நீண்ட கால நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவை பகைத்துக் கொள்ளும் வண்ணம் இந்தியா நடந்து கொண்டதானது இந்தியாவின் நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. பாலஸ்தீனத்தை அழிக்கும் இஸ்ரேலுக்கு அதானியின் நிறுவனம் ஆயுத சப்ளை செய்து வருவதும் அதிர்ச்சி செய்தியாக விவாதிக்கப்படுகிறது;
எப்போதும் மக்களுக்கு பயனற்ற பரபரப்பு செய்திகளிலேயே பெரும்பாலான ஊடகங்கள் ஆர்வம் காட்டும் வேளையில், அகில உலக ஊடகங்கள் ஒரு செய்தியை கசிய விட்டதை இந்தியாவில் ஒரு சில ஊடகங்களே ஒளி பரப்பின.
அந்த செய்தி, “உக்ரைன் நாட்டு ராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்கள் ஏற்றுமதி” என்பது தான் ! ரஷிய அதிபர் புட்டீனின் நெருங்கிய நண்பராக தன்னை காட்டிக் கொள்ளும் மோடி அரசு , ரஷியாவை எதிர்த்து சண்டையிடும் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் சப்ளை செய்வது நம்பிக்கை துரோகமாக கருதப்படுகிறது!
இந்திய அரசின் இத்தகு ஆயுத சப்ளை நடவடிக்கைக்கு- எதிர்ப்பு தெரிவித்த ரஷிய அரசு ஒரு முறை கஜாக்கிஸ்தானில் நடைபெற்ற லாவ்ரவ் – ஜெய்சங்கர் சந்திப்பின் போதும், பிறகு ஜூலையில் மோடி ரஷ்யா சென்ற போதும் ரஷ்ய அரசு கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதற்கு மறுப்பு தெரிவிக்காத இந்திய அரசின் தலைமை இது குறித்து “இந்தச்செய்தி முற்றிலும் தவறானது, மேம்போக்கானது, தவறாக வழிநடத்தும் செய்தி “ என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வாலைக் கொண்டு பதில் அளித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பத்துக்கும் அதிகமான பாதுகாப்பு துறை அதிகாரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டது!
ரஷ்யாவின் நட்பு நாடு இந்தியா. எனவே மேற்கத்திய நாடுகள் (அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்) கொண்டு வந்த ‘ரஷிய மீதான பொருளாதார தடையை’ நாங்கள் ஆதரிக்கவில்லை, ரஷிய நாட்டுடனான எங்களது வர்த்தகம் ( க்ரூடாயில் மற்றும் எரி பொருள் இறக்குமதி போன்றவை) எந்தவித தடையுமின்றி தொடரும், இது எங்களது நாட்டின் தேவையை கருத்தில் கொண்ட நடவடிக்கை என இந்திய அரசு அறிவித்தது, ரஷியாவுடனான வணிகம் எந்தவித தடையுமின்றி , மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நடந்தது. இதில் யாருக்கும் – இந்தியாவிலுள்ள ஒரு சில அமெரிக்க அடிவருடிகளை தவிர- ஆட்சேபனை இல்லை! அதோடு பெட்ரோலிய குருட் ஆயிலை நம்ப முடியாத மிகக் குறைந்த விலைக்கு ரஷ்யா இந்தியாவிற்கு தந்தது.
ஆனால், இந்திய ரஷ்ய நட்புறவு கொள்கை வழியானது, காலங்கடந்து நிற்பது (principled and longstanding) என்ற நிலைப்பாட்டில் மண்ணைப் போடும் வேலையாக இந்த நம்பிக்கை துரோகச் செய்தி வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
ஏன் இந்த இரட்டை நிலை? ஏனிந்த தடுமாற்றம்?
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்திய ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனங்களான யந்த்ரா, மூனிஷன்ஸ் இந்தியா, மற்றும் கல்யாணி ஸ்டேரட்டஜிக் சிஸ்டம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஆயுத தளவாடங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது உண்மை, மறுக்க முடியாது.
கஸ்டம்ஸ் ஆவணங்கள் மூலமாக இந்திய நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு ஆயுத தளவாடங்கள்- துப்பாக்கி ரவைகள், ஷெல்கள் போன்றவை- ஏற்றுமதி செய்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சிசி டிவி கேமராக்கள் காவலர்க்கு உதவுவது போல் , கஸ்டம்ஸ் ரிக்கார்டுகள் பொய் கூறாதவை, உண்மையை உரித்து காட்டும் ஆவணங்கள் இப்பொழுது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உதவி உள்ளது.
ஐரோப்பாவிலுள்ள இத்தாலி, செக் குடியரசு ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது.
இதனுடன் காசாவில் இனப் படுகொலை செய்யும் இஸ்ரேல் நாட்டிற்கும் ஐ.நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி ஆயுதங்களை ‘இந்தியா’ ஏற்றுமதி செய்துள்ளது.
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2.5 பில்லியன் டாலர் பெறுமானதாக (ரூ 17000 கோடி) வளர்ந்துள்ளது என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆகஸ்ட்டில் கூறியதை இதனுடன் இணைத்து பார்க்க வேண்டும் .
பிரிட்டனின் காலனியாதிக்கத்திலிருந்து நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர் விடுதலை பெற்ற இந்தியா, சுதந்திர போராட்டத்தின் போதும் அதற்கு பின்னரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேச விடுதலை, ஆயுத ஒழிப்பு மற்றும் அமைதி என்ற கொள்கைகளை தூக்கிப் பிடித்தது. இந்த நிலைபாட்டில் அண்ணல் காந்தி அடிகளின் முத்திரை மிளிர்ந்தது!
இதைப் பின்பற்றியே ராணுவ கூட்டணி எதிர்ப்பு , அணி சேராக் கொள்கை ஆகியவை பண்டித ஜவகர்லால் நேருவால் முன்மொழியப்பட்டு இந்திய நாட்டின் தேசீயக் கொள்கையாயிற்று. உலகமும் அவ்வாறே இந்தியாவின் அறஞ்சார்ந்த நிலைப்பாட்டை அங்கீகரித்து போற்றியது. இளம் ஆசிய ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவின் “தார்மீக தலைமையை” விரும்பி ஏற்றுக் கொண்டன!
ஆனால் 2014க்குப் பிறகு மோடி அரசு உள்நாட்டு கொள்கைகளில் செய்த குளறுபடிகள் போதாது என்று வெளியுறவு கொள்கைகளிலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளது இன்று தொடர் கதையாகிறது.
# சார்க் SAARC அமைப்பை நிலைகுலையச் செய்தல்
# ஏசியான் ASEAN கூட்டமைப்பை புறக்கணித்தல்
# சிறிய அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு மற்றும் பங்களா
தேஷ் ,நேபால் ஆகியவற்றை மேலாதிக்கம் செய்தல்.
# பாலத்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நாட்டுடன் குலாவுதல்
போன்ற செயல்களில் ஈடுபட்ட மோடி அரசு தன்னை “விஸ்வகுரு’ என்று தம்பட்ட மடித்துக் கொண்டது. வளர்ந்து வரும் பிரிக்ஸ் BRICS கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணராத மோடி அரசு
‘சுழற்சி முறையில் ‘ வரும் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை “தனது சாதனை” யாக பறைசாற்றி பல கோடிகளை வாரியிறைத்த மோடி அரசின் பாமரத்தனம் ஆகியவை ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது எனலாம்.
எல்லோருக்கும் ஒருவழி என்றால், இடும்பனுக்கு தனி வழி என்பது போல் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்ட முனையும் மோடி இரட்டை வேடம் போட்டு சுய முகத்தை இழந்ததையே இச்செயல்கள் குறிக்கின்றன.
நம்பகமான நாடு இந்தியா என்ற நிலைமாறி இந்தியாவின் செயல்கள் இன்று உலகெங்கும் எள்ளி நகையாடப்படுகிறது. இந்திய அரசின் கூற்றை யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாத சூழலை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவிடம் நட்பு பாராட்டியதால் கோபமுற்ற மேற்கு நாடுகளை சமாதானப் படுத்த உக்ரைனுக்கு பயணம் செய்தல். ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதங்கள் அளிப்பதன் மூலம் மறைமுகமாக உக்ரைனுக்கு உதவுதல்.
பிறகு தேசீய பாதுகாப்பு செயலர் அஜீத் தோவலை ரஷியா அனுப்பி அதிபர் புட்டீனை சமாதானப்படுத்துதல் போன்ற செயல்கள் மோடி அரசின் “சிறுபிள்ளைத் தனத்தை” காட்டுகிறது.
அதானி நிறுவனத்தின் மூலம் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ததால் இந்தியா தனது சர்வதேசக் கடமைகளில் இருந்து நழுவுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுதல்,
ஜெனீவா ஒப்பந்தங்களை மீறுதல்,
சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் உத்தரவுகளை மீறுதல் போன்ற மோசமான விதிமீறல்களை மீறியே இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது! ஒரு தனி நபரான அதானியின் லாபத்திற்காக வெளியுறவு கொள்கைகளில் விபரீதங்களை செய்யும் அளவுக்கு அளவுக்கு இந்தியா சென்றுள்ளது வெட்க கேடானதாகும்.
[rb related title=”Also read” total=”2″]
உக்ரைனைப் பொறுத்த வரையில் – இத்தாலி ,செக் குடியரசு நாட்டு நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக- இந்தியா ஆயுதங்கள் அளித்தது, சர்வதேச விதிகளான — யாருக்கு விற்கப்படுகிறதோ அவர் மட்டுமே அந்த ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என்ற End user Agreement விதியை மீறிய குற்றத்திற்கு இந்தியா ஆளாகி உள்ளது.
இந்திய அரசின் வளர்ந்து வரும் ஆயுத ஏற்றுமதிக் கொள்கைக்கு வலு சேர்க்கவே இத்தகைய ஆயுத ஏற்றுமதிகள் விதிகளை மீறி, அறத்தை மீறி நடைமுறைப்படுத்தப்படுவதாக விவரம் அறிந்தோர் கூறுகின்றனர்.
உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் பெருமை அடைந்த இந்தியக் கொள்கைகளை புறந்தள்ளி தன்னை வித்தியாசப்படுத்தி காட்ட நினைக்கும் மோடி அரசு, தன்னை விஸ்வ குரு என்ற இடத்திலிருந்து விஸ்வ மித்திரனாக காட்டினாலும் உண்மையில் இரட்டை வேடம் போட்டு இறுதியில் வீழ்ந்த “ஹம்ப்டி டம்ப்டி “ போன்று உலக அரங்கில் மாறியுள்ளது வேதனையே!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
India will support russia,russia our brother.
இந்த கட்டுரை மோடி அரசின் எதிர் அணியினர் ஆல் கட்டமைக்க பட்டது, ஆச்சார்ய படுவதற்கு ஒன்றும் இல்லை.