வீரச்செறிந்த போராட்டங்களை நடத்தி தஞ்சைத் தரணியில் பண்ணை அடிமை முறைக்கு முற்றுப் புள்ளி வைத்த சீனிவாசராவின் தியாகம் அளப்பரியது. சினீவாசராவின் திருவுருவம் இன்றும் பல வீடுகளில் வைத்து நன்றியுடன் நினைவு கூறப்படுகிறதென்றால், அவரது சாகஸ வாழ்க்கையை சற்று பார்ப்போமே;
“குளிரும் சுடுதலும் உயிருக்கு இல்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை;
எடுமினோ அறப் போரினை “ -பாரதி
பிஎஸ்ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட சினீவாசராவ் எனும் மாமனிதன் 54 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். 1920 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தால் 13 வயதிலேயே அரசியல் வாழ்வில் ஈர்க்கப்பட்ட மாணவர் பிஎஸ்ஆர் 1930 ஆம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை விடுத்து விடுதலைப் போரில் ஈடுபட்டார். அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் ஆங்கிலேய காவல் துறையின் கொடும் தாக்குதலுக்கு உள்ளானார். சாக்கடையிலே தூக்கி வீசப்பட்டார். கடுமையான காயங்களுடன் மூச்சுப் பேச்சற்ற நிலையில் கிடந்த அவரை, தாசித் தொழில் செய்து வந்த அன்னை ஒருவர் தன் சொந்த மகனைப் போல் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
சிறைச்சாலையில் அவர் கம்யூனிஸ்ட் ஆக மாறினார். அமீர் ஐதர் கானின் நட்பும் ஜீவா, பி. ராமமூர்த்தி ஆகியோரின் தொடர்பும் அவரை முழுமையான கம்யூனிஸ்ட் ஆகிட செழுமைப்படுத்தியது.
சிறையில் அமீர் ஐதர் கான் ஒரு புத்தகம் குறித்து சீனிவாச ராவிற்கு விளக்கிச் சொன்னார். அது தான் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ . இதில் தெளிவு பெற்ற சீனிவாச ராவ் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தமிழ்நாட்டு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது . சீனிவாச ராவ், பி. இராமமூர்த்தி, ஜீவா, ஏ. எஸ். கே., சி. எஸ். சுப்பிரமணியன், நாகை கே. முருகேசன், டி.ஆர். சுப்பிரமணியம், சி.பி. இளங்கோ, திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருந்தனர்.
1936 ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. தேசிய காங்கிரஸுக்குள் ஒரு குழுவாக செயலாற்றிய பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட்: என்ற கட்சியை தோற்றுவித்து செயல்பட்டனர். ஜீவா ‘ஜனசக்தி’ இதழைத் தொடங்கினார். அதில் உதவி ஆசிரியர் சீனிவாராவ். நன்கு ஆங்கிலம் அறிந்த சீனிவாசராவ் நியூஏஜ் பத்திரிக்கையில் கட்டுரைகளை எழுதினார். அதன் தமிழாக்கம் ஜனசக்தியில் வெளியிடப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு பலமுறை கைது செய்யப்பட்டார். தலைவர்கள் தங்களுக்குள் வேலை பிரிவினையை மேற்கொண்டனர். ஏஎஸ்கே துறைமுகத் தொழிலாளர்களை அணி திரட்டவும் , ஜீவா தமிழ்நாட்டு தொழிலாளர்களையும், கலை இலக்கிய பணிகளில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது . பிஎஸ்ஆர் தஞ்சை டெல்டாவின் விவசாயிகளை ஒன்றிணைக்க பணிக்கப்பட்டார்.
1942 இல் கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வமாக செயல்பட தொடங்கிய போது சீனிவாச ராவ் தஞ்சை காவிரி டெல்டா பகுதிக்கு விவசாயிகளை அணி திரட்டச் சென்றார். சீனிவாசராவுக்கு ஆங்கிலமும் கன்னடமும் தெரியும் . மழலைத் தமிழில் விவசாயிகளிடையே பேசத் தொடங்கினார்.
தஞ்சையில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் நிலப் பிரபுகளுக்கும், மடங்களுக்கும், ஆதீனங்களுக்கும் சொந்தமாக இருந்தன. இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்று பாரதி சொன்னது போல கொடுமைகளின் கூடாரமாக அன்றைய காவிரி பாயும் தஞ்சை மண் திகழ்ந்தது .
பண்ணை அடிமைகளுக்கு எந்த உரிமையும் இல்லை. சாணிப் பாலும் , சவுக்கடியும் சர்வ சாதாரணமாக விவசாயத் தொழிலாளர்களின் மீது நடத்தப்பட்டது . சொல்லெனா அவதிக்கு ஆட்பட்ட அந்த விவசாயிகளின் வரலாறு கேட்பதற்கும் படிப்பதற்கும் கண்ணீரை வரவழைக்கும். விடியற்காலை 3 மணிக்கு ஆலையின் சங்கு போல் சத்தத்தை கேட்டவுடன் விவசாயிகள் முழிக்க வேண்டும். 4 மணிக்கு தயாராக வேண்டும். மாடு பூட்டி வயலை உழ வேண்டும். காலை 11:00 மணிக்கு கஞ்சி தண்ணிக்காக வரலாம். ஏன் என்று கேட்க முடியாது. இரவு வரை வேலை செய்ய வேண்டும்.
வேலையில் சிறிது பிசகினாலும், விவசாயத் தொழிலாளர்கள் சவுக்கடி, சாணிப்பால் தண்டனை மட்டுமல்ல. சவுக்கின் முனையில் 5 பிரிகள் இருக்கும். கூறிய கூழாங்கற்கள் அதில் கட்டப்பட்டிருக்கும். சுடு மணலில் உடல் எல்லாம் எண்ணையைத் தடவி உருட்டி விடுவார்கள். ஒரு காலைத் தூக்கி கொண்டு கொக்கை போல் நிற்க வைப்பார்கள்.
பண்ணையார் அனுமதி கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்ளலாம். ருதுவான பெண்களை பண்ணையார்கள் மிருகங்கள் போல் மேய்வார்கள்.
இதே நிலைதான் குத்தகை மற்றும் சிறு விவசாயிகளுக்கும் இருந்தது. மணலி கந்தசாமி உட்பட பல தோழர்கள் ஒன்றிணைந்தனர் .
கொடுமைகளை கேட்டறிந்தார் சீனிவாச ராவ். இரவினில் கும்மிருட்டில் கூட்டங்கள் நடைபெறும். சீனிவாச ராவோடு இணைந்து பணியாற்றிய மணியம்மை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சிலரின் பெயரை சொல்லி அழைப்பார்கள். வர்க்கப் போராட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர் . பலர் அடக்கு முறையினால் உயிரிழந்தனர். சீனிவாச ராவின் உயிரைக் பறிப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் முறியடிக்கப்பட்டன.
உழைக்கும் மக்களை திரட்டுவதற்கு சினீவாசராவிற்கு மொழி தடையாக இல்லை. ‘’தூக்கிப் பிடித்தால் கொடியுண்டு, திருப்பி பிடித்தால் தடி உண்டு” எனவும், ”அடித்தால் திருப்பி அடி, துண்டை இடுப்பில் கட்டாதே, தோளில் ஏற்று ” எனவும் கூறி, விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் ஊக்குவித்தார். ஊர்கள் தோறும் அமைப்புகள் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்டு பல்லாயிரங்களில் விவசாயிகள் சேர்ந்தனர். சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் விவசாயிகளிடையே ஒற்றுமையை உருவாக்கியது.
அஞ்சா நெஞ்சனாய் சீனிவாச ராவ் பணி புரிந்ததற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் ஒன்றைச் சொல்லலாம்.
குன்னியூர் கிராமத்தின் அய்யனார் கோவில் மைதானத்தில் சீனிவாச ராவ் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒடிசலான தேகம். ஆனால், கூறிய பார்வை. திடீரென சிலர் கொடிய ஆயுதங்களை ஏந்தி தாக்க வந்தனர். யாரும் கலைந்து போக வேண்டாம் என தடுத்த ராவ் ‘’வாழ்வது ஒரு முறை; இழப்பதற்கு எதுவுமில்லை; உரிமைக்காக போராடுங்கள் ” என ஆவேசமாக முழுக்கமிட்டார். அனைத்து விவசாயிகளும் ஒன்றாக சேர்ந்து ஆவேசத்துடன் எழுந்தவுடன் பண்ணை அடியாட்கள் ஓட எத்தனித்தார்கள். அவர்களை யாரும் தாக்கிவிடாமல் தடுத்த சீனிவாசராவ் அவர்களிடம் சொன்னார் ‘’உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம்”
தாக்க வந்தவர்கள் தலை குனிந்து நின்றார்கள். மக்களைத் திரட்டிய பிஎஸ்ஆர் தான் உண்மையான கதாநாயகன்.
இறுதியிலே பண்ணையார்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள். மன்னார்குடி அருகில் உள்ள தென்பறை என்ற கிராமத்தில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சவுக்கடி, சாணிப் பாலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முத்திரை மரக்காலில் நெல் அளக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. குறைந்தபட்ச கூலியாக சின்னபடிக்கு பெண்களுக்கு இரண்டு படி எனவும், ஆண்களுக்கு மூன்று படி எனவும் நிர்ணயிக்கப்பட்டது. குத்தகை மற்றும் சிறு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. இதுவே மன்னார்குடி ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.
1944 ஆம் ஆண்டு மே மாதத்திலே திருத்துறைப்பூண்டி அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோவிலில் திருவிழா. கொடியேற்றி விட்டால் 15 நாட்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் தெருக்களில் நடக்க முடியாது. இந்த சாதிய சமூக அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி சமூக அடக்கு முறைகளை உடைத்து அவர்களை நடமாடச் செய்தார். இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு, மீண்டும் பொதுவுடமை இயக்கம் தடை செய்யப்பட்டது. தலைமறைவு வாழ்க்கையை இந்திய விடுதலை வரை அனுபவித்தவர். விடுதலைக்குப் பின்பும் தலைமறைவு சிறை வாழ்க்கை வாழ்ந்தவர் .
சீனிவாச ராவிற்கும் தலைமறைவு காலத்தில் காதல் மலர்ந்தது. சேலத்தைச் சேர்ந்த நாச்சியாரம்மாளை திருமணம் செய்து கொண்டார்.
கடும் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டார். தொடர்ந்து அலைச்சல் காரணமாக உடல் நலனை பேண முடியவில்லை . ஆஸ்த்மா நோயால் பல வருடங்கள் அவதிப்பட்டார்.
தஞ்சை மக்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டார் .1952- ம் ஆண்டு நில வெளியேற்ற எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். இவருடைய போராட்டத்தினால் பல்வேறு நில பாதுகாப்புச் சட்டங்கள் கிடைத்தன.
1960 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டம் வேண்டும் என பிஎஸ்ஆர் தலைமையில் மதுரையில் இருந்து சென்னைக்கு விவசாயிகளின் 600 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்ற சீனிவாசராவ் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் வந்து இளைஞர் நல்லகண்ணுவைச் சந்தித்தார். மறியல் செய்பவர்களை வாழ்த்தி திரும்பி சென்றார். கடைசியாக ஒரு கடிதத்தை தோழர் நல்லகண்ணுவுக்கு அனுப்பினார். அவரும் அக்கடிதத்தை நெடுநாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வந்து இறங்கிய சீனிவாச ராவின் உயிர் அங்கேயே பிரிந்தது.
தமிழ்நாட்டின் சிறைகளில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 ,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கள் அஞ்சலியை உண்ணாவிரதம் இருந்து வெளிப்படுத்தினார்கள்.
தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அவர் உடலைக் கொண்டு சென்ற போது இலட்சக் கணக்கான மக்கள் கிராமங்கள் தோறும் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Also read
சீனிவாச ராவின் போராட்டங்களுக்குப் பிறகே தமிழகத்தில் நிலச் சீர்திருத்தங்கள் ( நிலத்தின் உச்சவரம்பு நிர்ணயம் ) சட்டம், 1961 தமிழ் நாடு சட்டம் 58 /1961 உருவாக்கப்பட்டது . தொடர் போராட்டங்களின் விளைவாக 1970 ஆம் ஆண்டு 30 நிலையான ஏக்கர் என்பது குறைக்கப்பட்டு 15 நிலையான ஏக்கர் என திருத்தம் செய்யப்பட்டது.
நிலப்பிரபுத்துவ பண்ணை முறை கொடுமைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது. வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கு முதல் கரம் உயர்த்தியவர் சீனிவாச ராவ்.
தன்னுடைய வரலாற்றை எந்த இடத்திலும் நினைவு கூறாத சீனிவாசராவ், பிறந்த இடம் எது என்று தேடி அலைந்து பார்க்கும் போது கர்நாடக மாநிலத்தின் வடகரா பகுதியில் வைதீக பிராமண குடும்பத்தில் 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி பிறந்தவர் என்பதை கண்டறிந்தார்கள்.
அக்னி புத்திரனாய் வாழ்ந்த சீனிவாசராவ் அவர்களுக்கு திருத்துறைப் பூண்டியில் அரசு மணிமண்டபம் எழுப்பி உள்ளது.
வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை.( இன்று சினிவாசராவின் 63 வது நினைவு தினம்)
கட்டுரையாளர்; எஸ். காசி விஸ்வநாதன்
இடதுசாரி சிந்தனையாளர்
வீரவணக்கம் செலுத்துவோம்!