அண்ணாவின் லட்சியக் கனவான உள்ளாட்சி!

-நந்தகுமார் சிவா

உள்ளாட்சி அமைப்புகள், அதிகார பரவல் குறித்து அண்ணா மிகவும் முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். உள்ளாட்சிகள் குறித்த அண்ணாவின் பார்வைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அண்ணா காண விரும்பிய உள்ளாட்சியும், இன்று நிஜத்தில் இருக்கும் உள்ளாட்சியும் ஒன்றா?-ஒரு அலசல்;

அண்ணா கனவு கண்ட அதிகாரப்பரவல் அரசியல்! இன்று என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

அண்ணா! நம்மை அண்ணாந்து பார்க்க வைத்த ஆளுமை! தமிழ்நாட்டுக்கு அவர் பெயர் மட்டும் வைக்கவில்லை, அதன் சமூக அரசியல் கருத்தியலில் ஒரு புரட்சிகர சிந்தனையும் விதைத்துச் சென்றார்.  மாநில சுயாட்சி, என தெற்கிலிருந்து புறப்பட்ட அந்த முழக்கம் இந்தியா முழுமைக்கும் பரவியது.

உண்மையான ஜனநாயகவாதியான அவர் சுதந்திர இந்தியாவில் அதிகாரங்கள் டெல்லியில் குவிக்கப்பட்டு விடக்கூடாது, மாறாக அந்தந்த பிராந்தியங்களுக்கான உரிய அரசியல், நிதி மற்றும் பண்பாட்டு வாழ்வியலுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும், கூட்டாட்சி தத்துவத்தைச் செயல்படுத்தும் விதமாகவும் நிர்வாக முறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர்.  அதிகாரங்கள் பரவலாக்கப்படாமல் அவை ஓர் இடத்தில் குவிக்கப்பட்டு,  நிர்வாகத்தின் பெயரைச் சொல்லி எங்கெல்லாம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டதோ அதற்கெல்லாம் சேர்த்து அவர் வைத்த கருத்தியலின் கூர்முனை தான் மாநில சுயாட்சி.

நிர்வாகத் திறமை உங்களுக்கு இல்லை எனச் சொல்ல அரசுக்குத் தைரியம் இருக்கிறதா?! – சட்டமன்றத்தில் கேட்ட அண்ணா;

சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரைகள்; அரசியல், சமூக கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த இலக்கியம். அவற்றில், அதிகாரப்பரவல் பற்றி அவர் பேசியவை அதி அற்புதம்! 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்படுகிறது.

அச்சட்ட முன்வடிவு குறித்து சட்டமன்றத்தில்  24.09.1958  அன்று  பேரறிஞர்  அண்ணா பேசுகிறார்…

“இந்த சபையில் உள்ள நானும் என் கட்சியில் அல்லாத இதர கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கனம் அமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அதேபோல்தான், பஞ்சாயத்து உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். ஆனால், மசோதாப்படி, சட்டசபை உறுப்பினர்களின் அதிகாரங்களுக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்களின் அதிகாரங்களுக்கும் வேற்றுமை இருக்கிறது; பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை. இந்த நிலையில் இருக்கக் கூடிய பஞ்சாயத்து உறுப்பினர்கள் “கனம் அமைச்சர்களும் சட்டசபையின் உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சட்டசபை உறுப்பினர்கள் லட்சம் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால், நாங்கள் ஐந்நூறு பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவ்வளவு தான் வித்தியாசம். அவர்கள் அனுபவிக்கும் அதே விதமான உரிமைகளைப் பஞ்சாயத்தில் நாங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது? எங்களுக்கு பஞ்சாயத்தில் அத்தகைய அதிகாரங்கள் ஏன் இருக்கக் கூடாது?” என்று கேட்க ஆரம்பித்தால் ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?”

“இந்த ஆட்சியாளர்கள் கிராம மக்களைப் பார்த்து,  ஊராண்மைக் கழகத்தைத் திறம்பட நடத்தத்தக்க நிர்வாகத் திறமை உங்களுக்கு இல்லை. ஆகவே உங்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்கப்போவதில்லை” என்று சொல்வதற்குத் தைரியம் இருக்கிறதா?” “என்னைப் பொறுத்தவரையில் அதிகாரப் பரவல் என்பதன்படி ஜனநாயகம் உயிர் பெற வேண்டுமென்றால், வட்டங்களுக்கு தனித்தனியாக அதிகாரங்கள் வகுக்கப்பட வேண்டும். எப்படி இந்த மாமன்றம் இந்த மாநிலம் பூராவுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறதோ, எப்படி நம் அமைச்சர்கள் தங்கள் தங்கள் துறைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்களோ அதேபோன்று ஊராட்சி மன்றங்களுக்கு முழு உரிமையும் முழு அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும்” என முழங்கி இருக்கிறார். இப்போது இருந்தாலும் அவர் அதைத் தான் சொல்லியிருப்பார். அதனால் தான் அவர், அண்ணா. பேரறிஞர் அண்ணா.

ஆனால், அண்ணா முழங்கிய அதே சட்டமன்றத்தில் தான் இன்று ஊராட்சிகளிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்படும் சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன…

உண்மையில், அண்ணா முன் வைத்த மாநில சுயாட்சி நாளைக்கே நமக்குக் கிடைத்தாலும் இங்கு அமைச்சர்களின், எம்.எல்.ஏ.க்களின், மாவட்ட ஆட்சியர்களின் , அலுவலர்களின் ஆட்சியாகத் தான் இருக்குமே தவிர மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக, உண்மையான மாநில சுயாட்சியாக இருக்கவே இருக்காது. காரணம், கடைசி மனிதனுக்கான பொறுப்புகளை – வாய்ப்புகளை மறுக்கும் விதமாகத்தான் இப்போது நிர்வாக சூழல் அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்படும் ஒரு கிராமசபை தீர்மானத்தை அல்லது ஊராட்சி மன்ற தீர்மானத்தைக்கூட முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் இன்னும் வகுக்கப்படாவே இல்லை தமிழ்நாட்டில்.

தங்களின் ஒரு அடிப்படைத் தேவைக்காக இயற்றப்பட்ட ஒரு கிராமசபை தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்காக அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் மகளிர் குழுக்களையோ, கிராம இளைஞர்களையோ,  ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகளையோ  தினமும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். மேலிருந்து பிறப்பிக்கப்படும்  உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், உள்ளூரிலிருந்து முன் வைக்கப்படும் கோரிக்கைகள் மனுக்களாக மட்டுமே மாறுகின்றன.

ஊராட்சியில் பணி செய்யும் ஒரு ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தினை கூட ஊராட்சியிடமிருந்து பறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்து சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள்.  1958 ஊராட்சிகள் சட்டத்தின் கூறுகளை விமர்சித்த அண்ணா, இப்படிப்பட்ட சட்டத்திருத்தத்தை  எப்படியெல்லாம் எதிர்த்திருப்பார்? எண்ணிப்பாருங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருந்ததும் நம் தமிழ்நாட்டில்  தான். அலுவலர்கள் கையில் அதிகாரங்களை/ நிர்வாக பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு மக்களை மனு கொடுப்பவர்களாக ஆக்கி வைத்ததைப் பார்க்க, அண்ணா இல்லை. மீண்டும் அப்படியான ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாக்கி விடக்கூடாது என நாம் குரல் கொடுக்கும் போது நமக்குத் துணை நிற்பவர், அண்ணா. தான்.

டில்லியில் அதிகாரம் குவிக்கப்படுவது எந்த அளவுக்குத் தவறானதோ அதே போன்று சென்னையில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதும் கண்டிப்பாகத் தவறு தான்.

டெல்லியில் இருக்கும் அமைச்சர்கள் மாநிலத்தில் இருப்பவர்களைச் சிறுமையோடு பார்ப்பது எந்த அளவுக்கு முறையற்றதோ, அதே அளவிலான முறையற்ற அணுகுமுறை தான் ஒரு சிற்றூராட்சியில் இருக்கும் நிர்வாகத்தினரைச் சென்னையில் இருக்கும் நிர்வாகத்தினரோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் நிர்வாகத்தினரோ சிறுமையாகப் பார்ப்பது. அண்ணா போராடியது டெல்லியை எதிர்த்து மட்டுமல்ல, அதிகாரங்கள் குவிக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு சிந்தனைக்கு எதிராகவும் நின்றவர் அவர்.

இன்று நம் தமிழ்நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலரை விடக் கட்சியின் ஒன்றிய செயலாளர் வலுவாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. மாவட்டத்தில் எந்த ஒரு உள்ளாட்சி பிரதிநிதியின் சட்டப்பூர்வமான கோரிக்கையை விடக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொல்வது நிர்வாகத்தில் உடனடியாக நடப்பதைப் பார்க்க முடிகிறது. . கிராமசபை தீர்மானம் சொல்வதை விடக் கிளைச் செயலாளர் சொல்வது சுலபமாக நடக்கிறது. உண்மையில் யார் சொல்வது ‘சபை’ ஏற வேண்டும்? இது, அண்ணா உருவாக்க நினைத்த தமிழ்நாடு அல்ல. நிச்சயமாக இல்லை.

எது சமூக நீதி ?

பல்லாயிரக்கணக்கான பெண்களும், பட்டியல் சாதியினரும், பட்டியல் பழங்குடியினரும் இன்றைக்கு உள்ளாட்சிகளில், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாகவும், பஞ்சாயத்துத் தலைவர்களாகவும், ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இவர்களை அரசு நிர்வாகம் எப்படிக் கையாள்கிறது என்பது ஒரு கேள்விக்குறியே.

சட்டத்தினால் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் இருந்தாலும், நிர்வாக முறைகேடுகளுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவியைப் பறிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள், நமது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில்.

சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த ஒரு ஊராட்சி தலைவரை மாவட்ட ஆட்சியர் தன் அதிகாரத்தைக் கொண்டு பதவி நீக்கம் செய்திருக்கிறார். உள்ளபடி அந்த ஊராட்சித் தலைவர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டிருந்தால் அவரை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஜாதி கண்ணோட்டமுள்ள ஒரு அலுவலர் மூலம், குற்றம் செய்யாத ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்படுவது எந்த விதத்தில் ஜனநாயக த்தை மதிப்பதாக இருக்க முடியும்? பல தலைமுறை போராட்டத்திற்குப் பிறகு பொறுப்புக்கு வந்திருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு எதிராக இப்படி ஒரு அதிகாரத்தினை ஒரு அலுவலருக்கு கொடுப்பது தான் அதிகார குவியல். அண்ணா எதிர்த்த அதிகாரக் குவியல்

மாவட்ட ஆட்சியர் நிர்வாக முறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட நிர்வாக முறை. மக்கள் தொகை அளவில் மிகக் குறைவாக இருந்த ஆங்கிலேயர்கள் மக்கள் தொகை அளவில் அதிகமாக இருந்த இந்தியர்களை ஆள வேண்டும் என்பதற்காக அதிகாரங்களைக் குவித்து மாவட்ட ஆட்சியரின் கைகளில் கொடுத்தார்கள். ஆனால், இப்போதும் அந்த முறையின் பல அம்சங்கள் ‘பாதுகாக்கப்பட்டு’ வருவதை நாம் இயல்பாக பார்க்க முடியும்.

மறுமலர்ச்சி பெறுமா மாவட்ட ஊராட்சி?

மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு இணையான அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக இருக்க வேண்டியது மாவட்ட ஊராட்சி. மூன்றடுக்கு ஊராட்சி கட்டமைப்பில் மாவட்ட ஊராட்சியின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் உண்மையில் இன்றைக்குத் தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சி நிர்வாகம் என்பது செயல்படுகிறதா என்று தேடிப் பார்க்கும் நிலையில் தான் இருக்கிறது.

ஒவ்வொரு உள்ளாட்சியில் அவர்களுக்கான தேவைகள் வளர்ச்சி திட்டங்களாகத் தயாரிக்கப்பட்டு அவற்றை முறையாகத் தொகுத்து நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் மாவட்ட திட்டக்குழுக்கள், சில மாநிலங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் அவை தூங்கிக் கொண்டிருக்கிறது. மாவட்ட அளவில் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டிய, மூன்றடுக்கு உள்ளாட்சியில் முக்கியமான இடத்தில் இருப்பவை மாவட்ட பஞ்சாயத்துகள். அதனை முடக்கி வைத்திருப்பது, மக்களை மீண்டும்,  மீண்டும்  அலுவலர்களிடமும் கட்சி பிரதிநிதிகளிடமும் கோரிக்கை வைக்கும், மனு கொடுக்கும் ஆளாகத் தான் நிறுத்த வைக்கும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மனுக்களாகப் பெறப்படும் கோரிக்கைகள் பெரும்பான்மையானவை ஊராட்சி அளவிலேயே அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகம் அளவிலேயே முடித்துக் கொள்ளக்கூடிய செயல்பாடுகளாகத்தான் இருக்கிறது என்பது பார்க்கிறோம். ஊராட்சிகளுக்கு பொறுப்புகள் கொடுத்து அவை செயல்பட வைப்பது மூலமாகவும், அவர்களுக்கு உரிய நிதிகளைப் பகிர்வது மூலமாகவும் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்ப்பதன் மூலமாகவும் மக்களின் பல தேவைகளை ஊராட்சி அளவிலேயே முடித்துக் கொள்ள முடியும். மாவட்டத்தில், எல்லாவற்றுக்கும் மாவட்ட ஆட்சியரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது அண்ணா விரும்பிய நிர்வாக முறையே அல்ல!

சில நண்பர்கள் கூறுவார்கள்… முதலில் மாநில சுயாட்சி கிடைக்கட்டும். பிறகு உள்ளாட்சியைப் பற்றி யோசிக்கலாம் என்று.

உள்ளாட்சி என்பது மாநில பட்டியலில் தான் வருகிறது. நம்மால் செய்ய முடிந்ததைச் செய்ய முன்வராமல், டெல்லியிலிருந்து மட்டும் கேட்டால் நம் கோரிக்கைக்கு வலுசேர்க்க முடியுமா?

மாநில அரசு முன்வந்தால் ஒவ்வொரு ஊராட்சியையும், ஒவ்வொரு உள்ளாட்சியையும் வலுவான அமைப்புகளாக வளர்த்தெடுக்க முடியும். அண்ணா இருந்திருந்தால் நிச்சயம் அதைச் செய்திருப்பார். அதிகாரப்பகிர்வு என்பது மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு அணுகுமுறை என்றும் சுதந்திரமில்லாத வளர்ச்சி ஒரு திணிப்பே என்பதையும் முழுமையாக உணர்ந்தவர், அண்ணா.

மக்களோடு பயணித்து, மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு, மக்களை வலுப்படுத்தப் போராடியவர் அவர். நிச்சயம் நம் கிராமசபைகளையும், ஊராட்சி பிரதிநிதிகளையும் வலுப்படுத்தியிருப்பார். சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் அதனைப் பரவலாக்கியிருப்பார். கட்சி பிரதிநிதிகளை விடத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். உள்ளாட்சிகளுக்கான உரிய நிதிகளைப் பகிர்ந்திருப்பார். அந்தந்த  நிர்வாக நிலைகளுக்கான பொறுப்புகளைக் கொடுத்து டில்லிக்குச் சொல்ல வேண்டிய செய்தியை தன் செயலின் மூலம் சொல்லியிருப்பார்.

ஆம், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான பணி சென்னையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு சிற்றூராட்சியிலிருந்தும் துவங்க வேண்டும். இதுவே, அண்ணா கனவு கண்ட அதிகாரப் பரவல் அரசியல்!

வாழ்க அண்ணா!

கட்டுரையாளர்; நந்தகுமார் சிவா

சமூக செயல்பாட்டாளர்

இன்று- செப்டம்பர்-15  அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time