நெல் கொள்முதல் நிலையங்களா? வழிப்பறியா?

-சாவித்திரி கண்ணன்

வெயில், மழை பாராமல்  நாளும், பொழுதும் பாடுபட்டு பயிர் விளைவித்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கே இந்தப் பாடுபடுத்த வேண்டுமா? லஞ்சமின்றி  நேர்மையான கொள்முதல்  சாத்தியமே இல்லையா? தற்கொலைக்கு  தள்ளும் அளவுக்கு மன உளைச்சல் தருவதா?

நம்மை பசியாற வைக்கும் விவசாயிகளை விவசாயத்தைவிட்டே வெளியேறச் செய்யும் அளவுக்கு நெல்கொள் முதல் நிலையங்கள் பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளை நடத்துவதை  ஆட்சியாளர்களால் ஏன் தடுக்க முடியவில்லை…?

மிகச் சமீபத்தில் கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் குமார் தன்னுடைய 13 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை எடுத்துக் கொண்டு நெல் கொள் முதல் நிலையம் சென்றதில் மொத்த நெல்லையும் கொள்முதல் செய்ய ரூ 50,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. 30,000 மட்டுமே திரட்டிக் கொடுக்க முடிந்த சூழலில், பாதியளவு கொள் முதல் செய்து விட்டு மற்றவற்றை அப்படியே விட்டுவிட்டனர். அதற்காக அவர் அலைந்து, திரிந்து கதறியும் ஊழியர்கள் மனம் இறங்காத நிலையில், நெல் அழிந்து வீணாவதைக் காண சகிக்காமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் உயிருக்கு போராடும் செய்தி ஊடகங்களில் வெளியாகி விவசாய அமைப்புகள் களத்தில் இறங்கிய பிறகு சம்பந்தப்பட்ட மூன்று ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் பணி இடை நீக்கம் செய்துள்ளார்.

இது நெல்கொள்முதல் நிலையங்களில் நடக்க்கும் அநீதிகளுக்கு ஒரு சான்று. இது போல தமிழகம் முழுமையும் நாளும், பொழுதும் பல சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆன நிலையில், நம்மால் இன்னும் நெல்லை பாதுகாக்க முடியவில்லை.

நெல் கொள் முதல் செய்யும் ஒவ்வொரு பருவத்திலும் பல்லாயிரக்கணக்கான மூட்டைகளை திறந்த வெளியில் வைத்து விவசாயிகள் நாள் கணக்கில் காக்க வைக்கப்படுகிறார்கள். அப்போது பாடுபட்டு கடனை வாங்கி அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மணிகள் பனி மற்றும் மழைப் பொழிவில் அழிந்து நாசமாகின்றன.

சில விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய், சாக்குபைகள், படுதா இல்லாததால் அறுவடை செய்யும் பணியை தள்ளி வைத்தும் சமாளிப்பார்கள். அப்போது நிலத்திலேயே கதிர்மணிகள் சாய்ந்து விழுவதுண்டு.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக புகார் தெரிவித்து, விவசாயிகள்,  விழுப்புரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் இந்த ஆண்டு மேட்டூர் பாசன தண்ணீர் கடைமடைக்கு திறந்து விடாததால், பம்புசெட் தண்ணீர் மற்றும் மழைநீரை மட்டுமே நம்பி விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா, தாளடி, நெல் போன்ற சாகுபடியை செய்திருந்த நிலையில், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களின் முன்பும், கொட்டி வைத்து 15 நாட்களாக காத்திருந்தும் பயனின்றி போராட்டத்தில் குதித்தனர்.

ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது, எவ்வளவு விளையும்…? எப்போது கொள்முதலுக்கு வரும் என்பதெல்லாம் அரசுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப நிரந்தரக் நெல் கொள் முதல் நிலையங்களை அமைக்க முடியாதா? ஒவ்வொரு ஊராட்சியிலும் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர குடோன் நிச்சயமாக ஏற்படுத்த முடியும். அதற்கான செயல்திட்டமே இந்த அரசிடம் கிடையாது.

இந்த வழிப்பறியில் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளுர் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு பங்கு இருக்கிறது என்கிறார்கள். மூட்டைக்கு எவ்வளவு கூடுதலாக வைத்து வசூலிக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்கிறார்களாம். .!

கொள் முதல் நிலையங்களில், ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்து, டோக்கன் வழங்கப்படுவதை நடைமுறை முறைப்படுத்த ஏன் முடியவில்லை.? தனியார் வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள், உடனடியாக விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

ஆனால், இது தொடர்பான புகார்கள் குறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணியிடம் கேட்டால், பேச்சுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

”நேரடி நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அடித்து விடுகிறார்.

நெல் கொள் முதல் தொடர்பாக புகார்ளுக்கு 18005993540 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் தந்துள்ளார்கள். இந்த எண்ணுக்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனை வாங்கப்பட்டால் மீண்டும், மீண்டும் ஏன் இந்த குற்றங்கள் நடக்கின்றன?

தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கல் கழக, தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 094451 90660 மற்றும் 09445195840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாம் இருந்தும் ஏன் இந்த தவறுகளை களைய முடியவில்லை…?

போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை உருவாக்க்காதது, தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களை பாதுகாப்பின்றி வைத்திருப்பது, அடிமாட்டு வேலைக்கு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது, அதிகாரிகளுக்கு அளவற்ற அதிகாரங்களை தந்து ஆட அனுமதிப்பது போன்ற சூழல்கள் அடியோடு மாற வேண்டும்.

தரமான, நிரந்தரமான நவீன வசதி கொண்ட நெல் கொள் முதல் நிலையங்கள், எழுத்தருக்கும், எடை போடும் ஊழியருக்கும், மூட்டை சுமக்கும் தொழிலாளிக்கும் கண்ணியமான ஊதியம், வாகன போக்குவரத்திற்கு உரிய தொகை ஆகியவற்றை சரியாக செய்துவிட்டு, அப்புறமாக ’’லஞ்சம் கேட்டால் கடும் தண்டனை’’ என எச்சரிக்கை தந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சரிபடும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time