தப்லீக் ஜமாத் சம்பந்தபட்ட செய்திகளில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு மத்திய அரசு துணைபோன விபரீதம் உச்ச நீதிமன்றத்தின் உலுக்கி எடுத்த விசாரணையின் மூலம் நன்றாக அம்பலப்பட்டுள்ளது!
உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் அறியப்பட்ட முதல் காலகட்டத்தில், கொரோனாவை இந்தியாவுக்குள் கொண்டு வந்து பரப்பியதான தோற்றத்தை உருவாக்கி, முழுப் பழியையும் தப்லீக் ஜமாஅத் அமைப்பின் மீது சுமத்தி, பல பிரபல ஊடகங்கள் எழுதின.
கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் ஆன்மீக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் சிலர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாயிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தப்லீஜ் ஜமாத் மத மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் நாட்டில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவியது என்று ஒரு சில ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டன. இன்னும் சில ஊடகங்கள் செய்தியோடு வதந்திகளையும் சேர்த்து வக்கிரமான மனோபாவத்துடன் வெளியிட்டன! தப்லீக் ஜமாஅத்தின் மாநாடுதான் கொரோனா பரவலின், ஒற்றை ஊற்றுக் கண் என்ற விபரீத வதந்தி வீச்சுமிகு ஊடகங்களால் தொடர்ந்து பரப்பப்பட்டன.
இதுகுறித்து ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இது குறித்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, சம்பவம் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,’ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் அதிருப்தி அளிக்கிறது. அந்தத் துறையின் கூடுதல் செயலாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தேவையில்லாத கருத்துகள் இருக்கின்றன. முட்டாள்தனமான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் எந்த ஒரு முழுமையான தகவல்களும் கிடையாது. நீதிமன்றத்தை உங்களது இஷ்டப்படி பயன்படுத்தி கையாள விரும்ப வேண்டாம். அதனை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம். வெறுப்புப் பரப்புரையைத் தடுக்க மத்திய அரசு ஏன் முயலவில்லை-?
உங்களால் முடியாதென்றால் வேறு முகமைக்கு இப்பணியை வழங்கியிருக்கலாமே?
ஊடகங்களின் வெறுப்புப் பரப்புரையைத் தடுக்க உங்களிடம் அமைப்பு ஏதும் இல்லையென்றால், ஏன் அதை உருவாக்கவில்லை?
இதில், ’’கொரோனா பரவலை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புப்படுத்தி எந்த ஒரு செய்திகளும் வெளியாகவில்லை’’ என எப்படி மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. எதையும் புரிதல் மற்றும் மனிதாபத்தோடு அணுக வேண்டும் என கடுமையான தொனியில் விமர்சித்தனர். இதையடுத்து நடந்தவைக்கு வருத்தம் தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா அடுத்த விசாரணையின் போது அனைத்தையும் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்வதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் குறுக்கிட்டு, “மத்திய அரசு இந்த வழக்கில் செயல்படுவதுபோல் நீதிமன்றத்தையும் நடத்த முடியாது. தப்லீக் ஜமாத் சம்பவத்தில் வெறுப்பைப் பரப்பும் செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை அறிவுறுத்த கடந்த காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தகவல் தொழில்நுட்ப ஒளிபரப்புத்துறைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
இது மிகவும் காலதாமதமாக தெரிவிக்கப்பட்ட கண்டணம் என்றாலும் உச்சநீதிமன்றத்தின் இந்த வினாக் கணைகள் ஓரளவு இஸ்லாமியர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளன.
கொரொனா உலகம் முழுக்கப் பரவியது! ஆனால்,எந்த ஒரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை தனிமைப்படுத்தவும்,சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தவும் சூட்சுமான விஷம பிரச்சாரங்கள் நடந்தேறவில்லை!
இதனால் இந்திய இஸ்லாமியர்கள் பொதுவெளியில் பட்ட அவலங்கள் சொல்லும் தரமன்று! சென்னையில் பல வருடங்களாக தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று பிழைத்து வந்த ஒரு இஸ்லாமியர் ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் வழக்கம்போல் தள்ளுவண்டியுடன் வந்த போது வழிமறித்து தடுத்து திருப்பி அனுப்பட்டார்.
தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கற்பிணிப் பெண், திடீரென்று வெளியேறும்படி கட்டாயத்திற்கு ஆளானார்.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் சில கிராமங்களிலும், சில குடியிருப்புகளிலும் முஸ்லிம்கள் நுழையத் தடை என்று விளம்பரப் பலகைகள் முளைத்தன. இவை அனைத்தும் ஊடகங்கள் பரப்பிய விஷம்ச் செய்திகளால் ஏற்பட்ட விளைவுகள்!
குறிப்பாக, அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி தனது அருவறுப்பான வக்கிர புத்தியை முழுவீச்சில் வெளிப்படுத்தியது. தமிழகத்தில் தினமலர், தினமணி, தினத்தந்தி என அனைத்து ஏடுகளுமே இவ்விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.
தப்லீக் ஜமாஅத்தினர் கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைப்புத் தராமல் எச்சில் துப்புவது போன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபடுவதாக தினமணி, தலையங்கம் தீட்டியது. தினமணி ஆசிரியர் குழுவில் பலருக்கும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. அவர்கள் தப்லீக் மாநாட்டுக்குச் சென்றவர்களா? தெரியவில்லை.
இதன் பின்னணியில் மத்திய அரசின் ஆசையும், ஒத்தாசையும் இருந்ததோ என நாங்கள் சந்தேகப்பட்டோம். அந்த சந்தேகம் தற்போது மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் வெளியாகிவிட்டது. இதில், ஊடகச் சுதந்திரத்தில் தலையிட விரும்பாதது போல மத்திய அரசு சப்பைக் கட்டு கட்டியுள்ளது. இதைத் தான் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
தமிழகத்தில் அப்போது சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பியூலா ராஜேஷ் என்பவர் தொடர்ந்து, ‘சிங்கிள் சோர்ஸ்’ என்ற சொல்லாடலின் மூலம் தப்லீக் ஜமாஅத்தின் மாநாட்டை தனது ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் சுட்டிக்காட்டினார்.
அமித்ஷாவுக்கும் கொரோனா வந்ததே. அவர் தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு மாறுவேடத்தில் போய் வந்தாரா? தெரியவில்லை.
நமஸ்தே டிரம்ப்’ என்று அமெரிக்க மோடிக்கு, இந்திய டிரம்ப் நடத்திய பிரம்மாண்ட விழாக்களின் போதே கோவிட்-19 பரவல் தொடங்கி இருந்தது.
அதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தியை பாஜகவினர் கேலி செய்தனர்.
தப்லீக் ஜமாஅத்தினரை மருத்துவப் பரிசோதனை மற்றும் தனிமை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள், வெடிகுண்டு வைத்த பயங்கரவாதிகளைக் கைது செய்யும் காட்சிகள் போல பயங்கரமாக ஊடகங்களால் காட்டப்பட்டன. உண்மையில் தப்லீக் ஜமாத் என்பது வெளியுலகத் தொடர்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட தூய ஆன்மீகவாதிகளின் கூடாரமாகும்! தங்களுக்கு தீமை செய்பவர்களைக் கூட வெறுக்கத் துணியாத அந்த ஆன்மீகவாதிகளில் சிலர் தான் தீவிரவாதிகளைப் போல சித்தரிக்கப்பட்டனர்.
இதுதான் மத்திய அரசை ஆட்டுவிக்கும் சங்பரிவாரம் வெற்றியடைந்த இடம்.
முஸ்லிம்களை அனைவரும் வெறுக்க வேண்டும் என்ற அவர்களின் ஒற்றைக் கோட்பாட்டைக் கொரோனாவைப் பயன்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசும், சில ஊடகங்களும் முழுவீச்சில் முயன்றன என்பதுதான் வேதனையான உண்மை.
தப்லீக் ஜமாஅத்தினர் மீது மத்திய அரசும், அதன் அதரவு ஊடகங்களும் காட்டிய வன்மம், தமுமுக உள்ளிட்ட இயக்கங்களை தப்லீக் ஜமாஅத்தின் மீதான கரிசனமாக திருப்பின. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தொண்டுகள் வழியாகவும் இஸ்லாமியர்கள் மீது விழுந்த பழியை, பரப்புரையை முறியடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, குணமடைந்த தப்லீக் ஜமாஅத்தினர் பெருமளவில் பிளாஸ்மா தானம் செய்தனர். தமுமுகவினரோ கொரொனாவில் இறந்த சுமார் 1,300 நபர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரே அடக்கம் செய்ய பயந்த போது, மதம்,இனம்,மொழி பாராமல் நல்லடக்கம் செய்தனர்.
Also read
உண்மைகள் வெளிவரத் தொடங்கிய போது, மக்களிடம் பரப்பப்பட்டிருந்த வன்ம நஞ்சு வடியத் தொடங்கியது.
ஆனாலும் மத்திய அரசின் எந்திரங்கள் அந்த வன்மத்தைக் குறைத்துக் கொண்டபாடில்லை.
அண்மையில், பர்மாவிலிருந்து வந்து 8 மாதங்கள் பேரவதிபட்ட தப்லீக் ஜமாஅத்தினர் நாடு திரும்பும் வேளையில், சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து முடக்கப்பட்டனர்.
தகவலறிந்து, தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, தமிழக உயர் காவல் அதிகாரிகளிடம் பிரச்சினையை எடுத்துரைத்து, “போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளி விடாதீர்கள்” என்ற எச்சரிக்கையைத் தந்த பிறகு தமிழக உயரதிகாரிகள், அந்தப் பயணிகளை மும்பை வழியாக டெல்லிக்கு அழைத்துச் சென்று வழியனுப்பினர்.
மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான தன் வன்மங்களை முற்றாக கைவிட வேண்டும்!
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
என்றார் வாய்மைப் புலவர் வள்ளுவர்.
’’பொய்மைக்கு துணை போன ஊடகங்களே, உண்மை அறிந்தும் பொய் உரைத்தீர்களே, உங்கள் நெஞ்சு உங்களைச் சுடாதா?’’ என்று கேட்க வேண்டியுள்ளது.
இதே “மன்றம்” தான்
EVM ஐ ரத்து செய்ய கோரி போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.
ரபேல் ஊழல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்தது.
“மக்களின் மனசாட்சி படி” மசூதியை தாரை வார்த்தது.
குற்றம் நிரூபிக்கப் படாமலேயே “மக்களின் மனசாட்சி படி” தூக்கு தண்டனை நிறைவேற்றியது.
இன்னும் நிறைய சொல்லிகொண்டே போகலாம்.
ஏற்கனவே இந்த வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் போதிய பாதிப்புகளை முஸ்லிம்கள் அனுபவித்துவிட்ட நிலையில் மிக தாமதமாக இது போன்ற விமர்சனைங்களை வெளியிட்டு (விமர்சனங்கள் மட்டுமே, தீர்ப்போ அல்லது தண்டனையோ இல்லை) இன்னும் நீதி சாகவில்லை என நம் மனதில் விதைக்கிறது.
நாமும் உடனே “அதிரடி! அம்பலப்பட்டது! வீழ்ந்தன!” என காலி குடங்களை தட்டி கொண்டு இருக்கிறோம்.
இப்படி வாசித்தால் பொருத்தமாக இருக்கும்.
அதிரடி அம்பலப்பட்டது வீழ்ந்தன
அனைத்து துறைகளையும் தன் கண் அசைவில் வைத்திருக்ப்பவர்கள் உத்தரவு படி தான் நம்மை ஏமாற்ற அவ்வப்போது இது போல சில விஷயங்கள் நடக்கிறது என்பதை மனதில் வைத்து விழிப்புடன் இருப்பதே நல்லது.
இதே “மன்றம்” தான்
EVM ஐ ரத்து செய்ய கோரி போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.
ரபேல் ஊழல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்தது.
“மக்களின் மனசாட்சி படி” மசூதியை தாரை வார்த்தது.
குற்றம் நிரூபிக்கப் படாமலேயே “மக்களின் மனசாட்சி படி” தூக்கு தண்டனை நிறைவேற்றியது.
இன்னும் நிறைய சொல்லிகொண்டே போகலாம்.
ஏற்கனவே இந்த வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் போதிய பாதிப்புகளை முஸ்லிம்கள் அனுபவித்துவிட்ட நிலையில் மிக தாமதமாக இது போன்ற விமர்சனைங்களை வெளியிட்டு (விமர்சனங்கள் மட்டுமே, தீர்ப்போ அல்லது தண்டனையோ இல்லை) இன்னும் நீதி சாகவில்லை என நம் மனதில் விதைக்கிறது.
நாமும் உடனே “அதிரடி! அம்பலப்பட்டது! வீழ்ந்தன!” என காலி குடத்தை தட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இப்படி வாசித்தால் பொருத்தமாக இருக்கும்.
மத்திய அரசு அதிரடி! வீழ்ந்தன மன்றங்கள்! கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டன வெறுப்பு பிரச்சாரங்கள்!
அனைத்து துறைகளையும் தன் கண் அசைவில் வைத்திருக்ப்பவர்கள் உத்தரவு படி தான் நம்மை ஏமாற்ற அவ்வப்போது இது போல சில விஷயங்கள் நடக்கிறது என்பதை மனதில் வைத்து விழிப்புடன் இருப்பதே நல்லது.