சட்டப்பூர்வமானதெல்லாம் நியாயமானதில்லை!

-ஜீயோ டாமின்.ம

பணக்காரனுக்கும் ஏழைக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி நிலவுகிறது…?

அரசின் சட்ட திட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன? யாருக்கு பயன்படுகின்றன?

ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாகவே தொடர்வதும், பணக்காரர்கள் மேன்மேலும் பணக்காரர்கள் ஆவதும் எப்படி..? – ஒரு ஆழமான அலசல்;

இரயில் பயணமொன்றில் அருகே அமர்ந்திருந்த ‘பெரிய மனிதர்’ ஒருவரோடு உரையாட நேர்ந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தோம். வழக்கம் போல, இரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகளும் கூட அந்த இரயிலில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அப்படி ஒரு குடும்பம் கழிவறைக்கு அருகே இருக்கும் இடத்தில் தரையில் அமர்ந்திருந்தது. எங்கள் அருகே கூட முன்பதிவு செய்யாத ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். தொழிலதிபர் அந்தப் பெரியவரை ஒருவிதமான எள்ளல் பார்வையோடு அடிக்கடி திரும்பிப் பார்த்தபடியும் – அப்படிப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ மலத்தைப் பார்ப்பது போல ஒரு அருவெறுப்பை வெளிப்படுத்தியபடியும் அமர்ந்திருந்தார். அடிக்கடி உச்சுக்கொட்டியபடி பொருமினார். என்னையும் அவருடைய உணர்வுகளோடு கூட்டு சேர்ந்து கொள்ள அவர் விரும்புவது தெரிந்தது. ஆனால் நான் எதுவும் புரியாதது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தேன்.

சற்று நேரத்தில் கழிவறைக்கு சென்று வந்தவர் அங்கு கழிவறையோடு ஒட்டிக்கிடந்திருந்த குடும்பத்தைக் கடந்து வந்திருந்தார். இதற்கு மேலும் அவரால் எதையும் அடக்கி வாசிக்க முடியவில்லை. ஆழ்ந்த பெருமூச்சு விட்டவராய் “இங்க பாருங்க; நம்மைப் போல தொழில் செய்றவங்க கஷ்டப்பட்டு மூச்சுவிடாம வேலை செய்து சம்பாதிக்குற பணத்துல கட்டுக் கட்டா பணத்தை கவர்மெண்டுக்கு வரியா தண்டம் அழுறோம்; நம்ம வரிப்பணத்துல ஓடுற இரயில்ல இவனுங்க எவ்ளோ சொகுசா போறானுங்க பாத்தீங்களா?” என்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது; அப்போது எனக்கு அவரது ஆதங்கத்தில் சற்று உண்மை இருக்குமோ என்றும் கூட தோன்றியது.

இரயிலில் ஒரு இருக்கையை முன்பதிவு செய்துவிடும் தொழில்நுட்ப மற்றும் வருவாய் அனுகூலத்தைப் பெற்றிருக்கும் நாம் – அந்த ஒரே அனுகூலத்தை (Privilege) ஆயுதமாகக் கொண்டு – முன்பதிவு செய்யாமலேயே முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் மீது – குறிப்பாக விளிம்பு நிலை வட மாநிலத் தொழிலாளர்கள்மீது இத்தகைய வன்மத்தை வழக்கமாகவே கக்குவதுண்டு. நகைச்சுவை என்ற பெயரில் இதை நியாயப்படுத்தும் நாரசமான காணொளிகள் கூட அதிகம் இப்போது வலம் வருகின்றன. முன்பதிவு இருக்கையில் முன்பதிவு செய்யாதவர் அமர்வது சட்டப்படி தவறு மட்டுமல்ல; நாகரீகமற்ற செயலும் கூட. ஆனால், சட்டப்பூர்வமானதெல்லாம் இங்கு சரியானதா? நாகரீகமானதெல்லாம் நியாயமானதா?

இந்த கேள்வியை இங்கேயே விட்டு விட்டு தலைப்புக்கு வருவோம்!

சந்தைப் பொருளாதாரத்தில் ‘பொங்கி வழியும் பொருளாதாரம்’ (Trikling down economy) என்றொரு கருத்து உண்டு. அதன்படி நூற்றுக்கணக்கான மதுக் கோப்பைகள் ஒன்றன்மீது ஒன்றாய் பிரமிடுகள் போல அடுக்கப்பட்டிருப்பதாய் கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரியதொரு மதுக் குப்பியைத் திறந்து மேலேயிருக்கும் மதுக் கோப்பையில் அதை கவிழ்த்தால் அது பொங்கி வழிந்து கீழிருக்கும் கோப்பைகளும் ஒவ்வொன்றாய் நிறையும். இப்படித் தான் பெரு நிறுவனங்கள் பொருளாதார வளம் பெறும் போது அவற்றின் செல்வம் பொங்கி வழிந்து அடித்தட்டு ஏழைகளும் வளம் பெறுவதாக சந்தைப் பொருளாதாரத் தத்துவம் சொல்கிறது.

இங்கே உச்சியிலிருக்கும் கோப்பை பெரு நிறுவனங்கள் என்றும் அடுத்தடுத்த வரிசையிலிருக்கும் கோப்பைகள் உயரதிகாரிகள், மேலாளர்கள், ஊழியர்கள், கடைநிலை தொழிலாளர்கள் (அல்லது சிறு குறு நிறுவனங்கள்) என்று சொல்லலாம். வளர்ச்சியை ஊக்குவிக்க அரசானது தனது குப்பியிலிருக்கும் மது இரசத்தை உச்சிக் கோப்பையில் நிறைக்கிறது. அதாவது மானியங்கள், உள்கட்டமைப்புகள் போன்றவற்றின் மூலம் பெருந் தொழில்கள் முதலீட்டை அதிகரித்து உற்பத்தியை அதிகரிக்கிறது.

மேலிருக்கும் கோப்பையானது செல்வச் செழிப்பால் பொங்கி வழியும் போது, கீழிருக்கும் கோப்பைகள் நிரம்புகின்றன. அதாவது, பெருநிறுவனம் நல்ல இலாபம் ஈட்டும் போது, அது பெரு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் சிறு குறு தொழில்களையும் வளர்ச்சியடையச் செய்வதோடு, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஒட்டுமொத்த மானுட குலத்தையும் செல்வச் செழிப்பில் ஆழ்த்துகிறது. ஆகவே மக்களின் நுகர்வு அதிகரித்து மீண்டும் அரசின் மதுக் குப்பியான கஜானாவும் நிறைகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசுக்கு வழிபிறக்கிறது. கேப்பையில் நெய் வடிகிறது என்பது போல கேட்கவே இது எத்தனை இனிமையாக இருக்கிறது இல்லையா?

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?

அரிசி ஆலையின் உற்பத்தி அதிகரித்தால் கோணிப்பையிலிருந்து ஒழுகிச் சிதறும் அரிசியை வயிறு நிறைய உண்ணலாம் என்று காத்திருக்கின்றன சிட்டுக் குருவிகள். ஆனால், அரிசி ஆலை அதிபரோ தன் மிகையான செல்வத்தைக் கொண்டு தனது அரிசி மூட்டைகளை ஒழுகாத நெகிழிச் சாக்குக்கு மாற்றிவிட்டார். செல்வம் குவியக் குவிய மேலிருக்கும் கோப்பை பெருத்துக் கொண்டிருக்கிறது. செல்வம் பொங்கி வழிந்தால் பசியாறலாம் என்று காத்துக் கொண்டிருந்த சிட்டுக் குருவிகள் பசியால் பரிதாபகரமாய் செத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான் எதார்த்தம்.

வளர்ச்சியை ஊக்குவிப்பதாய் சொல்லி அரசு எவ்வளவுக்கு முதலீடுகளை அதிகரிக்க சலுகைகள் மூலம் தனது கஜானாவைக் காலியாக்குகிறதோ அவ்வளவு அதிகமாய் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கின்றன. ஊதியத்துக்கும் அதிகமாக உறிஞ்சப்படும் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் திணிக்கப்படும் பெருநுகர்வால் குவிக்கப்படும் இலாபம், வரிகள் போன்றவற்றால் அடித்தட்டு கோப்பைகளிலிருக்கும் இறுதித் துளி மதுவரையில் உச்சிக் கோப்பையால் மோட்டா ர்போட்டு உறிஞ்சப்பட்டுவிடுகின்றன. பொங்கி வழியும் பொருளாதாரம் என்று சொல்லப்படுவது ஒரு பித்தலாட்டம் என்பதை ஒவ்வொரு முறையும் வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன.

அப்படியாக சென்ற ஆண்டு அறிக்கைதான் “செல்வந்தர்களின் பிழைத்திருத்தல்: இந்திய கதை” (Survival of the Richest: The Indian Story) என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஸ்பாமின் இந்தியாவுக்கான ஏற்றத்தாழ்வு அறிக்கை. சுவிச்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தின் முதல் நாளன்று இந்த அறிக்கை  வெளியாகியிருக்கிறது. இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று சொல்லப்படுவது உண்மையில் என்னவாக இருக்கிறது என்று அந்த அறிக்கையின் மூலம் நாம் தெளிவாய் உணர முடிகிறது. அதன் சாராம்சத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. இந்தியாவின் செல்வத்தில் 40 விழுக்காடு வருவாயில் மேல்தட்டில் உள்ள 1 விழுக்காடு நபர்களின் கையில் உள்ளது. அதே நேரத்தில் அடித்தட்டில் உள்ள 50 விழுக்காடு மக்களோ வெறும் 3 விழுக்காடு செல்வத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

2. எட்டாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 2020 இல் 102 ஆக இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 2022 இல் 166 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது, சாமானியர்களை நரக வாழ்க்கைக்குத் தள்ளிய கொரோனா பேரிடர் காலத்தில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 65 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

3. கொரோனாவுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்தியாவின் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாளும் 3,608 கோடி ரூபாய் அதாவது 121 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

4. இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ 54.12 லட்சம் கோடி. இதைக் கொண்டு 18 மாதங்களுக்கு பட்ஜட் போடலாம்.

5. இந்தியாவில் உள்ள பில்லியனர்களுக்கு அவர்களது மொத்த சொத்தின்மீது ஒரு முறை மட்டும் 2 விழுக்காடு வரி விதித்தால் ரூ 40423 கோடி கிடைக்கும். அதைக்கொண்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குஅந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதியை வழங்க முடியும்.

6. இந்தியாவில் அடித்தட்டில் உள்ள 50 விழுக்காடு மக்கள் பொருளாதார ரீதியாக மேல் நிலையில் உள்ல 10 விழுக்காட்டினரைவிட 6 மடங்கு அதிக வரி செலுத்துகின்றனர். இந்தியாவில் ஜிஎஸ்டி வசூலில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களின் பங்களிப்பு 64 விழுக்காடாகவும் பொருளாதார அடுக்கில் மேல் நிலையில் உள்ள 10 விழுக்காட்டினரின் பங்கு வெறும் 3 விழுக்காடாகவும் இருக்கிறது.

மேலே சொல்லியிருப்பவற்றில் 6- வது புள்ளிவிபரத்தை இன்னுமொருமுறை வாசித்துவிட்டு இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட இரயில் பயண உரையாடலின் நியாயத்தை நினைவு கூருங்கள். நான் பயணித்த அந்த இரயிலை இயக்கியதும், அந்தத் தொழிலதிபரை முன்பதிவு பெட்டியில் அமரச் செய்திருப்பதும் யாருடைய பணமென்றும் அதைச் செலுத்தியவர்கள் ஏன் கழிவறை அருகே அமர்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வரும். சந்தைப் பொருளாதார வளர்ச்சியின் யதார்த்தம் இது தான். அது எந்தவிதமான அடிப்படை அறமோ, நியாயமோ, நேர்மையோ மனிதத் தன்மையோ அற்ற அமைப்பு. சட்டப்பூர்வமாக அரசால் பாதுகாக்கப்படுவதால் மட்டும் அது புனிதமானதாக மாறி விடாது. 23 கோடி மக்கள் வறுமையில் வாடும் நாட்டில் 166 பில்லியனர்களை வாழவைக்கும் சட்டம் எந்த வகையில் நீதியானதாக இருக்க முடியும்?

உண்மையில் அரசும் சட்டமும் எவரும் தொழில் செய்வதைத் தடுக்கவில்லை. ஆனால், யாருக்கு அரசின் நட்பு வாய்க்கிறதோ, அவருக்கு தொழிலில் கோலோச்சும் வாய்ப்பும், தனக்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகளை எழுதிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஒரே கூண்டுக்குள் புலியையும், மானையும் சமமாய் அடைத்து வைத்து தொழில் செய்வதற்கான சமவாய்ப்பு அனைவருக்கும் இருப்பதாய் சொல்லும் ஜனநாயகம் எத்தகையது?

இந்த அநீதியான உற்பத்தி அமைப்பு உருவாக்கும் ஏழ்மையையும், வறுமையையும் சமன் செய்வதற்காக அரசு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க வேண்டுமென்று பலரும் சொல்வதைக் கேட்க முடிகிறது. பெரும்பான்மையான அரசின் வரிவருவாய் கோமான்களிடமிருந்து அன்றி பெரும்பாலான அடித்தட்டு மக்களிடமிருந்தே பெறப்படுகிறது என்பதையும் ஆக்ஸ்போம் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. அப்படியிருக்க அரசின் சமூக நலத்திட்ட உதவிகள், விலையில்லா பொருட்களின் அர்த்தம் என்ன? அடித்தட்டு மக்கள்தான் தமக்கான சமூக நலத்திட்டங்களுக்கான நிதியைக் கொடுக்கின்றனர். கோவணத்தோடு ஓட்டாண்டியாகி நிற்கும் ஒருவனின் வீட்டுப் பின் வாசல் வழியே வந்து அவனது வலது கையிலிருப்பதைப் பிடுங்கிச் சென்றுவிட்டு, முன்வாசல் வழியே ஊடக ஒளிப்பதிவு கருவிகள் சகிதம் வந்து அவனது இடது கையில் கொடுத்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் நாடகமேயன்றி வேறில்லை.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சீனாவை விஞ்சி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேற வேண்டுமென்றும், அதற்கு பொருளாதார வளர்ச்சியை மேலும் முடுக்கிவிட வேண்டுமென்றும் கூப்பாடு போடுகின்றனர் வலதுசாரிப் பொருளியலாளர்கள். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து சீனாவை முந்துவது? உண்மையில் உற்பத்தி அதிகரிப்பு எதைக் கொண்டுவரப் போகிறது?

# அதிக உற்பத்திக்காக அதிக இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல்.

# அதிக உற்பத்தியால் ஏற்படும் அதிக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு; அதனால் ஏற்படும் காலநிலை மாற்றப் பேரிடர்கள்

# அதிக உற்பத்தியும் அதனால் அதிகரிக்கும் சூழல் மாசுகளும்

#  கூடுதல் ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் சில நூறு பில்லியனர்களும்

இதைத் தாண்டியும் நாம் எதிர்பார்ப்பது என்ன?

ஏற்கனவே பெருத்த வயிறோடு வளர்ந்து நிற்கும் அதானி குழுமத்தால் நமக்குக் கிடைத்தது என்ன? இலாபகரமான நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு எஞ்சிய பொதுத் துறை நிறுவனங்களை ஊதிப் பெருக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய வைத்து இப்போது ஒரு திருட்டு சாம்ராஜ்யம் நொறுங்கும் போது தேசப் பாதுகாப்பும் உறுதித் தன்மையும் சேர்ந்தே தானே நொறுங்குகிறது?

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, இங்கிருக்கும் சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதும் நீர் வளமும் கனிம வளமுமிக்க நிலங்களைக் கையகப்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவை அமைப்பதும் தொழிலாளர் உரிமைகளை பலவீனப்படுத்துவதும் அவசியமாக இருக்கிறது. இவை நேரடியாகவே இங்கிருக்கும் ஏராளம் விளிம்புநிலை மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் என்ற நிலையில் இந்த பெரும் பொருளாதார அந்தஸ்த்துகள் உண்மையில் வெகுஜன மக்களுக்கு சுமையாகவே அமையும். அந்நிய முதலீடுகள் உருவாக்கும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிடும் போது நிலம் கையகப்படுத்தல், சூழல் சீர்கேடுகள் போன்றவற்றால் அழிக்கப்படவிருக்கும் அருகாமை வாழ்வாதாரங்கள் பற்றிய அறிவிப்புகள் செய்யப்படுகின்றனவா?

இந்த நிறுவனங்கள் பெரும் இலாபமீட்டுவதற்காய் செய்யப்படும் 24X7 உற்பத்தியில் உருவாகும் கழிவுகளாலும் காலநிலை மாற்றத்தாலும் பாதிக்கப்படும் முதல் நபராகவும் விளிம்பு நிலை மக்களே இருக்கின்றனர். எந்த மழை வெள்ளமும், புயல்களும் காங்கிரீட் வீடுகளை அடித்துச் செல்லுவதில்லை. மின்விசிறி கூட இல்லாத தகரக் கொட்டகைகளே வெப்ப அலைகளில் வேகின்றன. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருந்து இந்த பொங்கி வழியும் பொருளாதாரத்தைப் பங்கு போடுபவர்களுக்கு இவையெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. வரலாறு காணாத பேரிடர்கள் என்ற போர்வைகளுக்குள் ஒழிந்து கொள்ளும் அரசுக்கும் இந்த மரணங்கள் வெறும் புள்ளி விபரங்களே!

கண்மூடித்தனமான பொருளாதார வளர்ச்சியும் சூழல் – சமூக நலனும் ஒன்றுக் கொன்று முரணானவை. தவறான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே காலநிலை மாற்றமும், சமூக ஏற்றத் தாழ்வுகளும். இவற்றை சரியான பொருளாதாரக் கொள்கைகளால் அன்றி தொழில்நுட்ப ஒட்டு வேலைகளால் சரி செய்ய முடியாது.

சூழல் நீதி இல்லாமல் சமூக நீதி இல்லை!

சட்டப்பூர்வமானதெல்லாம் நியாயமானதில்லை!

ஜீயோ டாமின்.ம

( பூவுலகின் நண்பர்கள்)

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time