முருங்கை பலரது வீட்டிலும் இருக்கும் மரம். தெரிந்த இந்த மரத்தை குறித்த தெரியாத சேதி பலவும் இருக்கின்றன. ”கீரையின் அரசனான இந்த முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்களே அண்டாது, முதுமையை தடுக்கும்” என்று மருத்துவர்கள் கூறுவதை சற்று விரிவாக பார்ப்போம்;
முருங்கைக்கும், முருகனுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் , முருகன் என்றாலே இளமை, வீரம், அழகு தான்! இவை அத்தனையுமே முழுக்க முருங்கை தரும் .
கியூபாவின் காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்து வந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ தொடர்ந்து பேசி வந்தார் . அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை மரத்தை வளர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நம்ம முருங்கையின் உலக தூதராகவே அவர் இருந்தார்.
காஸ்ட்ரோ மட்டுமில்லை, முருங்கையால் உலக நாடுகள் பெற்ற பயன்கள் ஏராளம். உலகில் மிகவும் வறுமையான நாடுகள் பட்டியலில் உள்ளது ஹைதி. அங்கு 2010-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2012-ல் ஏற்பட்ட கடுமையான சூறாவளியால் அந்நாடு மோசமான வறுமையின் பிடியில் தள்ளப்பட்டது. பச்சிளங் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிக்கு உள்ளானார்கள். கடைசியில் முருங்கை இலைப் பொடியை தொடர்ந்து உட்கொண்டதால், அந்நாட்டு மக்கள் உயிர் பிழைத்தார்கள். இதனால் ஹைதி அரசு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதியைத் தேசிய முருங்கை நாளாகக் கொண்டாடி வருகிறது.
முருங்கைக் கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இது வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. சித்த மருத்துவத்தில் முருங்கைக் கீரை பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
சங்க இலக்கியமான அகநானூற்றில் (பாடல் எண் 251), கபிலர் என்ற புலவர் பாடிய பாடலில் முருங்கை மரம் குறிப்பிடப்படுகிறது. இது முருங்கை மரம் 2500 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரமாக அமைகிறது.
இந்த இரு சான்றுகளும் பண்டைய தமிழ் சமூகத்தில் முருங்கைக் கீரையின் முக்கியத்துவத்தையும், அது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டதையும் தெளிவாகக் காட்டுகின்றன.
1997-ம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சர்ச் ஆஃப் வேர்ல்ட் சர்வீஸ் நிறுவனம் முருங்கை இலைப் பொடியை உணவாக வழங்கிய போது, அவர்கள் ஆரோக்கியம் பெற்றார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தினமும் ஆறு மேசைக்கரண்டி முருங்கை இலைப்பொடியை வழங்கியபோது, அவர்களும் ஆரோக்கியமான நிலையை அடைந்தார்கள். இது தொடர்பாக Lowell fugile என்பவர் ஆய்வு மேற்கொண்டு முருங்கையைப் பற்றி ‘The miracle tree: The multiple attributes of Moringa’ என்று விரிவான நூலையே எழுதியுள்ளார். இந்த ஆய்வில் பல விஷயங்கள் தெரிய வந்தன.
இப்போது உலகின் அத்தனை நாடுகளின் மிகப் பெரிய பேரங்காடிகளில் முரிங்கா என்ற பெயரில் உலர்ந்த முருங்கை இலை இடம் பெற்றிருக்கிறது . ஆனால் இங்கு அதற்கு மதிப்பு இல்லை. ஏனெனில், அது இங்கே ஏழைகளின் உணவாக நினைத்து ஒதுக்கப்படுகிறது .
ஒரு கிராம் முருங்கை இலையில் பார்வை இழப்பைத் தடுக்கும் வைட்டமின் ஏ , கேரட்டைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. உலர்ந்த முருங்கை இலையில் 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ உள்ளது.
ஒரு கிராம் உலர்ந்த முருங்கை இலையில், நான்கு முட்டைகள் மூலம் கிடைக்கும் புரதம் கிடைக்கிறது. முருங்கையில் கால்சியம் சத்து பாலை விட அதிகம், பொட்டாசியம் சத்து வாழைப் பழத்தைவிட அதிகமாக உள்ளது என்ற குறிப்பு பல நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது.
இந்தப் பெருமைகள் அனைத்தையும் உடைய முருங்கை, நம் வீட்டுப் புழக்கடையில் காசில்லாமல் ஆரோக்கியத்தை வாரி வழங்கிவந்ததை யாரும் மறுக்க முடியாது.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மனவளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.
கீரையை அதிகமாக சாப்பிட முடியாதவர்கள் , கீரையையும் , அதன் ஈர்க்குகளையும் சூப் வைத்து அருந்த உடல் தேறும் .இரத்த அணுக்கள் கூடும் .அதிக இரும்பு சத்து கிடைக்கும் .
முருங்கை இலை சாறு இரத்த சுத்தி செய்வதுடன், எலும்புகளை வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும் உதவுகிறது.
முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
முருங்கைக்கீரை மகிமையை உணர்ந்து தான் ‘ஒரு எருதும் ஒரு முருங்கை மரமும் இருந்து விட்டால் போதும் எந்த வித வறட்சியையும் சமாளித்துவிடலாம்’ என்று கிராமங்களில் கூறியிருக்கிறார்கள்.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு உடல் பிரச்னைகளை நீக்கும் பணிகளையும் முருங்கை எனும் அற்புத கீரை செய்கிறது . இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும். முருங்கையை பொறுத்தவரை இதை வித விதமாக சமைக்கலாம். சில கீரைகளில் கடைசல் பொரியல் மட்டும் தான் வரும். ஆனால், முருங்கைக் கீரையில் மசியல், பிரட்டல், குழம்பு, சூப் என்று பலபலவிதமாக செய்து பிரமாதப்படுத்தலாம்.
அகஸ்தியரின் குணபாடத்தில் முருங்கை கீரை மந்தத் தன்மையை போக்கி, உடல் சூட்டை குறைத்து, கண் நோயை தீர்த்து வைக்கும் குணங்களை கொண்டது என்று கூறப்படுகிறது .
பொதுவாக, கண் பார்வை கூர்மை பெற கேரட் சாப்பிட வேண்டும். கால்சியம் சத்திற்கு பால் அருந்த வேண்டும். விட்டமின் சி சத்திற்கு ஆரஞ்சு, பொட்டாசியம் சத்திற்கு வாழைப்பழம் என்று சொல்வார்கள். ஆனால், இவற்றிலுள்ள சத்துகளின் அளவைவிட அதிகமாகவும் ஒட்டுமொத்தமாகவும் முருங்கை கீரையிலேயே உள்ளது. முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகள் எளிதில் குணமாகும்.
மூட்டுவலி, வாயுக் கோளாறு, கண் தொடர்பான நோய்களுக்கு மாத்திரை மருந்துகளே தேவையில்லை. மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அவித்து தொடர்ந்து உண்டு வந்தால் என்பது வயது ஆள் கூட பந்தயத்தில் ஓடலாம். அதேபோல் வாயுக் கோளாறு இருப்பவர்கள் முருங்கைக் கீரையுடன் பூண்டு பல் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாயு பிரச்னை தீரும்.
Also read
முருங்கைக் கீரை மட்டுமல்ல, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. அதன் காய், இலை, பட்டை, வேர் என்று எல்லாம் மருத்துவத்திற்கு பயன்படுத்த உகந்தவை.
இனி என்ன ? முருங்கையை சாப்பிட்டு முறுக்காக இருங்கள் ! இதில் கல்யாண மருங்கை என்று ஒன்று மாப்பிளைகளுக்காகவே உள்ளது . என்னதான் இல்லை இந்த தாய் திரு நாட்டில் !
அண்ணாமலை சுகுமாரன்
,அருமை