ஆன்மீகத்திற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து சர்ச்சையில் அடிபட்டவண்ணமுள்ளது. ஈஷா மையத்தை ஒரு தீய சக்தியாக சித்தரிக்கும் தரப்பினர் ஒரு புறமும், இல்லை அது உன்னதமான ஆன்மீக மையம் என நம்பும் தரப்பு மறுபுறமுமாக ஆர்பரிக்கின்ற சூழலில் சில யதார்த்தங்களை பார்ப்போம்;
ஈஷா யோகா மையம் மற்றும் ஆன்மீகத் தலம் தினசரி பல்லாயிரக்கணக்கில் மக்கள் செல்லும் இடமாக உள்ளது. தமிழகத்தில் பல லட்சம் மக்கள் அதில் யோகா பயிற்சியும், தியான பயிற்சியும் எடுத்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு நிறைய முன்னெடுப்புகளை ஈஷா செய்துள்ளது. அதே போல அக்கம்,பக்கமுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவையும் செய்து வருகிறது. இவையெல்லாம் நிதர்சனமான உண்மைகள்.
இந்தச் சூழலில் ஈஷாவிற்கு பலமான எதிர்ப்புகள் நாளும், பொழுதும் அதிகரித்தவண்ணமாக உள்ளதற்கு என்ன காரணம்? இதோ காரணங்களை வரிசைப்படுத்தலாம்.
# முதல் காரணம், அது வனத்தின் பெரும் நிலப்பரப்புகளை எல்லா சட்டங்களையும் மீறி தனவசப்படுத்தியது. மிக பிரம்மாண்ட கட்டிடங்கள், ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கான சொகுசான வாழ்விடங்கள் என சுமார் 5,000 பேர் வசிக்கும் வனப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதும்,
# இந்த சட்டமீறலில் நடவடிக்கைகள் வருவதை தவிர்க்க, அது அதிகார மையங்களோடு காட்டும் நெருக்கமும், அதன் தொடர்பில் அது தன் ஆன்மீகத்தில் இருந்து தடம் புரண்டு மதவெறுப்பு அரசியலை கையில் எடுத்ததும்,
# தேர்தல் நேரத்தில் ஈஷாவின் தன் ஆர்வலர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் இஸ்லாமிய, கிறிஸ்த்துவ மற்றும் திராவிட எதிர்ப்பு பிரச்சாரங்களை செய்ததும், தற்போது ஜக்கியே அந்தவிதமாக பேசுவதும்,
# ஆன்மிக மையங்கள் என்பவை எளிமையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும், விருப்பு,வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறி நடப்பதும் !
இவையெல்லாம் தான் அவர்களுக்கு எதிரான மக்கள் கருத்தாக்கம் வலுப் பெற்றதற்கு முகாந்திரமாகியுள்ளன. ஆகவே முதலில் மேற்படி விவகாரங்களில் அவர்கள் தங்களை சுய பரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது சமீபத்திய விவகாரத்திற்கு வருவோம்.
பேராசியர் காமராஜும், அவரது மனைவியும் தங்கள் மகள்கள் தொடர்பாக வழக்கில் ஏற்கனவே ஒரு தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், மீண்டும் அது ஏன் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்;
வயதுக்கு வந்த ஆணோ, பெண்ணோ தன் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ளும் உரிமை உள்ளவர்கள் என நமது அரசியல் சட்டம் கூறுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் கூட பெற்றோர்கள் தலையிட முடியாது என நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் கூறியுள்ளன. அப்படி இருக்கும் போது அவர்கள் துறவற வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

இதில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்படுவது இயற்கையே! எனினும் தங்கள் மகள்களிடம் பேசி ஒரு தெளிவை அவர்கள் இத்தனை நாட்களாக அடைய முடியாதது துரதிர்ஷடவசமானது. காமராஜ் தம்பதிகளின் மூத்த மகள் லதா திருமணமாகி மிகக் கசப்பான அனுபவங்களை அடைந்து விவகாரத்து பெற்று மன அமைதிக்காக ஈஷாவை நாடிய போது அவரது அன்றைய உளவியலுக்கு அது மிகவும் உகந்ததாக இருக்கவே தன்னை அங்கேயே நிரந்தரமாக்கிக் கொண்டார். அக்காவோடு யோகா, மற்றும் தியான பயிற்சிபெற்ற கீதாவும் ஆன்மீக வாழ்வுக்கு தன்னை கொடுத்துவிட்டார். இவர்கள் இருவரும் முறையே 24 மற்றும் 27 வயதில் அங்கு துறவறம் மேற்கொண்டனர். இன்று அவர்களுக்கு முறையே 42, மற்றும் 39 வயதாகிறது. இன்னும் அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் விருப்பத்திற்கு மாறாக காமராஜ் கோருவது அவர்களின் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
அதே நேரம் இந்த விவகாரத்தில் ஈஷா யோகா மையமும், இந்த பெண்களும் நிர்கதியில் உள்ள வயதான பெற்றோர்களிடம் கனிவான முறையில் இந்த விவகாரத்தை சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் ஈஷா வரும் போது, அவர்களை தரக் குறைவாக நடத்தியது, அவர்கள் பெண்களை கொண்டே பெற்றோர்களை திட்ட வைத்தது.. ஆன்மிகத்திற்கு அழகல்ல. இதுவே காலப் போக்கில் விரோதமாக விஸ்வரூம் எடுத்து நிற்கிறது.
கோர்டில் நீதிபதிகள் முன்பே இந்த பெண் சன்யாசிகள் தங்கள் பெற்றோரிடம் வெறுப்பு பாராட்டியதை நீதிபதியே நேரில் பார்த்து கண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இந்த விவகாரத்தை ஈஷா மையம் எப்படி கையாண்டிருக்கும் என்பதற்கு இதுவே சான்றாகும்.
சென்னை உஅய்ர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம், “இந்த நீதிமன்றம் யாருக்கும் ஆதரவாகவும் இல்லை எதிராகவும் இல்லை. எங்களுக்கு முன்னால் உள்ள வழக்குரைஞர்களுக்கு மட்டுமே நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம்.இரண்டு பெண்களுக்கும் ஆன்மீகப் பாதையில் செல்வதாகக் கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோரைப் புறக்கணிப்பது பாவம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ‘அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே’ என்பது ஆன்மீகத்தின் கொள்கை, ஆனால், உங்கள் பெற்றோர் மீது உங்களுக்குள்ள வெறுப்பை எங்களால் பார்க்க முடிந்தது. நீங்கள் அவர்களை மரியாதையுடன் கூட பேசவில்லை’’ என்று கூறியது கவனத்திற்கு உரியதாகும்.
ஆகவே, ஈஷா யோகா மையம் அதிகார மையத்தில் தங்களுக்கிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றதோடு, நீதிபதிகளின் நற்சான்றிதழை பெற்றது நியாமும் அல்ல, உண்மையும் அல்ல.
’’இலாப நோக்கற்ற ஆன்மிக அமைப்பிற்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது ” என்று உச்சநீதிமன்ற அமர்வு ஈஷா மீதான விசாரணைக்கே தடை விதித்து கூறிய வார்த்தைகள் நகைப்புக்கு உரியது.
நிச்சயமாக ஈஷா லாப நோக்கமற்ற அமைப்பு இல்லை. இது சாதாரண பாமர மக்களுக்கு கூட தெரிந்த உண்மை.
ஈஷா மையத்தை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் ஆணையிட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அவசர, அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சற்று பொறுமை காட்டி இருக்கலாம்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ’’இது ‘மத சுதந்திரம்’ தொடர்பான ஒரு தீவிர வழக்கு. இது ஈஷா அறக்கட்டளையைப் பற்றியது, சத்குரு மிகவும் மதிக்கப்படுபவர் மற்றும் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். வாய்மொழியான கூற்றுகள் மீது உயர்நீதிமன்றம் இதுபோன்ற விசாரணைகளைத் தொடங்க முடியாது. இதுபோன்ற உத்தரவுகளை ஹேபியஸ் கார்பஸ் ரிட்டில் அனுப்பியிருக்கக் கூடாது. 5000 பேர் வசிக்கும் அறக்கட்டளையின் வளாகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையிட்டது தவறு’’ என்று கூறுகிறார். அதற்கு,
Also read
“இதுபோன்ற ஒரு ஸ்தாபனத்திற்குள் இராணுவத்தையோ அல்லது காவல்துறையையோ அனுமதிக்க முடியாது” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் வாய்மொழியாக பதிலளித்துள்ளார் எனில், சனாதனத்தின் ஆதிக்கம் எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை நாம் உணரலாம்.
ஈஷா மைய வளாகத்தில் சில பெண்கள் மர்மமான முறையில் இறந்ததான பிரச்சினைகளில் இன்னும் கூட நீதி கிடைத்தபாடில்லை. அதுவும் சமீபத்தில் ஈஷாவின் மருத்துவர் சரவண மூர்த்தி என்பவர் இலவச மருத்துவ முகாம் நடத்த சென்ற இடத்தில் 12 பழங்குடியின மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு காவலர்களும், சமூக நலத் துறை அதிகாரிகளும், குழந்தைகள் உரிமைக்கான அதிகாரிகளுமாக சென்றதில் என்ன தவறு இருக்க முடியும். 5,000 பேர் இருக்கும் இடத்தில் 150 பேர் 6 குழுக்களாக வகைப்படுத்தி செல்வது தான் பாதுகாப்பானது. நியாமான விசாரணைக்குமானது.
உச்ச நீதிமன்ற அமர்வு சார்பு நிலையை வெளிப்படுத்தி இருப்பது நீதித் துறையின் மீதான மக்களின் நம்பகத் தன்மையை சிதைத்துவிடும்.
சாவித்திரி கண்ணன்
மெய்யான ஆன்மிகம் என்பது மானுட நேயமே. அது பக்தியோ, கடவுள் வழி பாடோ அல்ல. உலகில் முதல் ஆன்மிகவாதி கார்ல் மாக்ஸ் ஆவார்.
இயற்கைவாழ்விடங்களை வளைத்துப் போட்டு பக்தியின் பேரால் தன்வசம் ஆக்கும் இந்த ஈஷா மையம் மீது அரசு நடவடிக்கை எடுத்தல் தகும்.
நடுநிலையான விமர்சனம் பெற்ற பெண்களின் நடவடிக்கைகளை கவனிக்கத் தவறிய பெற்றோர் ஓடிவந்த பெண்களுக்கு தக்க அறிவுரை கூறத் தவறிய “ராயல்” யோக மையம் .கடவுள் மறுப்பு முதல்வர் ஸ்டாலின் மனைவி கோவில் தவறாமல் தரிசிக்கிறார் பெண்துறவிகளை வரவேற்கும் சத்குரு தனது மகளை இல்லற வாழ்வுக்கு அனுப்புகிறார். இதுதான் இன்றைய நடப்பு