கேரளத் திரைத் துறையில் பூகம்பத்தை ஏற்படுத்தி பிரபல நடிகர்கள், இயக்குனர்களை கதிகலங்க வைத்திருக்கும் பாலியல் அத்துமீறல்கள் எப்படி வெளிப்பட்டன? இத்தனை வித அத்துமீறல்கள் இன்னின்னாரால் நிகழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறிய ஹேமா கமிட்டி அறிக்கை சொல்வது என்ன? இதில் ஏன் பல பிரபலங்களின் பெயர்கள் நீக்கப்பட்டன?
2017 -ம் ஆண்டு பிப்ரவரி 17ல் பிரபல கேரள நடிகை ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார். பிரபல நடிகர்களை நிர்வாகிகளாக கொண்டிருந்த ‘அம்மா(Association of Malayalam Movie Artists) அப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருந்த முன்னணி நடிகர் திலிப்பிற்கு ஆதரவாக இருந்ததை கண்டு அதிருப்தியடைந்த மலையாள நடிகைகள் பலர் ‘அம்மா’ சங்கத்தில் இருந்து வெளியேறி, 2017- மே மாதத்தில் மலையாள நடிகைகள், பெண் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கொண்ட புதிய சங்கம் (Women in Cinema Collective) அமைக்கப்படுகிறது.
அதன்பின் அச்சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ”திரைத்துறை பெண்கள் பிரச்சனைக்காக அரசு ஆணையம் ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றனர். 2017 மே,18ல் கேரள முதலமைச்சரை சந்தித்து WCC சார்பில் மனுவும் அளிக்கப்படுகின்றது. அம்மனுவில், பெண்களுக்கான பாதுகாப்பை, நீதியை உறுதிபடுத்தும் வகையிலான நடிவடிக்கை தேவை என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனவே, கேரள அரசு 2017, ஜுலை1 ம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.ஹேமா தலைமையில், முன்னாள் நடிகை T.சாரதா மற்றும் K.B.வல்சலகுமாரி, IASஓய்வு ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழு மலையாளத் திரைத் துறையில் உள்ள 50 க்கு மேற்பட்ட பெண்களை அழைத்துப் பேசி, அவர்கள் சந்தித்த பாலியல் நெருக்கடிகளை தீர விசாரித்து 2019, டிசம்பர் 31ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.
இந்த அறிக்கையில் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் பெயர் இடம் பெற்றுள்ள காரணத்தால் அவர்களின் இமேஜை காப்பாற்ற இந்த அறிக்கையை பொது வெளியில் வைக்காமல், சிலரது பிரைவேசியை காப்பாற்றவதற்காக இந்த அறிக்கையை வெளியிடாமல் அரசு காலம் தாழ்த்துவதாக மக்கள் தரப்பில் பேச்சுகள் எழுந்தன.
அரசால் கிடப்பில் போடப்பட்ட அந்த அறிக்கை, ஐந்து பத்திரிகையாளர்களின் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களின் மூலம் 4 1/2வருடங்கள் கழித்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி தான் வெளியானது. திரைத் துறையின் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைக்காக இந்திய அளவில் அமைக்கப்பட்ட முதல் குழு இது தான்.
இதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களின் தொடர் சட்டபோரட்டம் காரணமாக 2024, ஜுலை 7ல் மாநில தகவல் ஆணையம் தனி நபர்களின் தகவல்களை நீக்கி, அறிக்கையை வெளியிட அனுமதியளித்தது. இருப்பினும், இந்த அறிக்கை வெளியீட்டை தடை செய்ய கோரி 2024, ஜுலை 24ல் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் எனக் கூறி, ஆகஸ்ட் 13ல் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் 62 பக்கங்கள் நீக்கப்பட்ட 233பக்க அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெரும் பிரபலங்கள் முன் கூட்டியே காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
இத்தனை போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு மற்றும் பல்வேறு அதிகார மையங்களின் தலைமைகள் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றை உருவாக்கி, கேரளா மட்டுமல்லாது மற்ற பல மாநில ஊடங்களின் பேசு பொருளாகவும் தற்போது மாறியிருக்கிறது.
கேரளாவில் உள்ள பெண்கள் அமைப்புகள் கொந்தளித்து பல போராட்டங்களை நடத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக்கும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திரைப்பட அகாடமி தலைவர் பதவியிலிருந்து பிரபல இயக்குநர் ரஞ்சித்தும் ராஜினாமா செய்தனர். இதற்கும் மேலாக மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உள்பட 15 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
கேரள திரைத் துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள், பாலின பாகுபாடுகள் பிரச்சனைகளோடு தொழிலாளர்களாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் இந்த அறிக்கையில் சம அளவில் இடம் பெற்றிருப்பது இந்த அறிக்கையின் சிறப்பம்சமாகும்.
பாலியல்ரீதியான பிரச்சனைகள்
மற்ற துறைகளில் வேலைக்கு சேர்ந்தபின்பு பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை பெண்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், திரைத் துறையிலோ அங்கே வாய்ப்பு பெறுவதற்கே நடிகர்கள், இயக்குனநர்கள், தாயரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் பாலியல் அழைப்புகளை பெண்கள் எதிர்கொள்வது சகஜமான ஒன்று என்பதை அறிக்கை அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறது. இந்த பாலியல் அழைப்புகளுக்கு அனுசரித்து போதல் (adjustment) சமரசம் செய்து கொள்ளல் (compromise) என்ற இரு வார்த்தைகள் திரைஉலகில் மிகப் பரிச்சயமான ஒன்று என குறிப்பிடுகிறது.
எல்லா நடிகைகளும் இதற்கு உடன்பட்டதால் இத்துறையில் இருக்கின்றனர் என்பதல்ல, இதன் அர்த்தம். இத்தகைய அழைப்புகளை பெருமளவு பெண்கள் எதிர் கொள்கிறார்கள் என்பதும் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் அறிக்கை உறுதி செய்கிறது.
மேலும், பணியிடம், பணி நிமித்தமாக தங்குமிடம், பணிக்கான பயணங்கள் ஆகியவற்றின்போது ஆபாசமாக பேசுதல், படங்கள் அனுப்புதல், தங்குமிடங்களில் அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் எதிர்கொள்வது பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியம், ஆடியோ, வீடியோ, வாட்ஸ்அப் தகவல்கள் ஆகிய ஆதாரங்களுடன் பதிவாகியுள்ளது. இந்த பாலியல் அழைப்புகளுக்கு தங்களுடைய எதிர்ப்பையோ அல்லது உடன்பாடின்மையையோ தெரிவிக்கும் பெண்களை சித்ரவதைக்கு ஆளாக்குதல், பாலியல் அழைப்புக்கு இணங்கும்படி தொடர்ச்சியாக வலியுறுத்தல், வாய்ப்புகள் பறிக்கப்படும் என மிரட்டுதல் உள்ளிட்ட நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லைகளை பெண்கள் வெளியே சொல்லாமல் மறைப்பதற்கு வேலை பறிபோகும் என்பதே முதன்மை காரணமாகிறது. எங்கு முறையிடுவது என்பதும் பெரும் பிரச்சனை. அதிகார பீடத்தின் உயர்மட்டத்தில் இருந்து வரும் இந்த தொல்லைகளை உதாரணமாக ஒரு நடிகரின் தொல்லை குறித்து இயக்குநரிடம் சொன்னால், அவருக்கு படம் வெளிவருவதும், இலாபமும் நோக்கமாக இருக்கும் போது, இதை பொருட்படுத்துவதில்லை.
பிரபல நடிகரால் பாதிக்கபடும் பெண்கள் அதை வெளிப்படுத்தும் போது அவர்களின் ரசிகர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அந்த நடிகைகளை குறித்து மோசமான கமெண்டுகளை கருத்துகளை பரப்பப்படுவது உள்ளிட்ட பல சவால்களை எதிர் கொள்வதை பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
ஹேமா குழு அறிக்கையில், ‛‛மலையாள திரையுலகம் ஒரு 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருக்கிறது. அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிக முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே இவர்களின் ஆதிக்கம் பாலியல் புகார் விசாரணை குழுக்களிலும் இருக்கும். உண்மையை வெளிப்படுத்துபவர்களை இயங்கவிடாமல் தடைசெய்யும் அளவிற்கு மாபியா போல் செயல்படும் அவர்களை விசாரிக்க புகார் குழு அமைப்பது பெண்கள் துன்பத்தை அதிகமாக்குமே தவிர தீர்வாகாது என குழு எச்சரிக்கிறது.
திரைத் துறை பெண் தொழிலாளர்கள் பிரச்சினை;
திரைத் துறையில் 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பெண்கள் பணிபுரிகின்றனர். நடிகைகள் தவிர்த்து மற்ற அனைவருக்குமே கழிப்பிட வசதி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது மிக முக்கிய பிரச்சனையாக அறிக்கை குறிப்பிடுகிறது.
படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் மற்றும் வெளிப்புற படப்பிடிப்புகளில் தாங்களாகவே ஏதாவது இடத்தை தேடி அலையும் நிலை, புதர்களில் ஒதுங்குதல், தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சீறுநீரை அடக்குவதால் ஏற்படும் உடல்நல குறைவுகள், குறிப்பாக மாதவிடாய் சமயங்களில் உபயோகிக்க தண்ணீர் இன்றி படும் அவதிகள், கழிப்பிடம் இருக்கும் சில இடங்களில் கூட துணை நடிகைகள் அங்கு அனுமதிக்கப்படாதது, இதில் எந்த அக்கறையையும் காட்டாத தயாரிப்பு நிறுவனங்கள் என துயரங்கள் நீள்கிறது.
படப்பிடிப்பின் அனைத்து செட்டுகளிலும் E டாய்லெட்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும், கேமிரா பொருத்தப்படும் அபாயம் இருப்பதால் தற்காலிக தடுப்புகள் உடைமாற்றும் வசதிக்காக ஏற்படுத்தபட வேண்டும் என அறிக்கை பரிந்துரைக்கிறது.
பணியாளருக்கும், வேலையளிப்பவருக்கும் இடையிலான எழுத்து பூர்வமான முறைப்படியான ஒப்பந்தங்கள் போடப்பட்டு முறையான ஊதியம் வழங்குதல், ஊதிய பாகுபாட்டை நீக்குதல், ஒப்பனை கலைஞர், முடி ஒப்பனையாளர் போன்ற பணி பிரிவுகளில் பெண்ணுக்கான வாய்ப்புகளை மறுத்து அடையாள அட்டையோ, சங்கங்களில் சேரும் உரிமையோ கூட மறுக்கபடும் நிலை மாற்றப்படுதல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுசார் பணிகளில் அதிகபடியாக பெண்கள் கொண்டுவருவற்கு அரசு செய்வதற்கான பரிந்துரைகள் என பலவற்றை அறிக்கை விரிவாக பேசியுள்ளது.
குறிப்பாக துணைநடிகர்கள் ஆண்-பெண் இருவருமே காலை 7மணி முதல் இரவு 2 மணி நேரம் வரை 19மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதான நிலைமைகள், அவர்கள் குடிநீர், கழிப்பிட வசதி, வந்து செல்ல போக்குவரத்து வசதி, அவரசகால மருத்து வசதி, உணவு போன்றவை எதுவும் வழங்கப்படாமல், இடைத் தரகர்களாலும் ஏமாற்றப்பட்டு மிக குறைவான ஊதியத்தில் அடிமைகளை விட மோசமாக வைக்கப்படுகிறார்கள் எனக் கூறி மிக விரிவான தகவல்களை ஆதாரங்களுடன் அறிக்கை பதிவு செய்துள்ளது.
AMMA, FEFKA சங்கங்கள் துணை நடிகர்களை உறுப்பினராக கூட ஏற்றுக் கொள்ளதில்லை. திரைத்துறை சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக எப்படி செயல்படுகின்றன என்பதும் அறிக்கையில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது
கேரள திரைத்துறையில் தற்போதைய பிரச்சனைகள் அனைத்தையும் தற்போது இருக்கும் சட்டவரையறைக்குள் தீர்க்க முடியாதை விளக்கும் அறிக்கை இதற்காக திரைத்துறை பணியாளர், பணிவழங்குபவர் முறைப்படுத்தும் சட்டம், 2020 என தனிச்சட்டம் உருவாக்குவற்கான பரிந்துறையும் அதனுள் டிரிபினல் அமைப்பது உள்ளிட்டவற்றையும் கூறியுள்ளது.
பல மலையாள நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் நெருக்கடிகளை துணிந்து சொல்ல முன்வந்திருப்பதால் நடிகர்கள் ரியாஸ்கான், பாபுராஜ்,முகேஷ்,ஜெயசூர்யா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் அம்பலப்பட்டுள்ளனர். பல மொழிகளின் பெண் கலைஞர்களும் தற்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். பெண்கள் மாத்திரமல்ல, இளம் நடிகர் நவஜீத் நாராயணன் தன்னை ஒரு இயக்குனர் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார் என தெரிவித்துள்ளதன் மூலம் வாய்ப்பு தேடும் பலரும் இப்படி நிர்பந்திக்கப்படுவது தெரிய வருகிறது.
WCC யின் உறுப்பினர்கள் பலர் வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல் தடுக்கப்படுவதும், இதனையும் அவர்கள் எதிர் கொண்டு போராடி வருவதும் அறிக்கை அளிக்கும் விவரங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மலையாளத் திரை உலகை ஆட்டிப்படைக்கும் பவர் குரூப் இல்லை என்று நடிகர் மம்முட்டியும், அந்த பவர் குரூப்பில் நான் இல்லை என மோகன்லாலும் எவ்வளவு சுயநலமாக பூசி மெழுனாலும், அவர்களின் செயல்பாடுகளை கோழைத்தனம் என துணிவுடன் அறிவித்து விட்டு, தொடர்ந்து செயல்படும் WCC உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களின் செயல்பாடுகள் போற்றத்தக்கவை மட்டுமல்ல. முன் உதாரணமானவை ஆகும்.
நீண்ட நெடிய தயக்கத்திற்கு பிறகு பெண்கள் அமைப்புகள் தந்த நெருக்கடிகளால் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஐ.ஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒருவித முன்னேற்றமே.
–ஜி.மஞ்சுளா
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய தேசிய மாதர் சம்மேளனம்
பெண்களை இழிவு படுத்தினார் என்று யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக செருப்பு துடைப்பங்களுடன் வெகுண்டெழுந்த வீரப்பெண்கள் ,செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான நடிகைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை ஏன்? ரஜினி கமல் பாக்யராஜ் ரவீந்தர் கார்த்திக் விஜய் சத்யராஜ் பிரகாஷ்ராவ் யாருமே வாய் திறக்கவில்லையே