இந்தக் காலத்திலும் மருத்துவமனையைத் தவிர்த்த குழந்தை பேறு சாத்தியமா? இதோ, இதற்கு சாட்சியமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. எந்த மருந்து, மாத்திரை, டாக்டர், மருத்துவக் கருவிகள் உதவியுமின்றி சுகமான பிரசவத்தை வீட்டில் நிகழ்த்திய 40க்கு மேற்பட்ட தம்பதியினரின் அனுபவங்கள் வியப்பூட்டுகின்றன;
சீர்காழியில் உள்ள பசுமை அரங்கத்தில் (LAWN PARK) 25.08.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டில் குழந்தை பெற்றவர்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மட்டுமின்றி ஹைதராபாத், மும்பை போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.
வீட்டில் குழந்தை பெற்றவர்கள் ஒன்றிணையும் விழா முதன் முதலில் கோவையிலும், பின் வடலூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, பொள்ளாச்சியைத் தொடர்ந்து சீர்காழியில் தற்போது நடந்துள்ளது.
“வீட்டில் சுகப்பிரசவம், நம் பிறப்புரிமை”.
“சுகப்பிரசவம் எளிமையானது. சுகமானது”.
” சுகமான பிள்ளைப் பேறுக்கு எந்த மருத்துவ உதவியோ, மருந்துகளோ, மருத்துவரோ தேவையில்லை ” என ஒலித்துக் கொண்டே இருந்தது தாய்மார்களின் அனுபவங்கள்.
“குழந்தைப் பிறப்பை மற்றவர்கள் கண்ணால் பார்க்கத் தான் முடியும். கர்ப்பவதியோ உணர்ந்து அனுபவிக்க வேண்டிய நிகழ்வு. இதில் யாருடைய உதவியுமின்றி தானாக நடப்பது தான் பிள்ளைப் பேறு”. அக் காலத்தில், காட்டிற்கு விறகு எடுக்கச் சென்ற நம் பாட்டிமார்கள் தானாக குழந்தையை ஈன்றெடுத்து விறகுடன் குழந்தையையும் இயல்பாக வீட்டிற்கு எடுத்து வந்தது நம் மரபு.
பேறு காலத்தையும் பிள்ளைப் பேற்றையும் மருந்தோ, தடுப்பூசிகளோ இன்றி வீட்டில் இனிமையாக சுகப் பிரசவமன அனுபவத்தை மேடையில் தாய்மார்கள் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பெற்றோர்கள் உட்பட குழந்தைகளும் எந்த மருந்தோ தடுப்பூசியோ தேவையில்லாது வாழ்வதையும், குழந்தை வளர்ப்பைச் சாத்தியமாக்கும் அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
தன்னார்வலர்களுடன் நிகழ்வை ஒருங்கிணைத்து எடுத்து நடத்தும் நலம் சுதாகர் நிகழ்வை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர் என்பது மேடை அலங்காரம், உணவு ஏற்பாடு, வழிகாட்டு பலகைகள் போன்ற நுணுக்கமான விசயத்தில் தெரிந்தது.
மேடை அலங்காரம்: மரபு நெல் கதிர்களை வைத்தும் தென்னங்கீற்றை வைத்தும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிளாஷ்டிக் பேனரை தவிர்த்து பருத்தித் துணியில் பேனர் எழுதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டை வண்டிகள் மேடையின் பின்புறத்தில் நிற்க, மேடையின் முன்புறத்தில் கருப்பு உளுந்து, மைசூர் பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயறு, அரிசி, கோதுமை, காராமணி, ரோஜா பூ, செண்டு மல்லி பூ வைத்து அழகான கோலங்களாலும் மேடை பூத்திருந்தது.
இயற்கைச் சூழலில் திறந்த அரங்கில் குழந்தைகளின் சிலம்பாட்டத்தோடு நிகழ்வு தொடங்கப்பட்டது.
சீர்காழியைச் சேர்ந்த இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நலம் சுதாகர் – கீதா தம்பதியினர் வீட்டில் குழந்தை பெற்றவர்கள் குடும்ப விழாவை சிறப்பாக வரவேற்புரையுடன் தொடக்கி வைத்தார்கள். கீதா சுதாகர் அவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சையிலும் அடுத்த இரண்டு குழந்தைகள் இயல்பான புரிதலுடன் வீட்டில் சுகப்பிரசவத்தில் பிறந்தன என்று தங்களது சொந்த அனுபவத்தை கூறியப் பின் தாய்மார்களின் சுகப்பேறு அனுபவங்கள் ஒவ்வொன்றாக மேடையில் அரங்கேறியது.
நிகழ்ச்சியை உடுமலையைச் சேர்ந்த ஆர்லியா உயிரோட்டத்துடன் தொகுத்து வழங்கினார். பிள்ளைப்பேறு உணர்ந்து அனுபவிக்க வேண்டியது, இதில் மருத்துவத்திற்கு வேலை இல்லை, பிள்ளைப்பேறு மறுபிறவி என்று அழைக்கப்படுவதன் காரணம், தாயின் உடல் புதுப்பிக்கப்படுவதாலேயே அன்றி வேறு இல்லை. என்றார்.
நிகழ்வில் பெரும்பகுதி வீட்டில் குழந்தை பெற்ற தாய்மார்களின் அனுபவ பகிர்வுகளே இடம்பெற்றன. ஒவ்வொரு தாய்க்கும் ஒவ்வொரு அனுபவம். ஒவ்வொரு பிள்ளைப்பேற்றிலும் வெவ்வேறு அனுபவங்கள். இதன்மூலம், ஒவ்வொரு உடலும் தனித்துவமானது என்பதை உணர்த்தினர்.
நிகழ்வில் முன் பதிவு செய்து கலந்து கொண்ட நானூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயிரத்து நூறு பெரியவர்கள் & நானூறு குழந்தைகளை ஈர்க்கும் வகையில் நிகழ்வு சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தது நிகழ்ச்சிக்கு உறுதுணையானது.
காலை முதல் மாலை வரையிலும் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட பேறுகால அனுபவங்கள் மேடையிலும், மதிய நேரம் உணவு இடைவேளையின் போது நிகழ்வுக்கு வரமுடியாத சில தாய்மார்களின் அனுபவங்களை ஒலி பதிவு மூலமும் தன்னார்வலர்கள் ஒலிப்பெருக்கியிலும் பகிர்ந்தனர். நிகழ்வில் பகிரப்பட்ட ஒவ்வொரு அனுபவமும் நவீன மருத்துவத்திற்கு மாற்றான இயற்கை வாழ்வியலை போற்றுவதாக இருந்தது.
இந்நிகழ்வுகளில் பங்குப்பெற்ற தாய்மார்கள் எப்படி தங்களின் பிள்ளைப்பேற்றை எளிமையாக வீட்டில் சாத்தியப்படுத்தினர் என்றும், பிறப்புச் சான்றிதழை எப்படி சட்டப்புரிதலுடன் தாங்களாகவே பெற்றனர் என்பது குறித்த அனுபவத்தையும் பகிர்ந்தனர்.
வீட்டில் குழந்தைப்பெற்ற தங்கள் அனுபவத்தைப் பகிர இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 19-ன் படி உரிமை உள்ளதையும், கோட்பாடு 29ன் படி மரபை மீட்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
முதலில் குளித்தலை விவேக் – திவ்யா தம்பதியினரும் மற்றும் சென்னை செந்தில் – செல்வக் குமாரி தம்பதியினரும் அனுபவத்தைப் பகிர்ந்தனர். முதலில் சில தவறான எண்ணங்கள் இருந்தன. பிறகு அறியாமையிலிருந்து மீண்டு இயல்பாக குழந்தைப் பெற்றோம் என அனுபவத்தை பகிர்ந்தனர்.
குழந்தைகளுக்கு உள் அரங்கில் திருச்சி சுபைதா சகோதரி மற்றும் சில சகோதர சகோதரிகள் சேர்ந்து குழந்தைகளுக்கு கதைச் சொல்லல், மரபு விளையாட்டுகள் என நானூறு குழந்தைகளையும் ஈடுபாடோடு ஒன்றி இருக்க செய்திருந்தது சிறப்பு.
சீர்காழி பாரிஜாதம் – விஜய்குமார் தம்பதியினர் எப்படி நவீன மருத்துவம் உடல் எடையை காரணம் காட்டி அறுவை சிகிச்சைக்கு ஆள் சேர்க்கிறது என்பதை தங்கள் அனுபவம் மூலம் விளக்கினர். சகோதரி உடல் பருமனுடன் இருந்தும் முதல் குழந்தையை தேடல் மற்றும் இயற்கை புரிதல் மூலம் சுகமாக வீட்டில் பெற்றுள்ளார் என்பதை பகிர்ந்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளான தஞ்சாவூர் அம்மாப்பேட்டை தினேஷ்குமார் – சிவசங்கரி தம்பதியினர், தினேஷ்குமாரின் சகோதரி திவ்யா – மணிகண்டசிவா ஆகியோர் முதல் குழந்தைப் பேறு வீட்டிலேயே இனிமையாக நடந்ததை பகிர்ந்தனர்.
திவ்யா குழந்தைப்பேற்றிற்காக காத்திருந்து, இயல்பாக இரண்டு வருடம் கழித்து கருத்தரித்து வீட்டில் பிள்ளைப்பெற்றதையும்; சிவசங்கரி பிள்ளைப்பேறு எளிமை எனவும் எந்த கணக்குகளும் முயற்சிகளும் தேவையில்லை என்றும் விளக்கினார்.
திருச்சி ஏஞ்சல் சைன், நெய்வேலியைச் சேர்ந்த ஜாய் – ஜோசப் ஜெரால்ட் மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஆனந்தன் – நிவேதா தம்பதியினர் தேடல் மூலம் இயல்பாக முதல் குழந்தையையே வீட்டில் பெற்றெடுத்த இளம் தம்பதியினர் ஆவர்.
திருச்சி கார்த்தி பிரியா தம்பதியினர் சட்டம் சார்ந்த புரிதலினாலும் உடல் சார்ந்து தாங்கள் வாசித்த புத்தகங்களின் (பஸ்லூர் ரஹ்மானின் இறைவழியில் இனிய சுகப்பிரசவம், பெண்களே உங்களுக்காக) தாக்கத்தினாலும் முதல் குழந்தையை வீட்டில் பெற்றனர்.
கோவை தேவராஜன் ரேவதி தம்பதியினர் தங்களது இரண்டு பெண் குழந்தைகளை வீட்டில் பெற்றவர்கள். பேறுகாலம் என்பது நோய் இல்லை. கர்ப்பிணி என்ற சொல்லே தவறு. பிணியாக நாம் கருதும், பேறுகாலத்தின் போது ஏற்படும் வாந்தி, மசக்கை போன்றவை நோய் அல்ல. அது குழந்தை சுகமான முறையில் பிறப்பதற்கு உடல் தன்னைத் தானே தயார்ப் படுத்திக் கொள்ளும் ஓர் அற்புதமான நிகழ்வு என்று விளக்கினார்கள்.
மேலும், இரட்டை குழந்தைகளில் ஒருவரான வடலூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிகழ்வை போட்டோ, வீடியோ கவரேஜ் செய்தார். தானும் வீட்டில் பிறந்து, அவரின் மனைவி அபி க்கு அப் புரிதலை மேம்படுத்தி தங்களது முதல் குழந்தையையே வீட்டிலேயே பெற்றுக்கொண்டதை விளக்கினார்.
சீர்காழி நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
1) இரட்டை குழந்தைகளை வீட்டிலேயே பெற்றெடுத்த குடும்பத்தின்
தாய்க்கு – நல்வழி நாயகி
தந்தைக்கு – மரபு பாதுகாவலர்
இரட்டை குழந்தைகளுக்கு – வீரிய வித்துகள் என்ற பட்டத்துடன் இரட்டை குழந்தைகளை சிறப்பாக வீட்டில் பெற்ற இவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு கிராம் தங்கக் காசும் பரிசாக வழங்கப்பட்டது. சமூக ஆர்வலரான ஐயா காசிராமன் அவர்கள் தங்கக் காசை தம்பதியினருக்கு வழங்கி சிறப்பித்தார்.
பிள்ளைப் பிறப்பின் இயல்பு உணர்ந்து தனது இரட்டை குழந்தைகளை வீட்டில் பெற்றவர் ஹாஜன் பேகம் – மேகராஜ்தீன் தம்பதியினர். இவர்கள் நவீன மருத்துவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் எதிர்மறை கருத்துக்களை புறம் தள்ளி இரட்டை குழந்தைகளின் சுகப்பேற்றை அனுபவித்தவர்கள். மேலும், ஹாஜன் பேகம் அவர்களுக்கு தன் முதல் குழந்தை அறுவை சிகிச்சையிலும் இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் நார்மல் டெலிவரி என்ற பெயரில் பிறப்புறுப்பை அறுத்து, பின், தைத்த கொடுமைகளைக் கூறினார். இதனால் பல நாட்கள் உட்கார கூட முடியாமல் வேதனை அடைந்ததாகவும் அதனாலேயே மூன்றாவது பிள்ளைப்பேறு வேண்டாம் என்றிருந்து பின் மூன்றாவதாக இறை அருளால் கரு உற்றார் என்றும் கூறினார். இரட்டைக் குழந்தைகளாக இருந்தபோதும் புரிதலுடன் எந்த இடையூறும் இன்றி வீட்டிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும் கூறினார்.
2) ஐந்து குழந்தைகளை பெற்ற திருவண்ணாமலை சரண்யா – மணிகண்டன் தம்பதியினர்க்கு மரபின் மாண்புகள் பட்டமும் 2 கிராம் தங்கக் காசும் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு தமிழர் வேளாண் விஞ்ஞானி ஐயா ஞானப்பிரகாசம் அவர்கள் தங்கக்காசு வழங்கி சிறப்பித்தார்.
இத் தம்பதியினருக்கு முதல் இரண்டு குழந்தைகள் மருத்துவமனையிலும் அடுத்தடுத்த மூன்று குழந்தைகளும் வீட்டில் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கெளரவப்படுத்தும் வகையில் தங்கக்காசு வழங்கப்பட்டது.
3) பெல்சியா ஜான்க்கு சிங்கப்பெண் பட்டம் வழங்கப்பட்டது. இயற்கை வாழ்வியலாளர் நலம் சுதாகர் அவர்கள் பெல்சியா – ஜான் தம்பதியினருக்கு தங்கக் காசை பரிசாக வழங்கினார். வீட்டில் இரண்டாவது குழந்தையை சுகமாக பெற்ற போது சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினர் தந்த நெருக்கடிகளை சிறப்பாகக் கையாண்டதையும் விளக்கினர்.
பெண்களுக்கு நல்லது செய்கிறேன் என்பதாக அலோபதி மருத்துவத்தை மட்டுமே அரசு ஆதரிப்பதும், PIC ME எண் என்கிற RCHID வாங்கச் சொல்லி ஒவ்வொரு கர்ப்பவதிக்கும் நெருக்கடி தருவதும் வேதனையாக இருந்ததை கூறினர். இது நம் பெண் உரிமைக்கு எதிராக நடக்கும் நூதன வன்முறை, இது நிறுத்தப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக அனுபவ பகிர்வு மூலம் வெளிப்படுத்தினர்.
“ஆங்கில மருத்துவம் சாராதவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பிக்மி (PICME) எண்ணை வாங்குமாறு கட்டாயப்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 21க்கு புறம்பானது. எனவே, வீட்டில் குழந்தை பெற்றவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் நிர்வாக ரீதியாக – கிராம நிர்வாக அலுவலர் (VAO), தாசில்தார் மற்றும் தாமத பிறப்பு இறப்பை பதிவு செய்ய நீதிமன்றங்களின் சுமையை குறைக்க ஏற்படுத்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகரான சார் பதிவாளர்/ சப் கலெக்டர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பதிவிட சொல்வது தான் சட்டப்படியாகவும் ஜனநாயக மக்கள் உரிமைப்படியாகவும் சரியான விசயமாக இருக்க முடியும் என்றனர்”.
மருத்துவமனை செல்லாமல் வீட்டில் நடந்த குழந்தைப் பேற்றை மருத்துவமனையில் பிறந்ததாக (Institutional Delivery) பதிவதும், வீட்டில் பிறந்ததாக சொல்பவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் சிக்கலாக்குவதும் நியாயமல்ல. அவரவர் உடலை பாதுகாப்பது அவரவர் உரிமை. ஆகவே அரசாங்கம் மக்களை மருத்துவ ஆராய்ச்சிக்கான சோதனை எலிகளாக்க வேண்டாம் என்றனர்.
பனிக்குட நீர் வெளியேறி 13 நாட்கள் மற்றும் 11 நாட்கள் கழித்து பிள்ளைப் பெற்ற தாய்மார்கள் ஆரணி ஹீரா பிரியதர்ஷினி – நந்தகோபால் தம்பதியினர், திண்டுக்கல் அங்காமணி – யுவராஜ் தம்பதியினர் அனுபவங்கள் பலரையும் அதிசயிக்க வைத்தன.
பனிக்குட நீர் வெளியேறி அரைமணி நேரத்தில் குழந்தை பிறக்காவிட்டால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து எனும் நவீன மருத்துவத்தின் கணக்கீடுகளை இவர்கள் நிராகரித்தனர்.
மற்றொரு தாய் பதினொன்று மாதத்தில் தன் பிள்ளையை பெற்ற அனுபவத்தை பகிர்ந்தார். கர்ப்ப காலத்தில் இயல்பாக தன் வேலைகளை செய்ததும், கருவுற்றதே தெரியாமல் மூன்று மாதம் வரை வீடு மாற்றத்தின் போது பொருட்களை இடம் மாற்ற, மாடிப்படியில் ஏறி இறங்கி தன் வேலைகளை இயல்பாக செய்ததையும் பதினொரு மாதம் கழித்து பிள்ளைப் பெற்றெடுத்த அனுபவத்தை திருவண்ணாமலை வனஜா – கிரிதரன் தம்பதியினர் பகிர்ந்த போது அனைவரும் வியப்பில் விழி பிதுங்கினர். இது போல் மிக அரிதாக குழந்தை பிறப்பு தள்ளிப்போனால் அமைதியாக பொறுமை காத்தலே சிறந்தது, குழந்தைப் பிறப்பு நேரத்தை இயற்கையே சரியாக குறிக்கும். மருத்துவர்கள் நேரம் குறித்து சிசுவை எடுப்பது குறை பிரசவமே என்றனர்.
நான்கு பிள்ளைகளை வீட்டில் பெற்ற காரைக்கால் பிரசிதா பரமகுரு தம்பதியினர், நான்கு குழந்தைகளையும் இயற்கை முறையில் பெற்றதை அசத்தலாக விளக்கினர்.
கணவன், குடும்பம், சமூகம், என பலமுனை எதிர்ப்புக்கிடையே வீட்டில் தனியாக யாருடைய உதவியுமின்றி குழந்தை பெற்ற அனுபவமும் பகிரப்பட்டது. தமிழ்வழி கல்வி மற்றும் மரபு வாழ்வியலை கற்பித்தும் சிறப்பாக வாழும் அனுபவங்களும் பகிரப்பட்டது.
பிள்ளைப்பேறு மட்டும் அல்லாது ஒரு தனி மனிதனின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் எளிமையான வாழ்வியலே போதுமானது. மருத்துவமே தேவைப்படாமல் எல்லா உயிரினங்களும் வாழ்கிறது அது தான் மனிதன் உட்பட இயற்கையின் அனைத்து படைப்புகளுக்குமானது. நோய்க் காலங்களில் விரதமும், ஓய்வுமே போதுமானது.
மரபு வழி மருத்துவங்களில் நோயறிதல் முறைகள் அனைத்தும் நோயின் ஆணிவேரை அறிந்து சிகிச்சை அளிக்கும். ஆனால் தற்போது நவீன மருத்துவமோ லாப நோக்கத்தால் கருவிகளின் கூற்றை வைத்துக் கொண்டு, நோயின் ஆணிவேரை கண்டறியாமல் மருத்துவம் செய்கிறது.
இந்தப் போக்கு பிரசவத்தையும் நோயாக பாவித்து இயல்பான பிள்ளைப் பேற்றை ரணமாக்கிவிட்டது. நவீன மருத்துவத்தின் விளைவால் குழந்தையின்மையும் அதிகரித்துள்ளது.
சென்னை கொளத்தூர் பாரதி கவியரசு தம்பதியினர் 12 வருடத்திற்கு பிறகு பிறந்த இரண்டாவது குழந்தையை வீட்டிலேயே சுகமான முறையில் பெற்றெடுத்ததை விளக்கினர்.
முதல் குழந்தை சிசேரியன் அடுத்தடுத்த மூன்று குழந்தைகள் வீட்டில் பிறந்தது போன்ற அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது:
சௌந்தரபாண்டியன் – தீபா தம்பதியினர் நான்கு பிள்ளைகளை பெற்றவர்கள். இவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலமும் அடுத்த மூன்று குழந்தைகள் வீட்டில் சுகமான முறையில் பிறந்துள்ளது.
நாகர்கோவில் சுபின் அஸ்வினி தம்பதியினர் தாங்கள் வீட்டில் குழந்தைப்பெற்ற அனுபவத்தையும் அவர்கள் குழந்தைக்கு கல்வி குறித்த தேடலில் தாங்கள் உணர்ந்த அனுபவத்தை பகிர்ந்தனர்.
முதல் குழந்தையின் உடல் சுகவீனத்தால் மருத்துவத்தை வெறுத்து இயற்கைக்கு திரும்பி உள்ளனர்.
ஆர்லியா – அருள் தம்பதியினர்க்கு முதல் குழந்தை மருத்துவமனையில் நார்மல், அடுத்த இரண்டு குழந்தைகள் வீட்டில் சுகப்பிரசவத்தில் பிறந்தது. முதல் குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பை இயல்பாக மருந்து மருத்துவங்களின் உதவியின்றி கடந்து வந்த அனுபவத்தினால் அடுத்தடுத்த குழந்தைகளை வீட்டிலேயே பெற்றுக் கொண்டவர்.
அடிப்படை உடலின் மொழியை புரிந்து பேறுகாலத்தை அனுபவித்தலே சிறப்பு. கரு உருவாகி, சிசு வளர்ந்து, குழந்தை பிறக்கும் வரை தாயை சீராக்கும் பணியும் சிறப்பாக நடந்தேறுகிறது. தாயின் பிறப்பு முதல் அவளது பிரசவம் வரை உள்ள பிரச்சனைகள் தீர்ந்து அவளும் புதுப்பிக்கப் படுகிறாள் என்பதே தாயிக்கும் பிரசவம் மறுபிறவியானது. வாழ்வியலை சீராக்கும் போது உடல் எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி பேறுகாலத்தை அனைத்து சகோதரிகளும் உணர்ந்து சுகமாக கடக்கவேண்டும்.
உடுமலை கவிதா – ஆனந்தகுமார் தம்பதியினர் மருத்துவர்களின் அச்சுறுத்தலை புறக்கணித்து தன் கருவிலிருந்த ஐந்து மாத குழந்தையை களைக்காமல் இயற்கை முறையில் எப்படி வீட்டில் அழகான முறையில் பெற்றெடுத்தார் என்பதை விளக்கினார். முதல் குழந்தைக்கு பிறகு ஒன்பது வருடம் கழித்து உருவான இரண்டாம் குழந்தை, ஐந்து மாத கருவில் இருக்கும்போது குறை உள்ளதாகவும் பனிக்குட நீரை எடுத்து சோதனை செய்ய மருத்துவர்கள் ஆலோசித்த போது ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியேறி கருவுறுதல், குழந்தை ப்பேறு நோய் அல்ல என்று இரண்டாம் குழந்தையை வீட்டில் பெற்றுக் கொண்டார். ஆரோக்கியமாக உள்ள தன் குழந்தையுடன் மேடை ஏறி தன் அனுபவத்தை கூறி ஆனந்தம் அடைந்தார்.
குழந்தைப் பேற்றிற்காக காத்திருந்து பெற்ற தம்பதியினர்:
புங்கிவனம் குமார் – சுபத்ரா தம்பதியினர் திருநெல்வேலி நிகழ்வை கடந்தாண்டு எடுத்து நடத்தினர். தந்தைக்கு 40 வயதும் தாய்க்கு 36 வயதும் ஆன நிலையில், குழந்தைப்பேற்றிற்காக காத்திருந்த தருணத்தில் இயற்கையின் பரிசாக பல வருட காத்திருப்பில் திருநெல்வேலி நிகழ்விற்கு பின்னர் வீட்டில் குழந்தையை ஈன்றெடுத்தனர். வயது ஒரு தடையில்லை. குழந்தைப்பேறு அனைவருக்குமானது என்பதை உரக்கச் சொன்னார்கள்.
Also read
வருடா வருடம் நடக்கவிருக்கும் இவ்விழாக்களில் தங்கக்காசு நினைவுப்பரிசும் ஊக்குவித்தலும் தொடரும். மேலும், இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆர்வமுள்ளவர்கள் மரபை மீட்டெடுக்க விரும்புவோர் முன்னெடுக்கலாம் என்பதை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இந் நிகழ்வில் பொற்கொடி சித்ரா அவர்களின் அடுப்பில்லா சமையலில் செய்த உணவும், அன்பா சமைக்கலாம் ரேகா சிவக்குமார் குழுவினர் சமைத்த பாரம்பரிய உணவும், தன்னார்வலர் சிவகொழுந்து கொண்டு வந்த வேர்க்கடலை உருண்டைகளை வழங்கியும் மக்களை நல்உணவு மூலம் உற்சாகப்படுத்தினர். இவ்வாறாக, சீர்காழி நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
– கட்டுரையாளர்; வெ. வெங்கடேஷ்வரி மணிஷ்காந்த்,
அக்கு ஹீலர்
தேனி.
Please donot encourage home delivery. Since no body knows complicated delivery