ஹெலிகாப்டர் சுற்றுலா; பாதிக்கப்படும் பறவைகள்!

-சாவித்திரி கண்ணன்

எங்களுக்கு ஹெலிகாப்டர் ரெய்டு மூலம் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம்.  பறவைகள் வருகை, சுற்றுச் சூழல் முக்கியத்துவம் இவையெல்லாம் தேவையில்லை என்பது அதிகாரத்தில் உள்ளவர்கள் நிலைபாடு..! கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவில் கிழக்கு கடற்கரை பகுதியின் பறவைகள், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஒரு பார்வை;

விவகாரம் இது தான்:

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையான சென்னையை ஒட்டிய கடற்கரை,  பல தடாகங்கள், முகத்துவாரங்கள் மற்றும் உப்பங்கழிகளை கொண்டதாகும். இந்த கடல் பகுதி பல்லுயிர் பெருக்கத்தால் செறிவூட்டப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும்.  கடலோர சுற்றுச்சூழல் அமைப்பில், உப்பங்கழிகள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள ஏராளமான நீர்ப்பறவைகளுக்கு உப்பங்கழி போன்ற கரையோர வாழ்விடங்கள் மிக முக்கியமான உணவுக்கான இடமாக உள்ளது. ஆகவே, அவை இங்கே கூடு கட்டி வாழ்கின்றன.

மேலும் மீன், நண்டுகள் இங்கு கணிசமாக உள்ளன.  நீரில் வளரும் தாவரங்கள் உட்பட பரந்த அளவிலான நீர்வாழ் விலங்குகளுக்கு உப்பங்கழி ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த அமைப்பை வழங்குகிறது.

முட்டுக்காடு உப்பங்கழி  இந்திய அளவில் முக்கியமான முகத்துவார சூழல்களில் ஒன்றாகும். இந்த உப்பங்கழிகள் 200 க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு கொண்டவை. சுமார் 200 ஏக்கரும் அதிகான நீர்பரப்பில் பறவைகள் பறந்து திரியும் இப்பகுதி பறவை ஆர்வலர்களை பரவசப்படுத்தும் இடமாகும். இது உவர் நீர் பறவைகளுக்கு குறிப்பிடத்தக்க ஈரநிலப் பகுதியாக உள்ளதால் இந்த பற்வைகளை ரசிப்பதற்கென்றே முட்டுக்காடு படகு சவாரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு சமீபத்தில் செய்யப்பட்ட  பறவை கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி 124 வகை பறவையினங்கள் இங்கு வந்து செல்வது தெரிய வந்தது. குறிப்பாக கிங் பிஷர், சிறிஅய் கிரேப் நாரை, வெள்ளைத் தோண்டை கிங் பிஷர், லிட்டில் கிரின் பீ ஈட்டர், பெலிகன் எனப்படும் கூழைக்கடா பறவைகள், வரித்தலை வாத்து போன்ற பறவைகள் இங்கு உள்ளன.

வரித்தலை வாத்துகள்

தற்போது இதற்கருகில் உள்ள கோவளத்தில் தான் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு 10 நிமிஷ பயணத்திற்கு ரூ 5,000 வசூலிக்கப்படுகிறது. இதற்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியும் உள்ளதாம். இங்கேயிருந்து தாழ்வாக பறந்து கிழக்கு கடற்கரையை  சுற்றுலா பயணிகள் ரசிக்கும்படி பெரும் இறைச்சலுடன் ஹெலிகாப்டர் அடிக்கடி பறப்பதானது இங்கு வாழும் பறவைகள் பயந்து சிறகடித்து வெளியேறக் காரணமாகிறது. இந்த பத்து நிமிடத்தில் பெரும்பகுதி பறவைகளின் வாழ்விடமான முட்டுக்காட்டையும், கேளம்பாக்கம் பகுதியையும் உள்ளடக்கியதாக உள்ளது. நீர்வாழ் உயிரினங்களும் இதில் பாதிக்கப்படுவதாக சூழலியல்வாதிகள் கருதுகிறார்கள்.

இயற்கையான பறவைகளுக்கு போட்டியாக செயற்கையாக அந்தப் பகுதியில் பணபலத்தால் இப்பகுதியில் பறந்து வட்டமடிக்க விரும்பும் வசதி படைத்த சுற்றுலா பயணிகளால் பறவைகளை பார்த்து ரசிக்க வரும் அதைவிட அதிகமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் வருத்தமடைகின்றனர்.

பணம் சம்பாதிக்க அரசுக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இயற்கையை, சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவது நல்லதல்ல. இப்பகுதி மக்களும் இதை சுத்தமாக விரும்பவில்லை. இங்கே பறவைகள் உலகின் பல பகுதிகளில் இருந்து வருவது இறைவன் தந்த வரமாகும். பணத்திற்காக ஏற்கனவே படகு சவாரி உள்ளது. அதுவே நியாயமாகப் பார்த்தால் தவறு தான். ஆனால், தற்போதைய ஹெலிகாப்டர் சவாரியோ கொடூரமானது.

தமிழகத்தின் அனைத்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு போராடி, இந்த ஹெல்காப்டர் சாவாரியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time