வெளிநாட்டு முதலீடுகள் தமிழ் நாட்டிற்கு என்ன நன்மைகள் செய்தன? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தின..? மனம் திறந்து விவாதிப்போம். வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு தமிழர்களில் பலரே வளர்ந்துள்ள சூழலில், வெளி நாட்டு நிறுவனங்களுக்காக நாம் இவ்வளவு இழப்புகளை ஏற்க வேண்டுமா?
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு 17 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவில் தொழில் நிறுவன தலைவர்களைச் சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதோடு, ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தமிழக முதல்வர், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் முக்கிய அதிகாரிகள் கொண்ட பெரிய டீம் தற்போது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் உள்ளதாக தமிழ்நாடரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
தினமும் ஒரு அதிரடி ஒப்பந்தம் என்ற வகையில் இந்த அமெரிக்கா பயணத்தில் தமிழ்நாடு அரசு அந்நாட்டு நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வகையில் இது வரை சிகாகோவில் 3,050 கோடி அளவுக்கும் சான்பிரான்சிஸ்கோவில் 1,300 கோடி அளவுக்கும் ஒப்பந்தங்கள் கை எழுத்தாகி உள்ளன.
இந்த முதலீடுகளை தமிழ் நாட்டில் இருப்பவர்களே செய்ய முடியுமே! மேலும் நவீன தொழில் நுட்பத்துடன் வரும் நிறுவனங்களால் மிகக் குறைந்த வேலை வாய்ப்பையே இங்கு வழங்குகின்றன. இங்கு தொழில் நிறுவனங்களை இன்னும் ஊக்கப்படுத்தினாலே இதைவிட அதிக முதலீட்டில் தமிழகத் தொழில் முதலீட்டாளர்கள் – பெரிய நிறுவனங்கள் , நடுத்தர, சிறு,குறு நிறுவனங்கள் – தமிழகத்தை வளம் பெறச் செய்வார்கள். இதில் அதிக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
வெளி நாட்டு நிறுவனங்களை இங்கு அழைப்பதன் மூலம் நாம் பல இழப்புகளையும், இன்னல்களையும் சந்திக்கிறோம். இவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்;
# தேவைக்கும் அதிகமாக நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். இதனால் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் அழிகின்றன. இந்த இயற்கை செல்வமோ விலை மதிப்பு இல்லாதது. இயற்கை அழிப்பு சூழலுக்கும் நல்லதல்ல.
# இந்த வெளி நாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், மின்சாரமும் குறைந்த விலையில் தரப்படுகிறது. குறைந்த கூலிக்கு வேலை வாங்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டு தொழிலாளர்கள் சுரண்ட அனுமதிக்கபடுகிறார்கள்.
# இது போல ஏராளமான சலுகைகள் தந்து, கண்டிஷன்களை ஏற்றுக் கொண்டு இழப்புகளை ஏற்றுக் கொண்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பளம் விரிப்பானேன்?
# இங்கு வெளி நாட்டு தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கு சொல்லப்படும் முக்கிய காரணம், நமக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதாகும். உண்மையில் இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த அளவே தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். அதிக வாய்ப்பு வட இந்தியர்களே பெறுகின்றனர்.
தமிழ் நாட்டில் உழைப்பு சக்தி மிகவும் அரிதாகி வருகிறது. தமிழ் நாட்டின் தொழில்துறையே வட இந்திய உழைப்பாளிகளை நம்பியே உள்ளது. இந்தச் சூழலை ஆராய்வதற்கோ, மாற்றுவதற்கோ சிறிதும் முயற்சிக்காமல் வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்க தொடர்ந்து துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா என்று முதலமைச்சர் செல்வது யாருக்காக?
இந்த தமிழ்நாட்டின் உழைப்பு சக்தியான தொழிலாளர்களின் ஆற்றல் அனைத்தையும் டாஸ்மாக் சுரண்டிக் கொண்டுள்ளது. இளம் வயதினரில் பலர் நடை பிணங்களாகி வருகின்றனர். உழைத்து குடும்பத்தை வாழ்வித்த ஆண் சமுதாயம் குடும்பத்தின் பாரமாக மாறி வருவது குறித்து முதல்வருக்கு சிறிதேனும் சிந்தனை உண்டா? இல்லையென்றால், அவர் விசிட் அடிக்க வேண்டியது வெளிநாடுகளல்ல, தமிழ் நாட்டின் சேரிகளையும், கிராமங்களையும் தான்!
தமிழ்நாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொழில் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டு கொள்கிறது. ஆனால், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் ஒப்பந்தங்களாகவே உள்ளன; பல முதலீடுகள் வரவே இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது தனி விவகாரம்.
ஆனால், இப்படி வெளிநாட்டு தொழில் முதலீடுகளை வரவேற்க தோதாக தமிழ் நாட்டின் கிராமங்களை அழித்து சிறிய நகரங்களை எல்லாம் மாநகராட்சியாக்கி வேகமாக நகரமயமாக்கல் நடக்கிறது. இதில் பல லட்சம் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நாளும் போராடி வருகின்றனர். ’’வேண்டாம் மாநகராட்சி’’ என தமிழகம் முழுமையும் நடக்கும் போராட்டங்கள் மனதை பிழிகின்றன. கிராமங்களின் அழிவு எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்கள் வலுக்கட்டாயமாக அரசு அமைப்புகள் மூலம் பறிக்கபடுவது நாளும், பொழுதும் அரங்கேறி வருகிறது.
கால் நடைகளின் மேய்ச்சலுக்கு நிலமில்லை.
கால் நடைகள் வளர்க்கும் சிறு விவசாயிகள் நிலை என்னாவது?
அதிக வேலை வாய்ப்புகள் தரும் கிராமங்கள் சார்ந்த சிறு,குறுந்தொழில்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமலடிக்கபடுகின்றன.
ஒவ்வொரு பெறு நிறுவனங்களின் அடிக்கட்டுமானமும் பல நூறு அல்லது பல ஆயிரம் விவசாயிகளின் அழிவிலே தான் இங்கு நடந்து வருகின்றது. இதை எதிர்த்து போராடும் எளிய கிராம மக்களுக்கு இங்கு எந்த அரசியல் கட்சியும் ஆதரவாக இல்லை என்பது இன்னும் அதிக பின்னடைவாக உள்ளது.
Also read
ஒரு கிழக்கிந்திய கம்பெனியை விரட்டவும், பிரிட்டிஷார் ஆட்சியை அகற்றவும் நமது முன்னோர்கள் நாட்டு விடுதலைக்காக செய்த உயிர்த் தியாகங்கள் குறித்த குறைந்தபட்ச புரிதல் இருந்தால் கூட , இப்படி வெளி நாட்டு தொழில் நிறுவனங்களை வலிந்து சென்று அழைக்க மாட்டீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே.
எங்கோ வேலியில் ஓடிக் கொண்டிருக்கும் ஓணானை எடுத்து எளியோரின் சட்டைக்குள் போட்டு துடிக்க வைப்பது சாதனை அல்ல, வேதனை என்பதை உணரவும் மறுக்கும் வேந்தர் மனோபாவத்தில் இருக்கிறார் முதல்வர் என்பது தான் வேதனையிலும், வேதனை!
சாவித்திரி கண்ணன்
சிறப்பான கட்டுரை. டாஸ்மாக் குடும்பத்தை வாழ்விக்கும் ஆண்கள் தங்கள் உழைப்புச் சக்தியை இழந்து நடைப்பிணமாகி வருகின்றனர்
விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. கேட்பாரில்லை. பொறுப்பற்ற அரசியல். மக்களாட்சி அர்த்தமிழக்கிறது.
ஊழல் செய்து களவாடிய பணத்தையே வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் மீண்டும் இங்கு முதலாக இடும் உத்தி இது. லுலு நிறுவனத்தில் சுடாலினின் முதல் இல்லை என்று மறுப்பாருண்டோ?