விக்ரம் சேத் எழுதிய ‘A Suitable Boy’ என்ற ஆங்கில நாவல் 1993 ஆம் ஆண்டில் வெளியானது!
இதன் அடிப்படையில் பிபிசிக்காக இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடைபெறும் கதை. நெட்பிளிக்சில் இந்த ஆறு மணிநேர தொடரைக் காணலாம். கடந்த மாதம் வெளிவந்துள்ளது. ‘சலாம் பாம்பே’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கிய மீரா நாயர் ‘ A Suitable Boy’ என்ற பெயரிலேயே இந்தத் தொடரை பிபிசி 1 க்காக இயக்கியுள்ளார். ஆண்ட்ரூ டேவிஸ் கதையை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் உரையாடல் நடைபெறுகிறது. காதலினூடே கலை நயத்தோடு சொல்லப்பட்ட ஒரு சமூகவரலாறே இது!
கதையின் நாயகி 19 வயது லதா பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படிக்கும் மாணவி.இவருடைய தந்தை இரயில்வேயில் பொறியாளராக இருந்தவர்.(இப்போது உயிரோடு இருந்திருந்தால் இரயில்வே போர்டின் தலைவராக இருந்திருப்பார் !) இவருடைய தாய் ரூபா மெஹ்ரா. லதாவுக்கு பொருத்தமான வரனைப் பார்த்து திருமணம் செய்விக்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் கவலை. இதற்காக கல்கத்தா,லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று பலரைப் பார்க்கிறார். இதன் வழியாக பல்வேறு குடும்பங்கள்,பல கலாச்சாரங்கள் வெளிப்படுகின்றன. அந்தக் காலக்கட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் தென்படுகிறது.எனவே இதை நாம் பார்க்கும் போது சுவாரசியமாக உணரலாம்!
விக்ரம் சேத்தின் நாவல் மிகப்பெரியது. இதை ஆறு மணி நேரத்தில் சொல்லுவது சாத்தியமில்லை. ஆனாலும் சொல்லியிருக்கிறார்கள். நாவலை நான் ஏற்கெனவே படித்து இருக்கிறேன் என்பதால், என்னால் தடையின்றி ஒரே மூச்சில் பார்க்க முடிந்தது.
பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் இந்தப் தொடரில் உள்ளது உள்ளபடி விவரிக்கபடுகிறது. ஒருபுறம். விடுதலை பெற்ற இந்தியா எதிர்நோக்கும் வாய்ப்புகள் மறுபுறம். இந்த நிலையில் லதா தன்னுடன் படிக்கும் கபீர் என்ற முஸ்லிம் இளைஞனை காதலிக்கிறாள். அவன் பார்சியாக இருந்தால் கூட லதாவின் அம்மா சம்மதித்து இருக்கக் கூடும்.லதாவும், கபீரும் சேர்ந்து கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடிக்கிறார்கள்.இந்த திருமணத்தில் உள்ள சிக்கல்களை லதாவின் அக்கா அவளிடம் சொல்லுகிறாள். இதனிடையே இவளுக்குரிய வாய்ப்பை (Space), படித்தவனாக இருந்தாலும் கபீர் தருவானா ?
இவள் அம்மா பார்க்கும் வரன் ஹரீஷ் கன்னா.குடும்பத்திலிருந்து வெளியேறி சுயமாக தன்னை வளர்த்துக் கொண்டவன். தோல்தொழிலில் ஃபோர்மேனாக இருக்கிறான்.இலண்டனில் பயிற்சி பெற்றவன். உணர்ச்சி வேகம் உள்ளவன். லதாவின் அம்மாவிற்கும் பிடிக்கிறது; லதாவிற்கும் பிடிக்கிறது. திருமணம் நடந்தால் நன்றாக இருப்பார்களா ? (‘யாருக்குத் தெரியும் ?- வசனங்கள் கூர்மையாக உள்ளன )
லதாவின் அண்ணி மீனாட்சி இந்தத் தொடரில் ஒரு மஜா ! அவளுடைய கணவன் ஒரு ஆங்கிலக் கம்பெனியில் பணிபுரிகிறான்.இந்தியா அதன் முதல் பொதுத் தேர்தலை திருவிழா போலக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது ஓட்டலில் நண்பர்களோடு இருக்கிறான். இவனுடைய மனைவி வேறு ஒருவனோடு உறவு கொள்கிறாள். இவளுடைய தம்பி அமித் ஒரு ஆங்கிலக் கவி. வெளிநாட்டில் படித்தவன். தற்காலிகப் பேராசிரியராக இருக்கிறான். இவனை லதாவுக்கு திருமணம் செய்விக்க நினைக்கிறாள் மீனாட்சி.
மெஹ்ரா, கபூர், சாட்டர்ஜி ( நம்ம ஊர் ஐயர், பிள்ளை,முதலியார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இவர்களுடைய குடும்பத்தினூடாக கதை நகர்கிறது. ஐஏஎஸ்- க்கு படித்துவரும் மாணவனும் (லதாவின் தம்பி) உண்டு.
இதில் மகேஷ் கபூர் என்பவர் காங்கிரஸ் அரசில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்து நிலச் சீர்திருத்தச் சட்டத்தை, (தன் கட்சிக்காரர்களே எதிர்க்கும் நிலையிலும்) கொண்டு வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நேர்மையான அரசியல்வாதி சந்திக்கும் கட்சிக்குள் நெருக்கடிகள் விவரிக்கப்படுகிறது. நிலச் சீர்திருத்த சட்டம் அன்றைக்கு சமூகத்தில் எந்தவிதமான தாக்கங்களை உருவாக்கியது என்பதையும் அறியலாம். நேர்மையாளரான மகேஷ் கபூரை அந்த ஊர் ராஜா எதிர்க்கிறார். அவர்தான் மசூதிக்கு அருகில் ஒரு சிவன் கோவிலை விபரீதமாக கட்டச் செய்கிறார்.
ஒரேசமயத்தில் முகரம் ஊர்வலம், ராம நவமி ஊர்வலம் இரண்டும் நடக்கிறது. மதக் கலவரம் வருகிறது. இதில் ஒரு இந்து குழந்தையை ஒரு முஸ்லீம் காப்பாற்றுகிறார். அதே போல தன் நண்பனான ஃபெரோசை மான்( வருவாய்த் துறை அமைச்சரின் மகன்) காப்பாற்றுகிறான்.
இதில் சயீதா பாய் பாத்திரத்தில் தபு நடித்துள்ளார். இவள் கஜல் பாடகியாக, ராஜாவின் வைப்பாட்டியாக இருக்கிறாள். வருவாய்த்துறை அமைச்சரின் மகனான மான்( இஷான் கட்டார் நடித்துள்ளார்) இவளோடு உறவு வைத்திருக்கிறான். இவளையொட்டி தன் நண்பனை கொலைசெய்யும் அளவுக்குப் போகிறான். மக்களின் மீது அக்கறை கொண்ட காங்கிரஸ்காரராக இருக்கும் இவரது அப்பாவிற்கு இதனால் தேர்தலில் நெருக்கடி வருகிறது. தேர்தலில் வெற்றியை கேள்விக்குள்ளாக்குகிறது.
இப்படி அந்தக் காலகட்டத்தின் பன்முகங்களை, பல பிரச்சினைகளை அதன் அரசியல், சமூக,கலாச்சார சிக்கல்களை இந்தத் தொடர் விவரிக்கிறது. சுமார் 60 வருட காலத்திற்கு முந்தைய இந்தியாவை ரத்தமும்,சதையுமாக உயிர்ப்போடு பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த தொடர் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்! முதலில் பார்ப்பதற்கு சற்றே சிரமம் வரக்கூடும்.ஏனெனில், மிக அடர்த்தியான ஒரு கதையை குறுகிய காலத்தில்( ஆறு மணி நேரம்) சொல்லுவது சிரமமே ! ஆனாலும் மீரா நாயர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன். லதாவாக தான்யா மாணிக்தலா( Tanya Maniktala) நன்றாக நடித்துள்ளார். பொருத்தமான முகம்.தொடர் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Also read
தற்போது வந்து கொண்டுள்ள சகிக்க முடியாத தொலைகாட்சி தொடர்களின் அபத்தமான அம்சங்கள் எதையும் இதில் பார்க்கமுடியாது! சதி செய்யும் ஓர் அடியாள், அப்பாவியான புது மருமருகள், ‘கொழுந்தனாரே’ என்று கூப்பிடும் அண்ணிகள், விதவிதமாய் கொடுமை செய்யும் அல்லது ஏமாந்து போகும் மாமியார்கள், வக்கிரமான கற்பனைகள்,பத்தாம் பசிலித்தனமான மூட நம்பிக்கைகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் முறை தவறிய பாலியல் உறவுகள்… அதிகம் உள்ள தமிழ்த் தொடர்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான தொடர். யார் பார்க்கிறார்களோ இல்லையோ, இதுபோன்ற தமிழ்த் தொடர்களில் பணிபுரிபவர்கள் இதனைக் கட்டாயம் பார்த்து தமிழ் நேயர்களைக் காப்பாற்ற வேண்டும். கதையையும், காலத்தையும் புரிந்து கொண்டால் இதனை ரசித்து மகிழலாம்!
Leave a Reply