டுபாக்கூர் மூக்குத்தி அம்மன்

சாவித்திரி கண்ணன்

எந்த ஒரு படைப்பின் நம்பகத் தன்மையும் சொல்ல வந்த கருத்தில் அதற்கிருக்கும் தெளிவும்,உறுதிப்பாடும் சம்பந்தபட்டதாகும்!

மூக்குத்தி அம்மன் ஒரு பக்தி படமுமல்ல,விழிப்புணர்வு படமுமல்ல!

இது பச்சையான பாஜக ஆதரவுப் படம்!

பக்தியின் உன்னதம் குறித்த புரிதலும் இல்லை!

மறைபொருளாகத் திகழும் கடவுள் குறித்த புரிதலும் இல்லை!

நாத்திகம் என்ற உயரிய கொள்கை குறித்த அடிப்படை அறிவும் இல்லை!

முற்றிலும் அரைவேக்காட்டுத் தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது,மூக்குத்தி அம்மன்!

இவை பற்றியெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்களை மேலும் குழப்பி, ஏதோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல ஆங்காங்கே வசனங்கள் வருகின்றன!

சினிமா என்ற கலை வடிவம் காட்சிப்படுத்தலின் நம்பகத்தன்மை சார்ந்தது என்பதை உணரும் அருகதையற்ற நாடகத்தனமான காட்சி அமைப்புகள், இரைச்சலான வசனங்கள்.., வரைமுறையற்ற முட்டாள்தனமான சித்தரிப்புகள்..என்ற தன்மையிலான இந்தப் படம் ஒரு போலி விழிப்புணர்வு படம்!

உண்மையான நாத்திகவாதிகள் யாரும் கடவுளை இழிவுபடுத்துவதில்லை! ஆனால், இந்தப் படம் அந்த வேலையை தான் அதிகப் பிரசங்கித் தனத்துடன் செய்துள்ளது.

வெங்கடாசலபதியைக் கும்பிட்டால் மூக்குத்தி அம்மனுக்கு கோபம் வருகிறதாம்! தன்னைக் கும்பிட பெரும் கூட்டம் வர வேண்டும் என்று கடவுள் மனிதனை ’கரப்ஷன்’ செய்கிறதாம்! இதைவிட கடவுளை இழிவுபடுத்த முடியாது. இதை ஏன் சங்க பரிவாரங்கள் தட்டிக் கேட்கவில்லை! இந்துமத இயக்கங்கள் எதிர்க்கவில்லை?

இந்த படத்தில் ரசிக்கதக்க விஷயங்களை சொல்ல வேண்டும் என்றால், ஒரு நடுத்தர குடும்பத்தின் ஆசை,அபிலாசைகள் சற்று மிகைப்படுத்தலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் ரசிக்கதக்கதாக இருக்கிறது. ஊர்வசியின் நடிப்பு அபாரம்! நடுத்தரவர்க்கத்து இளைஞனான பாலாஜியும் சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளார். ஆனால்,சில இடங்களில் பாலாஜியின் அதீத மிகை நடிப்பும்,காட்டுக் கத்தலும் காதை பிளக்கிறது! எவ்வளவு பெரிய படைப்பாளியும், நடிகருமான மெளலி இப்படி வீணடிக்கப்பட்டிருக்கிறாரே!

மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றும் சாமியார்கள் யாரும் இவ்வளவு முட்டாள் தனமாகவும், சந்தேகத்திற்கு உரிய முறையிலும் பேசி வெளிப்படுவதில்லை. போலி சாமியார்கள் எவ்வளவு ஆபத்தானவர்களோ அதற்கு சற்றும் குறையாத ஆபத்தானவையே இது மாதிரி போலி விழிப்புணர்வு படங்கள்! ஏனென்றால், இந்த மாதிரியான படங்கள் நிஜமான போலிச் சாமியார்களை மக்கள் உணரவிடாமல் தடை செய்கின்றன! சங்கரராமன் என்ற ஆச்சார அனுஷ்டானமான ஆன்மீகவாதி யாரால் கொல்லப்பட்டார்! அவரது கொலையில் சம்பந்தபட்ட மடமும்,சுவாமிகளும் இந்த சமூகத்தில் எவ்வாறு வளைய வந்தார்கள்? சங்கர மடத்திற்கு 193 வங்களில் அக்கவுண்ட் இருந்தது எதனால்? எப்படி? அந்த மடத்தின் சொத்துகளையும், நிலபுலன்களையும் பற்றி கேள்வி கேட்கும் வண்ணம் படம் எடுப்பாரா ஆர்.ஜே.பாலாஜி?

போலி ஆன்மீகத்தின் மூலஸ்தானம் குறித்து முணுமுணுக்கக் கூட மாட்டார்கள் இவர்கள்!  ஒரு தொலைகாட்சி நேர்காணலில் ஒரு சமூக மாற்றமே நிகழ்ந்துவிடும்,புரட்சி வெடித்துவிடும் என்ற அறிவீனத்தை என்ன சொல்வது?

ஒரே ஒரு இடத்தில் காட்சிப்படுத்தப்படும் நாத்திகவாத பிரச்சாரம் அப்பட்டமான பாஜகவின் பார்வையாக வெளிப்படுகிறது! அப்போது அம்மன் பேசுகிற ஒரு வசனமும் பாஜகவின் குரலே! ’’ஒரு கடவுளை உசத்தி, இன்னொரு கடவுளை தாழ்த்துகிறவன் ஆபத்தானவன்’’ சொல்வது யாரு? தன்னை கும்பிடாமல்,வெஞ்சடாசலபதியை கும்பிடுவோரிடம் கோபப்படும் ஒரு ’அல்ப’ சாமி!

முதலில் தானே யோக்கியமாக இல்லாதவன் மற்றவர்களை கேள்வி கேட்கும் அருகதையை இழக்கிறான்! படத்தின் இறுதிகாட்சிகளில் சாமியும்,சாமியாரும் ஒருவரை குறித்து, ஒருவர் கேள்வி எழுப்பும் போது எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தவர்கள் இந்துத்துவ ஆதரவாளர்கள் தான்! நாம் சமூக அக்கரை சார்ந்து பேசும் விஷயம் குறித்து கொஞ்சமும் பொருட்படுத்தாமல், சம்பந்த,சம்பந்தமில்லாமல் எதைஎதையோ என்று கேட்டு திசை திருப்புவார்கள்! பாண்டேவின் ரசிகனான பாலாஜியிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்?

சாமியும் பிராடு! சாமியாரும் பிராடு! படம் எடுத்தவன் படு பயங்கரபிராடு!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time