவிகள் காவல்துறையில் துணிந்து புகார் தந்தனர். எல்லா விசாரணையும் நடந்து உண்மைகள் துல்லியமாக தெரிந்த பிறகு பள்ளி நிர்வாகத்தினர் மத்திய ஆட்சியாளர்களைக் கொண்டு அழுத்தம் தந்து ஆசிரியரை விடுவித்து தப்பித்துக் கொண்டனர்.
இதே போன்ற பாலியல் புகார்கள் மகரிஷி வித்யா மந்திர், சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளி, செட்டி நாடு வித்யாஷ்ரமம், கோவை சின்மயா பள்ளி..சென்னை கலாசேத்திரா நடனபள்ளி என அடுத்தடுத்து வெளிப்பட்டன. எல்லாமே மிகக் குறுகிய காலத்தில் மூடி மறைக்கப்பட்டுவிட்டன.
இதில் கள்ளக் குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி இது போன்ற கிரைம்களில் ரெக்கார்ட் பிரேக் ஏற்படுத்திய பள்ளி என்றால், மிகையாகாது. இந்தப் பள்ளி மாணவி ஸ்ரீமதி கற்பழித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் அந்தப் பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற தமிழக அரசும், காவல்துறையும் முழு மூச்சாக களம் இறங்கி இன்று வரை மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, நியாயம் கேட்டு போராடிய நூற்றுக்கணக்கான அப்பாவிகளை தண்டித்தது இன்று வரை தமிழக மக்கள் மனதில் ஆறாத ரணமாக உள்ளது.
படிப்பை விட ஒழுக்கமும், நேர்மையும் முக்கியமானது. ஒழுக்கத்தையும், நேர்மையையும் மறுதலிக்கும் கல்வியும் கல்வியல்ல. பள்ளியும் பள்ளியல்ல. இது போன்ற பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்ட புகார்களில் சமரசமின்றி குற்றவாளிகளைத் தண்டிக்க சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் முன் வந்திருந்தால் உண்மையில் அவர்கள் இமேஜ் பாதிக்கப்படாது. பல மடங்கு உயர்ந்திருக்கும்.
அதே போல அரசும் எந்த அழுத்தத்திற்கும் அடி பணியாமல் மாணவிகளை சீண்டும் குற்றவாளிகளை தண்டிக்காமல் விடாது என்ற எண்ணம் சமூகத்தில் பரவும் போது, எல்லா பள்ளி நிர்வாகங்களும் குற்றத்திற்கு துணை போகாமல் அரசுக்கு கட்டுப்படுவார்கள். தவறு செய்யும் ஆசிரியர்களுக்கும் துணிச்சல் வராது.
இதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளது எல்லாம் வெறும் கண் துடைப்பேயாகும்.
இந்த கிருஷ்ணகிரி சம்பவத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பள்ளியின் பெயரை மறைத்து ஒரு தனியார் பள்ளி என்று மட்டும் எழுதுவதும், பேசுவதும் கவனிக்கத்தக்கது. மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை இது போன்ற பள்ளிகள் மீது உருவாக்கி வெளிச்சம் பாய்ச்சிய ஊடகங்கள் இது போன்ற பிரபல பள்ளிகளில் தங்கள் ஊடக செல்வாக்கால் சீட்டு வாங்குவதும், விளம்பரங்கள் பெறுவதும் தடைபடக் கூடாது என்ற சுய நலத்தால் எந்த குற்றவுணர்வுமின்றி மறைத்து எழுதியும், பேசியும் நைச்சியமாக நடந்து கொள்கின்றனர்.. கைதான பள்ளி நிர்வாகிகள் படமும், பெயர்களும் நாம் தேடிய வகையில் எந்த ஊடகத்திலும் வரவில்லை. உண்மையில் இதுவும் குற்றத்திற்கு துணை போகும் செயல்பாடே.
குற்றவாளிகளை தண்டிக்க அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய ஊடகங்கள், சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி அறச் சீற்றத்தை தூண்ட வேண்டிய ஊடகங்கள் கண்டும், காணாதது போல செய்தி போடுவது இது போன்ற குற்றங்கள் பெருகவே வழிவகுக்கும்.
ஒரு பக்கம் அரசும், ஊடகங்களும் இது போன்ற அணுகுமுறைகளை கடை பிடிக்கிறார்கள் என்றால், தமிழக அரசியல் கட்சிகள் இது போன்ற விவகாரங்களுக்கு களம் காணாமல் தேர்தல் அரசியலில் மட்டுமே குறிக்கோளாக இயங்குவது வேதனையாக உள்ளது. கொல்கத்தா மாணவிக்காக தமிழகம் முழுமையும் அனைத்து மெட்ரோ சிட்டிகளிலும் போராட்டம் நடந்தன. ஆனால், கிருஷ்ணகிரி மாணவி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் களம் காணா மெளனம் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply