சனாதனச்  சக்திகளுக்கு ஆதாயம் சேர்க்கிறதா?

-சாவித்திரி கண்ணன்

தமிழ்க் கடவுள் என நாமெல்லாம் பெருமைப்படும் முருகனுக்கு மாநாடு. இதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி இயல்பாக ஏற்பட்டது. ஆனால், நடந்தவையும், நடக்கப் போகிறவையும் முருகனை தொடக்கமாக வைத்து விநாயகர், ராமர், கிருஷ்ணர்… என்று பற்றிப் படர்ந்து மொத்த தமிழ் சமூகத்தையும் வேறு திசைக்கு அழைத்துச் செல்கிறதோ..?

‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ என்ற தலைப்பிலேயே சனாதனம் பளிச்செனத் தெரிகிறது. அதென்ன அனைத்து உலகம்? இருப்பது ஒரு உலகம் தானே. ஈரேழு உலகங்களை கற்பிக்கும் புராணங்களின் புனைவுப்  பார்வையிலேயே தலைப்பும் உள்ளது. ‘பன்னாட்டு முருகன் மாநாடு’ என்று தான் அறிவார்ந்தவர்களால் யோசிக்க முடியும்.

கடவுள் நம்பிக்கை என்பதை பெரிய ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஒரு உணர்வு சார்ந்த, அக மனத்திற்கு அமைதி ஏற்படுத்தும் வாய்ப்பாக கருதி கடந்து செல்லும் சாதாரண பக்தனுக்கு முருகனைப் பற்றி புதுப்புது தோற்றத்தை தந்தும், அர்த்ததை கற்பித்தும், அதன் வழி சமூக அரசியல் போக்கையே மாற்றி’ கடந்த காலத்திற்கு நம்மை பின்னோக்கி தள்ளுவதில் என்ன தான் ஆர்வமோ இந்த ஆட்சியாளர்களுக்கு?

சினிமா பாணியில் உருவாக்கப்பட்ட செட்டுகள்.

இந்த மாநாட்டின் நோக்கமாக தமிழ் நாட்டரசே அறிவித்துள்ளதாவது;

# முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.

# முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .

# முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து  ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல்.

# முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல்.

மேற்படி குறிக்கப்பட்டவை நிச்சயமாக ஒரு அரசு செய்ய வேண்டியவையல்ல.

கடவுளைக் குறித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதச் செய்து அதை மக்களிடம் பரப்புவது என்பதன் பின்னணியில் ஒரு அரசியல் நோக்கம் அல்லாமல் வேறு இல்லை என்பதற்கு கடந்த கால வரலாற்று நிகழ்வுகளே சாட்சி.

கடவுள் நம்பிக்கையைக் கருவியாக்கி’ தங்கள் நோக்கத்திற்கு சமூகத்தை கட்டமைக்க விரும்பி கடந்த காலத்தில் ஆட்சியாளர்களும், அந்தணர்களும் முருகனை எவ்வாறெல்லாம் கட்டமைத்துள்ளனர் என சற்றுப் பார்த்தால் தான், இந்த ஆபத்தை புரிந்து கொள்ள முடியும்.

சங்க இலக்கியங்கள் பலவற்றில் அன்று சொல்லப்பட்டிருக்கும் முருகனுக்கும் இன்று நமக்கு காட்டப்படும் முருகனுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன…என தெளிவுபடுத்துகிறது ‘சங்க நூல்களில் முருகன்’ என்ற பி.எல்.சாமி அவர்களின் அற்புதமான ஆய்வு நூல்.

‘பழங்குடிகளின் தாய் தெய்வமான கொற்றவைக்கு பிறந்தவன் முருகன்’ எனச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. இது தான் தாய் வழிச் சமூகமான பண்டைச் சமூகம் காட்டும் முருகன். அது வேட்டைச் சமூகமாக இருந்ததால் முருகன் என்றால், தன்னிகரில்லா வீரன், தீரன், சீற்றத்தின் அடையாளம், போரில் வல்லவன், வெற்றி வாகை சூடுபவன் என்ற தோற்றங்களைத் தான் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. முருகன் அழகன் என்று பழங்கால சங்க இலக்கியங்கள் எதிலும் இல்லை.

அப்போது வட மொழி இலக்கியங்களின் ஆதிக்கம் தமிழுக்குள் வரவில்லை. எப்போது வட மொழி இலக்கியங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினவோ அப்போது தொடங்கி முருகனுக்கு வேறு,வேறு வியாக்கியானங்களை தந்துவிட்டனர்.

மகாபாரதம் வட மொழியில் உள்ள ‘பிராமண்ய’ என்ற பெயரால் குறிக்கப்பட்ட ‘ஸ்கந்தனை’ முருகனோடு இணைத்து ‘சுப்பிரமண்ய’ என்றது. இராமாயணத்தில் ருத்ர சிவனின் மகனாக ஸ்கந்தனையும் முருகனோடு தொடர்பு படுத்தினர். இவை, ‘சிவனின் நெற்றியில் இருந்து பிறந்த அக்கினியில் உதித்தவன் ஸ்கந்தன்’ என்கின்றன. தாயைப் பற்றிச் சொல்லவில்லை.

விநாயகர் வழிபாடு என்பது ஏழாம் நூற்றாண்டுக்கு பிறகே வருகிறது. ஆகவே முருகன் விநாயகருக்கு பல நூற்றாண்டுகள் முற்பட்டவர்.

’விநாயகர் முருகனுக்கு அண்ணன் என்பது ஆரிய சனாதனம் கற்பித்ததே. வள்ளி மட்டுமே தமிழ் முருகனின் காதல் மனைவி.. தெய்வானைக்கும் தமிழ் முருகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்கிறார் த.ரெ.தமிழ்மணி கொற்றவை என்ற தனது நூலில்.

சங்க இலக்கியங்களில் முருகன் வாகனமாக யானையே சொல்லப்படுகிறது. ஒரு படைத்தளபதி என்பதற்கு யானையே பொருத்தமான வாகனமாகும். ஆனால், வட மொழி இலக்கிய கலப்பிற்கு பிறகு மயிலை முருகனின் வாகனமாக்கினர். மனிதனை ஒரு மயிலால் சுமக்க முடியாது. ஆனால்,  குப்தர்கள் காலத்தில் இந்த கற்பிதம் நடந்தது.

இரண்டாம் நூற்றாண்டில் வட மொழி இலக்கியங்களிலும், நாணயங்களிலும் காணப்படும் ஆறு தலைகளைக் கொண்ட ஸ்கந்தனை முருகனோடு தொடர்புபடுத்தி கந்தன் என்றனர். பின்னர் முருகனை ஆறுமுகன் ஆக்கினர்.

பல்லவர் காலத்தில் தான் ‘ஸ்கந்த வழிபாடு’ முருக வழிபட்டோடு இணைக்கப்பட்டது. பழங்குடிகளின் வீரத் தலைவனான முருகனை பிற்காலத்தில், ‘வேதக் கடவுள்’ என அடைமொழியிட்டு கூறத் தொடங்கினர். அப்போது முதல் அழகன் என்றும் தோற்றப் பொலிவைக் கூட்டினர்.

இதனால் தான் ஆய்வறிஞர் வானமாமலை அவர்கள், ”முருக வழிபாடு என்பது காலப் போக்கில் இரு பண்பாடுகளின் இணைப்பாகிவிட்டது” என்றார். அதாவது, ‘தமிழ்க் கடவுள்’ என்ற தனித்துவத்தை அழித்து விட்டனர்.

பழங்குடிகளின் ஆடு போன்ற மிருகங்களை பலியிட்டு வணங்கிய முருகக் கடவுள், பிற்காலத்தில் சைவக் கடவுளாக மாற்றம் கண்டு சைவ சித்தாந்த பின்புலத்தில் எழுந்து நின்றான். சைவக் கடவுளான சிவனுக்கு மகனாக்கினர். இந்த கற்பிதத்திற்கு திருவிளையாடல் எனும் சுவையான புராணக் கதைகளை உருவாக்கி  மக்களின் வரவேற்பையும் பெற்றனர்.

தற்கால வரலாற்று ஆய்வறிஞர் பொ.வேல்சாமி கூறும் ஒரு செய்தி கவனிக்கத்தக்கது.

18ம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த “கவிராட்சசர்”; என்ற கச்சியப்பர் ”தணிகைப் புராணம்” என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பெரும்புலவர்களான  கந்தசாமியார், செ.ரெ.இராமசாமிப் பிள்ளை, பொ.வே.சோமசுந்தரனார் மூன்று பெரும் புலவர்களை வைத்து உரை எழுதி வெளியிட்டனர் சைவ சித்தாந்த நூல் பதிப்பகத்தார்.

இந்த நூலில் வரும்“வள்ளியம்மை திருமணப் படலம்” பகுதியில் வரும் ஒரு  நிகழ்ச்சியில் முருகப் பெருமானிடம் வள்ளியம்மை ஒரு சந்தேகம் கேட்கிறார். ”திருமணம் முடிந்து மூன்று நாட்கள் வேறுவேறு தெய்வங்களான சந்திரன், கந்தரவன், அக்கினி ஆகிய மூவரும் என்னுடன் கலந்தனர். இது ஏன் ?” என்கிறார்.

உடனே முருகன் பதிலுரைக்கிறார், ”வேதத்தை ஏற்றுகொண்டு வாழ்ந்து வந்த நம்முடைய முன்னோர்கள் திருமணம் முடிந்தவுடன் தன்னுடைய மனைவியை ; இந்த மூன்று தெய்வங்களுடன் அனுப்பிவிடுவதான சடங்கை முடித்துவிட்டு தான், ஒருவன் அம்மணமகளுடன் குடும்பம் நடத்தத் தொடங்க வேண்டும். அவ்வாறு வேதம் சொல்வதை ஏற்றுக் கொள்வது தான் நமது மரபு என்பதனால் அந்த மூன்று தெய்வங்களின் வடிவங்களில் நானே வந்து உன்னை தழுவினேன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறுவதாக இந்த பக்தி இலக்கியம் உள்ளது என்கிறார்.

இதன் மூலம் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், ‘முருகனே வேதத்தை ஏற்று வாழ்ந்தவன். வேதம் காட்டும் தெய்வங்களான சந்திரன், கந்தரவன், அக்கினி ஆகியோருக்கு தன் மனைவியை அனுபவிக்க கொடுத்த பிறகே தனக்கு உரித்தாக்கினான். இப்படி முருகனே ஒத்துக் கொண்ட கலாச்சாரம்’ எனச் சொல்லி ஒரு தவறான கலாச்சாரம் இங்கு முன்னெடுக்கப்பட்டது.

ஆக, இதையெல்லாம் கடந்து தான் நாம் நவீன நாகரீக சமூகத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஆக, ஏற்கனவே முருகனை ‘ஒரு தமிழ் அடையாளம் கொண்ட ஒரு ஆரியக் கடவுளாக’ கட்டமைத்து விட்டனர். முருகனை பழைய இயல்பு நிலைக்கு மீட்க முடியாவிட்டாலும், பரவாயில்லை. அவரவர் மனத்திற்கு தோன்றியபடி வணங்கிவிட்டு போகட்டும். சனாதனிகளின் தவறான நோக்கங்களுக்கு அரசாங்கம் வழி அமைத்து கொடுக்க வேண்டுமா?

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பரத நாட்டியம்..!

நடத்தப்பட்டுள்ள மாநாட்டின் நிகழ்ச்சி போக்குகளை பார்த்தால், காலம்தோறும் தமிழர்களின் தெய்வங்களையும், பண்பாட்டையும் விழுங்கி, செறித்து அதனை சனாதனமயமாக்கத் துடித்த கூட்டத்திற்கு மேடை போட்டுத் தந்து அவர்களின் நோக்கத்திற்கு ஒத்துழைத்துள்ளது திமுக அரசு என்ற முடிவுக்கு வருவதை தவிர்க்கவோ, மறைக்கவோ முடியவில்லை.. என்பதே நடுநிலையான ஆய்வறிஞர்களின் நிலைபாடாகும்.

தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம்  போன்றோர் ஏற்கனவே தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட கோவில்களிலும், மடத்திலும் சமஸ்கிருத வழிபாட்டிற்கும், சனாதனத்திற்கும் தான் முதலிடம் தந்து வருகின்றனர்.

இறை நம்பிக்கை வழியாக தமிழர்களின் தொன்மையையும், பண்பாட்டையும் ஆரியமயமாக மாற்றி வரும் சனாதனக் கூட்டத்திற்கு சாதகமாக முருகன் பெயரால் ஒரு மாநாட்டை பகுத்தறிவு பாதையில் வந்த திமுக அரசு நடத்த வேண்டிய அவசியமென்ன?

”திருக்கோயில்களில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அனைத்து கோவில்களிலும் தமிழ் முதன்மை பெற வேண்டும்” என இந்த மாநாட்டுக்கான வாழ்த்துறையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், அவரது இந்த பேச்சுக்கும், மூன்றாண்டு கால இந்த அரசின் செயல்பாடுகளுக்கும் சற்றும் பொருத்தமில்லையே.

‘கோவில் குட முழுக்குகளை தமிழ், சமஸ்கிருதம் இரண்டிற்கும் சம முக்கியத்துவம் தந்து நடத்துங்கள்’ எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை சற்றும் மதிக்காமல் பழனி முருகன் கோவில் குட முழுக்கு உள்ளிட்ட சுமார் 1,900 கோவில்களின் குட முழுக்குகளை முற்றிலும் தமிழைத் தவிர்த்து சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தியது,

தமிழகத்தின் கோவில் கருவறைகளில் தமிழ் மந்திரங்கள் உச்சரிக்கும் அர்ச்சகர்களை நியமிக்கத் தயங்குவது, ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற வழக்கில், நீதிமன்றத்தில் எதிர்த்தவர்களிடம் சரணாகதியானது..

என எந்த வகையில் பார்த்தாலும், சனாதனம் தவிர்த்த, தமிழர் சமயத்தை நிலை நாட்டத் திரானியில்லாத திமுக அரசு, முருகனை சனாதனிகளிடம் தூக்கி கொடுப்பதை உணர்வுள்ள தமிழ்ச் சமூகம் ஒருபோதும் ஏற்காது.

முருகனை பரப்பும் 16 பேர்களுக்கு அரசின் விருது.

அதிர்ச்சி தரும் மாநாட்டின் தீர்மானங்கள் ;

# முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க போகிறார்களாம்.

# விழாக் காலங்களில் முருகன் கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என தீர்மானித்துள்ளார்களாம்.

# முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கிறார்களாம்.

பள்ளிக் கூடங்களில் முருகன் பெயரால் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, பாடல் பயிற்சிகள் தொடங்கினால் அது முருகனோடு முடியாது விநாயகர், இராமர், கிருஷ்ணர்..என எல்லையின்றி விரிந்து சென்று சனாதனத்தின் காலடியில் சரணாகதி அடையும். இதையெல்லாம் ‘திராவிட மாடல்’ என கூறிக் கொள்ளும் அரசாங்கம் செய்வது நியாயமா..? என்பதே தமிழ்ச் சமூகத்தின் கேள்வியாகும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time