கிராமங்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லாடுகின்றன…! நோயுற்றால் மருத்துவமில்லை. பேருந்து வசதி இல்லை. இருந்தாலோ சரியான சாலை கிடையாது. அங்கன்வாடிகள், பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. வளங்கள் எல்லாம் நகர்புறத்திற்கு! வறுமை மட்டுமே கிராமத்திற்கா? வளர்ச்சி என்பது யாருக்கானது..?
அந்தக் காணொலி நெஞ்சைப் பிழிந்தது. நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவரான என் நண்பர் சமீபத்தில் ஒரு காணொளியை அனுப்பி இருந்தார். அந்த ஊராட்சியில் யானையால் தாக்கப்பட்டு இறந்த ஒரு பெண்மணியின் சடலத்தை முதுகில் தூக்கிக் கொண்டு அவரது உறவினர்கள் செல்வதாக இருந்த அந்த காணொளி இந்த நாட்டில் நிர்கதியற்ற ஏழைகளின் நிலையைச் சொல்வதாக இருந்தது.
தனது ஊராட்சிக்கு முறையான சாலைகள் வேண்டுமென சென்னையில் அவர் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்திற்கும், வனத்துறைச் செயலர் அலுவலகத்திற்கும் அலைந்த நாட்கள் ஒன்று இரண்டல்ல. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் அவர் பேசியபோது, “பெரியப் பெரியப் பாலங்களை இங்கே பார்க்கிறேன். சென்னையில் இந்த வசதிகள் இருப்பது எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், நாங்கள் கேட்பது சாமானிய மக்கள் செல்வதற்கான சராசரியான ஒரு சாலையைத் தான். அது ஏன் எங்களுக்குப் பல ஆண்டுகளாக மறுக்கப்படுகிறது?” என அவர் வருத்தத்துடன் அன்று பேசியது, இந்த காணொளியைப் பார்க்கும் போது மீண்டும் நினைவுக்கு வந்தது.
ஆம், இன்னும் குழ்ந்தைக்கோ, முதியோருக்கோ உடம்பு சரியில்லை என்றால், பத்து கீ.மீ நடந்தே பயணித்து தூக்கிச் செல்ல வேண்டிய நிலையில் இன்னும் பல கிராமங்கள் உள்ளன. இறந்த பிணத்தை ஓடும் ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்ல வேண்டிய நிலையில் உள்ள கிராமங்கள் இன்னும் ஏராளம் தமிழகத்தில் உள்ளன.
தலைநகரங்களுக்குத் தனி கவனம் செலுத்தப்படுவது தேவை தான். ஆனால், வெகு தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் நிராகரிக்கப்படும் போது தான், ஏன் வளங்களும், வளர்ச்சியும் ஒரே இடத்தில் குவிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர்கள் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக ஒரு சூழல் இருக்க வேண்டாமா? இந்த கோரிக்கை ஆடம்பரமல்ல, அடிப்படைக் கோரிக்கையாகும்.
ஆபத்தான பேருந்து பயணம்!
தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதியில் அரசு பேருந்தில் பயணிக்க ஒரு மனோ பலம் வேண்டும். வித்தியாசமான பல சத்தங்கள் வரும். அதுவும் பழுதான சாலைகளில் செல்லும் போது இந்த ஓசை கிலியை உருவாக்கும். மழைக் காலங்களிலோ மிகவும் சிக்கல். எப்போது வண்டி கவிழுமோ, விழுமோ என புதிதாக பயணிபப்வர்கள் திகிலோடு தான் பயணிக்க வேண்டும். தினமும் பயணிப்போருக்கு அது பழகிய விஷயமாகிவிட்டது. வேறு வழியில்லை என அவர்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலை தான். இப்படியான ஓட்டை,ஒடிசல் பேருந்துகளை ஏன் கிராமப் பகுதிகளுக்கு மட்டும் விடுகிறார்கள்?
பெரு நகரங்களில் இயங்கும் தரமான பேருந்துகள் போலவே எல்லா பேருந்துகளும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. சென்னையின் மெட்ரோ ரயில் வசதியை கிராம மக்கள் கேட்கவில்லை. தேவையெல்லாம் பாதுகாப்பான ஒரு பேருந்தைத் தான் .
அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கட்டுமானங்களையும், சூழல்களையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமாக வழங்க வேண்டிய பொறுப்பு ஒரு மக்கள் நல அரசுக்கு நிச்சயம் இருக்கிறது.
பல மலை மாவட்டங்களில், பழங்குடி கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்குப் பழுதான சாலைகளும், ஓட்டை, ஒடிசல்பேருந்துகளுமே காரணமாக இருக்கிறது. இதற்குப் பலமுறை மாணவர்களே போராடி இருக்கிறார்கள்.
பார்முலா கார் பந்தயங்கள் சென்னையின் பிரதான பகுதிகளில் நடத்தப்பட்டதையும் அதற்காக அந்த சாலைகள் எவ்வாறெல்லாம் தயார் செய்யப்பட்டன என்பதையும் செய்திகளில் இந்த மாணவர்கள் பார்த்தபோது என்ன நினைத்து இருப்பார்கள்? இந்த நாட்டில் நமக்கான முக்கியத்துவம் என்ன, என்று அவர்கள் சிந்தித்திருப்பார்கள் தானே? அங்கு அவர்களுக்கு மறுக்கப்பட்டது சாலை வசதி மட்டுமல்ல, அவர்களுக்கான கல்வியும் தான்.
அங்கன்வாடி மையங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல!
ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் திறன் ஆகியவை அதன் 5 வயதிற்குள் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விதத்தில் அங்கன்வாடி மையங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல. அவை எதிர்கால தமிழகத்தை வடிவமைக்கக் கூடிய அமைப்புகள். ஆனால், பல்லாயிரக்கணக்கான அங்கன்வாடிகள் எப்படி இருக்கின்றன?
சிறப்பாகச் செயல்படும் பல மையங்கள் நம் நேரடியாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மையங்களில் ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ளன. கற்க வாய்ப்பற்ற அங்கன்வாடிக்குக் குழந்தைகள் வந்து செல்கிறார்கள். விவசாய கூலியான ஒரு தாய் தன் குழந்தையை வீட்டிலும் விட முடியாமல், வேலை செய்யும் இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலையில் விடுகிறாள். இந்த பிஞ்சுக் குழந்தைகள் நலனில் இவ்வளவு தான் அரசின் அக்கறையா?
இந்த மையங்களில் குழந்தைகளுக்கான கழிவறைகள் எப்படி இருக்கிறது எனப் பார்த்தால் மிரண்டு விடுவீர்கள்!
ஒரு அங்கன்வாடி மைய பணிப்பெண் நம்மிடம் சொன்னார், “கழிவறைகலே இல்லை குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை கூட வெட்ட வெளியில் விட்டு சமாளிக்கலாம். ஆனால், மலம் கழிக்க வைக்க அந்த குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம். பிறகு அந்த குழந்தையைச் சுத்தப்படுத்திவிட்டு வருவதற்குள் பெரியவர்கள் யாருமில்லாத மையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்களா..? என்ற பதட்டத்தோடே இருப்போம்” என்றார்!
நமக்கு ஏன் இந்த மையங்கள் முக்கியமானதாகத் தெரியவில்லை ?
இன்றைக்கும் தமிழ்நாட்டின் பல அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறைகள் இல்லை என்பது அவமானகரமான விஷயமாக இருக்கிறது. 2024 ல் கூட நம் அரசுப் பள்ளி குழந்தைகள் ஏன் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குக் கூட புதர்களை தேடிப் போக வேண்டி இருக்கிறது?
இவை சிறிய விஷயங்களா?
ஒரு நாட்டின்உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி ஆகியவை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் போது மட்டுமே அந்த நாட்டின் உண்மையான முன்னேற்றமும் , மக்களின் வாழ்க்கைத் தரமும் உறுதி செய்யப்படும்.
உலகமயமாக்கத்தை போதிக்கும் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கூட வளர்ச்சிகளைப் பரவலாக்கி இருக்கிறார்கள். ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தையும் அதற்கான உரியக் கட்டுமானங்களோடு வளர்த்தெடுத்திருக்கிறார்கள்
தமிழ்நாட்டின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு சிறு அங்கன்வாடியும், பள்ளியும், ரேஷன் கடையும் தனக்கான கட்டமைப்புகளோடு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த ஒரு அமைப்பாக இயங்கும் போது தான் முறையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதுவே, பரவலாக்கப்பட்ட அணுகுமுறையாக இருக்கும். ஒரு சிறு அலுவலகம் மாறுவதனால் என்ன என்று நாம் சிந்தித்து விட முடியாது. அது நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தோடு வாழ்க்கைத் தரத்தோடு இணைந்த ஒன்று.
வளர்ச்சிகள் பரவலாக்கப்பட வேண்டும்
முக்கிய நகரங்களில் உள்ள வளர்ச்சிக்கு எதிராக நாம் சிந்திக்கவில்லை. சென்னை தமிழ்நாட்டின் பெருமை. பலரை வாழ வைத்த, வாழவைத்து கொண்டிருக்கும் பெருநகரம். ஆனால் அதன் விரிவாக்கத்திற்கும் ஒரு எல்லை உண்டு. மாநகராட்சியாக இருந்த சென்னை 200 வார்டுகளோடு பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
Also read
தற்போது 250 வார்டுகளாக அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படி நகரங்கள் விரிவாக்கப்படுவதால் நகரத்தை சுற்றிலும் உள்ள கிராமங்கள் விழுங்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் அழிகின்றன. விரிவடையும் நகர்புறங்கள் அலங்கோலங்களை சந்திக்கின்றன. சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். டெல்லி சந்திக்கும் அதே பிரச்சனையை, சுற்றுச்சூழல் மாசை, மக்கள் நெருக்கடி பிரச்சனையை எதிர்காலத்தில் சென்னை சந்திக்காமல் இருப்பதற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள் பரவலாக்கப்பட வேண்டும்.
நாம் ஏன் நம் சென்னையை அளவுக்கு அதிகமாக விரிவு படுத்தி, தமிழ்நாட்டு மக்கள் பிழைக்கச் சென்னையைவிட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்? அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பது எப்போதுமே ஆபத்துதான். அதேபோல வளர்ச்சியையும் ஓரிடத்தில் குவிப்பது வீக்கமாகி விடும். சென்னை எப்பொழுதும் சிங்காரமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வளர்ச்சிகள் பரவலாக்கப்பட வேண்டும். வாழ்க்கைத் தரம் சீராக உயர வேண்டும்.
நந்தகுமார் சிவா
சமூக செயற்பாட்டாளர்
உண்மை ஐயா. கள்ளக்குறிச்சி மாவட்டம், thirukovilur taluk. Soraiyapattu கிராமத்திற்கு ஊருக்குள் செல்லும் சாலை வசதி கேட்டு பல முறை விண்ணப்பம் செய்தும் இதுவரை பலனில்லை. ஆனால் டாஸ்மாக் கடை உண்டு.
கட்டுரையாளர் கிராமங்களில் காணப்படும்
அவலங்களை தெரியப்படுத்தியுள்ளார். நன்று. கட்டுரையில் பரிதாப நிலையிலுள்ள
சாலை, பள்ளிக் கூட கழிப்பறை, அங்கன் வாடி கட்டிடம் போன்ற அவலங்களை ஊர் பெயருடன் பட்டியலிட்டிருந்தால் ,சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க வாய்ப்பு உண்டு. முறையிட்டும் பயனில்லாத பொழுது நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து கிராமப் புறக்கணிப்பை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு தீர்வு தேட முயன்றிருக்கிறார்.