வரலாறு காணாத வகையில் தமிழகம் கண் விழி பிதுங்குகிறது, காவல்துறை அராஜங்களால்! கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக போன்றவையே இதனை பலமுறை பேசிவிட்டன. ஏகப்பட்ட குண்டர் சட்ட கைதுகள், 20க்கு மேற்பட்ட என்கெளண்டர்கள்..! இதன் பின்னணியில் இருக்கும் நிஜமான அரசியலை பேசாமல் இதற்கு விடிவில்லை:
ஆளுனர் ஆர்.என்.ரவி பதவி ஏற்றவுடன் அன்றைய டிஜிபி சைலேந்திரபாபுவை அழைத்துப் பேசினார் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ந்தேதி! அதற்கடுத்த நாளிலிருந்து அதாவது தமிழகம் முழுவதும் செப்.23 அன்று இரவு முதல் நான்கைந்து நாட்களில் நடந்த இந்த வேட்டையில் 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகளை கைது செய்யட்டும்! ஆனால், குற்றச்செயல்கள் நடக்கும் போதோ அல்லது நடந்ததின் தொடர்ச்சியாகவோ அந்த நடவடிக்கைகள் இருந்தால் வரவேற்க வேண்டியதே! ஆனால், யாரோ ஒரு ஆளுனர் ஏதோ கூப்பிட்டு பேசினார் என்பதற்காக போனவன், வந்தவன் ஏழெட்டு வருஷத்திற்கு முன்பு ஏதோ ஒரு வழக்கிலே சம்பந்தப்பட்டவன் என எல்லாரையும் அள்ளி எடுத்துட்டு போய் கணக்கு காட்டுவது தான் வருத்தமளிக்கிறது! எத்தனை நிரபராதிகளை தூக்கத்தில் தட்டி எழுப்பி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!அவங்க வீட்டுல பெண்டாட்டி,பிள்ளைகள் எப்படி பரிதவித்திருப்பாங்களோ..?
மத்திய ஆட்சியாளர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் அறிந்து நடந்து கொள்ளச் சொல்லிவிட்டு, முதல்வர் ஒதுங்கி கொண்டதாகத் தெரிகிறது.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் முதன் முதலில் நடந்த என்கெளண்டர் கவர்னர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் நடந்த காஞ்சிபுரம் என்கெளண்டர். இதின் செயின் பறிப்பு திருடனான முர்தூர்ஷா ஷேக்கை போட்டுத் தள்ளியது போலீஸ். செயின் பறிப்பு திருடனைக் கூட என்கெளண்டர் செய்வது எவ்வளவு கோழைத்தனம். கடந்த ஆண்டு வரையிலான கணக்குப்படியே 16 க்கும் மேற்பட்ட என்கெளண்டர்கள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு டிசம்பரில் ரகு என்கின்ற ரகுவரன், பாஷா என்கின்ற அசேன் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் காஞ்சிபுரம் போலீசார்.
ஆர்ம்ஸ்டிராங் கொலையை தமிழக காவல்துறை முன்கூட்டியே தெரிந்திருந்தும் தடுக்கவில்லை. காரணம், ஆர்ம்ஸ்டிராங்கை தங்களால் சுட முடியாது. சுட்டால் அது அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என்பதால் ரவுடிகள் திட்டம் போட்டு பக்காவாக போட்டுத் தள்ளும் வரை காத்திருந்தனர்.
ஆர்ம்ஸ்டிராங் கொல்லப்பட்டதை சாக்காக வைத்து, தாங்கள் கொல்ல விரும்பிய ரவுடிகள் மூவரை அடுத்தடுத்து கொன்று போட்டுவிட்டனர். அதுவும் தானாக சரணடைந்த திருவேங்கிடத்தை அதிகாலை ஆள் நடமாட்டமில்லாத நேரத்தில் அழைத்துச் சென்று போட்டுத் தள்ளி உள்ளனர். கைதிகளை விலங்கிட்டுத் தான் வெளியில் அழைத்துச் செல்வர். அவர்கள் ஓடவோ, தாக்கவோ முடியாது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆகவே போலீஸ் எழுதிய திரைக்கதையை யாரும் நம்பத் தயார் இல்லை.
தற்போது கொல்லப்பட்ட சீசிங் ராஜாவின் காவல்துறை படுகொலைக்கு முந்திய நாள் மாலை தான் அவரது மனைவி, ”தன் கணவரை போலீஸார் என்கெளண்டர் பண்ணத் திட்டமிட்டுள்ளனர். ஆகவே முதல்வர் தீர விசாரித்து சட்டப்படி தண்டிக்க அறிவுறுத்த வேண்டும்” என கைக் குழந்தையுடனும், கண்ணீருடனும் வீடியோ பதிவிட்டார். இந்த முதல்வருக்கு அதிகாரம் இருந்தால் தானே அதை தடுப்பதற்கு! அந்தோ பரிதாபம், அடுத்த நாள் சீசிங் ராஜா போலீசாரால் என்கெளண்டர் செய்யப்பட்ட செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதே போலத் தான் காக்காதோப்பு பாலாஜி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
இதே போலத் தான் தற்போது ஏடிஎம் கொள்ளையர்களை பொதுமக்களே தர்ம அடி கொடுத்து பிடித்து கொடுத்த பிறகும் காவல்துறை என்கெளண்டர் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ரவுடிகளை கைது செய்தால் கைகளை ஒடித்து மாவுகட்டு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது வாடிக்கையாகிவிட்டது.
நாம் கேட்க விரும்பும் கேள்வி தமிழகத்திலேயே அதிக குற்றவாளிகளையும், ரவுடிகளையும் தங்கள் கட்சியில் சேர்த்திருக்கும் கட்சி, பாஜக தான். அந்தக் கட்சியில் சேர்ந்த ரவுடிகளை மட்டும் போலிஸ் நெருங்குவதில்லையே ஏன்? குறைந்தது ஐம்பது அதிமோச சமீபத்திய சம்பவங்களில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியையும் காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே ஏன்?
சிறுவாச்சூர் கோவில் விவகாரத்தில் வதந்தியைப் பரப்பி பல கோடி பணத்தை மக்களிடம் வசூலித்த கார்த்திக் கோபிநாத், கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியை கற்பழித்து கொலை செய்த ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர் ரவிக்குமார், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கயவன் ஆகியோரை ஏன் இந்த காவல்துறையால் கைது செய்து குண்டர் சட்டம் போட முடியவில்லை. கள்ளக் குறிச்சி பள்ளி எரிப்பு தொடர்பாக உண்மை குற்றவாளிகள் ஒருவரையுமே கைது செய்யாமல், அப்பாவி ஏழை,எளிய இளைஞர்களை கைது செய்து தங்களின் பாஜக விசுவாசத்தை வெளிப்படுத்தியது திமுக அரசின் போலீஸ்.
தமிழ்நாட்டில் தற்போது அதிக ரவுடிகள், நில அபகரிப்பு மற்றும் மோசடி பேர்வழிகள் அடைக்கலமாகி உள்ள கட்சியாக பாஜக உள்ளது. இந்த நபர்கள் மீது தமிழக காவல் நிலையங்களில் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. மத்தியில் அதிகாரத்தில் உள்ள கட்சி. மாநில அரசுக்கு நம் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் எங்கிருந்து வரும் பார்த்துவிடுவோம்.. என்பது இவர்களில் பலரது எண்ண ஓட்டமாக உள்ளது.
இதனால் தான் பாஜக என்ற பாதுகாப்பு கவசம் கிடைத்து விட்டதையடுத்து குற்றவாளிகள் பெருகி விட்டனர்.
நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொய்களை அள்ளி இறைத்து கலவர அரசியலுக்கு வித்திட்ட போதெல்லாம் மெளனித்து அடக்கத்தை வெளிப்படுத்திய அரசு தான் ஸ்டாலின் அரசு. இதனால் தான் இந்த ஆண்டில் இது வரை மட்டுமே 600க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதுமட்டுமின்றி மத்திய அரசின் கடுமையான மக்கள் விரோத போக்குவரத்து சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தி, சாதாரண வான ஓட்டிகளிடமும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும் நாளும், பொழுதும் கொடூரமான வசூல் வேட்டை நடத்துகிறது திமுக அரசின் போலீஸ்.
மக்களின் நியாயமான போராட்டங்களையும், தொழிலாளர். விவசாயிகள் போராட்டங்களையும் கடுமையான அடக்குமுறையைப் பயன்படுத்தி அடக்கி வருகிறது தமிழக காவல்துறை. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட்டிற்காக தங்கள் நிலங்களை பறிக்க வேண்டாம் என அகிம்சை வழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எடுத்தற்கெல்லாம் குண்டர் சட்டத்தை பிரயோகித்து கவர்னரிடம், மோடி- அமித்ஷாவிடமும் நல்ல பெயர் வாங்கத் துடிக்கும் திமுக அரசு சென்ற மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் குட்டு வாங்கியது.
“குண்டர் தடுப்புச் சட்டத்தை இஷ்டம்போல சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது போலீஸாரின் அதிகார துஷ்பிரயோகத்தையே வெளிப்படுத்துகிறது. போலீஸாரின் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றமும் வேடிக்கை பார்க்காது. சட்டத்துக்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு ஒருநாள் காவலில் இருந்தாலும் அதுவும் சட்டவிரோதமானது தான் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே போலீஸார் குண்டர் தடுப்புச்சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Also read
சவுக்கு சங்கர் விவகாரத்தில் ஒன்றடுத்து ஒன்றென இரு குண்டர் சட்டம் போடப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டவுடன் சர்வ நாடியும் ஒடுங்கி மன்னிச்சுக்கோங்க எஜமானரே வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என ஸ்டாலின் அரசு பின்வாங்கியது.
படு கோழைத்தனமான முதல் அமைச்சரை பெற்றுள்ள தமிழ்நாடு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க உள்ளதோ.. தெரியவில்லை.
நாகரீகமான ஒரு சிவில் சமூகத்திற்கான இலக்கணம் சட்டம், ஒழுங்கை சகலரும் மதிக்க வேண்டும் என்பதே. அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் அதை எப்படியும் மீறலாம் என்பது கோழைத்தனமாகும்.
சாவித்திரி கண்ணன்
தற்போதைய தமிழக அரசின் கையிலாகாத நிலையை தங்களின் கட்டுரை மிக நன்றாக எடுத்துக்காட்டி உள்ளது
இன்றைய காவல் ஏவல் துறையாக யாருக்கு செயல்படுகிறது என தெளிவாக காட்டியுள்ளது இக்கட்டுரை.
திருந்த வேண்டியவர்கள் திருந்துவார்களா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.