மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது என்பது உண்மையா? எதார்தத்தில் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி அல்லவா வருகிறது…? உண்மை என்ன..?
‘இந்தியாவில் பள்ளிக் கல்வியின் மிக முக்கியமான பிரச்சனை, அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காதது தான்’ என்று Uncertain Glory என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரஸ்.
தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு செய்தி ஊடகமும் இப்பிரச்சனையை விவாத மேடைகளில் வைத்து, கத்திக் கூச்சல் இடுவதும், திமுக அனுதாபிகளும் பா.ஜ.கா அனுதாபிகளும் அவரவர் பக்க நியாயங்களைப் பேசுவதையும் பார்க்க முடிகிறது. இன்னும் கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர் என அவரவர் பங்குக்கு பி.ஜே.பி அரசைத் திட்டுவதும் மத்திய கல்வி மந்திரியைத் திட்டுவதும் தமிழ்நாட்டில் சமூகநீதி குறித்து சிலாகிப்பதும் , இதை மொழிச் சிக்கலாக மாற்றுவதும் என்று நாளுக்கு நாள் இப்பிரச்சனைக்கு முடிவில்லாமல் விவாதம் மட்டுமே நடந்து வருகிறது.
உண்மையில் பிரச்சனையின் முடிச்சு எங்கே இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் தெரியுமா? தெரியாதா ? அல்லது தெரிந்தும் கூட அதைப் பேசாமல் வேறு திசையில் பயணிக்கிறார்களா..?
”நாங்கள் மத்திய அரசின் 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டே இந்த மூன்று ஆண்டுகளாக அதன் முக்கிய உட்கூறுகள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு என்பது தான் உண்மை.
இப்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கேள்விகளுக்கு பதில் தரும் போது, ”ஏற்கனவே தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையின் பல கூறுகளை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்’’ எனக் கூறி இருக்கிறார். ‘ஆனாலும், இது மும்மொழிக் கொள்கை என்ற வகையில் ஏற்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழக அரசு தமிழகத்திற்கான தனிக் கல்விக் கொள்கை உருவாக்கம் என்று குழு அமைத்தெல்லாம் ஒரு கண் துடைப்பு என அம்பலமாகிறாது.
ஆக, இவர்களின் உண்மையான பிரச்சினை பகுத்தறிவை கேள்விக்குள்ளாக்கும் தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதில் இல்லை. அதை எந்த குற்றவுணர்வுமின்றி அமல்படுத்தி வருகின்றனர். அதே சமயம் தங்களை நீண்ட நெடுங்காலமாக இந்தி எதிர்ப்பு வீரர்களாக காட்டி வந்த பிம்பம் இந்த மும்மொழி கொள்கை அமலாக்கத்தில் சிதைந்துவிடுமே என்பது மட்டும் தான்!
தமிழ்நாடு மக்களிடம் ஏற்கனவே உள்ள கருத்தியலான இரு மொழிக் கொள்கைபடி, இந்தி எதிர்ப்பு என்பது உயிர்ப்புடன் இருப்பதால், இந்த அரசியலை முன்னெடுக்கின்றது தற்போதைய தமிழ்நாடு அரசு.
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக இருந்திருந்தால், இல்லம் தேடிக் கல்வி , எண்ணும் எழுத்தும் திட்டம், ஆன்லைன் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன் , ஆசிரியர்களுக்கான பயிற்சி என எந்தத் திட்டக் கூற்றையும் செயல்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையை பலவீனமாக்கும் திட்டங்கள். ஆக, இதை எதிர்ப்பது தான் உண்மையிலேயே தமிழ்நாடு அரசு மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்க்கிறது என்பதற்கான பொருள். ஆனால், எதிர்க்க வேண்டியதை எதிர்க்காமல் மக்களிடம் மூன்றாவது மொழி என்ற அரசியல் பார்வையை முன்வைத்து தற்போதைய பிரச்சனை திசைதிருப்பப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழி என்ற வகையில் தமிழக பள்ளிகளில் கூடுதலாக ஒரு மொழி கற்பிப்பதில் இந்தியை மட்டுமின்றி பிற திராவிட மொழிகளையும் கூட இணைத்து கற்பித்துவிட்டு போவதில் என்ன இழப்பு ஏற்படப் போகிறது…? ஆனால், தற்போது தாய் மொழியாம் தமிழ் கல்வியை கற்பிப்பதையே தவிர்க்கும் அநீதிகள் அல்லவா அரங்கேறி வருகிறது. பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் நியமனங்களே இல்லை. தமிழ் கல்வியை முற்றிலும் அலட்சியப்படுத்திவிட்டு, இந்தி எதிர்ப்பை தூக்கி பிடிக்கும் நாடகம் எதற்கு?
புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி கல்வியை முழுமையாக தனியார் வசம் ஒப்படைப்பதும், அரசுப் பள்ளிகளை அழிப்பதற்கான திட்டங்கள் வகுப்பதும் தான் ஆளும் அரசின் நோக்கம். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசின் ஆணைகளை நிறைவேற்றி வருகிறது நமது மாநில அரசு என்பது தான் எதார்த்தம்.
உலக வங்கியின் ஆணைப்படி 1990களுக்குப் பிறகு கல்வியை வியாபாரமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட செயல்திட்டங்களில் ஒன்று தான் இந்த அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற சமக்ர சிக்சா அபியான் திட்டம் (SSA). இந்தத் திட்டத்தின் வழியாக 2001ஆம் உள்ள ஆண்டுக்குப் பிறகு சுமார் 23 வருடங்களாக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.
SSA என்பது 1-8 வகுப்புகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்டது. 2009 க்குப் பிறகு RMSA என்ற மத்திய இடைநிலைக் கல்வித் திட்டம் 9-12 ஆம் வகுப்பு வரை திட்டங்களுக்கானதாக உருவாக்கப்பட்டது . 2018இல் இரண்டு திட்டங்களும் இணைக்கப்பட்டு சமக்ர சிக்சா அபியான் திட்டம்;( Samgra Shiksha Abhiyan) உருவாக்கப்பட்டது.
இவையெல்லாம் திட்டமிட்டே கல்வியை அழிக்க உருவாக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் என்பதை மக்கள் உணரவில்லை. ஆனால் கல்வியாளர்கள் , பல்வேறு அரசியல் அமைப்பினர் ஆகியோரும் கூட உணரவில்லையா..? என்ற கேள்வி இன்றியமையாதது.
1976 இல், நெருக்கடி நிலையில் கல்வியை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றார், அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி. அப்போதிலிருந்தே கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (concurrent list) தான் இருக்கிறது.
மத்திய அரசு மட்டுமே முடிவெடுப்பதும், மாநில அரசுகள் வாய் பொத்திக் கொண்டு, அதை அமல்படுத்துவதும் தான் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பாஜக அரசு மட்டுமல்ல கடந்த 50 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சி செய்யும் எந்த அரசும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர சிந்திக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
அதே போல் தமிழ்நாட்டை மாற்றி, மாற்றி ஆட்சி செய்யும் திராவிட அரசுகளும், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல தரப்பு கட்சியினரும் இந்த சிக்கலான நடைமுறையை அதாவது மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வர என்ன விதமான தீர்வுகளை நோக்கி நகர்ந்துள்ளனர்
கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பும் அரசு, அதை எப்படிக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கு தகுதியாக கல்விப் பின்புலமுள்ள அனுபவம் வாய்ந்த பொறுப்பான கல்வி அமைச்சரை நியமிப்பதும் அவசியம். இன்றுள்ள அமைச்சர் அதற்கு எந்த வகையிலும் தகுதியானவர் அல்ல.
சமக்ர சிக்ச அபியான் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஜனவரி/ பிப்ரவரி மாதத்தில் கல்வித் துறையின் ஒரு குழு டெல்லி சென்று வாரக் கணக்கில் அமர்ந்து பட்ஜெட் அப்ரூவல் வாங்கி வந்து மத்திய அரசின் வழிகாட்டுதலில் தான் அடுத்த கல்வியாண்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவார்கள். அந்தத் திட்டங்களுக்காக பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கீடு செய்வதும், அதை தமிழ்நாடு அரசு வாங்கி, அவர்கள் வகுத்து கொடுத்தபடி செலவு செய்வதும் என்ற நடைமுறையை ஏறத்தாழ கால் நூற்றாண்டாகப் பின்பற்றி வருகின்றனர்.
கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் அரசு இந்த முரண்பாடான நடைமுறையை ஏன் ஏற்கிறது? எங்கள் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை தந்து விடுங்கள். எங்கள் மாநிலப் பள்ளிகளுக்கு என்ன தேவையோ அவற்றை நாங்கள் சுயமாக நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?
ஆண்டாண்டு காலமாக மத்தியில் தரும் கல்வி நிதியை செலவு செய்யும் மாநில அரசில் பணிபுரியும் கல்வி அதிகாரிகளும் பல அடுக்குகளில் இத்திட்டங்கள் இல் பணிபுரியும் அனைவருமே ஊழலில் திளைக்கின்றனர் என்பதே எதார்த்தம்.
தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளின் தேவையை மத்திய அரசு தான் முடிவு செய்து இங்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. உதாரணமாக ஒரு பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லை தூய்மைப் பணியாளர் நியமனம் இல்லை என்றால், அதற்கு மாநில அரசு நிதி தர முடியாது. மத்திய அரசின் வழிகாட்டலின்படி, ஏதோ ஒரு சமஸ்கிருதப் பெயரில் ஒரு திட்டம் போட்டு, அதை செயல்படுத்தவே அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்வதும், அதை தமிழ்நாடு அரசு கையொப்பம் இட்டு ஏற்றுக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்குவது என்பதாக நடக்கிறது. எனில், தூய்மைப் பணியாளர் இல்லாத அந்த பள்ளி இறுதி வரை சமூகத்திடம் கையேந்தியோ அல்லது ஏதாவது ஒரு ஒப்பேற்றும் வேலை செய்வதோ தான் நடக்கும். இதுவே எதார்த்தம்.
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் இந்த சமக் ஷர அபியான் திட்டத்தின் தலைவராக இருக்கிறார். EMIS அப்டேட், கலைத் திருவிழா உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடுதல், ஆசிரியர்களுக்கானப் பயிற்சி, நூலகப் புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் இந்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை (SSA+RMSA) தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டே போகிறது.
மாநில அரசு நியமித்துள்ள இயக்குநர்கள் அதிகாரத்தை இழந்து பல வருடங்கள் ஆயிற்று. இங்கு மத்திய அரசின் வழிகாட்டலில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கல்விச் செயலர் கல்வி அமைச்சர் இப்படியான அனைவரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர். அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் வேலை ஆட்களாக உயர் அதிகாரிகளை மாற்றி வைத்துள்ளது இந்தக் கல்விச் சூழல்.
இந்த அதிகாரிகள் வாய் திறந்தால் தெரியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவே முடியாது என்பதை. ஏனென்றால் 23 ஆண்டுகளாக இந்த மத்திய அரசின் திட்டங்களுக்காக நிதி பெற்று வேலை செய்யும் கல்வித் துறை, கல்வி நிதியில் ஊழல் செய்து அனுபவித்து வந்துள்ளவர்கள் எப்படி இந்த மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட ஒப்புக் கொள்வார்கள் என்பது தான் எதார்த்தம்.
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்தே நடப்பவை பல அடுக்கு ஊழல்கள்! இந்த திட்டங்களை செயல்படுத்தும் கீழ் நிலைப் பணியாளர்கள் முதல் Top level அதிகாரிகள் வரை அனைவருமே இந்த நிதிகளைக் கையாள்வதில் பணப்பலன் அனுபவித்து வருபவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.
இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளுக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டிபிஐ வளாகங்களிலேயே வருடக்கணக்கில் தங்கி பள்ளிக்கே செல்லாமல் இரட்டை ஊதியங்கள் பெற்று வருவதும் நடைமுறையில் உள்ளது.மேலும் இது போன்ற திட்டங்களுக்காக outsourcing வழியில் ஊழியர்களை நியமிப்பது உள்ளிட்ட பல சிக்கலான நடைமுறைகளும் கல்வித் துறையில் புதிது புதிதாக உருவாகி வருகின்றது.
இது குறித்தெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் நன்கு அறிந்திருந்தாலும், வாய் மூடி மௌனம் காப்பது நியாயமா?
Also read
நமது மாநில அரசு மக்கள் நல அரசு என்றால், மத்திய அரசின் அதிகாரத்திற்கு செவி சாய்க்காமல் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது தான் உகந்தது. இந்த நேரத்திலாவது
மக்களிடம் உண்மையைக் கூற வேண்டும்.இது போன்ற மத்திய அரசின் கல்வித் திட்டங்களில் வருடா வருடம் நாம் உடன்படிக்கை செய்து கொண்டு வந்தால், எக்காலத்திலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர இயலாது என்பதை வெளிப்படுத்தினால் நல்லது.
ஆட்டிப் படைக்கிறது ஒன்றிய அரசு. அடங்கி பழகிவிட்டது மாநில அரசு. ஆனால், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை எதிர்க்காமல் தீர்வு இல்லை. வீறு கொண்டு எழுந்து மக்கள் மன்றத்தில் உண்மையைச் சொன்னால் தான் இப் பிரச்சனைக்கு விடியல் ஏற்படும். மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு மட்டுமே தீர்வாகாது.
இளவெயினி
கல்விச் செயற்பாட்டாளர்
Leave a Reply