காந்தியடிகள் சத்தியம் என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். உண்மை என்பதை அறம் என்று பொருள் கொண்டால், அறத்தையே காந்தியடிகள் கடவுளுக்குச் சமானமாகப் பார்க்கிறார். அறம் சார்ந்த வாழ்க்கைக்கு எதை தவிர்க்க வேண்டும், எதை கை கொள்ள வேண்டும் என காந்தி காட்டும் வழிமுறைகளை பார்ப்போம்;
காந்திய மொழியில் உண்மையென்றால், அறமெனப்படும். அந்த அறமே வெல்லும் என்கிறார் காந்தியடிகள்.
வாழ்வு என்பது மானுடருக்கு இலக்கு நோக்கிய பயணம் அல்லது இலக்கு தவிர்த்த பயணமாக இருக்கிறது. வெற்றி என்பது இலக்கு நோக்கிய பயணத்தின் பயன். இலக்கு சார்ந்த பயணத்தின் பாதையிலும், இலக்கை அடையும் தருணத்திலும் மகிழ்வு அறுவடையாகிறது. மகிழ்வே நம் வாழ்வின் உண்மையான தேடல். மகிழ்வை அடைதலே வாழ்க்கையின் ஒற்றைச் சாதனை. அதை இலக்கு உறுதி செய்கிறது.
மகிழ்வெனும் இலக்கை சாத்தியமாக்குவது எப்படி?
அறம் பொருள் இன்பம் என்பவையே தமிழருக்கும், மானுடருக்கும் இலக்கெனும் கலங்கரை விளக்கமாக இருக்கிறது. அறமும் பொருளும், இன்பமும் கலந்த வாழ்வே மகிழ்வானதாக இருக்கிறது. மகிழ்வான வாழ்வுக்கு அறமே முதன்மையான இலக்கு. பொருளும் இன்பமும் அடைந்து வாழ்வைத் துய்க்க வேண்டுமென்றால், அது அறத்தின் தடத்திலே செல்லும் பயணமாக இருக்க வேண்டும். அறமே வாழ்விற்கு முதலானது. அதுவே வழியாகவும், அதில் செல்ல உதவும் வெளிச்சமாகவும் இருக்கிறது. அற வழிப்பட்ட இன்பமும் பொருளும் தரும் மகிழ்வை வேறு எதுவும், தருவதில்லை. அறமே வாழ்வின் ஒற்றை நெறி. அறமே வாழ்வின் மூச்சு. அறவழிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து, வாழ்விற்கு வேறு மகிழ்வின் பாதையில்லை.
”என்னைப் பொய்மையிலிருந்து உண்மைக்கு வழி நடத்தும்; இருளிலிருந்து ஒளிக்கு நடத்தும்; மரணத்திலிருந்து அமரத் தன்மைக்கு நடத்தும்” என்பதுவே ஒவ்வொரு உயிரின் உன்னத பிரார்த்தனையாக இருக்கிறது. வாழ்வின் மகிழ்வை ஏங்கித் தேடும் உயிர்களின் ஒரே வேண்டுதல் இதுவாகவே இருக்கும். உண்மையின் வழியும், வெளிச்சத்தின் பாதையும், அமரத் தன்மையும் அறத்தின் தடத்திலே தான் சித்தியாகிறது.
காந்தியடிகள் உலகிற்கு காண்பித்த வாழ்வு முறை, அறத்தின் தடம். அற வாழ்விலிருந்து அவர் ஒரு போதும் பிறழ்ந்ததில்லை. அதுவே தனக்கு மகிழ்வையும் நம்பிக்கையும் சக்தியையும் அளிக்கிறது என்று அவர் நம்பினார். அதனால் தான் என் வாழ்வே என் செய்தி என்று அவர் அளப்பரிய மனத் தைரியத்துடன் சொல்ல முடிந்தது.
நம் அன்றாட வாழ்வில் அறம் செல்லுபடியாகிறதா?
வியப்பான எதார்த்தம் என்னவென்றால், மிகப் பெரும்பான்மையான மனிதர்கள் அறத்தின் வழிப் பட்டவர்களாகவே வாழ் ஆசைப்படுகிறார்கள். இதை இன்னும் தெளிவாகச் சொல்லுவது என்றால், தனிப்பட்ட அளவில் மனிதர்கள் அறத்தின் பாதையில் நடக்க விரும்பினாலும் பொதுவில் சமூகமாக நடந்து கொள்ளுகின்ற போது, அதே மனிதர்கள் அற வழி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதிப்பாடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதை நாம் கோவில்களிலும், அரசியல் அரங்குகளிலும் கண் கூடாகப் பார்க்கிறோம்.
சாமியைத் தரிசிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் போது, குறுக்கு வழியில் உள்ளே புகுவதோ அல்லது வாசலில் இருக்கும் காவலாளியிடம் காசைக் கொடுத்து உள்ளே நுழைவதோ தவறு, அற மீறல் என நாம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு அரசு அலுவலகத்தில் காசு கொடுத்து நமக்குச் சார்பாக விதிகளை வளைப்பதை நாம் சாதுரியம் என்று பார்க்கிறோமே தவிர, அது கூடாது என்று கொண்டு, அதற்கு எதிர் வினையாற்றுவதில்லை. பொது அரங்குகளில் அறம் மீறப்படுவதை இயல்பாக எடுத்துக் கொண்டு அதை ஆமோதிக்கிறவர்களாக செயல்படுகிறோம். இப்படி நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.
தவறான அரசியல்வாதிகளை நாம் தான் உருவாக்குகிறோம்;
இதன் நீட்சியாகத் தான் அரசியல்வாதிகளின் ஊழல் அடாவடிச் செயல்களை, ஏற்றுக் கொள்ளுகிறோம். அரசியல்வாதிகள், வானிலிருந்து குதித்து வந்தவர்களில்லை. நம்மின் பிரதிபலிப்புத் தான் அவர்கள். நாம் அவர்களின் தவறான செயல்களைத் தட்டிக் கேட்காமல், அதில் பங்கு கேட்கின்ற போது, அரசியல்வாதிகளின் செயல்களுக்கு நாம் சமூக அங்கிகாரம் வழங்குகிறோம். ஓட்டுப் போட பணம் பெறுவது என்பது நம் உரிமை என்ற மனோபாவம் வளர்ந்திருக்கிறது. அரசியல்வாதியின் கொள்ளையில் எனக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன என்று நம்மை நியாயப்படுத்திக் கொள்கிறோம். இருவரும் கொள்ளையில் பங்கு பெறுகிறோம் என்று தெரிந்தே செய்கிறோம். அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பதை புரிந்துகொள்ளதவர்களாக இருக்கிறோம். அறப் பிழை வாழ்வை அறுக்கும் கொடும் வாள் என்ற தெளிவு அற்றவர்களாகச் செயல்படுகிறோம்.
“சுயநலத்தாலோ அல்லது வெறுப்பாலோ கறைபடாத மனிதரே உண்மையான ஆன்மீக அல்லது அறம் சார்ந்த மனிதராக கருதப்படுவார். அவர் முழுமையான உள்ளத் தூய்மையுடனும், சுயநலக் கலப்பில்லாத சேவையுடனும் வாழ்வை நடத்துகிறார். அவரே உண்மையான செல்வந்தராகவோ அல்லது மகிழ்வான மனிதராகவோ கருதப்படுவார். அத்தகைய மனிதரே, சக மானுடருக்கு நன்மை செய்ய முடியும்.’நல்ல மனிதர்கள் சந்திக்கும் வலியும் துயரங்களும் அவர்களின் மகிழ்வுக்குத் துணை செய்கின்றன. கெட்ட மனிதர்களின் செல்வமும், புகழும் அவர்களின் இழி நிலைக்கும் உலகின் இழி நிலைக்கும் காரணமாகின்றன’ என்று எமெர்சன் நுட்பமாக சொன்னது சரியே. “முதன்மையாகக் கடவுளின் அரசையும் அவரின் அறத்தையும் தேடுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்தும் தரப்படும் “ என்று காந்தியடிகள் சொல்லுகின்றார்.
அறத்தின் பாதையென்பது என்ன?
வாழ்வின் சரியான இலக்கு என்பது மகிழ்வை அடைதலே. அது சுயநலமில்லாத, சேவை சார்ந்த, உண்மையை மையங்கொண்ட வாழ்க்கை. அதை ஒற்றை வரியில் சொல்லுவது என்றால், அறம் சார்ந்த வாழ்க்கை எனலாம். அறமெனும் நன் மரம் இன்சுவைக் கனியை தரும். இலக்கும் முக்கியம். காந்தியடிகளுக்கு, அதைவிட முக்கியமானது அதை அடையும் வழிமுறை. இலக்கைவிட அதை அடையும் வழிமுறையே மகிழ்வின் பாதை.
”இலக்கை அடையும் வழிமுறைகளில் நாம் கவனமாக இருப்போம் என்றால், சீக்கிரத்திலோ, சிறிது காலம் கடந்தோ நாம் இலக்கை அடைந்தே தீருவோம். இதைத் தெரிந்து கொண்டோம் என்றால், முடிவான வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று காந்தியடிகள் திறம்படச் சொல்லுகிறார்.
”வெற்றிக்கு பலாத்கார குறுக்கு வழிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. … நோக்கங்கள் சிறந்தவை என்று நான் வியந்தாலும், அதன் மீது என்னதான் ஈர்ப்பு இருந்தாலும், மிகச் சிறந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளக் கூட வன்முறை சார்ந்த வழிமுறையை அனுசரிப்பதை என்றுமே ஏற்றுக் கொள்ளாத எதிரி நான்.”
“தேர்ந்துகொண்ட இலக்கிற்கும், அதை அடையத் தேர்ந்துகொண்ட வழிமுறைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று நீங்கள் நம்புவது மிகப் பெரிய தவறாகும். கடவுள் பக்தியுள்ளவர்கள் கூட இந்தத் தவறினால் மிகக் கொடிய குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். ஆபாசமான களைச் செடியைப் பயிரிட்டுவிட்டு, அதிலிருந்து ரோஜா மலர் கிடைத்துவிடும் என்று நம்புவதைப் போன்றதுதான் அது.’’
இலக்கை அடைய தூய்மையான வழிமுறைகளை அல்லது அறத்தின் பாதையினைத் தேர்ந்துகொள்வோம் என்றால், அதை நிச்சயமாக அடைய முடியும்.
சரியான இலக்கும் அதை அடைந்துவிட அறம் சார்ந்த வழிமுறையும் வாழ்விற்கு மகிழ்வைக் கொணரும். அது ஒருவரின் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் மகிழ்வைத் தரும். மகிழ்வை விட அடைய வேண்டிய பெரும் வெற்றி வாழ்வில் என்ன இருக்கிறது?
காந்தியத்தைப் புரிந்து கொள்ள இந்த இரண்டையும் புரிந்துகொண்டால் போதும்.
உயர்ந்த இலக்கும், அறம் சார்ந்த வழிமுறையும் நாணயத்தின் பிரிக்க முடியாத இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒன்றே மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாத துணையாக இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அற வழியே இலக்கினும் உயர்வானது. அதைத் தான், அறத்தின் நாயகனான காந்தியடிகள் தன் வாழ்வின் எச்சமாக, எடுத்துக் காட்டாக, வாழ்வு முறையாக வாழ்ந்து நமக்கு காட்டிச் சென்றிருக்கிறார். அவரைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதும்.
அற வழியே காந்தியம்.
கட்டுரையாளர்; கன்யூட்ராஜ்
எழுத்தாளர்
அக்டோபர் -2, மகாத்மா காந்தி பிறந்த நாள்
Leave a Reply