நேர்மையான நீதிபதிகளை பழிவாங்கும் பாஜக அரசு!

- நீதிபதி ஹரிபரந்தாமன்

பாஜக ஆட்சியில் நீதித்துறையின் சுதந்திரம் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அரசுக்கு ஆதரவாக இல்லாத நீதிபதிகள் அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். எமர்ஜென்ஸியில் நீதித்துறை பாதிக்கப்பட்டதை விட, தற்போது தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சியாகும்;- நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்;

அமலாக்கத்துறை ,சிபிஐ ,தேர்தல் ஆணையம், கவர்னர்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மத்திய அரசு. இந்த அமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு சட்டமும் அனுமதிப்பதுதான்  வருத்தமான விஷயம்.

உயர் நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அரசமைப்புச் சட்டத்தை 2014 ஆம் ஆண்டு திருத்தியது மோடி அரசு. அதன்படி தேசிய நீதித்துறை நியமன ஆணையம் சம்பந்தமான சட்டத்தையும் நிறைவேற்றியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு மேற்சொன்னவைகளை  ரத்து செய்து 2015 லேயே தீர்ப்பு வழங்கியது.

இருப்பினும், உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம்  போன்றவற்றிலும், உயர் நீதிமன்ற  நீதிபதிகளின் மாற்றல்களிலும்  மோடி அரசின் தலையீடு தொடர்ந்து மிகவும்  அதிகமாக  இருப்பதே கண் கூடு.

இந்த கட்டுரை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனங்களில் எவ்வாறெல்லாம் மோடி அரசு தலையிடுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாற்றங்களில் மோடி அரசு தலையிடும் விவரங்களை எழுதுவது என்றால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளில் எழுத வேண்டியது இருக்கும்.

ஜூலை 11 ,2024 அன்று உச்ச நீதிமன்ற கொலேஜியும்,  பல்வேறு உயர்நீதிமன்றங்களில்  பணியில் இருக்கும்  7 நீதிபதிகளை பல்வேறு உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதிகளாக  நியமிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த ஏழு பேரில் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர் ஸ்ரீராம். இது வரை மத்திய அரசு எந்த நியமனத்தையும் செய்யவில்லை.

நீதிபதிகள் கே.ஆர்.ஸ்ரீராம், ராஜிவ் ஷேக்தர்

அந்த  எழுவரில் ஒருவர் நீதிபதி ராஜீவ் ஷேக்தர். அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். ஏற்கனவே அவர் மோடி அரசின் நிர்பந்தத்தில் டெல்லியில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2016-ல் மாற்றல் செய்யப்பட்டார். கிரீன் பீஸ் இயக்கத்தைச்( சூழலியல் இயக்கம்) சேர்ந்த பிரியா பிள்ளை என்பவருக்கு மத்திய அரசு அளித்த “லுக்அவுட்” நோட்டீசை ரத்து செய்தார் அவர். அந்த நோட்டீஸின்படி பிரியா பிள்ளை வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இந்த தீர்ப்புக்கு பின்னர் தான் அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார். ஓராண்டுக்கு மேல் சென்னையில் பணிபுரிந்த பின்னர் மீண்டும் டெல்லிக்கு மாற்றலானார். அவரை இமாச்சலப் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்ற  கொலேஜியம். தற்போது வரை நியமிக்கப்படாத அவர்  அக்டோபர் 18 , 2024 அன்று ஓய்வு பெறுவார்.

செப்டம்பர் 17 ,2024 அன்று உச்ச நீதிமன்ற கொலேஜியம் ,ஜூலை 11,2024  அன்று செய்த பரிந்துரைகளுக்கு சில மாற்றங்களை செய்துள்ளதாக இன்றைய பத்திரிகைகள் அனைத்தும் கூறுகின்றன.

இதற்கும் பின்னர் எப்போது மத்திய அரசு இந்த மாற்றப்பட்ட பரிந்துரையின் படி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை  நியமிக்கும் என்பது தெரியாது. உடனடியாக நியமித்தால் கூட , மேற் சொன்ன நீதிபதி ராஜிவ் ஷேக்தர் ஒரு மாதம் கூட தலைமை நீதிபதியாக பணிபுரிய மாட்டார். அதற்குள் அவர் ஓய்வு பெற்றுவிடுவார்.

நீதிபதி டாசி ரப்சன்

இப்போது செய்த மாற்றத்தின் படி, நீதிபதி  டாசி ரப்சன் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதற்கு முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் என்பவரை நியமிக்க கொலேஜியம் பரிந்துரைத்தது. நீதிபதி தாசி ரப்சன் அதே ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் .எந்த மாநிலத்தில்  ஒருவர்உயர்நீதிமன்ற நீதிபதியாக  நியமிக்கப்படுகிறாரோ, அதே மாநிலத்தில் அவரை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்பது பல ஆண்டுகளாக அமலில் உள்ள  கொள்கை முடிவு. எனவே தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்தக் கொள்கை முடிவுக்கு மாறாக இப்போது நியமனம் நடைபெறுகிறது!


இந்த முறையும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க  கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட  நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா நியமிக்கப்படவில்லை. அவரை இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு இப்பொழுது மாறிய  கொலேஜியத்தின் பரிந்துரை கூறுகிறது. அதாவது நீதிபதி ராஜீவ் ஷேக்தர் அக்டோபர் -18 ல்  ஓய்வு பெற்றதற்கு பின் இவர் நியமிக்கப்படுவார்.

கடந்த கால சம்பவங்கள் சில அதிர்ச்சிகரமானவை!

அகில் குரேஷி என்ற இஸ்லாமியர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக மார்ச் 7 ,2004இல் நியமிக்கப்பட்டார். அப்போது குஜராத்தில் மோடி தான் முதலமைச்சர்; அமித்ஷா உள்துறை அமைச்சர். போலி மோதல்களில்  நடந்த படுகொலைகள் சம்பந்தமான வழக்குகளில் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தார்.  அமித்ஷா சிறையில் அடைபடுவதற்கும் சிபிஐ விசாரணையை எதிர்கொள்வதற்குமான உத்தரவுகளை அளித்தார் நீதிபதி குரேஷி.

2018 நவம்பரில் சீனியாரிட்டிபடி குஜராத் நீதிமன்ற நீதிபதிகளில் மிகவும் மூத்தவரான அகில் குரேஷி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதி தலைமை நீதிபதிக்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர். குஜராத் உயர் நீதிமன்றத்தின் அமர்வுகளை தீர்மானிப்பதற்கும், எந்த அமர்வில் எந்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கும் அதிகாரம் உள்ளவர் பொறுப்புத் தலைமை நீதிபதி. இதை பொறுத்துக் கொள்ளுமா மோடி அரசு?

உடனடியாக நவம்பர் 14 ,2018 இல் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டார் அகில் குரேஷி.

நீதிபதி அகில் குரேஷி

குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதால், அவர் மும்பை நீதிமன்றத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது , உச்ச நீதிமன்றத்தின் கொலேஜியம் மே 10, 2019 அன்று செய்த பரிந்துரையில் அவரை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதே பரிந்துரையில் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவும்,  அதேபோல இரு நீதிபதிகள் தெலுங்கானா மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படவும் பரிந்துரை கூறியது.

அகில் குரேஷி தவிர்த்து பரிந்துரைக்கப்பட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளையும்  சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்தது. ஆனால் அகில் குரேஷியை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மறுத்துவிட்டது.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் சங்கம் அகில் குரேஷிக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவரை உடனடியாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டி கேட்டுக் கொண்டது.

அந்த வழக்கு நிலுவையில் இருந்த போது,  அகில் குரேஷியுடன் பரிந்துரைக்கப்பட்டு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளான மூவரும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு விட்டனர். ஆனால், அகில் குரேஷி மட்டும் உயர் நீதிமன்ற நீதிபதியாகவே இருந்தார். அவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலேஜியத்தின் பரிந்துரைப்படி நியமிக்கவில்லை.


மத்திய அரசு சொன்னதற்கு இணங்க, அகில் குரேஷி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு பதிலாக திரிபுரா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக   நியமிக்க கொலேஜியம் பரிந்துரைத்தது. திரிபுரா மாநிலம் மிக சிறிய மாநிலம் .அங்கு உள்ள உயர் நீதிமன்றத்தில் மூன்று அல்லது நான்கு நீதிபதிகளே இருப்பர்.

இதே போல டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அனிருத்தா போஸ் என்பவரை நியமிப்பதற்கு  கொலேஜியம் பரிந்துரைத்தும், அவர் மத்திய அரசின் அழுத்தத்தினால்  ஜார்க்கண்ட் மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த முரளிதரை , சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்ற  கொலேஜியம். அந்த உத்தரவு  அமல் படுத்தப்படாமலே அவர் ஒடிசா மாநிலத்திலேயே ஓய்வு பெற்றார்.

தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற கொலேஜியத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இது போன்ற ஒரு சூழலில் தலைமை நீதிபதியின் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் செல்வது சரியல்ல என்பதால் தான் சமீபத்திய  அறத்தில் வெளியான கட்டுரையில் பிரதமர் தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்றதற்கு நான் கவலையை வெளிப்படுத்தி இருந்தேன்.

நீதிபதிகளின் சுதந்திரத்தை நீதிபதிகளாலேயே காப்பாற்ற முடியாத ஒரு துரதிர்ஷட நிலைமை தோன்றியுள்ள சூழலில், வலிமையான  குடிமை சமூக அமைப்புகளும், வழக்குரைஞர் சங்கங்களும், ஊடகங்களும்  விழிப்புடன்  இருந்தால் மட்டுமே நீதிமன்றங்களின் சுதந்திரத்தை காப்பாற்ற முடியும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

ஓய்வு பெற்ற நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time