நிமிடத்திற்கு நிமிடம் சுவாரஷ்யம் கூட்டிய விவாதம்!

-சாவித்திரி கண்ணன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ் – டொனால்டு டிரம்ப் இடையிலான விவாதப் போர் மிகவும் சுவாரசியம். இது இரு வேறு சித்தாந்தங்களை கொண்ட இருவருக்கு இடையிலான மோதல்! இந்த விவாதம் யார் சரியானவர்? யார் ஆபத்தானவர் என்பதை உலகிற்கு துல்லியமாக உணர்த்திவிட்டது. முழு விபரம்;

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல்  நடக்கவுள்ள நிலையில் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி நிறுவனம் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியாவில் நடத்தி முடித்துள்ளது. இது நேரடி ஒளிபரப்பாக உலகம் முழுமையும் பார்க்கப்பட்டுள்ளது.

இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிவிட்டு விவாதத்தை ஆரம்பித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களைக் கடந்து 120 நிமிடங்கள் நீண்ட விவாதம் சலிப்பை ஏற்படுத்தவில்லை.

நிதானமின்மை, கடும் கோபம், தனி நபர் தாக்குதல், பொய்யான தகவல்கள்.. என டிரம்ப் தன்னுடைய விவாதத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் அவர் அதிபர் ஆவதற்கான தகுதி கொண்டவர் தானா? என்ற சிந்தனையை பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தியது. சர்வாதிகார மனோபாவம், மூர்க்க குணம், அதிரடி அரசியல் என தன் அடையாளங்கள் எதையும் மறைக்காதவராகவே டிரம்ப் இன்றைய விவாதத்தில் வெளிப்பட்டார்.

அதே சமயம் கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் பன்முகக் கலாச்சாரத்தை மதிப்பவராகவும், ’சகல இனத்தவரையும் சரிசமமாக நடத்த வேண்டும்’ என்ற கோட்பாடு கொண்டவராகவும் உள்ளார். தெளிவான சிந்தனை, ஒளிவுமறைவற்ற பேச்சு, நச்சென்ற விளக்கம், எதிராளியை மதிக்கத் தெரிந்த இங்கிதம்..ஆகியவை கமலா ஹாரீசிடம் வெளிப்பட்டது.

அமெரிக்காவில் வெள்ளை இனத்தின் மீதான பெருமித உணர்வு கொண்டவர்களின் ஏகோபித்த தலைவராக டிரம்ப் அறியப்படுகிறார். ‘சகல இன மக்களும் கலந்து வாழும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் வெள்ளை இனத்தவரின் அதிக்கம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என நினைப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு டிரம்பை ஆதரிக்கிறார்கள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ”அமெரிக்காவில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க புலம் பெயர்ந்தோரே காரணம்” என கூறிய ட்ரம்ப், ‘ஹைதி புலம் பெயர் மக்கள், செல்லப் பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதாக’  அபாண்டமான பொய்யையும் கட்டவிழ்த்துவிட்டார். அகதிகளாக தஞ்சமடைய வருகின்ற நிராயுதபாணியானவர்கள் மீதே இவ்வளவு வெறுப்பும், வன்மமும் அவருக்கு இருக்கிறது என்பது தான் இதில் கவனிக்க வேண்டியுள்ளது.

”கமலா ஹாரீஸ் அதிபரானால் இஸ்ரேல் என்ற நாடே காணாமல் போய்விடும்” என டிரம்ப் கூறியதன் மூலம் பாலஸ்தீன மக்களை கொன்றொழிக்க இஸ்ரேலுக்கு கமலா உதவமாட்டார் என்ற செய்தியை இந்த உலகத்திற்கு தந்துள்ளார் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. டிரம்ப்பின் பேச்சுக்களை இஸ்ரேலில் உள்ள நடு நிலையான  யூத இன மக்களே கூட ஏற்க மாட்டார்கள்.

கருக் கலைப்பு குறித்த விவாததில், ”ஜனநாயக கட்சியினர் ஒன்பது மாத சிசுவை கலைப்பதைக் கூட ஆதரிக்கின்றனர். இது படுகொலைக்கு சமமாகும்” என சென்சிடிவாக கூறியதோடு, கமலா ஹாரீசையே நேரடியாக, ”ஒன்பது மாதக் கருவை நீங்கள் கலைப்பீர்களா..?” என நேரடியான தாக்குதலை தொடுத்தார், டிரம்ப்.

ஒன்பது மாதக் குழந்தையை கலைக்கவே முடியாது. அப்படி கலைக்க முயன்றால், அது கருவுற்ற பெண்ணின் உயிருக்கும் ஆபத்தாகவே முடியும்…என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும்.

இந்த தாக்குதலுக்கு சற்றும் நிலைகுலையாமல் பதில் அளித்தார் கமலா ஹாரீஸ்.  அதே சமயம், ”கருவை கலைப்பதா ? வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று டிரம்ப் சொல்லக் கூடாது. இதில் அரசுக்கு வேலை இல்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை அரசு நிர்ணயிக்க கூடாது.. அத்துடன் என்னை நேரடியாக இப்படி கேள்வி கேட்டது அநாகரீகம்…”  என்றார் கமலா.

ஒரு பெண்ணுக்கு அத்தகைய சுதந்திரம் வழங்கப்படும் போது அவள் ஏன் ஒன்பது மாதங்கள் வரை கருவை சுமந்து கொண்டிருக்க போகிறார்?

‘குழந்தை பிறந்த பிறகு அதைக் கொல்ல அமெரிக்காவில் சில மாநிலங்கள் அனுமதிப்பதாக’ ட்ரம்ப் அபாண்ட குற்றம் சாட்டியதற்கு கமலா ஹாரீஸ் பதில் சொல்ல அவசியம் இல்லாமலே, ”அது பொய்யான தகவல்” என நடுவர்களால் உடனே மறுக்கப்பட்டது. இது டிரம்ப் தானே உருவாக்கிக் கொண்ட அவமானமாகும்.

கமலா ஹாரீசை தாக்குவதற்கு அவரையும், அவரது அப்பாவையும் மார்க்சியவாதிகள் என டிரம்ப் குறிப்பிட்ட போது, அதற்கு புன்னகையையே பதிலாக்கினார் கமலா ஹாரீஸ். மார்க்சியவாதி என ஒருவர் அறியபப்டுவதும், மனிதாபிமானி என அறியப்படுவதும் வேறல்ல என்பது டிரம்புக்கு தெரியவில்லை. ”நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம்…” என்ற கமலா, ”டிரம்ப் கார்ப்பரேட்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபடக் கூடியவர்” எனச் சொல்லவும் தவறவில்லை.

”கோடீஸ்வரர்களுக்கு, மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவார்” என பகிரங்கப்படுத்தியதன் மூலம் பணபலம் படைத்த உலக கார்ப்பரேட்கள் டிரம்ப்பிற்கு ஆதரவாக இருப்பது பற்றிய அச்சமின்மையுடன் மக்களை மட்டுமே நம்பி களத்தில் குதித்து இயங்கிக் கொண்டுள்ளார் கமலா ஹாரீஸ் என்பது தெளிவாகிறது.

ஊழலும், ஒழுங்கீனமும் உள்ள ஒரு ஆட்சியைத் தான் டிரம்ப் அமெரிக்கர்களுக்கு தந்தார் என்பது உலகறிந்த விஷயமாகும். அதனால் தான்,

“டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 வருஷம் தேவைப்பட்டது… டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார்.. சிவில் போருக்குப்பின் நமது ஜனநாயகத்தில் மோசமான தாக்குதலை விட்டுச் சென்றார்… டிரம்பின் குழப்பத்தை நாங்கள் தான் சுத்தம் செய்தோம்”  என்றார்.

”டிரம்ப் அமெரிக்க சிப்களை சீனாவிற்கு விற்றார். தவறான கொள்கைகளால் சீன ராணுவம் பலமடைந்துள்ளது.  சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார், டிரம்ப். அமெரிக்க ராணுவத் தளபதிகளே டிரம்ப் ஒரு அவமானம் எனக் கருத்தினர். வட கொரியத் தலைவர் கிங் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக் கொண்டவர் நீங்கள்…. டிரம்ப் ஆட்சியில் இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் புதின் மேலும் பலம் பெற்று உக்ரைனை ஆக்கிரமித்திருப்பார்..” என சரமாறித் தாக்குதல்களை கமலா டிரம்ப் மீது தொடுத்தார்.

இருவர் விவாதங்களும் நிறைவுற்ற பிறகு, அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு கூடி இருப்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. இன்னொரு விஷயம், நம் நாட்டில் உள்ள  மோடி ஆதரவாளர்களும், பார்ப்பனீய சிந்தனையாளார்களும், ‘கமலா ஹாரீஸ் இந்திய மரபு வழி வந்த பெண், அதுவும் பிறப்பால் பிராமண சமுதாயப் பின்புலம் உள்ளவர்’ என்பதை எல்லாம் கடந்து டிரம்பை ஆதரிக்கிறார்கள். ‘இது ஒன்றே போதாதா? கமலா ஹாரீஸ் தான் சரியானவர்’ என நாம் முடிவுக்கு வர!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time