பாஜக வலையில் சிக்க வைக்கப்பட்ட சித்தராமையா!

-சாவித்திரி கண்ணன்

ஐம்பது ஆண்டு கால பொது வாழ்க்கையில் எளிமையானவர்,நேர்மையானவர் என பெயர் பெற்றவர் சித்தராமையா. தற்போதோ அவமானத்திற்கு மேல் அவமானம்.  நீதிமன்றம் விசாரணைக்கு முகாந்திரம் உள்ளதாக சொல்லிவிட்டது. சித்தராமையாவை பாஜக எப்படி திட்டமிட்டு கவிழ்த்தது எனப் பார்ப்போம்;

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான நில ஊழல் வழக்கிற்கு கர்நாடாகா உயர் நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டன. சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு வேகம் பெற்றுள்ளது.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.2 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியபோது,  முதலில் ஓரிடம் வழங்கப்பட்டது. ஆனால், பார்வதியின் கோரிக்கைபடி, அதற்கு மாற்றாக மைசூருவில் உள்ள பிரதான இடமான விஜயநகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம் என்பவர்  ஊழலுக்கு எதிராக பல வழக்குகளை கடந்த கால் நூற்றாண்டாக தொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எஸ்.எம்.கிருஷ்ணா, குமாராசாமி, தரம்சிங், எடியூரப்பா ஆகியோர் மீதும் வழக்கு போட்டு ஊழலை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆபிராகாம் உடன் பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோரும் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் லோக் ஆயூக்தாவிலும் புகார் அளித்தனர். அவை பலனின்றி போகவே, முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை தனித்தனியாக சந்தித்து புகார் அளித்தனர். அதில், ‘முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா

பாஜக ஆளுநருக்கு இது லட்டு மாதிரியான சமாச்சாரம். அதே சமயம் ஒரு முதல்வர் மீது விசாரணைக்கு அனுமதி தருவது சாதாரண விஷயமல்ல என்பதால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார். அவர்களோ, ”இதில் ஊழல் நடந்திருப்பதற்கான பூர்வாங்க ஆதாரம் இருக்கிறது என்பதால் நீங்கள் தாரளமாக முன்னெடுக்கலாம்” எனக் கூறவும் கவர்னர் அனுமதி தந்துவிட்டார்.

ஆனால், கவர்னர் அனுமதியை கலவரத்துடன் எதிர்கொண்டார் சித்தராமையா. ”இது பாஜகவின் சதி” என்றார். ‘கவர்னர் அனுமதியை ரத்து செய்யக் கோரி’ அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பினார்.

சுரங்க வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பிறகு ஒன்றிய அமைச்சரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, பாஜக தலைவர்கள் சசிகலா ஜோல் மற்றும் ஜனார்தன் ரெட்டி ஆகியோர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி வழங்காததை சித்தராமையா சுட்டிக் காட்டினார்.

ஆனால், இதே சித்தராமையா கடந்த காலத்தில் மேற்படி விவகாரத்தில் ஆளுநர் அனுமதி வழங்காததை கண்டித்து பேசியவர் என்பது கவனிக்கத்தக்கது. ‘தற்போது அந்த ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது போல கவர்னர் என்னையும் காப்பாற்றலாமே’ என்பதாகத் தான் சித்தராமையாவின் கதறலை புரிந்து கொள்ள வேண்டியாதாகிறது.

இது போதாது என்று தாழ்த்தப்பட்ட சாதியான ‘குருபா’ என்ற சாதியை தான் சேர்ந்தவர் என்பதால் விதிவிலக்கு கிடைக்குமா என்றும் முயன்றார். இது சித்த ராமையாவின் மீதான மக்களின் நம்பகத் தன்மையை சிதைத்தது என்றே சொல்ல வேண்டும்.

தற்போது டெல்லி மேலிடம், ”சித்தராமையாவை விட்டுக் கொடுக்க முடியாது” என்று சொன்னாலும், துணைமுதல்வர் சிவக்குமார்  ”நான் சித்தராமையாவிற்கு உறு துணையாக உறுதி குலையாமல் இருக்கிறேன்’’ எனச் சொன்னாலும் அடுத்த முதல்வராவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் ரகசியமான முறையில் சிவக்குமார் உள்ளிட்ட ஒரு சிலர் காய் நகர்த்தி வருவதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

ஏனென்றால், கவர்னர் தாவர் சந்த் கெலாட் தன் மீது விசாரணைக்கு ஆணையிட்டது செல்லாது என்று சித்தராமையா உயர் நீதிமன்றத்திலும், சிறப்பு நீதிமன்றத்திலும் தொடுத்த வழக்குகள் அவருக்கே எதிராகிவிட்டன.

“ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சட்டத்திற்குட்பட்டு தான் அனுமதி வழங்கியுள்ளார். எனவே, ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவும் நீக்கப்படுகிறது” என உயர்நீதிமன்றம் தெரிவித்து சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது ஒரு வகையில் சித்தராமையாவிற்கு பேரவமானமாகும்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று (25.09.2024) விசாரணைக்கு வந்த போது முடா வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் கூறியுள்ளது.

”மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்” என ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த வழக்கின் உண்மைத் தன்மையை பார்ப்போம்;

சம்பந்தப்பட்ட நிலம் சித்தராமையாவின் மைத்துனர் தன் சகோதரியான சித்தராமையாவின் மனைவிக்கு தந்ததாக சொல்லப்படுகிறது. இது ஒரு கிராமத்தின் விவசாய நிலமாகும். இந்த நிலத்தை கட்டிடம் கட்ட தோதாக மாற்றி எழுதி வாங்கித் தான் தருகிறார் மல்லிகார்ஜுனசாமி.

அந்த நிலத்தை மைசூரு நகர்புற மேம்பாட்டு வாரியம் வளர்ச்சி பணிகளுக்காக 2012 வாக்கில் எடுத்துக் கொள்கிறது. அப்போது அதற்கு மாற்றாக தனக்கு நகர்புறத்தின் பிரதான இடத்தில் இடம் ஒதுக்கித் தர கேட்கிறார் பார்வதி. அதன் பிறகு சித்தராமையாவே ஆட்சிக்கு வருகிறார். அப்போதும் பார்வதி கோரிக்கை பெரிதாக பரிசீலிக்கபடவில்லை. ஆனால் பாஜக ஆட்சியில் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பாஜகவினரால் தான் 14 பிளாட்கள் தரப்படுகின்றன. தரப்பட்ட ஆண்டு அக்டோபர் 2021. பாஜக ஆட்சியில் தான் தரப்பட்டது என்பது கவனத்திற்கு உரியதாகும்.

வழக்கு போட்ட சமூக ஆர்வலர் ஆபிரகாம் சுட்டிக் காட்டுவது என்னவென்றால், ‘பார்வதி நிலத்தின் மதிப்பு அரசு மதிப்பீட்டின்படி 3.5 கோடி. மார்க்கெட் மதிப்பீட்டின்படி அதிகபட்சம் 10 கோடி. ஆனால், பார்வதிக்கு மாற்று நிலமாக தரப்பட்ட நகரின் பிரதான இடத்தில் உள்ள 14 பிளாட்களின் மார்க்கெட் மதிப்பு 55.8 கோடி. ஆக, இந்த வகையில் அரசுக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்பதே ஆகும்.

இந்த வழக்கை அவதானித்துப் பார்க்கையில், ‘தனக்கு நியாயமான இழப்பீடு போதுமானது. பொருத்தமற்ற வகையில் அதிக நிலம் தேவையற்றது’ என பார்வதி தர்ப்பில் தவிர்த்து இருக்கலாம். அனுபவசாலியான சித்தராமையாவிற்கு இதை தவிர்க்கும் ‘மனோபலம்’ இல்லாமல் போனதே இன்றைக்கு அவர் படும் அவமானங்களுக்கு காரணமாகும். சுமார் 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் ஊழல், முறைகேடு என பெரிதாக எந்த குற்றச்சாட்டும் இல்லாதவராக வலம் வந்த சித்தராமையாவை பாஜக திட்டமிட்டே சிக்க வைத்துள்ளது. ‘தகுதிக்கு மீறிய எதையும் தவிர்க்கும் ஆன்ம பலம்’ இருந்திருக்குமேயானால், மாற்று நிலத்தை மைசூரு நகர்புற மேம்பாட்டு வாரியத்தை மறுபரீசீலனை செய்யக் கோரி இருக்கலாம் சித்தராமையா.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time