வேல்யாத்திரை வியூகத்தை வீழ்த்த திமுக,அதிமுக கூட்டணி!

சாவித்திரி கண்ணன்

தமிழக பாஜக வேல் யாத்திரை என்ற பெயரில் கையில் எடுத்திருக்கும் அரசியல் ஆயுதத்தை தமிழக திராவிடக் கட்சிகள் மிக நுட்பமாக எதிர் கொண்டு வருகின்றன!

இந்த யாத்திரையை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும்,கொந்தளிக்கும் தடுக்கத் துடிக்கும் …, அது பாஜகவிற்கு பெரிய விளம்பரமாக அமையும். முருகனைக் கும்பிடவும்,வழிபடவும் மறுக்கப்பட்டோம் என்பதை சொல்லி மக்களிடம் அனுதாபம் தேடலாம் என நினைத்தனர்.

ஆனால், பாஜகவின் தந்திரத்தை புரிந்து கொண்ட அதிமுக,திமுக தலைமைகள் இது பற்றி பொருட்படுத்தியதாகவே காட்டிக் கொள்ளவில்லை! அதே சமயம் அரசு இதை நிர்வாக ரீதியாக அணுகியது.அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதை அரசியலாக்கி அழிச்சாட்டிய அரசியல் செய்ய பாஜக தவித்தது. அதனால், சில நெருக்கடிகள் கொடுத்ததோடு,பாஜக படை திரட்டாமல் அமைதியாக நடத்திக் கொள்ளும்படி அதிமுக அரசு அனுமதித்தது. இதனால், பாஜகவின் வேல் யாத்திரை என்பது ரோட்டில் பாஜக தலைவர் வேல்முருகன் ஒற்றை நபராக தனித்து கையில் வேலுடன் வேனில் நின்றபடி ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே செல்லமுடிந்தது. மீடியாக்கள் இதை படம் பிடித்து சொல்லாவிட்டால் யாருக்குமே தெரியாது என்ற அளவுக்கு தான் நடத்த முடிந்தது! அதே சமயம் அவர்கள் படை திரட்டி ஆள்பலம் காட்ட நினைத்தையும் கோர்ட்டில் அரசு வக்கீல் அம்பலப்படுத்தி,பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்!

பா.ஜ.வினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டதாகவும், அதில் கலந்து கொண்டவர்கள் தனி மனித விலகலை பின்பற்றவில்லை எனவும் , முக கவசம் அணியவில்லை எனவும், பா.ஜ. தலைவர் முருகன் முறையாக முக கவசம் அணியவில்லை எனவும் டிஜிபி அறிக்கையை மேற்கோள்காட்டி  அரசு வக்கீல் வாதிட்டார்.

மேலும் அவர், வேல் யாத்திரை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இது கோவில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை எனக் கூறிய அரசு தலைமை வழக்கறிஞர், ‘’ மத்தியில் ஆளும் கட்சியான பாஜ, பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளதாகவும், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாக கூறிவிட்டு, அதை மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகளும் இதில் கடுமை காட்டினர்.  நீதிபதிகள், ’’அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்ல முடியும்… கடந்த மூன்று நாள்களாக கட்சித் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். கட்சித் தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்திச் செல்கிறார். இது ஆயுதச் சட்டப்படிக் குற்றம்’ எனச் சுட்டிக் காட்டினர்.

இந்த வகையில் அதிமுக அரசு பக்குவமாக இதை கையாண்ட நிலையில் முருகன் பெயரோடு, எம்.ஜி.ஆர் பெயரையும் இணைத்து பாஜக பிரச்சாரம் செய்ததோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை எதிர் கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும் வகையில் அமையும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

22-ல் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 23-ம் தேதி பழநியில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், நவ.2-ல் மதுரையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுவாமிமலையில் கர்நாடக செய்தித்தொடர்பாளர் மாளவிகா,  தென்காசி யாத்திரையில் தேசிய செய்தித்தொடர்பாளர் புரந்தேஸ்வரி, கன்னியாகுமரியில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி ஆகிய முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இறுதி நாள் யாத்திரைக்கு  தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.’’ என்றெல்லாம் பேசி வந்தார்.

ஒரு மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சரே பங்கேற்பது முடியாது என்ற சூழலை அதிமுக ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் மற்ற பாஜக தலைவர்கள் பலரை கலந்து கொள்ள வைத்து அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த தமிழக பாஜக முயல்வதாலும், எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி அதிமுகவின் அஸ்திவாரத்தையே பெயர்தெடுக்க பாஜக நினைப்பதையும் இனியும் விட்டுவைக்க கூடாது என்பதால், இன்றைய தினம் அதிமுக நாளேடான ’நமது அம்மா’ பாஜகவுக்கு சவுக்கடி தந்துள்ளது. அதாவது முதல்வரோ, துணை முதல்வரோ இதற்கு எதிர்வினையாற்றாமல் ஒரு மூத்த பத்திரையாளரைக் கொண்டு பாஜகவை கடுமையாக எச்சரித்துள்ளது ஒருவித ராஜ தந்திரமாகப் பார்க்கப்படுகிறது!

குத்தீட்டி என்ற பெயரில் வெளிவந்த அந்தக் கட்டுரையில், “சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகம் ஆமோதிக்காது. ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்துக்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

‘’ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மதத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.

இப்படி, மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அ.தி.மு.க அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும்.

அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி” என்று வேல் யாத்திரையை குறித்த அதிமுக நிலைபாடு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலைபாடு தான் திமுக தலைமைக்கும்! அதனால் தான் இந்த வேல் யாத்திரையை திமுக தலைமையும் பொருட்படுத்தவில்லை! இதனால்,ஆத்திரம் அடைந்த பாஜக தலைவர்கள் மீண்டும், மீண்டும் திமுகவை சீண்டிப் பார்த்தார்கள். திமுக ஏதாவது வாய் திறந்து சொற்களை உபயோகித்துவிட்டால், அதை வைத்து, வெறுப்பு அரசியலுக்கு விதை தூவலாம் என பாஜக முயற்சித்தது.பாஜக தலைவர் எல்.முருகனோ, ’’தலித் மக்கள்,பெண்களுக்கு எதிரானவர்களை பாதுகாக்கும் திமுகவின் முகத்திரையை கிழிக்கவே வேல்யாத்திரை’’ என்றும் சொல்லிப் பார்த்தார்!

அதையும் திமுக பொருட்படுத்த வில்லை. இது குறித்து திமுக வட்டாரத்தில் பேசியபோது, ’’எப்படியாவது திமுகவை அவர்களின் மத அரசியலுக்குள் இழுத்துவிட பாஜக துடிக்கிறது. ஆகவே, இதை அனைத்து திமுகவினரும் நன்கு புரிந்து கொண்டிருப்பதோடு மட்டுமின்றி மக்களும் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். அதுவும் எல்.முருகன் தன் வாயாலேயே ’’இது முருக கடவுளுக்கான யாத்திரையல்ல, திமுகவிற்கு எதிரான யாத்திரை’’ என்று சொல்லிவிட்டார். வெறும் காற்றில் வாள் சுழற்றும் வாய் சவடால் கோழை பேர்வழிகளுக்கு தீனி போட வேண்டாம் என்பதே திமுக நிலைபாடு. அதுவும் தவிர, திமுக தற்போது தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக சில ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டுள்ளது. எங்கள் கவனத்தை சில்லறை விவகாரங்களில் சிதறடிக்க விரும்பவில்லை’’ என்றனர்.

தமிழக அரசியலைப் பொருத்த வரை அது இரு திராவிட இயக்கங்களுக்கு இடையிலான அரசியலாக மட்டுமே இருக்க வேண்டும். அதில் மூன்றவதாக யாரையும் மூக்கை நுழைக்கவிடக் கூடாது என்பதில் திமுக,அதிமுக இரண்டும் ஒத்த கருத்தில் இருப்பதாகத் தெரிகிறது. வேல்யாத்திரை மூலமாக ஏதாவது அரசியல் ஆதாயத்தை அள்ளலாம் என்ற பாஜகவின் பாச்சா திராவிட இயக்கங்களிடம் பலிக்கவில்லை என்றே தெரிகிறது.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time