மம்தாவின் ஆணவம் மாணவர்களிடம் பணிந்தது!

-சாவித்திரி கண்ணன்

இளம் மருத்துவ மாணவர்கள் உறுதி குலையாமல் போராடினர். அதிகார பலம், மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் பலம், நீதிமன்ற ஆணை.. அனைத்தும் மாணவர்களிடம் பலனின்றி போனது.  இது வரை எல்லா போராட்டங்களையும் ஒடுக்கிய மம்தாவின் ‘பாட்சா’ மாணவர்களிடம் பலிக்கவில்லை.. மம்தா மண்டியிட்ட சம்பவம் ஒரு அலசல்;

பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு முன்பு இரும்பு பெண்மணியாக வலம் வந்தவர் மம்தா பானர்ஜி. அந்த மம்தா மாணவர்கள் முன்பு பல முறை மண்டியிட்டார். அதே சமயம் அவர் மண்டியிட்டாலும் கூட, மாணவர்கள் மசியத் தயாராக இல்லை என்பதை வலுவாகவே உணர்த்திவிட்டனர்.

இந்தியாவிலேயே அரசியல் வன்முறைகளுக்கு பெயர் போன மாநிலம் தான் மேற்கு வங்கம். ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் அராஜகங்களில் இடது முன்னணியை விஞ்சக் கூடிய விதத்தில் திரிணமுள் காங்கிரசார் ஈடுபட்டு பல அக்கிரமங்களை நிகழ்த்துவது வாடிக்கையாக இருக்கிறது.

சினிமாக்களை மிஞ்சும் கொடூரங்கள் பல மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் நடந்தேறியது. மம்தாவின் தீவிர விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொண்ட ஷேக் ஷாஜகான் என்பவர் ஏழை பழங்குடிகளிடம் இருந்து பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை அபகரித்தார். பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கினார் பல நூறு பெண்களை. முடங்கிய அரசு நிர்வாகத்தையே முடக்கினார். பாதிகக்ப்பட்ட பெண்கள் முதல்வர் மம்தா கவனத்திற்கு பல முறை இந்த விவகாரத்தை கொண்டு போன போதும் அவர் பொருட்படுத்தவில்லை.

மம்தாவை பொறுத்த வரை அவர் பிரதானமாக எதிர்பார்ப்பது விசுவாசத்தை தான்! தனக்கு விசுவாசமான ஒருவர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நியாய, அநியாயங்களை பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்டவரைக் காப்பாற்றுவார்!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜிகர் மருத்துவமனையில் கடந்த மாதம் 9 ஆம் தேதி அதிகாலையில் பயிற்சி மருத்துவர் ஒரு இளம் பெண் கொடூரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டார். வழக்கம் போல மம்தா அரசின் நிர்வாகம் இந்த கொலைக்கான உண்மைக் காரணங்களை மறைத்தது. அரசுக்கு கெட்ட பெயர் வரக் கூடாது. முதல்வரின் இமேஜ் பாதிக்கபடக் கூடாது என்ற தன்மையிலேயே இந்த விவகாரத்தையும் அணுகியது. இதனால் இந்த சம்பவத்தில் இயல்பாக ஏற்பட்டிருக்க வேண்டிய அறச் சீற்றமோ, குற்றவாளிகளை தண்டிக்கும் எண்ணமோ அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இல்லை. கொல்கத்தா காவல் துறைக்கும் இல்லை.

மேலும், மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் என்பவர் மம்தாவின் விசுவாசி. ஆகவே, தன் விசுவாசிகளை எந்த எல்லை வரையிலும் சென்றாவது காப்பாற்றத் துடிக்கும் மம்தாவின் இயல்பால் மீண்டும், மீண்டும் இளம் மருத்துவ மாணவி கொல்லப்பட்ட பிரச்சினைகளில் வெளிப்படும் தகவல்களை எல்லாம், ”வதந்தி” என்றார். ”தன் ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க நினைப்பவர்களின் சதி” என்றார். ”ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சி” என்றார்!

இந்த அரசியல் தந்திரம் இளம் மருத்துவ மாணவர்களிடம் எடுபடவில்லை. மம்தாவின் கீழ்த்தரமான அணுகுறைகள் அவர்களை மேலும் கோபப்படுத்தியது.

ஆகவே, மம்தா சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷை பதவி விலகச் சொன்னார். அவர் பதவி விலகிய 12 மணி நேரத்தில் அவருக்கு கொல்கத்தா தேசிய கல்லூரி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் பதவியை வழங்கினார். இது எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது போல ஆனது. மேலும் 7 நாட்கள் கெடு கொடுத்தனர் மாணவர்கள்.

ஆனால், அப்போதும் மம்தா கற்பழிப்புக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியதோடு கற்பழிப்பு குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என ஒரு பெரிய பேரணியை நடத்தினார்.

இந்த அரசியல் நாடகம் மாணவர்களிடம் எடுபடவில்லை என்பதோடு, அவர்கள் கோபத்தை பன்மடங்கு அதிகப்படுத்தியது. மம்தாவிடம் நியாயம் கிடைக்காது என உறுதியான முடிவுக்கு வந்தனர். எனவே வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க ஆதரவளித்தனர். எனினும், மாநில அரசு ஒத்துழைப்பு நல்காவிட்டால் பயன் இல்லாமல் போய்விடுமே. ஆகவே, முதல்வர் மம்தாவிடம் சில கோரிக்கைகள் வைத்தனர்.

# மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்,

# இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிசிடிவி கேமராகூட நிறுவப்படவில்லை.சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும்,

# கொல்கத்தா மாநகரக் காவல்துறைத் தலைவரை அகற்ற வேண்டும்.

# மருத்துவ கல்லூரி இயக்குனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

# சுகாதரத் துறை இயக்குனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

# மருத்துவர்களுக்கு ஓய்வெடுக்கும் அறை இல்லை. ஆண், பெண் மருத்துவர்களுக்கென தனித்தனி கழிப்பறைகள் வேண்டும்.

இவற்றில் சில அடிப்படையான தேவைகள். இவை போராட்டங்கள், கோரிக்கைகள் இல்லாமலே அரசே செய்திருக்க வேண்டியவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதவி நீக்கம் என்பது இளம் மருத்துவர்கள் கோரிக்கை மட்டுமல்ல, மக்கள் கோரிக்கையும் தான். அந்த அளவுக்கு இவர்களின் பெர்மாமன்ஸ் மக்களிடம் வெறுப்பை, வேதனையை ஏற்படுத்தியுள்ளன.

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க எவ்வளவோ அடக்கு முறைகளை ஏவிப்பார்த்தார். பற்பல ராஜதந்திர முயற்சிகளைக் கையாண்டு மாணவர்கள் ஒற்றுமையை சிதைக்கப் பார்த்தார். போராட்டத்திற்குள் உளவாளிகளை சொருகி குழப்பங்களை விளைவித்தார். மாணவர்கள் விழிப்புணர்வுடன், ஒற்றுமையுடன் அனைத்தையும் முறியடித்தனர்.

கொட்டும் மழையையோ, பனியையோ பொருட்படுத்தாமல் இரவு,பகல் பாராமல் சாலை ஒரங்களில் அமர்ந்து கோஷமிட்டு போராடினர். ஓட்டுமொத்த மக்களும் மாணவர்களை ஆதரித்தனர். எனவே, உச்ச நீதிமன்றத்தை அணுகி, ’’நோயாளிகள் பாதிக்கபடுகிறார்கள். 23 நோயாளிகள் சிகிச்சை தர முடியாமல் இறந்து விட்டனர். ஆகவே, நீதிமன்றம் பயிற்சி மாணவர்களை வேலைக்கு திரும்பும்படி கட்டளை இட வேண்டும்’’ என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் உடனே, ’’மாணவர்கள் ஒரு நாள் அவகாசம் தருகிறேன். அனைவரும் வேலைக்கு திரும்ப வேண்டும் . இல்லையெனில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்..”என ஆணையிட்டார்.

அந்த அரசின் குரலாக ஒலித்த அந்த ஆணையை மாணவர்கள் கடுகளவும் மதிக்கவில்லை. நாங்கள் நியாயத்திற்காக அரசிடம் போராடுகிறோம். இதில் நீதிமன்றத்திற்கு என்ன வேலை? உண்மையான அக்கறை நீதிமன்றத்திற்கு இருக்குமானால் அரசாங்கத்தை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி அறிவுறுத்தி இருக்கலாமே…எங்களை மிரட்டுவது எல்லாம் நடக்காது..’ எனப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மம்தா பானர்ஜி கதிகலங்கி போனார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் துணிவும் அவருக்கு இல்லை. அப்படியே அவர் அணுகினாலும் ஏற்கனவே அவமானப்பட்ட நீதிபதிகள் மீண்டும் அவமானத்தை சந்திக்க விரும்பி இருக்க மாட்டார்கள்.

ஆகவே, மாணவர்கள் போராடும் இடத்திற்கே வந்து கெஞ்சினார்.

“மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். முதல்வர் பதவியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும்.  நீதி வழங்கப்படுவதைப் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன். பயிற்சி மருத்துவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடந்த முடிந்தவரை முயற்சித்தேன். நீங்கள் வந்து தங்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நான் உங்களுக்காக 3 நாட்கள் காத்திருந்தேன்.

உங்கள் அனைவரையும் உள்ளே வந்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏன் என்னை இப்படி அவமானப்படுத்துகிறீர்கள்? தயவு செய்து என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள். இதற்கு முன் மூன்று முறை நான் காத்திருந்தேன் ஆனால் நீங்கள் வரவில்லை. என்னைவிட நீங்கள் வலிமையானவர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். போராட்டத்தில் ஈட்டுப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த நாட்டு மக்களிடமும், உலக மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மருத்துவர்களாகிய நீங்கள் தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். மன்னிக்கவும். எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. சாமானிய மக்களுக்கு நீதி வேண்டும்.’’ என்றார்.

”சரி, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம். எங்களுக்கும் நீதி தான் வேண்டும். நியாயத்திற்காகவே நாங்களும் இறைஞ்சுகிறோம். ஆனால், இந்த எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என கட்டளை இடக் கூடாது. பேச்சுவார்த்தை அனைத்தும் மக்களுக்கு தெரியும் வண்ணம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்” என்றனர்.

”வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், நேரடி ஒளிபரப்பை அனுமதிக்க முடியாது. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்’’ என்றார்.

”வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது தானே பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறீர்கள். பேசுகிறீர்கள். அப்படி நடப்பதை தானே வெளிப்படையாக செய்யுங்கள் என்கிறோம். இதில் என்ன பிரச்சினை? நீதிமன்றத்தை காட்டி தப்பிக்காதீர்கள்’’ என்றனர்.

கடைசியில் மம்தா பணிந்தார். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு மாணவர்களிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ”பரிசீலிக்கிறேன்” ” கவனத்தில் கொள்கிறேன்” என்பதை எல்லாம் மாணவர்கள் ஏற்கவில்லை.

”காவல்துறை அதிகாரி பதவி நீக்கம் மருத்துவ அதிகாரிகள் பதவி நீக்கம் ஆகியவற்றை ஏற்று ஆணையிடுங்கள் இல்லாவிட்டால், ஆளைவிடுங்கள்’’ என்றனர். மம்தாவின் மமதை  நொறுங்கியது. கோரிக்கைகளை ஏற்று உரிய ஆணைகளை கையோடு வெளியிட்டார். அதிகாரம் அடங்கிப் போனது, மாணவர் சக்தியின் முன்பு.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time