அமைச்சரவை மாற்றத்தின் உண்மை பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

இந்த அமைச்சரவை மாற்றங்கள் அனைத்துமே முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவுகளே என்றாலும், அதன் பின்னுள்ள அரசியல் ஆழமானது. ஏன் சிலரது பதவி பறிக்கப்பட்டது? ஏன் சிலருக்கு வழங்கப்பட்டது? எதற்கு இந்த மாற்றங்கள்?  இவை எளிதில் உய்த்தறிய முடியாதது…என்றாலும், உண்மை இது தான்;

திமுக அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மாற்றங்கள் தொடர்பான உரையாடல்கள் எல்லாம் அவரவர்கள் அனுமானத்தில் இருந்தும், அனுபவத்தில் இருந்தும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், எதற்கு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்? எதற்கு சில அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு எந்த விவரத்தையும் முதல்வர் சொல்லவில்லை. அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் நினைத்திருப்பாரா..? என்பது கூட ஆச்சரியம் தான்.

நடப்பது மக்களாட்சி என்றாலும், முதல்வர் என்ற மன்னரின் சுய விருப்பு, வெறுப்பு அடிப்படையில் தான் எல்லா நகர்வுகளும் உள்ளன. முதல் அமைச்சரின் முதலாவது விருப்பம் தன் மகனை துணை முதல்வராக்க வேண்டும் என்பது. அரசியல் அமைப்பு சட்டப்படி துணை முதல்வர் என்ற பதவியே கிடையாது. ஆகவே, அது பதவி ஏற்பு தேவைப்படாத நியமனப் பதவியாகும். அதை நிறைவேற்றுவதற்கு மாபெரும் ஆதிக்க சக்தியான மோடியின் ஏற்பை பெறுவதற்காக முதல் நாளே டெல்லி சென்று பார்த்து விட்டார். அத்துடன் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ‘அவரை மீண்டும் டாஸ்மாக் அமைச்சராக்க மாட்டேன். அதானியிடம் இருந்து மின்சாரத்தை அதிகமாக கொள்முதல் செய்வதற்கான மின்சாரத் துறையைத் தருகிறேன்..’ என மோடி மனதை குளிர வைக்கும்படி நடந்து கொண்டிருக்கிறார்.

கலைஞர் காலத்தில் இருந்து பொதுவாக ‘அமைச்சரவையில் இரு இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு’ தரப்படுவது வழக்கம். அந்த வழக்கப்படி, முதலில் செஞ்சி மஸ்தானுக்கும் , நாசருக்கும் வழங்கப்பட்டது. ஆனால், பாஜகவின் சகவாசமா? அல்லது நிர்பந்தமா? தெரியவில்லை. அன்று நாசரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது. தற்போது நாசருக்கு தந்து, செஞ்சி மஸ்தானிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

நாசர் குற்றம் செய்தவர் என்பதால் பறிக்கப்பட்டிருந்தால் மீண்டும் அவருக்கு ஏன் அமைச்சர் பதவி தர வேண்டும்? செஞ்சி மஸ்தான் என்ன குற்றம் செய்தார்? சிறுபன்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை ஆகியவற்றை அவர் சின்சியராகவே கவனித்து வந்தார்…. அதை அவரிடம் இருந்து பறிப்பானேன்…?

அடுத்ததாக மனோ தங்கராஜ். இவர் திராவிட சித்தாந்தத்தில் பற்றுள்ளவர். பாஜகவை எதிர்ப்பதில் முனைப்பு காட்டியவர். அதே சமயம் இவரிடம் தரப்பட்ட பால்வளத்துறை, தொழில் வளர்ச்சித் துறை ஆகியவற்றில் ஊழல் முறைகேடுகளில் திளைத்தார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எதிர்கட்சியாக இருக்கும் வரை நெல்லை மற்றும் குமரி மாவட்ட இயற்கை வளங்களான மலைகள் சூறையாடப்படுவதை கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நெல்லை, குமரி மாவட்ட மலைகள் விழுங்கப்படுவதில் முன்னணியில் நின்றார். கனிம வளச் சுரண்டலில் உச்சம் தொட்டார். ஆனால், இதற்காக அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறதா? என்றால், வாய்ப்பில்லை என்று தான் அந்தக் கட்சியினரே சொல்கிறார்கள். காரணம், கனிம வளக் கொள்ளையில் அவரைக் காட்டிலும் உச்சம் தொட்ட  துரைமுருகன் அமைச்சரவையிலும், கட்சியிலும் முதல்வருக்கு அடுத்த உச்ச நிலையில் உள்ளார்.

பால்வளத்துறையை நாசரைப் போலவே இவரும் நாசப்படுத்தி ஆவினில் உள்ள ஊழல் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி வசூல் வேட்டையாடினார் மனோ தங்கராஜ். ஆனால், அமைச்சர் பதவி பறிப்புக்கு பிறகு தொழில் துறையிலும், பால்வளத் துறையில் ஏதோ சாதனை படைத்தவர் போல பீற்றிக் கொள்கிறார். ‘இவர் சாதனை படைத்தாரா? அல்லது சறுக்கினாரா?’ என்பதெல்லாம் முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லை… ‘பாஜகவின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கிறார்’ என்பது மட்டும் அவருக்கு நன்கு தெரிந்தது. விளைவு, இதோ வீழ்த்தப்பட்டுள்ளார்.

இதே போல பொன்முடியிடம் இருந்து  உயர் கல்வித் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் உயர்கல்வித் துறையை உயர் வருமானம் தரும் துறையாக மட்டுமே பாவித்து எடுத்தற்கெல்லாம் பணம் பார்த்தார். அதற்கு சிறந்த உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால், அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட திமுக முன்னோடிகளை உருவாக்கிய பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை கல்லூரிகளின் 132 பேராசிரியர் பணியிடங்களை தகுதி அடிப்படையில் பூர்த்தி செய்யத் தடை விதித்து, ‘கோடிக்கணக்கில் கையூட்டு தந்தால் தான் அனுமதிப்பேன்’ என கடந்த இரண்டாண்டுகளாக படாதபாடுபடுத்தியதைச் சொல்லலாம்.

இப்படி எல்லாம் செய்ததை கண்டு பொங்கி எழுந்து அவரிடம் இருந்த உயர் கல்வித் துறை பறிக்கப்பட்டதா..? இல்லை, பொன்முடியை விட அதிகமாக எ.வ.வேலுவும், மூர்த்தியும், கே.என். நேருவும் அவரவர் துறைகளில் வாரிச் சுருட்டி வளம் பார்த்து வருகின்றனரே… எனில், உயர் கல்வித் துறையில் தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கும், கவர்னர் ஆர்.என்.ரவியின் சனாதனப் பேச்சிற்கும் எதிராக அவர் இருந்ததை பாஜக தலைமை விரும்பவில்லை… ஒரு நெருடலை இது ஸ்டாலினுக்கு ஏற்படுத்தியதும், பாஜகவை சமாதானம் செய்யவும் இந்த பதவி பறிப்பு நடந்துள்ளது என்பதே உண்மை.

‘கொள்ளை எனக்கு பிரச்சினை இல்லை. கொள்கையைப் பேசி ஆட்சிக்கு சிக்கலை தரும் அமைச்சர்களே பிரச்சினை’ என முதல்வர் கருதுகிறார் என்பதே தெளிவு. இந்த வகையில் தான் நிர்மலா சீதாராமனுக்கு நச் கேள்விகளையும், சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு எச்சரிக்கையும் தந்த அமைச்சர் – பாஜக தனக்கு கடும் எதிரியகக் கருதிய பி.டி. தியாகராஜன் பதவி பறிக்கப்பட்டது. தர்மபுரி எம்.பியாக இருந்த திராவிட சித்தாந்த பற்றாளர் செந்தில்குமாருக்கு அடுத்து எம்.பி சீட்டே தரப்படவில்லை.

ஏழை எளிய பால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பால்வளத் துறையையும், எளிய கைவினைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் சம்பந்தப்பட்ட காதி மற்றும் கிராமத் தொழில்துறையையும் ஊழலுக்கு பேர் போன ராஜகண்ணப்பனுக்கு தந்தது உண்மையிலேயே அதிர்ச்சியும் கவலையையும் தருகிறது. அட்லீஸ்ட், இது போன்ற துறைகளுக்கு கூட உத்தமராக செயல்படக் கூடிய ஆட்களே இல்லையா திமுகவில்..? என்ற கேள்வி எழுகிறது.

திமுகவில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற கோவி செழியன் நல்ல அறிவாளி. அவருக்கு கல்வி அமைச்சர் பதவி தரப்பட்டது தவறல்ல. தஞ்சாவூர் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் விதமாகவும், ஆதிதிராவிடர் சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இவரது நியமனம் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது ஐந்து பல்கலைக்கழங்களில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதே போல் மூன்று பல்கலைக்கழங்களில் இன்னும் ஒரு ஆண்டுக்குள் துணை வேந்தர் பதவி முடிவுக்கு வருகிறது. 2 பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்களுக்கு ஓராண்டு பதவி  நீடிப்பு ஆளுநரால் தரப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரால் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவியோடு முரண்டு பிடிக்காமல் அனுசரணையாக செயல்பட தோதானவராக ஸ்டாலின் கோவி செழியனை அடையாளம் கண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இனி வரும் காலங்களில், ‘மேடைகளில் பாஜக எதிர்ப்பு எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ஆட்சியில் அவர்கள் கொள்கைக்கு தோதாக நடக்கும் அமைச்சர்களுக்கே முன்னுரிமை’ என்பது எழுதப்படாத விதியாக செயல்படுத்தப்படலாம் என்றே தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time