நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர்” பதவியை விட்டு விலகி, இடதுசாரி குடும்பத்தை சேர்ந்த பெண்ணான அதிஷியை முதல்வராக அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை தந்துள்ளது. ஆம் ஆத்மியை அழித்தே தீருவது என்ற பாஜகவிற்கு எதிரான கெஜ்ரிவாலின் நகர்வுகள் ஒரு பார்வை;
உச்ச நீதி மன்றத்தின் பிணை நிபந்தனைகள் கெஜ்ரிவாலின் ராஜினாமா முடிவை துரிதப்படுத்தியது என்றாலும் , இத்தகைய முடிவினால் கெஜ்ரிவால் சாதிக்க நினைப்பது என்ன?
“மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே நான் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பேன்” என்று கெஜ்ரிவால் சூளுரைக்கிறார், மறுபக்கம் திருமதி. அதிஷியோ,
மக்களால் நேசிக்கப்பட்ட கெஜ்ரிவால் பதவி விலக நேர்ந்ததால் இந்த தினம் ஒரு துக்க தினமாக ஆகி விட்டது. டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதிஷி தனது முதல் பிரஸ்மீட்டில், கெஜ்ரிவாலுக்கு எதிராக “பொய் வழக்குகள்” பதிவு செய்து ஆம் ஆத்மி அரசாங்கத்தை சிதைக்க முயன்றதற்காக பாஜகவை தாக்கியதோடு, “டெல்லிக்கு ஒரே ஒரு முதல்வர், அது அரவிந்த் கெஜ்ரிவால் தான்… கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராகக் கொண்டுவரும் இலக்கை நோக்கி அடுத்த சில மாதங்களுக்கு உழைப்பேன். அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்று டெல்லியில் உள்ள இரண்டு கோடி மக்கள் சார்பாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், டெல்லிக்கு எப்போதும் ஒரே முதல்வர்தான், அது அரவிந்த் கேஜ்ரிவால் மட்டும் தான். அவர் வழிகாட்டியபடி தான் ஆட்சி செய்வேன்’’ என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது!
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் விஜய் குமார் சிங் மற்றும் திரிப்தா வாஹி ஆகியோரின் மகளான அதிஷி டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியின் வரலாறு பிரிவு மாணவியாவார். இதற்கு பிறகு அதிஷி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது கவனிக்கதக்கது. அதிஷியின் பெற்றோர் இருவரும் இடதுசாரிகள் என்பதால் அதிஷி இயல்பிலேயே ஒரு எத்தீஸ்டாவார்.
ஆந்திராவின் ரிஷி வேலி பள்ளியில் ஒரு ஆசிரையையாக குழந்தைகளுக்கு பாடம் கற்பித்த அதிஷி இயற்கை விவசாய ஆர்வலர்.
பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்விப் பணி மற்றும் சமூக நலப்பணிகளை முன்னெடுத்துள்ளார். அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த போதே அவருடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளை உருவாக்கியவர். ஆயினும் 2023ல் தான் இவருக்கு கல்வி அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த காலங்களில் கட்சியையும், ஆட்சியையும் கவனமாக வழி நடத்திய வகையில் தான் இவர் தலைவர் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதனால், ஒரே ஆண்டில் முதலமைச்சராகும் அளவுக்கு சந்தப்பங்கள் அவருக்கு கைகூடின.
பதவி விலகல் குறித்து பா ஜ க கூறுகையில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு கெஜ்ரிவால் பதவியை துறக்கிறார்” எனக் கூறுகிறது.
திகார் ஜெயிலில் கெஜ்ரிவால் இருந்தால்- பிணை மறுக்கப்பட்டால் அவர் குற்றவாளி எனவேதான் பிணை கிடைக்கவில்லை என்பதும்,பிணையில் வெளிவந்து பதவியை விட்டு விலகினால் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பதும்எந்த ஊர் நீதி என்பதை பா ஜ க வினர்தான் “விளக்க” வேண்டும். ஏனெனில் அவர்களது கட்சி“வித்தியாசமான கட்சி” (party with the difference) இல்லையா?
இவர்களிடம் தர்க்க நியாயங்களையோ, சட்ட வழிமுறையையோ எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.
தெரிந்தே, வேண்டுமென்றே ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளை அரசியல் நோக்கங்களுக்காக எதிர்கட்சிகள் மேல் ஏவி விடும் மோடி அரசு, அதற்காக சட்டங்களிலும் “திருத்தங்கள்” கொண்டுவந்து நீதி மன்றங்களையும் , பொது மக்களையும் இந்த பாரபட்ச வேட்டைக்கு பங்காளிகளாக மாற்றியுள்ளது.
இத்தகைய சட்டங்களின் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள் மீது சர்ச்சையான குற்றங்களை சுமத்தி , கைது செய்வது இந்திய அரசியல் வரலாற்றில் 2014 வரை நடந்தது கிடையாது.
ஊழல்வாதிகளை வரவேற்று கட்சியில் சேர்த்துக்கொண்டு, “வாஷிங் மெஷின்” என்ற பட்டத்தை பெற்ற பா ஜ க, தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடுகளை சட்ட விரோதமானவை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியான பின்பும் அந்த கறை படிந்த கூலிப் பணத்தை அனுபவிக்கும் பா ஜ க , அரவிந்த கெஜ்ரிவால் மீதுபோலியான “ஊழல், பண மோசடி” என குற்றங்களை வாரி இறைக்கும் பொழுது, இந்திய அரசியல் சமூகம் என்ன தீர்ப்பை வழங்க உள்ளது என பொறுத்திருந்து பார்ப்போம்..
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையில் நின்று சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பிலிருந்து ஆளுபவர்கள் பிறளுவது ஆட்சியாளர்களின் அறப்பிறழ்வை மட்டுமின்றி அந்த சமூகத்தின் தார்மீக வறுமையையும் (moral bankruptcy) சுட்டிக் காட்டுகிறது!
இந்தச்சூழலில் ஒரு அரசியல்வாதி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலிருந்து மீண்டுவர அவர் நாட வேண்டியது நீதி மன்றங்களா? அல்லது மக்கள் மன்றங்களா?
மக்களிடம் சென்று , “நான் குற்றமற்றவன் என நீங்கள் நினைத்தால் என்னை தேர்ந்தெடுங்கள் நான் முதல்வராகிறேன் “ என அரவிந்த கெஜ்ரிவால் கூறுவது முரண் அல்லவா?
இந்தச் சீர்கேட்டிற்கான காரணம் நமது நீதி பரிபாலன முறையின் ( Criminal Justice System and its Delivery) தோல்வியா ? அல்லது இந்திய மக்களின் அரசியல் விழுமியங்களின் தோல்வியா?
ஊழலுக்கெதிரான இந்தியா என்று இயக்கம் கண்ட கெஜ்ரிவால், தில்லியில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள படித்த மக்களிடையே “ கதாநாயகனாக” காட்சி அளிக்கிறார்.
தில்லி மக்களுக்கு தரமான கல்வி, உயர்தரமான இலவச மருத்துவம், மலிவு விலையில் மின்சாரம் ஆகியவற்றை சாத்தியப்படுத்தியதில் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சியை கட்டுக் கோப்பாக நடத்தி செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களையும் போராளிகளாக உருவாக்கி உள்ளார்.
ஆம் ஆத்மியை ஒழித்துக் கட்ட பாஜக தொடர்ந்து சதி வலை பின்னி வருகிறது. டெல்லி அரசின் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட பறித்தது. அந்த கட்சியில் உள்ள சுவாதி மாலிவால் போன்றவர்களைக் கொண்டு துரோக வலை பின்னியது…எனினும் அடிபணியாமல் அரசியல் போராட்டத்தை செய்து கொண்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஊழல் ஒன்றை மட்டுமே உயர்த்திப் பிடித்து அரசியல் களத்தில் வெற்றியை அனுபவித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த பத்தாண்டுகள் பல அனுபவங்களை தந்திருக்கும்.
Also read
ஊழல் என்பது இந்த அமைப்பின் வெளிப்பாடே ஒழிய தனிமனிதர்களின் குணாதிசயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பதும், ஒவ்வொரு வழக்கிற்கும் குற்றச்சாட்டிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதும்,
குற்ற நடைமுறை மற்றும் நீதி பரி பாலனமும், குற்றங் கூறுவோரும் “சார்பற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதும், இந்திய அரசியல் பயணம் என்பது கட்சி அரசியலை தாண்டி இங்குள்ள மக்களின் உரிமை மற்றும் தேவைகள் சார்ந்த கொள்கை நிலை என்பதும், இவற்றில் நாம் யார் பக்கம் நிற்கிறோம் என்பதும்,
கெஜ்ரிவால் இந்த பத்தாண்டுக்கும் மேற்பட்ட தேர்தல் அரசியல் பயணத்தில் புரிந்து கொண்டாரா? என்பது இனி அவர் எடுக்கும் நிலைகளின் மூலம் தெரிய வரும்.
மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள அவர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதற்கும் தன்னை எவ்வாறு அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதற்கும் அவரது வருங்கால நடவடிக்கைகள் பதில் கூறும் என நம்புவோம்!
மீண்டும் சாதனை படைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
டெல்லியிலும் பஞ்சாப்பில் சீறிப்பாயும் ஆம்ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் லெட்டர்பேடு கட்சியாக இருப்பது வேதனை. இரண்டு மாநிலங்களின் ஆளும் ஆம்ஆத்மி தமிழ்நாட்டில் வளர்ச்சி குன்றிய குழந்தை யாகவே உள்ளது. சீமானை பின்பற்றியாவது தன்னை அடையாளப்படுத்தி கொள்ளட்டும். கெஜ்ரிவால் ஏதோ ஒருகணக்கில் தான் அரசியல் கேரம் ஆடுகிறார்