இலங்கையை சூறையாடிய அரசியல்வாதிகளால் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியால் எழுந்த மக்கள் புரட்சியின் விளைவாக கம்யூனிஸ்ட் தலைவர் அதிபராகி உள்ளார். அதிபர் அநுர திசநாயகவிற்கு தமிழர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளும் விழுந்துள்ளன என்ற வகையில் இவரது வெற்றி குறித்த ஒரு அலசல்;
செப்டம்பர் 21 நடைபெற்ற இலங்கை அதிபருக்கான தேர்தலில் இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். இதில் 3 பேர் மட்டுமே பிரதான வேட்பாளராக கருதப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சார்பிலும், 27 சிறிய கட்சிகளை ஒருங்கிணைந்த இடதுசாரி அணியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பாக அநுர குமார திசநாயக்கேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாகவும் போட்டியிட்டனர்.
இலங்கையின் பாரம்பரிய கட்சிகளாக சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் பல்லாண்டுகளாக அதிகாரத்தில் கோலோச்சி ஊழலில் திளைத்த வகையில் பலவீனமடைந்துள்ள சூழலில், நேர்மையான ஆட்சியை யார் தருவார்கள்? என்ற தேடலே இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்து மக்கள் நம்பிக்கையை பெற முனைந்தார். ஆயினும் மக்கள் அவரை நம்பத் தயாராக இல்லை.
மேலும், இலங்கையின் அதிகாரத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சிய ராஜபக்ஷே குடும்பம் இந்த தேர்தலில் முற்றாக தூக்கி எறியப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராகபக்ஷே படுதோல்வியை பெற்றுள்ளதானது இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையே காட்டுகிறது. அதுவும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் தொகுதியும், ராஜபக்ச குடும்பத்தின் பரம்பரை தொகுதியுமான பெலியத்தையில் மிகக் கேவலமாக 5,385 வாக்குகளுடன் பெற்று படுதோல்வியடைந்துள்ளதோடு, அதே இடத்தில் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
2019- இல் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க 3.16 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அதன் பின்னரான நாடாளுமன்றத் தேர்தலிலும் 3 எம்பிக்களை மட்டுமே பெற்றது அவரது கட்சி. ஆனால், பொருளாதார நெருக்கடி காலத்தில் மக்களோடு மக்களாக களம் இறங்கி போராடியதோடு, அவர்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வையும் உருவாக்கியது இன்றைய அநுரவின் வெற்றிக்கு அடித்தளமானது.
பொதுவாக இலங்கை அதிபர் தேர்தல் பிரசார மேடைகளில் தமிழர்களுக்கு எதிரான அழிப்பும், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுமே முக்கிய கோஷமாக இருக்கும். இந்த தேர்தல் அதற்கு விதி விலக்கானது. அதே சமயம் முன்பு இன அழிப்பு என்ற பேரில் தமிழினத்தை அழித்த சிங்கள தலைவர்கள் இந்த தேர்தலில் தென்னிலங்கை சிங்கள மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இது வரையிலும் தமிழர்கள் அழிப்பை தமது அரசியல் வெற்றியாக கொண்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இன்றைக்கு பதவியேற்ற பிறகு அனுர குமார திசநாயக நாட்டு மக்களுக்கான உரையில் சிறப்பாகவே தன் நிலைபாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
”தேர்தலை நடத்துவதும் , அரச தலைவரை தேர்வு செய்வது மட்டும் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன். சவால் மிக்க பொருளாதார சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுரவின் வெற்றி குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கவனிக்கத்தக்கது. ”எந்த விதமான சிங்கள பௌத்த தேசிய உணர்வுகளோ, அல்லது வேறு எந்த மேலாண்மை வாதங்களோ முன்வைக்கப் படாமல் அடையப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி கூர்ந்து கவனிக்கத்தக்கது. மேலும் ஊழலற்ற அரசியலை, இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், ஒற்றுமைப்பட்ட தேசம் என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் விரும்பி நிற்பதையும் உணரக் கூடியதாக உள்ளது. இந்தப் பின்னணியில் புதிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக தன்னுடை ய வேலை திட்டங்களை முன்னெடுப்பார்” என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்”
ராஜபக்ஷே அரசால் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க தன் அறிக்கையில், ”நேற்றைய தேர்தல் முடிவுகள் எனது நம்பிக்கையை புதுப்பித்துள்ளன.ஜேவிபி வரலாற்று ரீதியில் அதிகாரவர்க்கத்தினை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. இலங்கையின் சமீபத்திய மனித உரிமை வரலாற்றில் இடம் பெற்ற அநீதிகளுக்கு தீர்வை காண்பதில் இந்த புதிய தலைமை அக்கறை செலுத்தும் என நான் நம்புகின்றேன். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக உண்மையை பேசியமைக்காக பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியை பெற நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற எதிர்பார்பு இலங்கை தமிழ் மக்களிடையேயும் எழுந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு போரிலும், அதற்கு முன்னரும், பின்னருமாக கொல்லப்பட்ட பெருந்திரளான தமிழ் மக்களுக்கான நீதியை புதிய ஜனாதிபதி நிலை நாட்ட வேண்டும் என விரும்புவதைக் காண முடிகிறது.
இது போன்ற கோரிக்கைகளும், எதிபார்ப்புகளும் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு ராஜபக்ஷே குடும்ப உறுப்பினர்கள் பலர் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதுமே வெளி நாடுகளுக்கு தப்பி ஓடினர். இதில் பசில் ராஜபக்ஷே முன்கூட்டியே முதல் ஆளாக ஓடிவிட்டார். அடுத்து நாமல் ராஜபக்சேவின் மனைவியும், அவரது தந்தையும் விடிவதற்கு முன்பாக அதிகாலையே நாட்டைவிட்டு ஓடிவிட்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தன் அறிக்கையில், ”சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கத்தில் பதவி ஏற்றுள்ள அநுர குமார திச நாயக்கே அனைத்து மக்களது கனவுகளையும் நிறைவேற்றுவார் என தாம் நம்புவதாகவும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2015-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி, 10 ஆண்டுகளுக்கு முன் அனுர குமார திசநாயக வெளியிட்ட பதிவில், “அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.” என பதிவிட்டுள்ளார்.எனவே புதைக்க முயற்சித்தவர்கள் இன்று பதைக்க, பறிதவிக்க ஓடி ஒளிவது இயற்கை தானே!
2023 பிப்ரவரியில், இந்தியாவைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ நிறுவனத்திற்கு 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலைகளை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியம் அனுமதி அளித்ததை அநுர எதிர்த்தார். ”இந்தியாவிலேயே அதானி நிறுவனம் அதிக விலைக்கு மின்சாரத்தை விற்று கொள்ளை லாபம் அடிக்கிறது. தமிழ் நாட்டரசின் மின்வாரியம் இன்று படு நட்டத்தில் இயங்க அதானியிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதே காரணம். அப்படிப்பட்ட அதானியை இலங்கையில் அனுமதிக்கக் கூடாது. அவரது காற்றாலைகளால் உருவாக்கப்படும் மின்சாரம் இலங்கை மக்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படக் கூடும்” எனக் கூறி, அநுர திசநாயக கடுமையாக எதிர்த்துப் பேசியதன் மூலம் இலங்கையை அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாட அவர் அனுமதிக்கமாட்டார் என நம்பலாம்.
Also read
இலங்கை வரலாற்றில் அடித்தள மக்களிடம் இருந்து உருவான முதல் அதிபர் இவரே. தந்தையோ தொழிலாளி, தாயோ ஒரு இல்லத்தரசி. திசாநாயக்க பொறுத்த வரை அவ்வளவு பிரபலமில்லாத தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் பயின்றவர். இந்தக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் மாணவரே இவர் தானாம்!
பள்ளிப் பருவத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் செயல்பாடுகளோடு கலந்தவர் 1987இல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் , விவசாய அமைச்சராக ஓராண்டு பதவி வகித்து, கருத்து வேறுபாட்டால் விலகினார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்ட அநுர குமார சிங்கள மக்கள் என்றில்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் குரல் கொடுப்பவராக வெளிப்பட்டார்.
இலங்கையை தொழில்கள், பொருளாதாரம்..என பல வழிகளிலும் ஆக்கிரமித்துள்ள சீனா விஷயத்தில் அநுர குமார திசநாயக என்ன நிலைபாடு எடுக்கிறார் என்பது போகப் போகத் தான் தெரியும்.
சாவித்திரி கண்ணன்
இலங்கை தேர்தலில் பொருளாதாரப் பிரச்சினைகள் முன்னுரிமை பெற்றுள்ளது. தமிழ் தேசிய இன உரிமை குறித்து பழைய நிலை தான். இந்தியா,சீனா இரண்டு நாடுகளையும் புறக்கணித்து விட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
nice