செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக புராண, இதிகாச கதாகாலாட்சேப பேச்சாளரான சுதா சேஷய்யனை நியமித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். சுதாவின் பின்புலமோ அதிர்ச்சியளிக்கிறது. இது செம்மொழி ஆய்வில் உண்மையான ஆய்வுகளை புறந்தள்ளி, எத்தகைய ஆபத்துகளை உருவாக்கவுள்ளது என்பது குறித்த அலசல்;’
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழின் தொன்மை, அதன் இலக்கண, இலக்கிய செழுமை குறித்த ஆய்வுக்கானது. இதில் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகு ஆழ்ந்த ஆய்வு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சதா சர்வ காலமும், ஆன்மீக கதாகாலாட்சேபங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள்.. எனவும் தொலைகாட்சி, வானொலிகளில் முக்கிய நிகழ்வுகளின் போது வர்ணனை செய்கின்றவருமான சுதா சேஷய்யனை நியமிப்பது முறையா?
இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றால், சங்கரமடத்தில் அவ்வப்போது நடைபெறும் “மகா பெரியவா ஆராதனை” நிகழ்ச்சியில் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றுவதும், காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியை தொகுத்தளித்ததும், புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை, கணபதி ஹோமம், செங்கோல் நிறுவப்பட்ட நிகழ்வை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தொகுத்து வழங்கியதெல்லாம் தெரியாதா..?’’ என்கிறார்கள்.
இவர் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் மாணவர்களுக்கு மிக அபூர்மாகத் தான் வகுப்பெடுப்பார்.
”அவர் வகுப்பு என்பது ரொம்ப சுவாரசியமாகவும், தெளிவாகவும் இருக்கும் சார். ஆனா காலேஜுக்கே மிக அரிதாகத் தான் வருவாங்க. அதுவும், 2008 ஆம் ஆண்டு அவங்க ஒரு முறை கூட வகுப்பே எடுக்கல. அந்த அளவுக்கு வெளி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தாங்க..” என்று அவரது மாணவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன்.
இப்படி எந்த பொறுப்பில் உள்ளாரோ, அதற்கு நேரம் கொடுக்க முடியாமல் ஆனால், முழுச் சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு, பற்பல சொற்பொழிவுகளில் பரபரப்பாக இயங்கும் சுதா சேஷய்யனுக்கு பாஜக கவர்னர் பன்லாரிலால் புரோகித் காலத்தில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையின் துணை வேந்தராக நியமித்தார்கள்.
அப்போதும் துணைவேந்தர் பொறுப்புக்கான நேரத்தை தர முடியாதவராக சதா சர்வகாலமும் ஆன்மீகச் சொற்பொழிவுகள், கதாகாலாட்சேபம், காசி சங்கமம், சங்கரமட ஆராதனை நிகழ்வுகள்.. என்று தான் அலைந்து கொண்டிருந்தார். ஆனால், துணைவேந்தருக்கான சம்பளத்தையும், வசதி வாய்ப்புகளையும் முழுமையாக, எந்த குற்றவுணர்வுமின்றி அனுபவித்துக் கொண்டு, இவர் மூன்றாண்டு பதவி காலம் முடித்த போது, மீண்டும் இந்தம்மாவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கினார் இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போதும் அதை கண்டித்து நாம் அறம் இணைய இதழில் எழுதி உள்ளோம்.
இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் செய்யும் மற்றொரு காரியம் என்னவென்றால், மாலன் உள்ளிட்ட பார்ப்பன எழுத்தாளர்களை அழைத்து அவர்களுக்கும் வாய்ப்பு வழங்குதல். இதையே எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகத்திலும் செய்தார். தற்போது செம்மொழி ஆய்வு மையத்திலும் மாலன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்கள் கூட்டம் நுழைந்து கொள்ளும்.
புராணங்களையும், இதிகாசங்களையும் கரைத்துக் குடித்து, அதை மெய்யன்று நம்பி உருக்கமாக கதாகாட்சேபம் செய்கின்ற ஒருவர் தமிழ் செம்மொழி ஆய்வுத் துறைக்கு பொருத்தமானவர் தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ஆய்வுக்கு தேவை உண்மையான தரவுகளை தேடிச் சேகரித்து, சமரசமற்ற நேர்மையான அணுகுமுறை மூலம் நிறுவுதலாகும். இத்தகு ஆய்வு மையத்தில் இது போன்ற பிற்போக்கு கருத்தியலைக் கொண்ட ஆழ்ந்த மத நம்பிக்கை சார்ந்த பேர்வழிகள் தலைமை பொறுப்புக்கு வருவது ஆபத்தானது. இவர்கள் ஆய்வின் போக்கையே திசை திருப்புவார்கள். தமிழ் இலக்கியத்தை புராண, இதிகாச கண்ணோட்டத்துடன் அணுகி தவறான ஆய்வுக்கு துணை போவார்கள்.
சமண இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்டவற்றையும், சமயம் சாரா திருக்குறள் போன்றவற்றையும் நாசுக்காக புறக்கணிப்பார்கள். தமிழின் தொன்மையை விட சமஸ்கிருதத்தின் தொன்மையே முக்கியத்துவம் வாய்ந்தது என செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் இருந்து கொண்டே நிறுவ முனைவார்கள். மத்திய பாஜக அரசு கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் நேர்மையான கல்வியாளர்களை புறக்கணித்து, இந்துத்துவ பிற்போக்கு சிந்தனையாளர்களை நுழைத்து வருகின்ற அஜந்தாக்களில் ஒன்றாகவே இந்த நியமனத்தையும் கருத வேண்டியுள்ளது. எனவே, இந்த நியமனம் கடுமையான கண்டனத்திற்கு உரியது.
தமிழ் மொழி ஆய்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பூணூல் போட்டு இருக்கிறார்களா? ராமர் பஜனை செய்வார்களா? என்றெல்லாம் ஆராயாமல், உண்மையான செம்மொழி ஆய்வு கண்ணோட்டத்தை அளவுகோலாகக் கொண்டு பொறுப்பு தர வேண்டும்.
மற்றொரு முக்கிய விவகாரம் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தலைவராக தமிழக முதல்வர் இருப்பார் என்பது கலைஞர் காலத்தில் அவர் எடுத்த முடிவு. அதுவே தவறாகும். முதலமைச்சருக்கு இதற்கெல்லாம் நேரம் தர இயலாது. அடுத்து ஜெயலலிதா பதவி ஏற்ற போது, செம்மொழி ஆய்வு நிறுவனத்தை முற்றாக புறக்கணித்தார். ஓ.பி.எஸ், எடப்பாடி ஆட்சி காலத்திலும் பெரிய மாற்றமில்லை.
Also read
தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றது தொடங்கி விருது வழங்குதல் போன்ற ஒரு சில முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. அதே சமயம் இன்றைய முதல்வருக்கும் , தமிழ் ஆய்வுக்கு நேரம் தரும் சிந்தனை போக்கோ, அவகாசமோ இல்லை. ஆகவே, செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் தான் தலைவர் என்ற விதியை மாற்றி, தலைமைப் பொறுப்பை தமிழ் ஆய்ந்த அறிஞர் ஒருவரிடம் ஒப்படைத்து செம்மொழி ஆய்வு மையம் சிறப்பாக செயல்பட வழிவிட வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அது ஒரு காலம். வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தேசிய தலைவர் தமிழில் ஓரிரு வார்த்தை பேசினாலே ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினோம். அதன் தொடர்ச்சியாக வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகரித்தது. தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்கள் ஆனார்கள் அல்லது ஆக்கப்பட்டார்கள்.
காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய தாய் மொழி கொண்டவர்கள் உயர் மற்றும் பல்வேறு பதவிகளிலும் பொறுப்புகளிலும் அமர்த்த பட்டனர். அது ஆலமரமாக வளர்ந்து இப்போது தமிழ் வளர்க்க சுதா. ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர். மத்திய அரசு இவரை நியமித்த போது இதன் தலைமை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் அமெரிக்காவில். அங்கிருந்தே அரசு நிர்வாகத்தை கவனிப்பேன் என்று கூறியிருந்தது நினைவில் கொள்ள வேண்டும். அறம் உள்பட பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பும் கண்டனங்களும் எழும்பியுள்ளன. ஆனால் இதுவரை முதலமைச்சர் சென்னை திரும்பிய பிறகும் ஒரு கண்டன குரல் அவரிடம் இருந்த வரவில்லை.
திமுக ஆட்சியில் செம்மொழி நிறுவனம் சார்பில் விருது வழங்கப்பட்டது என்று கூறுவது பொருத்தமற்றது.
2017க்குப் பிறகு இளம் அறிஞர் விருது, தொல்காப்பியர் விருது உள்ளிட்ட எவ்விருதுகளும் வழங்கப்படவில்லை. விருதுக்குப் தெரிவானோர் பட்டியல் கூட இதுவரை வெளியிடப்படவில்லை கடந்த ஏழு ஆண்டுகள் அறிவிப்பு மட்டுமே வந்தவண்ணம்.