பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இறுதியாக போராட்டம் செய்கிறார்கள். போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்க மறுத்தால், போராட்டம் மேலும் வீரியம் பெறுகிறது. நியாயத்திற்கான போராட்டத்தை ஒடுக்க நீதிமன்றங்களின் வழியே முயற்சிகள் நடக்கின்றன..!- நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்;
கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலையானார். இதைக் கண்டித்து மேற்குவங்கம் மட்டுமன்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தினர். உலகின் பல நாடுகளில் இந்த கொடுஞ் செயலை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் தானாகவே இந்த வழக்கை விசாரிக்க ஆகஸ்ட் 18, ஞாயிறன்று முடிவெடுத்தது. அது முதல் தொடர்ந்து இது சம்பந்தமான விசாரணை நடைபெறுவது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில் அரசின் மருத்துவமனைகளில் உள்ள இளம் பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் தான் பயிற்சி மருத்துவர்கள்.
இளம் பயிற்சி மருத்துவர்கள் தவிர்த்து, மற்ற மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் ஆட்சி புரியும் மம்தா பானர்ஜியின் அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
அதை விடுத்து ,உச்ச நீதிமன்றத்தின் மூலம் போராடும் பயிற்சி மருத்துவர்களை பணிய வைக்கும் முயற்சியை அந்த அரசு எடுத்தது வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
இந்த வழக்கு கடந்த திங்கள் (9-9-2024) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைத்து வந்த போது, மேற்கு வங்க அரசின் சார்பில் வழக்காடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பயிற்சி மருத்துவர்களின் தொடர் போராட்டத்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 23 நோயாளிகள் இறந்து விட்டதாகவும் வாதிட்டார்.
மேற்சொன்ன வாதத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை (10-9-2024) மாலை 5 மணிக்குள் பயிற்சி மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாமல் போராட்டம் நடத்தினால், கடும் விளைவுகளை -ஒழுங்கு நடவடிக்கை ,மாற்றல் போன்ற விளைவுகளை- சந்திக்க நேரிடும்’ என்று கெடு வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
மேற்கு வங்க அரசு போராடும் மருத்துவர்களின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாற்றல் செய்யவும் அஞ்சுகிறது. அப்படி செய்தால், மக்களிடம் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என நினைக்கிறது அந்த அரசு. எனவே, உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி, போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது.
பயிற்சி மருத்துவர்களை எச்சரித்து கெடு விதித்து உத்தரவு போடுவதற்கு பதில், போராடும் பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கலாம். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, மாற்றல் செய்யவோ மேற்கு வங்க அரசு நிர்வாகத்திற்கு தெரியாதா என்ன?
மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணி புரியும் மருத்துவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதென முடிவெடுத்தனர். இப்பொழுதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பயிற்சி மருத்துவர்கள் அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். போராடும் பயிற்சி மருத்துவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக மேற்கு வங்க அரசோ, உச்ச நீதிமன்றமோ எந்த குற்றச்சாட்டும் முன் வைக்கவில்லை.
பெண் பயிற்சி மருத்துவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை மேற்கு வங்க அரசு கையாண்ட விதமும், அரசு குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சித்ததால் எழுந்த அறச் சீற்றமும் தான் பயிற்சி மருத்துவர்களின் தொடர் போராட்டத்திற்கு காரணமாகும். அறவழியில் அமைதியாக போராடும் உரிமை, ஒரு அடிப்படை உரிமை என அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 கூறுகிறது.
எனவே, உச்ச நீதிமன்றம் அறவழி அமைதி போராட்டத்திற்கு காலக்கெடு வைப்பது ஏற்புடையது அல்ல.
வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட போது கூட , அப்போது இருந்த வெள்ளைக்கார நீதிபதிகள் மக்களின் பிரச்சனைகளுக்கான இது போன்ற போராட்டத்தை தடை செய்து உத்தரவு பிறப்பித்ததில்லை.
மேற்சொன்ன உச்சநீதிமன்ற உத்தரவை ஒட்டி மேற்கு வங்க அரசு 10 பிரதிநிதிகளுக்கு மிகாமல் மாநில முதல்வரை 10 9 2024 அன்று சந்திக்கலாம் என்று மின்னஞ்சல் அனுப்பியது. போராடும் பயிற்சி மருத்துவர்கள் 30 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் ,அவர்கள் முன்வைக்கும் ஐந்து கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும், பேச்சு வார்த்தையில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ,பேச்சு வார்த்தை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தனர்.
நடந்த கொடுமையான நிகழ்வுக்கு நீதி வேண்டும் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், கல்கத்தா நகர காவல்துறை ஆணையர் மற்றும் மருத்துவ துறை செயலர் உட்பட சிலரின் மேல் மேல் நடவடிக்கை எடுப்பதுடன் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இச்சூழலில் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு சுமூக முடிவின் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்போம்.
இக்கட்டுரையின் மையக்கருத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த மேற் சொன்ன உத்தரவு பற்றியதே. உச்சநீதிமன்றம் இதற்கு முன்பும் இது போன்ற ஒரு தீர்ப்பை வழங்கியது . அந்த தீர்ப்பும் இது போன்ற விமர்சனத்திற்கு உட்பட்டது.
அதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து காலவரையற்ற டெல்லியில் நடைபெற்ற ஷாஹீன் பாக் போராட்டம் சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது . அந்தப் போராட்டமும் அமைதியான வழியில் தான் டெல்லியின் சாலையில் நடந்தது. இன்னும் சொல்லப் போனால் ,கொரோனா வந்ததன் விளைவாக போராட்டத்தை போராட்டக்காரர்கள் விளக்கிக் கொண்டனர். எனினும், காலவரையற்ற போராட்டம் அமைதியான போராட்டமாக இருந்தாலும் அது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், காலவரையறை இன்றி தெருவில் இறங்கி அமைதியாக கூட போராடக்கூடாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இது நாள் வரை குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டப்படி சரியானது தானா என்ற வழக்குகளை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்காமல் உள்ளது.
எனவே, மக்கள் அமைதியான வடிவில் போராடும் போது, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அந்த போராட்டத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுப்பது அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு விரோதமானது.
தமிழ்நாட்டில் கூட போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது உயர் நீதிமன்றம் அந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்தது எவ்வாறு நியாயமாகும்…? பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் போக்குவரத்து தொழிலாளிக்கு சேர வேண்டிய பணிக்கொடை உட்பட ஓய்வூதிய பலன்களை ஏழெட்டு ஆண்டுகளாக தராத அரசினை எதிர்த்து போராடுவதை தவிர்த்து வேறு என்ன வழி இருக்கிறது…? நீதிபதிகளுக்கு ஒரு மாதம் ஓய்வூதியம் தருவதில் தாமதம் இருந்தால் ஏற்பார்களா?
Also read
இதே போல் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கும் தடை விதிக்கிறது உயர்நீதிமன்றம் .இதுவும் சரியல்ல. இழந்த பென்ஷன் உரிமையை மீட்க வேண்டியே அவர்கள் போராடுகிறார்கள். புதிதாக எந்த கோரிக்கையும் கூட வைக்கவில்லை.
எனவே, அமைதியாக நடக்கும் எந்த மக்கள் போராட்டத்தையும் தடுக்கும் உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது ஆகும்.ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று மக்கள் நீதிமன்றத்தின் பெயரில் உள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள். அதனால் நீதிமன்றத்தின் மாண்பு குறைந்து போகும் என்பதே சொல்ல வரும் செய்தி.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்
மக்கள் போராட்டத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பதுதான் கட்டுரையின் நோக்கம். சில வருடங்களாகவே நீதிமன்றம் எல்லா விவகாரத்திலும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. நான் அதற்குள்ளாக செல்ல விரும்பவில்லை. ஆனால் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் நீதி மன்றங்கள் உத்தரவிடுவது தான் வேதனை.
சுதந்திரம் வேண்டிதான் போராடினோம், அதில் பல தலைவர்கள் உயிர் விட்டு பெற்றோம் இப்போது சுதந்திர நாட்டில் போராடுவதற்கே சுதந்திரம் இல்லை. தொடர்ந்து போராட்டங்கள் தடுக்கப்பட்டால் எந்த தலைவரின் தலைமை இல்லாமலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மக்களே இந்தியா முழுவதும் களத்தில் இறங்கி போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!
Rightly said sir.. After this, modi attended cji house pooja
அதிகார வர்க்கத்தோடு அதிகாரம் கை கோர்த்து நிற்கிறது. கட்டுரை அதனை தெளிவாக வெளிப்படுத்துகிறது. போராடுவது நியாயம் என்று தெரிந்த பின்பும் அதை கட்டுப்படுத்த நினைப்பது சமூக நீதி அல்ல. நியாயமான தீர்வுக்கு நீதிமன்றங்கள் வழி காட்ட வேண்டும். அதை விடுத்து போராடுபவர்களை குறை சொல்லி போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதற்கு சமமாகும்.