மக்களுக்கான ஆட்சி மலர செய்ய வேண்டியது என்ன?

-க.பழனிதுரை

மாற்று அரசியல் என்பது என்ன?  மக்கள் நலன் குறித்து சிந்தித்து செயல்படாத ஆட்சியாளர்கள், அவர்களை அண்டிப் பிழைக்கும் தோழமை கட்சிகள், ஆளும் கட்சி செய்த தவறுகளையே தானும் செய்யக் காத்திருக்கும் எதிர்கட்சிகள், விலை போன ஊடகங்கள், விழிப்புணர்வு இல்லாத மக்கள்.. என்ன தான் தீர்வு..? -க.பழனிதுரை

இன்றுள்ள சூழலுக்கு மாற்றுத் தேட வேண்டும். எங்கும் ஒரு தேக்கநிலை. தேக்கமில்லாது இருப்பது சந்தை மட்டுமே. தேக்கநிலை மட்டுமில்லை, ஒருவித சலிப்பு, வெறுப்பு, விரக்தி, அமைதியற்ற நிலை. அது மட்டுமல்ல, ஒரு அச்சம் எல்லோரையும் பிடித்துக் கொண்டுள்ளது. மக்களாட்சி இன்று மேய்ப்புக்கானதாக மாறிவிட்டது. ”அனைத்தும் கை மீறிவிட்டது” என்று விவாதத்தில் வாழ்வு நகர்கின்றது.

இவைகளிலிருந்து வெளியேற ஒரு மாற்றம் தேவை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. பலர் ஏதாவது கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து மாற்றிட முடியாதா என்று எண்ணி, ”கடுமையான சட்டங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறுகின்றனர். பலர், ”இன்றைய ஆட்சி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள்” என வாதிடுகின்றனர். சிலர், ”தொழில் நுட்பத்தை நிர்வாகத்தில் கொண்டு வந்து நிர்வாகத்தை வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றுங்கள்” என்று ஆலோசனை கூறுகின்றனர். ஒன்றை அனைவரும் மறந்து விடுகின்றனர்.  நடைபெறும்  ஆட்சியைக் கண்காணிக்கத் தெரியாத அரசியல் அறியாமையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது, மேற்கூறிய அத்தனையும் பயனற்றுப் போகும் என்பது பலர் அறியாதது.

கடந்த பத்தாண்டுகளாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் பல வல்லுனர்கள், ”தீர்வு மக்களிடம் தான் இருக்கிறது. எனவே, மக்களிடம் செல்வது தான் ஒரே வழி” என்று கூறும் போது, எதை மையப்படுத்திக் கூறுகின்றார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மக்கள் இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பெட்டியில் கருத்துகளை பூட்டி வைத்திருக்கவில்லை. ‘மக்களிடம் செல்லுங்கள்’ என்றால், ‘மக்களைத் தயார் செய்யுங்கள்’ என்பதுதான் அதன் பொருள்.

இந்திய நாட்டின் விடுதலைக்கு  செயலாற்ற வந்த மகாத்மா காந்திக்கும் கோகலே அந்த வழியைத் தான் காட்டினார். ”மக்களை நோக்கி பயணம் செய், மக்களை அறிந்து கொண்டு முடிவெடு” என்று அறிவுறுத்தினார். அதன் விளைவு தான் நாடு முழுவதும் சுற்றி 2,000 இடங்களில் மக்களை  சந்தித்து, மக்களின் நிலை அறிந்து அவர்களை ஒன்று திரட்ட முனைந்தார். அப்பொழுதும் மக்கள் அறியாமையில் தான் இருந்தார்கள், அரசைக் கண்டு அச்சத்தில் இருந்தார்கள். அறியாமையில் அச்சத்தில் இருந்த மக்களைத் தான் ஒருங்கிணைத்து அவர்களின் அச்சத்தைப் போக்கி, சமூகச் சிந்தனையை உருவாக்கி, நாட்டுப் பற்றை மேலேழச் செய்து சுதந்திரத்திற்காகப் போராடச் செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்தார் காந்தி.

 

இன்று எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தான் அன்று எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை. இன்று போல் அன்று அறிவியல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு தொழில் நுட்பம், ஊடகங்கள் என மக்களை இணைக்கும் கருவிகள் அன்று இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. பசியும், பட்டினியும், வறுமையும், பஞ்சமும், அறியாமையும் மக்களை வாட்டி வதைத்தன. இன்று அப்படி இல்லை. வலுவான அரசாங்கம் கட்டுப்பட்டு வலுவுடன் திகழ்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொள்ளக் கூடிய அளவில் வளர்ந்துள்ளது.

இவ்வளவு இருந்தும் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய வசதிகளும், வாய்ப்புக்களும் ஏன் போய்ச் சேரவில்லை என்பதை ஆய்வு செய்தால், நமக்கு தெள்ளத் தெளிவாகக் கிடைக்கும் பதில், அரசாங்கம் பகுப்பு நீதியில் தன் கடமையைச் செய்யவில்லை. அடைந்த பொருளாதார வளர்ச்சியை பங்கீட்டு நீதியின் மூலம் யாருக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கு கொண்டு சேர்க்க இயலவில்லை அல்லது கொண்டு சேர்க்கவில்லை. இங்கு திட்டங்கள் இல்லாமல் இல்லை. சட்டங்கள் இல்லாமல் இல்லை. நிதி இல்லாமல் இல்லை. அனைத்தும் இருக்கின்றன. இருந்தும் ஏன் நடைபெறவில்லை என்றால், அதற்கான காரணங்கள் பல.

அவைகளில் முக்கியமானவைகள் இரண்டு. ஒன்று அரசு கொண்டு வருகின்ற எந்தத் திட்டத்தையும் ஒரு சாரார் பிடித்துக் கொள்ளுகின்றனர். அதற்கு ஆங்கிலத்தில் ‘கேப்ச’ர் என்று கூறுவர் ஆய்வாளர்கள். இரண்டு, தங்களுக்கு வரவேண்டியவைகள் வந்து சேரவில்லை, அதை யார் தடுத்தது, எங்களுக்கானவைகள் எங்கே என்று கேள்வி கேட்கத் தேவையான புரிதலும், துணிவும் இல்லா பெரும்பான்மை மக்கள்.

மேம்பாட்டுச் செயல்பாடுகளில் தான் மிகப் பெரிய ஊழல்கள் நடைபெறுகின்றன. சேவைகளைச் செய்கின்றபோது அதற்கான கையூட்டைக் கேட்கின்ற போது கொடுக்க முடியாது என்று சொல்ல துணிவில்லா மக்கள். எனவே, அரசாங்கத்தை ஒரு சாரார் நெருங்கி பிடித்துக் கொண்டு அவர்களுடைய மேம்பாட்டுக்காக அரசு இயந்திரங்களை இயங்க வைக்கின்றனர். முற்றிலுமாக அரசு இயந்திரம் என்பது சட்டத்தின்படி ஆட்சி என்பதை விட, ஆளும் கட்சிக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு நன்கொடை தரும் கார்ப்பரேட்டுகளுக்காக செய்வது தான் ஆட்சி என்ற நிலைக்கு ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டோம். இதில் ஆளும் கட்சிக்காரர்களுக்கு மட்டும் பங்கு இல்லை. இந்தச் சூழலை மாற்ற முயலாமல் வேடிக்கை பார்க்கும் எதிர்கட்சிக்கும், ஆளும் கட்சியுடன் தோழமையில் இருக்கும் கட்சிகளுக்கும் பங்குண்டு. எதிர் கட்சிகளோ ஆளும் கட்சியாக  தாங்கள் வரும் போது இதையே நாமும் செய்யலாம் என கணக்குப் போடுகிறது.

இவற்றையெல்லாம் ஊடகங்கள் மக்களின் பார்வைக்கு கொண்டு வரும் என்றால், ஊடகங்களோ இன்று அதைச் செய்ய இயலாத கையறு நிலையில் இருக்கின்றன. காரணம், அவை அனைத்தும் அரசு தரும் விளம்பரங்களை சார்ந்து உள்ளன. அரசின் அதிகார மையங்களை தங்கள் சொந்த பலாபலன்களுக்கு ஊகத் துறையினர் பயன்படுத்தும் காரணத்தால் தட்டிக் கேட்கும் தார்மீக உரிமையை இழந்துள்ளனர். லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஊடக நிறுவனர்களுக்கு அரசு தரப்பில் தரும் நெருக்கடிகளை சமாளிக்க இயலாமல் போய்விடுகிறது. இதனால் பெரும்பாலான ஊடகங்கள் அதன் தர்மத்தை இழந்து இருப்பதை நாம் எதார்த்தத்தில் பார்த்து வருகின்றோம்.

ஊடகத்திற்கு அப்பால் நம் படித்த நடுத்தர வர்க்கம் எதையாவது செய்திடாதா..? என்று பார்த்தால், அது தன் உயர்வுக்குச் செயல்பட புதிய பொருளாதாரத்தால் வந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, முனைந்து சுகபோக வாழ்க்கையில் மூழ்கி விட்டதையும் பார்க்கிறோம்.

எங்காவது அறிவு ஜீவிகள், பொதுக் கருத்தாளர்கள் இதைச் செய்கின்றார்களா? என்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களை அரசு படுத்தும் பாடு மற்றவர்களை அச்சப்படுத்துவதால், நமக்கேன் என்று ஒதுங்கியிருக்கின்றனர். இதன் விளைவு, கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 35,000 போராட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களே போராடி ஓய்ந்து போய் விட்டனர். அதில் ஒரளவு வெற்றி பெற்ற ஒரே போராட்டம் என்பது விவசாயிகள் போராட்டம் மட்டுமே.

மக்களின் பிரச்சினைகளை ஒன்று திரட்டி, அதற்காகப் போராடி மக்களின் பிரச்சினைகளுக்கு அரசின் மூலம் தீர்வு காண்பது தான் அரசியல் கட்சிகளின் முக்கியமான பணி. ஆனால், இந்தப் பணி கடினமானது என்பதால், அதை அரசியல் கட்சிகள் அதனைக் கைவிட்டு ஆர்ப்பாட்டம், தர்ணா,கண்டண முழக்கம் போன்ற அடையாளப் போராட்டங்களை செய்து, தன் இருப்பை மக்களிடம் காண்பிப்பதோடு தங்கள் கடமை முடிந்தென்று விட்டுவிடுகின்றனர். இதன் விளைவு மக்கள் இந்த அரசியலிலிருந்தும், அரசாங்கத்திலிருந்தும் அந்நியமாகி விட்டார்கள். அரசு தரும் பயன்களை வாங்கும் பயனாளியாக இருப்பதை மட்டும் செய்கின்றார்கள். அப்படி பயன் கிடைக்கவில்லை என்றால், மனுச் செய்து மனுதாராக மாறிவிடுகின்றனர்.

பயனாளியாகவும், மனுதாரராகவும் இருந்து தன்னை அரசை நம்பித் தான் காலம் கழிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையற்ற மனோபாவத்திற்கு வந்து விடுகின்றனர். அத்துடன் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, தன் சுயமரியாதையையும் இழந்து அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு கூட அரசியல் கட்சிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் தயவை நாட வேண்டிய சூழலுக்கு பொது மக்கள் தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. இந்த வாழ்க்கை வாழ்வதில் ஒரு விரக்தி, வெறுப்பு, வந்துவிட்டது மக்களுக்கு.

நம் அரசியல்வாதிகளின் வாழ்க்கை ஆடம்பரம் மிக்கது. அரசியலும் ஆடம்பரம் நிறைந்ததாக மாறிவிட்டது. அரசியல்வாதிகளின் வீட்டு திருமணங்கள், கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் தாங்கள் ஊழலில் சேர்த்தவைகளை செலவழிக்கும் ஒரு அருவறுப்பான நிகழ்வு. அதை எந்தக் கூச்சமும் இன்றி செயல்படுத்துகின்றனர். அந்த நிகழ்வுகளை பார்க்கும் போது ஏழைகள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்கின்றனர். அரசியல் என்பது வணிகமாகி மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழ்வது என்று தான் பார்த்து வருகின்றனர். இதற்கு தீர்வு தான் என்ன என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

இன்னொரு கட்சி உருவாகிவிட்டால் மாற்றம் வந்து விடுமா? நிச்சயம் இன்றைய சூழலில் வர இயலாது. காரணம், அரசியல் சந்தை வசப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்த வலுவும் இல்லை, தியாகத் தலைமையும் இல்லை. அவர்களிடம் இன்று இருப்பது சந்தையின் பணம் மட்டுமே. சந்தையை சமூகத்திற்குச் செயல்பட வைக்கத் தேவையான மாற்று முறை அரசியல், மாற்று முறை ஆளுகை, மாற்று முறை நிர்வாகம், மாற்று முறை வளர்ச்சிப் பாதை தான் இன்று நமக்குத் தேவை. செயல்படுத்த முடியாத சித்தாங்களைப் பேசி பலன் இல்லை. மக்களை அதிகாரப்படுத்தி, மக்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க மக்கள் அரசியலை கட்டமைப்பது தான் இன்று நமது தேவை.

கட்டுரையாளர்;க.பழனிதுரை

பேராசிரியர், சமூக செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time