கதையே இல்லாமல் ரத்தம் தெறிக்கும் வன்முறைகளோடு களம் கண்டு வருகிற தமிழ் சினிமாக்களுக்கு இடையே அழுத்தமான கதை, அச்சு அசலான வாழ்க்கையைச் சொல்லும் கதாபாத்திரங்கள், எளிமையான கிராமத்துப் பின்புலம் ஆகியவற்றுடன் மானுடத்தின் உன்னதப் பக்கங்களை காட்டுகிறது இந்தப்படம்;
விசாரணையே இல்லாமல் சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கும் கணவனிடம் வாழ முடியாமல் ஓடி வாழ்க்கையை தொலைத்த பெண், கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை போராட்டங்கள், அண்ணன் – தங்கை பாசம், ஒரு தலைக் காதல், மன்னிக்கும் குணம்..இப்படியாக பின்னப்பட்டுள்ளது திரைக்கதை.
மிலிட்டிரியில் வேலை பார்க்கும் அண்ணனின் மனைவியை தவறாகச் சித்தரித்து குடும்பத்தை சிதைக்கிறாள் தங்கை. இசை ரசனையில் ஒருவனோடு பழக நேர்கையிலும் – எட்ட நின்று எச்சரிக்கையோடு பழகினாலும் – ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்போதும் சந்தேக வளையத்தில் வைத்து தீர்த்துக் கட்டிவிடும் என்பதற்கு இந்த கதாபாத்திரம் சாட்சியாகிறது. அவள் மீதான கறையை அவள் பிள்ளைகளும் காலம் பூராவும் சுமக்கிறார்கள். கடைசி வரை தன் பிள்ளைகளிடம் கூட அவள் தன்னை நிருபித்துக் கொள்ள முடியாத நிலை. இந்தப் படத்தின் விமர்சனங்கள் பலவற்றில் கூட இந்த பெண் காதாபாத்திரம் பற்றிய தவறான புரிதலை பார்க்க முடிகிறது…! இந்த கதாபாத்திரம் குறித்த சரியான புரிதலை இயக்குனர் உருவாக்காமல் கடைசியில் அவளை சுய நினைவில்லாதவளாகக் காட்டி, ஆசிரமத்தில் தள்ளி தன் பிள்ளைகளோடு வாழ முடியாதவளாக காட்டி இருக்கிறார்.
செல்லத் துரையாக வரும் ஏகன் இறுக்கமான மனநிலை கொண்ட – உலக இன்பங்களை ஏறெடுத்தும் பார்க்காத – இளைஞனாக வாழ்கிறான். வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்கள், துன்பங்கள் அவனை அவ்வாறு செதுக்கிவிட்டன. அவனை உருகி, உருகி காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கும் பிரிகிடா சிறப்பான குணசித்திர நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
அண்ணன் பாசத்திற்கு கட்டுப்பட்ட தங்கையாக நடித்திருக்கும் சத்யதேவி நம் வீட்டுப் பெண்ணை பார்க்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறார். கதாநாயகனின் பெரியப்பாவாக வரும் யோகிபாபு அலட்டலில்லாமல் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். இரண்டடி உயர நகைச்சுவை நடிகராக வலம் வரும் அந்த கதாபாத்திரத்தின் பேச்சுக்கள் அசத்தல் ரகம். படத்திற்கு சுவை கூட்டுவது இவர் பேசும் அலட்டலான, அசால்ட்டான வசனங்களே.
கல்லூரி நூலகராகவும், பக்குவமுள்ள குடும்பத் தலைவராகவும் நடித்துள்ள பவா செல்லத்துரையின் இயல்பான நடிப்பும், அவரது மகனாக வரும் கூச்ச சுபாவமுள்ள இளைஞனான லியோ சிவகுமாரின் கதாபாத்திர கட்டமைப்பும் நன்றாக உள்ளன.
அசோக்ராஜுன் ஒளிப்பதிவு கிராமத்தில் நாமே வாழும் உணர்வை உருவாக்குகிறது. தென்மேற்கு பருவக் காற்று , நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் வரிசையில் மக்களின் வாழ்க்கைப்பாட்டை பேசும் படமாக கோழிப்பண்ணை செல்லத்துரையை அழகாக செதுக்கி உள்ளார் சீனு ராமசாமி.
திருநங்கைகளுக்கென ஒரு பாடல், கம்யூனிஸ்ட் தோழர்களின் நடமாட்டம், மாற்றுத்திறனாளியின் சகஜமான வாழ்க்கை எனக் கூடுதல் கவனத்தை பெறுகிறது திரைப்படம்.
எளிய மனிதர்களின் வாழ்க்கை பாசாங்குத் தனம் இல்லாதது, உறுதியான அன்பின் அடித்தளத்தில் இயங்குவது, துரோகத்தை மறந்து மன்னிக்கும் இயல்புள்ளது போன்றவற்றை உணர்த்துவதில் படம் வெற்றி பெற்றுள்ளது எனலாம்.
சாவித்திரி கண்ணன்
இன்று பார்த்துவிட்டேன்! படம் அருமை.. கிராம சூழல் சூப்பர்..
தேனி மாவட்டம் கேமராவில் சிறப்பாக பதிவு ஆகி உள்ளது. அனைவரும் தங்கள் பாதிரங்களை உணர்ந்து நடித்து உள்ளனர்..