உதயநிதி துணை முதல்வராக உருவாக்கப்படும் சூழல்!

-சாவித்திரி கண்ணன்

உதயநிதி  துணை முதல்வர் ஆக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் தலைமை செயலகத்தில் செய்யப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படவுள்ள இந்த ஏற்பாட்டின் பின்னால் இரண்டாண்டுகளாக சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் கட்டமைக்கப்பட்ட சாதகமான சூழல்களை அலசுகிறது இந்தக் கட்டுரை;

47 வயதாகும் உதயநிதியை பொறுத்த அளவில் அவர் 40 வயதில் தான் அரசியலிலேயே அடியெடுத்து வைத்தார். அதற்கு முன்பு சினிமா தயாரிப்பாளராகவும், சினிமா நடிகரகவுமாகத் தான் அறியப்பட்டார். அரசியல் ஆளுமைமிக்க அவரது தாத்தா கருணாநிதி தலைவராக இருந்த காலகட்டத்தில் அவர் அரசியலில் இருந்து அறவே விலகி நின்றார். அப்போது சிறிய அளவில் கூட அரசியல் பயிற்சி எடுத்தவரல்ல. சமூக அக்கறையை வெளிப்படுத்தியவருமல்ல.

சிறந்த கொள்கைகள் என்பவற்றை ஓட்டு வேட்டைக்கான தூண்டிலாக மட்டுமே வைத்துக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை பொதுப் பணத்தை சூறையாடுவதற்கான களமாக்கி கொண்ட ஒரு கட்சித் தலைமையும், அதன் நிர்வாகிகள் கூட்டமும் மக்களின் அறியாமையில் அழுத்தமான நம்பிக்கை வைத்தே அடுத்த கட்ட நகர்வுகளை கையாளும் என்பதற்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவதே சாட்சியாகும்.

இது தற்கால அரசியலில் ஏற்பட்டுள்ள ஆளுமை வெற்றிடம், அறத்தின் வீழ்ச்சி, அடிமை மனோபாவம், சுயநலச் சிந்தனை ஆகியவற்றை வெளிச்சமிட்டு காட்டும் நகர்வாக உள்ளது.

நமது சமூகத் தளத்தில் பொது நலச் சிந்தனைகள் அருகி வருவதையும், கட்சிகளுக்குள் ஜனநாயகம் மரணித்து விட்டதையும், தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் மறைந்து, அவரவர் சக்திக்கும், திறமைக்கும் ஏற்ப தப்புத் தண்டாக்களை செய்து அதிகாரத்தை அடைவதே பொது வாழ்வின் இலக்கணம் என்பதாகவும் மாறியுள்ள ஒரு சமூகச் சூழலே, உதயநிதி போன்றவர்கள் துணை முதல்வராவதற்கு காரணமாகிறது.

திமுகவில் தற்போது இருக்கும் மூத்த தலைவர்கள் எல்லோரும் அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பாக அரசியலைக் கருதுவதால், உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழும் இவற்றை தடையின்றி அனுவித்துச் சென்றால் போதும் என்ற மன நிலையில் தான் உள்ளனர்.

சமூக மாற்றத்திற்காக உருவான ஒரு கட்சி தான் திமுக. அறிஞர் அண்ணா தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் எளியோரின் ஏற்றத்திற்கான சிந்தனைகள் அந்தக் கட்சிக்குள் வலுப் பெற்று இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவர் மறைவிற்கு பின்பு அந்தக் கட்சிக்குள் சந்தர்ப்பவாதம் தலை தூக்கியது.

அறிஞர் அண்ணாவும், திமுகவின் ஐம்பெரும் தலைவர்களும்.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கை பயன்படுத்தி கருணாநிதி தன்னை முதல்வராக்கிக் கொண்டார். அதன் பிறகு தனக்கு இணையாக யாரும் இல்லாத நிலையை கட்சிக்குள் உருவாக்கினார். தன்னிலும் பெரிய தலைவர்களும், தனக்கு இணையானவர்களுமான நெடுஞ்செழியன், மதியழகன், எம்.ஜி.ஆர், சத்தியவாணி முத்து, இராம அரங்கண்ணல்.. உள்ளிட்ட ஏராளமானோரை ஓரம்கட்டி, கட்சியை விட்டு வெளியேறும் சூழலை உருவாக்கினார். மற்ற திறமையாளர்களை காலி பண்ணுவதன் மூலம் தன்னை மட்டுமே தனிப் பெரும் தலைவராக கட்டமைத்துக் கொண்டார்.

அதன் பிறகு தன் மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆரைப் போலவே சினிமாவில் நடிக்க வைத்து கதாநாயகனாக்கி அரசியலுக்கு அழைத்து வந்தார். குடிப் பழக்கத்திற்கும், தவறான சில பழக்க வழக்கங்களும் அடிமையாகிப் போன மு.க.முத்து அரசியலில் ஜொலிக்கவில்லை. இதையடுத்து மு.க.அழகிரியையும், மு.க.ஸ்டாலினையும் அரசியலுக்கு கொண்டு வந்தார்.

மத்திய அமைச்சர் பதவி வரை உயர்த்தப்பட்ட அழகிரி, அதிரடி அராஜக அரசியல் காரணமாக மெல்ல, மெல்ல செல்வாக்கு இழந்தார். பின்னாளில்  தன்னுடைய வளர்ச்சிக்கு தடை என மு.க.ஸ்டாலினே அவரை ஓரம் கட்டினார்.

ஸ்டாலினை பொறுத்த வரை அவர் எமர்ஜென்ஸியில் சிறைக் கொடுமைக்கு ஆளானவர் என்ற சிறப்பை தவிர்த்து அறிவிலோ, சமூக அக்கறையிலோ அவர் மேம்பட்டவரல்ல. தந்தையைப் போல தமிழ் மொழி ஆளுமையும், நிர்வாக சாதுர்யமும் ஸ்டாலினுக்கு இல்லை. இந்த காரணத்தினாலேயே தனக்கு வாரிசாக ஸ்டாலினை அறிவிப்பதில் நீண்ட, நெடிய தயக்கத்தை கொண்டிருந்தார் கருணாநிதி.

ஆனால், அவருக்கு உடல் நலன் குன்றத் தொடங்கிய காலத்தில் ஸ்டாலினை மேயர், அமைச்சர், துணை முதல்வர் என இருபதாண்டுகள் படிப்படியாக பயிற்சி கொடுத்தார். என்ற போதிலுமே கூட இன்று வரை நிர்வாகத் திறமையில் நிர்மூலமானவராகவே ஸ்டாலின் உள்ளார். தற்போதுமே கூட அதிகாரிகள் வழிகாட்டலில் தான் அவரது அரசாங்கம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டரசின் காவல் துறை தற்போது மத்திய அரசால் ஆட்டுவிக்கப்படுகிறது. பாதிக்கப்படுவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அதிகாரமற்ற பொம்மையாக முதல்வர் இருக்கிறார் என்பது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்விலும், வேங்கை வயல் நிகழ்விலும் இன்னும் ஏராளமான நிகழ்விலும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. கல்வித்துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீர்கெட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் மத்திய அரசின் கைப்பாவையாக கனகச்சிதமாக செயல்பட்டு வருகிறபடியால் – ஸ்டாலின் ஆட்சி ஊழல்களில் உச்சத்தில் திளைத்த போதிலும் – ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலைப் போல ஸ்டாலினை நடத்துவதில்லை மத்திய பாஜக ஆட்சியாளர்கள்.

கருணாநிதி செயல் திறனோடு இருந்த காலகட்டம் வரை ஸ்டாலினை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைக்கத் தயார் இல்லாதவராகவே விளங்கினார். கருணாநிதி செயல்பாட்டுத் திறனை முற்றிலும் இழந்த காலத்தில் தான் தலைமையின் வெற்றிடத்திற்கு நகர்ந்தார். ஆனால், அதற்குத் தோதாக ஸ்டாலினுக்கு கட்சிக்குள் போட்டியாளர் இல்லாத நிலையை கருணாநிதி உருவாக்கி வைத்திருந்தார். அதே சூழலைத் தான் தற்போது தன் மகனுக்கு ஆரம்ப காலத்திலேயே கட்டமைத்து கொடுத்து விட்டார் ஸ்டாலின்.

இன்றைய சூழலில் உதயநிதியின் மகன் இன்ப நிதியை இளைஞர் அணித் தலைவராக்கி அடுத்த தலைவராக அறிமுகப்படுத்தினால், அதையும் வரவேற்று அடிபணியக் காத்திருக்கும் கூட்டமாக அந்த கட்சி மாற்றமடைந்துள்ளது என்பதே யதார்த்தம். இதை புரிந்து கொண்ட ஸ்டாலின் மத்திய ஆட்சித் தலைவர்களையும் சமாதானப்படுத்த, உதயநிதியை மோடியை சந்திக்க அனுப்பி வைத்து சுமுகச் சூழலை கட்டமைத்துக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலினை பொறுத்த வரை அவரிடம் சித்தாந்த தெளிவுமில்லை. செயல் திறனுமில்லை என்பது உண்மையென்றாலும் கூட, தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடமே இவை இல்லாத போது உதய நிதியிடம் இருக்க வேண்டும் என கட்சிக்குள் ஒரு சூழல் உருவாகவே வாய்ப்பில்லை.

ஸ்டாலின் உடல் நிலை தற்போது மிகவும் தளர்ந்து வருவதால், தான் நன்றாக இருக்கும் போதே மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காய் நகர்த்தி வருகிறார். வெறும் இரண்டரை ஆண்டுகளுக்குள் ஒருவர் அரசியலில் எம்.எல்.ஏவாகி, அமைச்சராகி, துணை முதல்வராவதற்கு உகந்த சூழல்கள் கட்டமைக்கப்பட்டது. உதயநிதியை முதல்வராக்க வேண்டுமென்ற தன் குடும்பத்தின் விருப்பத்தை கட்சிக்காரர்களைக் கொண்டு அவர்கள் விரும்புவதாக தொடர்ந்து பேச வைத்து பேசு பொருளாக்கினார். போதாக்குறைக்கு அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர்களையும் உதயநிதியின் பட்டாபிஷேகத்திற்கு ஆதரவாக பேச வைத்தார். ஊடகங்களை தொடர்ந்து எழுத வைத்தார்.

தொடர்ந்து இரண்டாண்டுகளாக உதயநிதி துணை முதல்வராக்கப்படுவது பேசு பொருளாகி இருப்பதால் கட்சிக்குள் ஏறத்தாழ முழு ஏற்பு நிலை உருவாகிவிட்டதென்றே கொள்ளலாம். ஆனால், சமூக ஏற்பு என்பது சாத்தியமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time