ஒரு பஞ்சாயத்து எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான பிரதாமராமபுரம் இருக்கிறது. பைசா செலவின்றி கிராம பஞ்சாயத்து தலைவரான சிவராசு சாமிநாதன் அதிக சம்பளம் தரும் வெளி நாட்டு வேலையைத் துறந்து கிராம மக்களுக்கு பாடுபடுகிறார். அசத்தலாக வகையில் செயல்படுகிறார்;
வேளாங்கண்ணி ஆலயத்தில் இருந்து வேதாரணியம் செல்லும் பாதையில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது பிரதாமராமபுரம் கிராம ஊராட்சி. இதன் தலைவராக இருக்கிறார் சிவராசு சாமிநாதன். ‘தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு நான் ஒரு பைசா தரவில்லை’ என்று பெருமையாகச் சொல்லுகிறார்!
பிரதாமராமபுரத்தை, பத்து ‘மாதிரி பஞ்சாயத்து’களில் ஒன்றாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் செயல்பாடுகளைப் பார்க்க வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருகிறார்கள. முதன் முறையாக வெற்றி பெற்று, பல திட்டங்களை செயல்படுத்தி வெளிப்படைத் தன்மையோடு நான்கரை ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வரும், சிவராசு தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
நூறுநாள் வேலைத் திட்டத்தினால் பலன் இல்லை என்ற விமர்சனம் வருகிறதே?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இல்லையென்றால், கிராமங்களில் பல வாய்க்கால்கள் இன்னேரம் தூர்ந்துபோய் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி இருக்கும். வாய்க்கால்களைப் பாதுகாக்க அரசாங்கத்திடம் வேறு எந்த செயல் திட்டமும் இல்லை. பல புதிய விதிகளைப் போட்டு, இத்திட்டத்தின் வேலைநாட்களை குறைக்கிறார்கள். இனிமேல் வாய்க்கால் வேலைகளை இதன்கீழ் செய்ய முடியாது. தனிநபர் வாய்க்கால், பாத்தி, வரப்புகளில் வேலை செய்ய இப்போது அனுமதி அளித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பல முதியவர்களுக்கு, வீட்டில் பிள்ளைகளுக்கு இடையில் சண்டை போட்டுக் கொண்டு சோறு போடுவதில்லை. அப்படிப்பட்ட முதியவர்களை இந்த திட்டம் தான் பட்டினியில் இருந்து காப்பாற்றி வருகிறது. இந்த வேலை திட்டம் ஒரு வகையில் பட்டினி சாவைத் தடுக்கிறது.
எங்கள் கிராமத்தில் இந்த திட்டத்திற்காக வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில், கிராம சபையைக் கூட்டி லேபர் பட்ஜெட் போட்டு அடுத்த ஆண்டு வேலைகளுக்கான முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பினோம். இதனால் கிட்டத்தட்ட 1,500 பயனாளிகளுக்கு வருடத்திற்கு 90 நாட்களுக்கு மேல் வேலை கிடைத்தது. கடந்து இரண்டு ஆண்டுகளாக இதனைச் சாதித்து வருகிறோம். இந்த ஆண்டு இந்த திட்டத்தின் வேலை நாட்களை தமிழ்நாட்டிற்கு குறைத்துள்ளனர். நூறுநாள் வேலைத் திட்டம் இல்லையென்றால், பஞ்சாயத்துப் பக்கம் யாரும் வரமாட்டார்கள்.
இங்கு பஞ்சாயத்தில் வேலை செய்வது பஞ்சாயத்து செயலாளர் மட்டு்ம்தான். அவரும் பிடிஓ சொல்கிற வேலைக்குத்தான் முக்கியத்துவம் தருவாரே ஒழிய, பஞ்சாயத்து தலைவர் என்கிற முறையில் என் நோக்கத்திற்கு இசைவாக வரமாட்டார். கிட்டதட்ட 10 – 15 பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து ஒன்றிய அளவில் தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கும் போது, நிறைவாக பணி நடக்காது. கேரளாவில் இதற்கான வேலைகளைப் பார்க்க பொறியாளர் போன்ற தொழில்நுட்ப பணியாளர்கள் பஞ்சாயத்தின் வசம் உள்ளனர்.
எங்கள் கிராமத்தில் ஆறு கி.மீ நீளத்திற்கு கிட்டத்தட்ட ஆறு இலட்சம் பனை விதைகளை வைத்தோம். நான்கு ஆண்டு காலம் இது நடைபெற்றது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தப் பனைமரங்கள் வளர்ந்து எங்கள் கிராமத்தை (wind barrier) சீனப் பெருஞ்சுவரைப் போல- பாதுகாக்கும். ஏனெனில் கஜா புயலின் போது கீழே சாயாத மரமாக பனைதான் இருந்தது. பனை மரங்கள் உவர்ப்பு நீரை நன்னீராக மாற்றும் என்று நம்மாழ்வார் சொல்வார். பனைமரங்கள் இந்த மண்ணிற்கேற்றவை. இதனை இங்குள்ள நூறு பெண்கள்தான் இந்த திட்டத்தின் கீழ் சாதித்தனர்.
அதே போல 3 கி.மீ் நீளத்திற்கு வாய்க்கால் வெட்டி, தூர்ந்து போயிருந்த 20 ஏக்கர் பரப்பளவு உள்ள அரிச்சந்திர ஏரியை மீட்டெடுத்து, காவிரி நீரை பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் கிராமத்திற்கு வரச் செய்தோம். இதே பஞ்சாயத்தில் தலைவராக என் தாத்தா இந்த நீர்வழியை மீட்டெடுக்க 1970 ல் முயற்சி செய்தார். அப்போது அது சாத்தியமாகவில்லை. தற்போது சாத்தியமாகி உள்ளது. எனவே, தனிப்பட்ட வகையில் எனக்கும் மகிழ்ச்சியே.
கிராம சபைகள் உங்கள் ஊரில் எப்படி செயல்படுகிறது ?
அரசாங்கம் சொல்லுவதைவிட அதிக எண்ணிக்கையில் நாங்கள் கிராம சபைகளை நடத்தியுள்ளோம். பாலர் கிராம சபையில், குழந்தைகளை மட்டுமே பங்குபெறச்செய்து அவர்கள் பிரச்சினைகளைப் பேசினோம். பெண்கள் கிராம சபையில் அவர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பேசினார்கள். எங்கள் பஞ்சாயத்தில் 12 வார்டுகள் உள்ளன. வார்டு சபைக்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தான் தலைவர்கள். அதுவும் சிறப்பாக நடந்தது. பல கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுமே கூட்டாக எனது முயற்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனவே எனக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லை. காற்றாலை நிறுவி இருக்கிறோம். அதில் கிடைக்கும் மின்சாரத்திற்கு கேரளாவைப்போல கொள்முதல் விலை சீராக இல்லை. இங்கு நாங்கள் விற்கும் மின்சாரத்தின் விலை குறைவாகவும் (ரூ.2.10) , வாங்கும் மின்சாரத்தின் விலை (ரூ.8.80) கூடுதலாகவும் உள்ளது. இங்கு பால் சொசைட்டி உள்ளது. ஆனால், அரசு தரும் கொள்முதல் விலை சந்தை விலையை விட குறைவாக உள்ளதால் கொள்முதல் அளவு குறைந்து விட்டது. மாவட்ட பால் குளிரூட்டும் மையம் இங்குள்ளது. இங்கிருந்து பால் ஆவினுக்குச் செல்கிறது. சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் பேசி ஒரு ஆடை தயாரிக்கும் ஆலை போட பேசி வருகிறோம். இதனால் பெண்களுக்கு 10,000 ரூபாய் கிடைத்தாலே, அது அவர்களுக்கு பெரிய ஆதாரம். அதே போல தகவல்தொழில் நுட்ப மையம் நிறுவும் எண்ணமும் உள்ளது. இதனால் கிராமங்களில் இருந்து நகரும் இடப்பெயர்வு குறையும்.
ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டம் எப்படி செயல்படுகிறது ?
வீடு கட்டுவதற்கு அரசாங்கம் தரும் 2.5 இலட்ச ரூபாய் போதுமானது அல்ல. எனவே வீடுகளை அரைகுறையாக முடிக்கிறார்கள். கடன் வாங்குகிறார்கள். இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை பஞ்சாயத்து சுவரிலே எழுதி வைத்துள்ளோம். எனவே புகார் இல்லை. 10,000 ற்கும் கீழே மக்கள்தொகை உள்ள கிராமங்களில் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி தேவையில்லை. எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 13,000. மத்தி மீன் விளைச்சல் உள்ள பகுதி இது. ஆனால் வங்கி இல்லை. அருகில் உள்ள வேளாங்கண்ணிக்குத் தான் போக வேண்டி உள்ளது.
எங்கள் கிராமத்தில் மணற்திட்டுகள் அதிகம் உள்ளன. ஆனால் வேளாங்கண்ணியில் உட்கார கூட இடம் இல்லை. எனவே பஞ்சாயத்துக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் தனியாரோடு சேர்ந்து ‘சுழலியல் சுற்றுலா மையத்திற்கு’ திட்டமிட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட வனத்துறை அதிகாரியிடமும், தனியார் நிறுவனத்திடமும் கலந்தாலோசனை நடத்தியுள்ளோம். இதற்கு முதலீடு மூன்றிலிருந்து ஐந்து கோடி ஆகலாம். தனியாருக்கும் வருவாய் வரும்; பஞ்சாயத்தும் தன்னிறைவு பெறும்.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன?
அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதாரங்கள் நன்கு செயல்படுகின்றன. செவ்வாய்க் கிழமைதோறும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்குகிறோம். இங்கு 50 % ற்கும் மேற்பட்ட பெண்கள் இரத்த சோகைக்கு ஆளானவர்களாக இருக்கலாம். ஒருவேளை இரத்த சோகை இருந்தால், அதை சரிசெய்ய, கூடுதல் வேலை செய்ய வேண்டி வரும் என நினைக்கிறார்களோ என்று தெரியாது. அரசாங்கம் இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பணம் சேர்த்து ஸ்மார்ட் தொலைக்காட்சி வைத்திருக்கிறோம்.
பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடு எனக்கு நிறைவாக இல்லை. கேரளாவில் பள்ளிகளுக்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகள் சம்பளம் தருகின்றன. இங்கு பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பின் தேர்ச்சி விகிதத்தை வைத்து அதன் செயல்பாடு. கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களின் படிப்பை மட்டும் இல்லாமல் மற்ற தகுதிகளையும் வளர்க்க வேண்டும். பஞ்சாயத்து சார்பாக இன்று நடந்த பேச்சு போட்டியை நீங்களே பார்த்தீர்கள். இதேபோல ஏற்கெனவே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளையும் நடத்தி இருக்கிறோம். பள்ளி ஆசிரியர்கள் கிராம சபைக்கு வர வேண்டும். பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவரும்.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசாங்கம் தரும் பயிற்சி எப்படி இருக்கிறது?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11 வது அட்டவணையின் கீழ் 29 பொருள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி குறைவு. கேரளாவில் கணிசமான நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அங்குள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மூலம் தான், முறையிடுவார்கள். பஞ்சாயத்துகளுக்கு என ஒதுக்கப்பட்ட இனங்களுக்கு தலைவர்களாகிய நாங்கள் சுதந்திரமாக செலவு செய்ய முடியாது. தணிக்கையில் அனுமதிக்க மாட்டார்கள் என்று தடுத்து விடுவார்கள். நடந்த செலவுகளை உண்மையாக எழுத அரசு அனுமதித்தாலே பல ஊழல் குறைந்து விடும். நான் நாள் முழுவதும் பணி புரிகிறேன். கேரளாவில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கார், ஓட்டுநர், பெட்ரோல் உண்டு.நாம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் எத்தனை அழைப்புகள் செல்பேசியில் வந்த வண்ணம் உள்ளன என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். ஆனால் இதற்கான செலவை காட்டமுடியாது. இதுபோல பல நடைமுறைச் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை தரும் பயிற்சியானது இருக்கிற அமைப்பிற்குள் எப்படி அதிகாரிகள் மனம் கோணாமல் பணிசெய்வது என்பதைச் சொல்கிறது;
பஞ்சாயத்துகளை அதிகாரப்படுவதற்கான, அதன் நிதி ஆதாரத்தை பலப்படுத்துவதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தருவதில்லை. அதனால்தான் சாலைபோடுதல், குடிநீர் வசதி, தெருக் குழாய் போடுவது என்பதோடு பஞ்சாயத்து தலைவர்கள் நின்றுவிடுகிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சிகளின் தொடர்பின்றியே பல முடிவுகளை எடுக்கிறார்கள். இவையெல்லாம் சரியல்ல. நான்கரை ஆண்டுகளில் 2,000 ற்கும் மேற்பட்ட கடிதங்களை பல்வேறு துறையினருக்கு அனுப்பியிருக்கிறேன். எதற்கும் பதில் வந்ததில்லை.
முதல்முறை வெற்றி பெற்ற நீங்கள் இவ்வளவு திறத்தோடு செயல்பட காரணம் என்ன ?
என் தாத்தா சாம்ராஜ் இங்கு பஞ்சாயத்து தலைவராக இருந்தார். ‘மது இல்லாத கிராமம்’ என்று எங்கள் கிராமத்தை இந்தியாவிலேயே முதலில் அறிவித்தவர். அதனாலேயே அவரை அடுத்த சில நாட்களில் கொன்று விட்டனர். அவரது சிலை, பஞ்சாயத்து முன்பாக நிறுவப்பட்டுள்ளது. எனது தந்தை 14 ஆண்டுகள் தலைவராக இருந்தார். அதனாலேயே என்னை அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் சொன்னார். வெளிநாட்டில் பணியாற்றிய நான், கஜா புயலின்போது இங்கு வந்தேன். அது எனது பொது வாழ்க்கைக்கு வித்திட்டது. பேராசிரியர் பழனித்துரை, குத்தம்பாக்கம் இளங்கோ, தன்னாட்சி அமைப்பு, தொடர்ச்சியாக வந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் எனக்குத் தந்த ஆலோசனைகள் எனக்கு பரந்துபட்ட பார்வையை எனக்கு கொடுத்தது.
Also read
நீங்கள் செய்த பணிகளில் உங்களுக்கு மிகவும் மன நிறைவு அளித்த ஒரு செயல் என்றால் எதைச் சொல்லுவீர்கள்?
எங்கள் பிரதபராமபுரம் பஞ்சாயத்தில் ஏற்கனவே நான்கு மாற்றுத் திறனாளிகள் மட்டுமே இனங்காணப்பட்டு இருந்தார்கள். எனவே மாற்றுத் திறனாளிகளுக்காக தனியான கிராம சபையைக் கூட்டினோம். இதில் 25 பேர் கண்டறியப்பட்டு , அவர்களை சோதிக்க வைத்து, மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெற்றுக் கொடுத்தோம். இதனால் அவர்களுக்கு உதவித் தொகை கிடைத்து வருகிறது. தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஒருவர், வாகனத்தில் முதலில் கிராமத்தை விட்டு வெளியே போன போது, தான் பறந்து போவதாக மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னார். இது எனக்கு நிறைவளித்த ஒரு சம்பவம். இது போன்ற சிறு, சிறு மகிழ்ச்சிகளே பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் என்னை தொடர்ந்து இயங்கச் செய்கின்றன.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
அருமை
இன்னும் பல சாதனைகள் தொடரட்டும்
சிவராசு சாமிநாதன்கள் தமிழ்நாடு முழுவதும் தேவைப்படுகிறார்கள்.கிடைத்தது என்னவோ ஒன்று மட்டுமே.
சிறப்பான ஊராட்சித் தலைவர் இவர் தந்தை சாமிநாதன் காலத்தில் கஜா புயலின் போது அவருடன் இணைந்து பணியாற்றியவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற இந்த மாமனிதருக்கு சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் இவருடைய தகப்பனார் அப்பொழுது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கையால் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதை பெற்றவர் அதேபோல அவரை விட சிறப்பாக பணியாற்றும் இவருக்கு அகில இந்திய அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருது வழங்கப்பட வேண்டும் ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதுவரை அவருக்கு விருது வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது.
திரு.சிவராசு சுவாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கிராமங்களில் இனவாரியாக, கிராமசபைக்ககூட்டம் நடத்தி பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து அரசு சலுகைகள் பெற ஆவன செய்வது, மிகவும் பாராட்டப்பட வேண்டிய பணி. ஒவ்வொரு கிராமசபையிலும் மிக முக்கியமான இதர துறைகள், வருவாய், சுகாதாரம், வேளாண்மை, சிறு மற்றும் குறு தொழில் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள அரசு உரிய ஆணைகள் பிறப்பிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுடன், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.கிராமசபைக் கூட்டம் தங்கள் ஊராட்சியில் முறையாக நடத்தப்படுவது வளர்ச்சித் துறையில் பணியாற் றிய என் போன்றவர்களுக்கு மிகுந்த மனநிறைவையளிக்கிறது. உங்கள் சேவை பல்கி பெருகவாழ்த்துக்கள்.
பிரதாப ராமபுரம் கிராம் ஊராட்சியின் சிறப்பான செயல்பாட்டை காண்பதற்கு
தமிழ்நாட்டில் உள்ள பிற கிராம ஊராட்சி
தலைவர்களுக்கும் அரசு உத்தரவு பிறப் பிக்க வேண்டும். சிவராசு சாமிநாதன்
போன்று மற்ற ஊராட்சி தலைவர்களும்
தங்களது கிராமத்தில் சிறப்பாக பணி
புரியவேண்டும்.
அதேபோன்று மற்றைய கிராமத்தில் வசி க்கும் பொது மக்களும் பிரதாப ராமபுரம்
கிராமத்தை பார்வையிட்டு தங்களது
கிராமத்தில் வளர்ச்சி ப் பணிகளை செய் வதற்கு தங்களின் ஊராட்சித் தலைவர் களுக்கு வேண்டுகோள் தரவேண்டும்.
பிரதாப ராமபுரம் கிராம் ஊராட்சியின் சிறப்பான செயல்பாட்டை காண்பதற்கு
தமிழ்நாட்டில் உள்ள பிற கிராம ஊராட்சி
தலைவர்களுக்கும் அரசு உத்தரவு பிறப் பிக்க வேண்டும். சிவராசு சாமிநாதன்
போன்று மற்ற ஊராட்சி தலைவர்களும்
தங்களது கிராமத்தில் சிறப்பாக பணி
புரியவேண்டும்.
அதேபோன்று மற்றைய கிராமத்தில் வசி க்கும் பொது மக்களும் பிரதாப ராமபுரம்
கிராமத்தை பார்வையிட்டு தங்களது
கிராமத்தில் வளர்ச்சி ப் பணிகளை செய் வதற்கு தங்களின் ஊராட்சித் தலைவர் களுக்கு வேண்டுகோள் தரவேண்டும்.