பேசா அரசியலை பேசத் துணிந்த சூரரைப் போற்று!

சாவித்திரி கண்ணன்

சூரரை போற்று படத்தின் கதை, அது உயிரோட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் விதம், சூர்யா  ஊர்வசி உள்ளிட்ட அனைவரின் அபார நடிப்புத் திறன், அற்புதமான இயக்கம்,துடிப்பான இசை, காட்சிபடுத்தலில் உள்ள நுட்பங்கள் ஆகியவை அனைத்து ரசிகர்களையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தப் படம் பேசியும்,பேசாமலும் உணர்த்தும் அரசியல் அபாரமானது. இதுவரை தமிழ் சினிமா பேசத் தயங்கியதும் கூட! ஆகவே, இந்தப் படம்  ஒரு தரப்பை ரொம்பவே கலவரப்படுத்தியுள்ளது!

ஆனால்,அமேசான் மூலம் பல கோடி பார்வையாளர்களை சென்றடைந்துவிட்டது! இது வரை எந்த தமிழ்படத்திற்கும் அமேசானில் கிடைக்காத பார்வையாளர்கள் இந்தப் படத்திற்கு கிடைத் துள்ளனர்.  பத்து கோடி பார்வையாளர்களை சில நாட்களிலேயே கடந்த படமாகவும் சாதனை படைத்துள்ளது! இதை தியேட்டரில் பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், இதை தியேட்டரில் ரிலீஸ் ஆவதை தடுக்க ஒரு சதி திட்டமே வகுக்கப்பட்டிருந்தது என்பதை அலட்சியப்படுத்த முடியாது. இதை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முயற்சித்திருந்தால் தடுத்து அல்லாட வைக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது . ஏற்கனவே படம் வெளிவருவதற்கு முன்பே கோர்ட்டுக் போனார்கள் பலிக்கவில்லை. ’சரி, வரும் போது பார்க்கலாம்’ என்று இருந்தார்கள்! அந்த வாய்ப்பு நழுவிவிட்டதே, என சங்கபரிவாரங்களும், அவர்களின் ஆதரவாளர்களும் சங்கடத்தில் நெளிகிறார்கள்!

அதற்கு படத்தில் இடம்பெறும் கீழ் கண்ட பாடல் வரிகள் தான் காரணம்;

’’கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா..?

அந்த மேல்சாதி காரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா .

உழைக்குற கூட்ட மெல்லாம் கீழ்சாதி மனுசங்களா..?

உக்காந்து திங்குற வங்க எல்லாம்மேல்சாதி வம்சங்களாம் …

என்னங்கடா நாடு சாதிய தூக்கி போடு

அட என்னங்கடா நாடு

அந்த சாதிய பொதச்சு மூடு”

இது மட்டுமின்றி, படத்தின் பெரும் பகுதி கதாநாயகன் கருப்பு சட்டையோடு வருகிறான். திருமணத்தின் போதும் கருப்பு சட்டை தான்! அதுவும் மேடையின் பின்னணியில் அம்பேத்கரும்,பெரியாரும் இருப்பதும், இணை ஏற்பு விழா என்று எழுதப்படிருப்பதும், திருமணம் தாலிகட்டாத சுயமரியாதை திருமணமாக மாலை மாற்றி நடப்பதும், வசனங்கள் இல்லாமல் காட்சி படிமத்தில் உணர்த்தப்பட்ட அரசியல் செய்திகளாகும்! திராவிட இயக்க ஆதரவு நடிகர்களே தமிழ் திரையில் செய்யத் துணியாத செயலாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன்!

படத்தில் அப்பாவிற்கும், மகனுக்குமான காரசார விவாத காட்சியில் மனு எழுதிப்போட்டே தோற்றுப் போன அப்பாவை மகன் கடுமையாக விமர்சிப்பான். முடிவில் அப்பா சொல்வார் ’’அவன் எந்த மனுவைச் சொல்றான்னு தெரியுது.’’

படத்தின் கதாநாயகன் எந்த மாதிரியான சமூகத்தின் அடையாளமாக வெளிப்படுகிறான் என்பதும் அவன் வீட்டில் உள்ள அம்பேத்கர் படத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது! கூட்டாளிகளில் ஒருவனும் மேல் சாதி கிடையாது என்பது மட்டுமல்ல, மாறனுடைய கல்யாணத்திற்கு அவன் ஒட்டிய போஸ்டரில், ’’காளி மற்றும் முடிதிருத்துவோர் சங்கம்’’ என்ற வாசகம் இடம் பெற்று இருக்கும்!

மணிரத்தினம் திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறை எடுத்த போது புகழ்ந்து தள்ளிய சங்க பரிவாரங்களும், மேல்மட்டத்தினரும் இந்த ஜி.ஆர்.கோபிநாத் வரலாற்றை எடுக்கும் படத்தை வரவேற்கவும் முடியாமல் எதிர்கவும் மனமில்லாமல் புழுங்குகிறார்கள்!

ஒரு இடத்தில் சூர்யா வெளிப்படையாகவே கிளாஷ் அண்ட் கேஸ்டு பேரியரை உடைப்பதே என் நோக்கம் என்பார்! படம் முழுக்க மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு வர்க்கத்தை அழுத்தி வைக்க முயற்சித்திருப்பதும்,அதை மறுத்து அடித்தட்டு வர்க்கம் வீறு கொண்டு மேல் எழுவதுமாகத் தான் கதையும்,காட்சி படிமங்களும் உள்ளன! அதே சமயம் கதாநாயகனுக்கு உதவும் நல் இதயம் படைத்த ஒரு உயர்சாதி பெண் பத்திரிகையாளர் கதாபாத்திரமும் இயல்பாக வந்து செல்லும்! ஆக, மேல்சாதியில் அனைவருமே அப்படி கிடையாது என்ற செய்தியையும் சொல்லத் தவறவில்லை சூர்யா!

படம் பல இடங்களில் வழமையான மரபுகளை உடைத்திருக்கிறது. இது வரை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளையையே பார்த்து பழக்கப்பட்டுப் போன சமூகத்திற்கும், சினிமாவிற்கும் மாப்பிள்ளையை பார்க்க வரும் பொண்ணும், தன்னை கட்டிக்கிட பெண் போடும் கண்டிஷண்களும் புதுமையிலும் புதுமை! அதைவிட புதுமை அல்லது புரட்சி என்று கூட சொல்லுவேன். சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உள்ள ஒரு பெரிய நடிகர் ஒரு பெண், தன்னை விட வலியவளாக காட்டப்படுவதையும், அதுவும் கடைசி வரை அவளது தனித் தன்மையில் குறுக்கிடாததுமாகும்! ஏனென்றால், இது வரையிலான சினிமாவில் பெண்ணை திமிர்பிடித்தவளாகக் காட்டி இறுதியில் கதாநாயகன் அவளை அடக்கி பணியவைப்பதை வெற்றியாகக் காட்டியிருப்பார்கள்!

தயாரிப்பாளரான சூர்யா தன் படத்தை இயக்க ஒரு பெண் இயக்குனரான சுதா கொங்குராவை அனுமதித்து அவருடைய வழிகாட்டுதல்படி நடிக்க சம்மதித்ததும் ஒரு சிறப்பு தான்! அத்துடன் துணை தயாரிப்பாளராக குனீத் மோங்கோ ஒரு பெண்ணை அங்கீகரித்ததும் சாதாரண அணுகுமுறையல்ல! ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் தனக்கு இணையாக பெண்களை அங்கீகரித்து ஒரு ஹீரோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு வரலாற்றுச் சிறப்பாக பதிவாகும் என்பது உண்மை! அத்துடன் இந்த படத்தில் நடிப்பின் உச்சத்தை தொட்டுள்ளார் சூர்யா!

ஒரு கமர்ஷியல் படத்திற்குள் இவ்வளவு நுட்பமாக அடித்தள மக்களின் அரசியலை முன்னெடுக்கும் சூர்யா உண்மையிலேயே நிஜ வாழ்க்கையிலும் ஒரு சூரன் தான்! ஆகவே சூரரைப் போற்றுவை படைத்த அந்த சூரரை போற்றுவதும் நமது கடமையாகிறது.

’அறம்’சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time