தொழிலாளர்களை கசக்கி பிழியும் அந்நிய நிறுவனங்கள்!

-சாவித்திரி கண்ணன்

வெளிநாடுகளுக்கு சென்று அன்னிய நிறுவனங்களை வரவேற்கிறார்  தமிழக முதல்வர் ஸ்டாலின். இங்கு பாக்ஸ்கான்,மைரான், சான்மீனாவைத் தொடர்ந்து தென் கொரியாவின் சாம்சங் 12 மணி நேர வேலை, அடிமாட்டுச் சம்பளம்..போன்ற அராஜகங்கள் செய்வதற்கு துணை போகிறது அரசு நிர்வாகம். உக்கிரமடையும் போராட்டம்;

வெளி நாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் தொழில் தொடங்குவதற்கு பெரிய நிலப்பரப்பு, சலுகை விலையில் மின்சாரம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெறுகின்றனர். இவை போதாது என மலிவான விலைக்கு உழைப்பு, எந்த தொழிலாளர் நலச் சட்டமும் எங்கள் நிறுவனத்தில் செல்லுபடி ஆகாது..ஆகிய நிபந்தனைகளையும் விதித்து தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றனர்…என்பதற்கு சாம்சங் விவகாரம் மற்றுமொரு சாட்சியாகிறது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரத்தில்  2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிற சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்கிற தென்கொரிய நிறுவனம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்கிறது.

செப்டம்பர்- 9 முதல், இந்த நிறுவன தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

கொழுத்த லாபத்துடன் இயங்கும் இந்த நிறுவனம் மிகக் குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை கசிக்கிப் பிழிகிறது. நடைமுறை சாத்தியமில்லாத ஒரு டார்கெட்டை நிர்ணயித்து குறிப்பிட்ட காலவரம்பிற்குள் அந்த வேலையை முடிப்பதற்காக எட்டு மணி நேர வேலைக்கு மாற்றாக 9 முதல் 12 மணி நேர வேலையை நிர்பந்திக்கிறது.  இந்த சட்டத்துக்கு புறம்பான பணி நிலைமைகள் தொழிலாளர்களை மனம் புழுங்க வைத்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் அவர்களை நிம்மதி இழக்க வைத்துள்ளது.

ஒரே வேலை, ஒரே பணியிடம் தொழிலாளர்கள் இருவருக்குள் ஒருவருக்கு சம்பளம் 20,000 என்றால், இன்னொருவருக்கு 40,000 எனத் தரப்படுகிறது எனில் அந்த இடத்தில் எப்படி சுமூகச் சூழல் நிலவும். அதே போல மேலதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம், தொழிலாளர்களுக்கோ வாழவழியில்லாத சம்பளம் என்ற பெரிய இடைவெளியும் போராட்டங்களுக்கு அடித்தளமிடுகிறது.

இந்த சூழல்களே அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தங்களுக்கான உரிமைகளைப் பேச ஒரு தொழிற்சங்கம் வேண்டும் என்ற உணர்வை உருவாக்குகிறது. ஆனால், தொழிற்சங்கம் எனச் சொன்னாலே நிர்வாகம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் என்பதால், பல ஆண்டுகள் தயங்கியுள்ளனர். ஆனால், சூழல்கள் அவர்களை தொழிற்சங்க உருவாக்கத்திற்கு அழைத்துச் சென்று, அதன் விளைவாக சிஐடியு சங்கம் தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த சங்க உருவாக்கத்தை மிகக் கடுமையாக பார்க்கிறது சாம்சங் நிர்வாகம். இதில் யாரும் சேரக் கூடாது என நிர்பந்தம் தருகிறது. ஆனால், 90 சதவிகித தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ சங்கத்தில் இணைகிறார்கள். சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது. தமிழ் நாட்டரசு முழுக்க, முழுக்க அன்னிய நாட்டு நிர்வாகத்திற்கு சாதகமாக நிற்கிறது என்பது இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, தற்போதைய போராட்டத்தை ஒடுக்க காவல் துறையை ஏவி விட்டுள்ளதில் இருந்து அறிய முடிகிறது.

ஆலையின் மொத்த பணியாளர்களில் கணிசமானவர்களை இந்த நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களாக கொத்தடிமை நிலையில் வைத்துள்ளது. இதனால், சுமார் 5,000  ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், மேலும் துணை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று மூன்று பிரிவுகளாக நிர்வாகம் வகைப்படுத்தி வைத்துள்ளது.

இப்படி போராடும் உரிமை கூட இந்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தான் இருக்கிறது. இவர்களை விட இன்னும் மோசமான நிலையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படு மோசமாகும். தற்போது  ஆலையின் 1,723 நிரந்தரத் தொழிலாளர்களில் சுமார் 1,350 பேர் கலந்துக் கொண்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக தொழிலாளர் நலத்துறை ஏற்பாட்டில் நடந்த ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் நிர்வாகம் ஒரு சிறிதும் இறங்கி வராமல் கறார் காட்டுகிறது. தொழிலாளர் நலத் துறையும் இதை வேடிக்கை பார்க்கிறது.

இதற்கிடையே லோடிங், அன்லோடிங் என்ற பெயரில் தொழிற்சாலை அதிகாரியிடம் லைசென்ஸ் வாங்கிவிட்டு, நேரடி உற்பத்தியில் சுமார் 400 ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. அவர்களுக்குப் பயிற்சி கொடுக்குமாறு நிரந்தரத் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஒரு தொழிற்சங்கப் பதிவுக்கு அதிகபட்சம் 45 நாட்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் தொழிற்சங்கத்தை பதிவு செய்து தந்துவிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், தற்போது 90 நாட்களைக் கடந்தும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்த மண்ணின் மைந்தர்களின் மேல் இல்லாத அக்கறையும், விசுவாசமும் தென் கொரிய நிறுவனத்தின் மீது தமிழக அரசுக்கு பொத்துக் கொண்டு வருகிறது.

தொழிலாளர்கள் ஒன்றும் அதிகமான சம்பளத்தை கேட்கவில்லை. வெறும் 6.5 சதவிகித ஊதிய உயர்வையே வேண்டுகின்றனர். ஊதிய உயர்வு வேண்டும் எனக் கேட்கும் அளவுக்கு உனக்கு தைரியம் வருவதே ஆபத்தானது.. என்பதே தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் பார்வையாக உள்ளது. இதனால், நிர்வாகத்திற்கு ஆமாம் சாமி போடும் மற்றொரு போட்டி அமைப்பை ஏற்படுத்தி அதில் சேர்பவர்களுக்கு பரிசும், சலுகைகளும் அறிவிக்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். ஆலைக்கு வெளியே 2 கி.மீ தொ;ஐவில் ஒரு தனியார் இடத்தில் தொழிலாளர்கள் போட்டுள்ள பந்தலை பிரித்துப் போட போலீசுக்கு நிர்பந்தம் தருகிறது நிர்வாகம். மேலும் போராடும் தொழிலாளர்களுக்கு உணவு, குடி நீர் வழங்கப்படுவதில் கூட கெடுபிடி காட்டி வருகிறது திமுக அரசின் போலீஸ்.

இதற்கிடையே சி.ஐ.டி.யூவின் தலைவர் முத்துக்குமாரையும், தொழிலாளர்கள் 300 பேரையும் கைது செய்தது போலீஸ். இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தருகே வழக்கமாக போராட்டங்கள் நடக்கும் இடத்தில் சிஐடியூ தொழிலாளர் தலைவர்கள் அ.சவுந்திரராஜன், ஜி.சுகுமாறன், எஸ்.கண்ணன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.திருச்செல்வன், ஏஐடியூசி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சிவக்குமார்..உள்ளிட்ட  அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தினார்கள். அதற்கும் அனுமதி மறுத்து அடக்குமுறைகளைக் கையாண்டு, அதில் கலந்து கொள்ள வருபவர்களையும், தலைவர்களையும் முன்கூட்டியே கைது செய்வது வரை போகிறது தமிழக காவல்துறை.

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத பாசிசக் கொள்கைகளையே மாநிலத் திமுக அரசும் அச்சுப் பிசகாமல் பின்பற்றுகிறது. அத்துடன் தொழிலாளர் அடக்குமுறைக்கு சர்வதேச புகழ் பெற்ற தென்கொரிய நிறுவனமான சாம்சங்கிற்கு தன் எஜமான விசுவாசத்தைக் காட்டி, சொந்த நாட்டு உழைப்பாளிகளை பகடைகாயாக்கும் திமுக அரசை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் – நமது வரிப் பணத்தில் செயல்படும் அரசாங்கம் – அன்னிய நிறுவனங்களின் விஷயத்தில் அவர்களின் அடியாளாக மாறி, சொந்த மக்களை சுரண்டத் துணை போவதை எப்படி புரிந்து கொள்வது?

இதற்குத் தானா வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிரிட்டிஷாரின் கோரல் மில் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடி தன் சொத்து, சுகங்களை இழந்து சிறை சென்று,  செக்கிழுத்து சுதந்திரத்திற்காகவும், சுதேசியத் தொழில்களுக்காகவும் போராடினார்…?  நாம் வாழ்வது விடுதலை பெற்ற இந்தியாவா? அல்லது அடிமை இந்தியாவா?

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time