பக்தியை மூலதனமாக்கி பகாசூரக் கொள்ளை!

-சாவித்திரிகண்ணன்

உலகின் பணக்கார கோவில் திருப்பதி. எங்கு அளவின்றி செல்வம் குவிகிறதோ, அங்கு குற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது லட்டுக்கான நெய்யில் கலப்படம்! ஆனால், இது மட்டுமின்றி, உண்டியல் பணம், நகை தொடங்கி  நுழைவு சீட்டு பணவசூல், கட்டுமானங்கள் வரை ஒவ்வொன்றிலும் முறைகேடுகள் நடப்பது குறித்த ஒரு அலசல்;

தினமும் 70,000 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரை திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் படி காணிக்கையை அளித்து மகிழ்கின்றனர். உண்டியல் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி முதல் 1,200 கோடி வரை கிடைக்கிறது. மேலும் ஒரு டன் எடையுள்ள தங்க, வைர நகைகள் காணிக்கையாக கிடைக்கின்றன. அத்துடன் லட்டு விற்பனையில் ஆண்டுக்கு ரூ 500 கோடிகள் கிடைக்கிறது. மற்றும் வாடகை, மற்றும் குத்தகை பணம்.. என பல வழிகளில் வருமானம் குவிகிறது. அதனால் தான் இதன் அறங்காவலர் குழு நிர்வாக உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. மணல் கடத்தல் புகழ் சேகர் ரெட்டி போன்றவர்கள் தான் இக் கோவிலின் அறங்காவலர்களாக வர முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

சென்ற ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளை நுழைவுச் சீட்டின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.530 கோடிகள் முறைகேடு நடந்துள்ளதாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்தது பெரும் பரபரப்பானது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி, முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உள்ளிட்ட பலருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதும் நினைவிருக்கலாம். அறக்கட்டளை நிதியில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்தது மட்டுமல்ல, சிவில் ஒப்பந்தங்கள் வழங்கியதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதும் தெரிய வந்தது.

முந்தைய நிர்வாகம், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனைக்கு ரூ.77 கோடியையும், கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் வளாகம் கட்ட ரூ. 420 கோடியையும் ஒதுக்கிய வகையில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை ஆசனவாயில் மறைத்து திருடிய வகையில் ரவிக்குமார் என்ற தேவஸ்தான ஊழியர் தமிழகம், ஆந்திராவில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து குவித்துள்ளது தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் சமரசம் பேசி ரவிக்குமார் காணிக்கை பணத்தை திருடி வாங்கி குவித்த சொத்துக்களின் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பது போல் அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்ட கூத்தும் அரங்கேறியது. அதாவது ரூ 100 கோடி அளவுக்கு திருடியவர் தண்டிக்கப்படவே இல்லை. காரணம், அவர் 20 ஆண்டுகளாக சிறுகச் சிறுக இதை திருடும் போதே பலருக்கும் கையூட்டு கொடுத்தே வந்துள்ளார். ஆகவே, அவரது விசுவாசிகள் அவரை தண்டிக்கவிடவில்லை. அதனால், இந்த முடிவிற்கு அப்போது ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் இருந்த தேவஸ்தான அறங்காவலர் குழுவும் அப்போது ஒப்புதல் அளித்தது. அதனால் இதில் அறங்காவலர் குழுவினர் ரகசியம் காத்தனர்.  இந்த விசாராணையில் தங்கள் பங்கிற்கு சில காவல்துறை அதிகாரிகளும் தங்களின் குடும்ப உறவுகள் பெயருக்கு சொத்துக்களை மாற்றியுமுள்ளனர்.

தற்போது திருப்பதி பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கொழுப்பு இருப்பதை மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. குஜராத்தில் செயல்பட்டு வரும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நீர் மற்றும் உணவு மதிப்பாய்வு ஆய்வகம் நெய் மாதிரிகளை கடந்த ஜூலை 12 ஆம் தேதி அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நெய்யை ஆய்வு செய்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய அறிக்கையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதோடு, சோயாபீன் ஆயில், சன் ஃபிளவர் ஆயில், பாமாயில் மற்றும் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி, பன்றிக் கொழுப்பு போன்றவற்றின் தடயங்கள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

இந்த செய்தி சைவத்தை பின்பற்றும் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள், சமணர்கள்.. ஆகியோரைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆக, ஊழல்வாதிகளின் பேராசையால் திருப்பதி லட்டு ஒரு அசைவ லட்டு ஆக்கப்பட்டுள்ளது என்பதை பக்த கோடிகளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நாளொன்றுக்கு 3 முதல் 3.5 லட்சம் வரை லட்டுகள் விற்பனையாகிறது என்ற வகையில் பெரும் லாபம் கொழிக்கும் ஒரு வியாபாரத்தில் எந்த வியாபாரிக்குமே கூட கலப்படம் செய்யத் துணிவிருக்காது. ஆனால், பக்தர்கள் பெருமாள் மீது வைத்துள்ள பெரு நம்பிக்கையைத் தான் இந்த ஆன்மீக வியாபாரிகள் தங்கள் முறைகேட்டுக்கு மூலதனமாக்கிக் கொண்டனர். ஆவின், நந்தினி, அமுல் போன்ற அரசு நிறுவனங்களில்  தரமான நெய்கொள் முதல் செய்யாமல் நம்ப முடியாத குறைந்த விலையான கிலோ ரூ 319 க்கு  கலப்பட நெய் வாங்கியதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்த மிகக் குறைந்த விலைக்கு தரமான நெய் ஒரு போதும் சாத்தியமில்லை என்பது யாருக்குமேவா தெரியவில்லை. பக்தர்களின் அறியாமை மீது திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது.

2018 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக அதன் தலைமை அர்ச்சகர் ஏ.வி ரமணா தீட்சிதலு குற்றம் சாட்டியதை பலரும் மறந்திருக்க கூடும்.

அந்த காலகட்டத்தில் கோவில் அர்ச்சர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சண்டை வலுத்து வந்த சூழலில் தான் ஒரு அதிரடி குற்றச்சாட்டை அரசின் மீது வைத்தார் தலைமை அர்ச்சகர் ரமணா.

அப்போது சென்னையில் பத்திரிகையாளர் கூட்டம் ஏற்பாடு செய்து இந்த ஊழலை அம்பலப்படுத்தினார் ரமணா. அப்போது அவர் கூறுகையில், கோயிலில் குவியும் பெருமளவு நிதியும், பழமை வாய்ந்த பாரம்பரிய நகைகளும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

1996 வரை சரியான முறையில் கோயில் நகைகள் பராமரிக்கப்பட்டு தணிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், இப்பொழுது உள்ள நிர்வாகம் அதற்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. கடந்த 22 ஆண்டுகளில் ஆந்திர அரசு ஒருமுறை கூட கோயில் நகைகள் குறித்து தணிக்கை செய்யவில்லை. தற்போது, புதிய ஆபரணங்களை கொண்டு ஏழுமலையானுக்கு அலங்கரிக்கப்படுகிறதே தவிர பாரம்பரியமாக இருந்த பழைய நகைகள் அணிவிப்பதில்லை! அவைகள் என்னவானது என்று கூட தெரியவில்லை! இதற்கு முறையான தணிக்கை கொண்டு வந்து, அவற்றை டிஜிட்டல் மூலம் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்று அவர் கூறியது காற்றில் கரைந்து போனது. அதே சமயம் அர்ச்சகர்கள் குறித்து பக்தர்கள் தரப்பிலும் பணக்கார பக்தர்களிடம் பூஜை, புனஸ்காரம், பரிகார பூஜை என லட்சக்கணக்கில் பணம் கறக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

ஆக, பக்தி என்பதன் பெயரால் பணம், காசு, துட்டு, மணி, மணி..என்பதே நடைமுறை யதார்த்தமாக உள்ளது. இந்த பக்தி வியாபாரிகள் பெருமாளுக்கு மட்டுமல்ல, அவரது பக்தர்களுக்கும் சேர்த்தே நாளும் நாமம் சாத்துகின்றனர்.

ஆகவே, ஆட்சிகள் மாறும் ஒவ்வொரு தருவாயிலும் முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களை புதிய ஆட்சியாளர்கள் அம்பலப்படுத்தி தங்களை யோக்கியவான்களாக சித்தரித்துக் கொண்டு, தாங்களும் அது போன்றே முறைகேடுகளில் திளைப்பது தான் வாடிக்கையாக உள்ளது. எங்கு வரைமுறையின்றி செல்வம் குவிகிறதோ, அந்த இடம் பாவத்தை பிரசவிக்கும் கூடாராமாக மாறுவதை தவிர்க்க முடியாது. இது போன்ற ஊழல்கள் வருங்காலங்களிலும் மாற்றமின்றி தொடரும் என்பதே யதார்த்தம்.

சாவித்திரிகண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time