உள்ளாட்சிகளின் உண்மை அரசியலை பேசும் நந்தன்!

-நந்தகுமார் சிவா

தமிழகத்தில் பல கிராமங்களின் நடந்து கொண்டிருக்கும் பேசப்படாத பிரச்சினையை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளது நந்தன்.  ஒரு தலித், ஊராட்சி மன்றத் தலைவராகும் போது அங்கு ஆதிக்க சாதிக்காரர்களின் ரியாக்‌ஷன் யதார்த்ததில் எவ்வாறு இருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது அபாரம்;

அச்சு அசலான கிராமத்து வெள்ளந்தி மனிதனான அம்பேத் குமார்( சசிகுமார்)  ஊராட்சி மன்றத் தலைவரானாலும், ‘தான் தலைவரில்லை, ‘வெறும் ரப்பர் ஸ்டாம்பு’ தான்’ என அறிய வரும் காட்சிகளில், ஏமாற்றத்தில் நிலைகுலைந்து போகிறார். இந்தக் காட்சிகள் இந்த நாட்டில் ஜனநாயகம் என்பது எந்த அளவுக்கு உள்ளது என்பதையும், சாதி ஆதிக்கம் எவ்வளவு ஆழ வேரூன்றி உள்ளது என்பதையும் முகத்தில் அறைந்தார் போல நமக்கு உணர்த்துகிறது.

பேசப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பேசுகிறது

தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றில் திரைப்படங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. முழுக்க முழுக்க வணிக, பொழுதுபோக்கு நோக்கத்தோடு பெரிய முதலீடுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களைத் தாண்டி சமூக கருத்துக்களையும், நிகழ்வுகளையும் அலசும் திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் சமீபத்தில் வருவதைப் பார்க்கிறோம்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைச் சூழல், பெண்களுக்கு எதிரான வன்முறை, கல்வியில் சீர்திருத்தம், அரசுப் பள்ளிகளின் மேம்பாடு என வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படங்களின் வரிசையில் தற்போது நந்தன் திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

அரசியல் என்றாலே தேர்தல், கட்சி, கரைவேட்டி, எம்.எல்.ஏ சீட்டுக்கான பேரம் எனச் சித்தரிக்கப்படும் கதைகளுக்கு மத்தியில் ஒரு ஊராட்சியின் அரசியல் களத்தைப் படத்தின் கருவாக எடுத்துச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.

தாத்தா, தந்தை, மகன் எனத் தலைமுறை தலைமுறையாக ஆதிக்கம் செலுத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்), ஊராட்சியின் நிரந்தர தலைவர் என்ற தொனியில் வலம் வரும் ஒவ்வொரு காட்சியிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உலக அரசியலும் உள்நாட்டு அரசியலும் அதற்கே உரியச் சவால்களை எதிர்கொள்வது போல் உள்ளூர் அரசியலும் அதற்கே உரித்தான எக்கச்சக்க சவால்களைக் கொண்டது.

சொந்த உறவுகள், நட்புகள், நமக்கு விவசாய வேலை தருபவர், வேலை பெறுபவர் எனப் பல உறவு முறைகள் உள்ளூரில் பின்னிப் பிணைந்து இருக்கும் சூழலில் விமர்சனம் என்பது விமர்சனமாக மட்டும் பார்க்கப்படாது. குடும்ப உறவினர்கள் மூலமாகவும், வேறு வழிகளிலும் நமக்கு வரும் எதிர்வினைகளைப் பல சமயங்களில் நாம் எதிர்பார்த்துக் கூட இருக்க மாட்டோம். உள்ளூரில் நாம் செய்யும் அரசியல் நம்மோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. இதை மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது நந்தன். குறிப்பிட்ட சமூகத்தினரின்  கோயிலில் வைத்து ஊராட்சித் தலைவரின் பதவி ஏலம் விடும் போது அதனை  எதிர்த்து நின்று கேள்வி கேட்ட  குரலில் இருந்து  படம் துவங்குகிறது. பஞ்சாயத்துத் தேர்தல் முறையாக நடக்க வேண்டும், ஜனநாயகத்தை ஏலம் விடக்கூடாது என நந்தன் எழுப்பும் குரல் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் குரலாக இருக்கிறது.

பட்டியலின சமூகத்தினருக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான வழி

தமிழ்நாட்டில் சுமார் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஒவ்வொரு விதமான அரசியல் சூழல் உண்டு. பட்டியலின சமூகத்தினருக்காக ஒரு ஊராட்சியின் தலைவர் பொறுப்பு ஒதுக்கப்படும் போது காலங்காலமாக ஆதிக்க மனோபாவத்தோடு தலைவர் பதவி என்பது தங்களுக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டார்கள் என்பது போல் நடந்து கொள்ளும் குடும்பத்தினர் எப்படி அதனைக் கையாளுகிறார்கள்,  எவ்வாறெல்லாம் குறுக்கு வழியில் சட்டத்துக்குப் புறம்பான அணுகுமுறையைக் கையில் எடுக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது நந்தன். தமிழ்நாட்டில் நாம் உற்று நோக்க வேண்டிய சமகால சமூக அரசியல் ஒடுக்கு முறைகளில் இதுவும் ஒன்று. அதனை நமக்கு உரக்கச் சொல்லும் குரலாக இருக்கிறது நந்தன்.

வெறுப்பு, சந்தர்ப்பவாத அரசியல், சூழ்ச்சி, பொய் அழுகை, ஏளன சிரிப்பு என ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் கோப்புலிங்கம் கதாபாத்திரத்தை மிஞ்சுகிறார் அவரது தந்தையாக வரும் ஜி.எம்.குமார். நடமாடமுடியாமல், மூத்திரப்பையோடு படுத்த படுக்கையாய் இருந்து கொண்டே ஆணவத்தைக் கக்கும் வசனங்களில் ஆதிக்க மனோபாவத்தின் வேர்களைத் தனது முக பாவனையிலேயே காட்டி மிரட்டுகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பட்டியலின சமூகத்தினரின் மக்கள் தொகை 18 சதவீதமாக இருப்பதனால் அதற்கு இணையான அளவில் ஊராட்சிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 12,525 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் சுமார் 2,255 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள் பட்டியலின சமூகத்தினருக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் சரி பாதி இடம் (1,128) பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல மொத்தம் உள்ள 99,327 ஊராட்சி வார்டு உறுப்பினர்களில், 17,879 உறுப்பினர்கள், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் சரி பாதி(8,940) பட்டியலின மகளிர் உறுப்பினர்கள்.

சுமார் 20,134 பட்டியலின ஊராட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் பெற்ற தமிழ்நாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அவர்களை எவ்வாறெல்லாம் வலுப்படுத்த வேண்டும்? என்பது அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சமூக அரசியல் முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாட்டின் சமூக நீதியோடு சம்பந்தப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பட்டியலின ஊராட்சி பிரதிநிதிகளுக்கு முறையான வழிகாட்டுதலும், பயிற்சியும், செயல்படுவதற்கான ஊக்கமும், ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கும் அரசியல் பார்வை தமிழ்நாட்டில் நிலவுகிறதா ?

சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவது தான் பட்டியலின சமூகத்தினருக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரே வழி என நம்புகிறோமா?

சட்டமன்றத்தில் குரல் எழுப்பும் உறுப்பினர்கள்  இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். உள்ளாட்சியில் உள்ள பட்டியலின, பட்டியல் பழங்குடி தலைவர்களின் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கவனம் கொடுக்க வேண்டிய அவசியத்தை அழுத்தமாகச் சொல்கிறது நந்தன்.

தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு பட்டியலின ஊராட்சி தலைவர் மக்களின் நம்பிக்கையினை பெறும் வரை, அவரால் நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியாது என்றே அவரை சுற்றி இருக்கும் பலர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதில் பட்டியல் இன பெண் ஊராட்சித் தலைவர்களுக்கு எப்பொழுதும் சவால்கள் அதிகம் தான். அவரால் முடியாது. இவ்வளவு அழுத்தங்களையும் தாண்டி  இன்று சிறப்பாக நிர்வாகம் செய்யும் பல தலைவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  ‘ஆள்வதற்கு அல்ல… வாழ்வதற்குக் கூட இங்கு அதிகாரம் தேவை,’ என்கிற வசனம் நந்தனின் நிலையை நச்சென சொல்லி விடுகிறது.

அலுவலர்களின் பங்கு

இந்த திரைப்படத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக வரும் சமுத்திரக்கனி , கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டு, பொறுமையாகப் பேச வேண்டிய இடத்தில் பொறுமை காத்து, ஒவ்வொரு காட்சியிலும், அவரின் உடல் மொழிகளும் நடிப்பும் மிகச் சிறப்பு . மனசாட்சியை அடகு வைத்துவிட்டுத் தோற்றுப் போனவர்களை வெற்றி பெற்றவர்களாகவும் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்காமல் அவர்கள் தோற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்ட வரலாறு பல உள்ளாட்சித் தேர்தலில் நடந்திருக்கிறது. ஊராட்சித் தலைவர் பொறுப்பை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதைக் கதாநாயகன் சசிகுமாருக்கு எடுத்துக் கூறும் அலுவலர் சமுத்திரகனி கதாபாத்திரம் அற்புதம்.

ஊராட்சியில்  மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளரின் (கிளர்க்) எந்தவித ஒத்துழைப்பும் இல்லாமல் இன்றும் பல கிராம ஊராட்சிகளில் தலைவர்கள் பாதிக்கப்பட்டுக்  கொண்டுதான் இருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஆதிக்க சமூகத்தோடு இணைந்து கொண்டு சட்டத்தைக் கொஞ்சமும் மதிக்காமல், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  சசிகுமாரின் அலைபேசி அழைப்பை எடுப்பதைக் கூட கவுரவக்குரச்சலாக நினைக்கும் ஊராட்சி செயலாளர் கடைசியில் சசிகுமாரின் பக்கம் நிற்கும் காட்சி, ஜனநாயகமா? அல்லது ஆதிக்க மனோபாவமா? என்ற போரில் ஜனநாயகம் வென்றதற்கான அடையாளம்.

உள்ளூர் அமைப்புகளும் ஊராட்சியும்

உள்ளூர் சார்ந்த மிக முக்கியமான பல நிர்வாக பொறுப்புகளைக் கொண்டிருக்கும் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த சமூகத்தைச் சார்ந்த தலைவராகவோ, உறுப்பினராக இருந்தாலும் அவர்கள் திட்டத்தினை, கிராம ஊராட்சியின் வளர்ச்சியினை செயல்படுவதற்குச் சட்டமும் அலுவலர்களும் ஒத்துழைக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது திரைப்படம்.

மிக முக்கியமான இந்த ஊராட்சி நிர்வாகத்தின் சமூக அரசியல் சூழலை நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்வதற்கு நந்தனின் கதைக்களம் புதிய வெளிச்சத்தை கொடுத்திருக்கிறது. நந்தனின் குரல், அது மாற்றத்திற்கான குரல். நந்தன் நமக்கானவன்.

-நந்தகுமார் சிவா

சமூக செயல்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time