இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையின் லடாக் பகுதி இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாகி வருகிறது. இது சுற்றுச் சூழலில் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும். இறை சக்தியின் உறைவிடமான இயற்கையை காப்பாற்றுவதற்கான காந்திய வழியிலான சோனம் வாங்சுக்கின் போராட்டங்கள் வெற்றி பெறுமா?
சோனம் வாங்சுக் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு பொறியாளர் மற்றும் உயர் அதிகாரி. கார்க்கில் போரில் இவரின் அர்ப்பணிப்பை பாராட்டி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான மகாவீர் சக்ரா விருதை வழங்கியுள்ளார். யதார்த்ததில் சோனம் வாங்சுக் மிக அபூர்வமான ஒரு ஆளுமை. பன்முகத் திறமையாளர். கூர்மையான அறிவாற்றல் கொண்ட இவர் சுற்றுச் சூழல் அறிஞர், கல்வியாளர் என்பதையும் கடந்து காந்திய வழியிலான மக்கள் தலைவராகவும் அறியப்பட்டுள்ளார்.
அறிவாளியான இவரது இளமை கால வாழ்க்கையில் ஈர்க்கப்பட்ட அமீர்கான் அவரை பிரதிபலிக்கும் விதமாக ‘3 இடியட்’ என்ற படத்தை எடுத்தார். தமிழில் அது ‘நண்பன்’ படமாக வந்த போது நடிகர் விஜய் நடித்திருந்தார்.
தற்போது இயற்கையை காப்பாற்றுவதில் சமரசமற்ற வகையில் போராடி வருகிறார் சோனம் வாங்சுக்.
இமயமலையின் லடாக் பகுதியின் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தவும், அரசியல் சட்டத்தின் ஆறாவது பிரிவு பழங்குடி மக்கள் தங்கள் வாழும் பகுதியின் சுயாட்சி உரிமையைக் கை கொள்ள வழங்கி உரிமையை பாதுகாக்கவும் மக்கள் திரளோடு காந்திய வழியில் 30 நாட்கள் பாதயாத்திரையாக வந்த சோனம் வாங்சுக் டெல்லி ஹரியானா எல்லையான ஷிங்கூரில் செப்டம்பர் 30 மாலை கைது செய்யப்பட்டார்.
சோனம் வாங்சுக் பேசும் கூட்டங்களில் எல்லாம் பெரும் மக்கள் திரள் கூடுகிறது. அதே சமயம் தனக்குள்ள மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி வன்முறை வழியில் போகாமல் மகாத்மா காந்தியின் பாதம் பட்ட லடாக்கை காப்பாற்றுவோம் என்ற கோஷத்தை முன் வைத்து, மக்களைத் திரட்டி காந்தி சமாதியில் அக்டோபர் 2 அஞ்சலி செலுத்திவிட்டு மத்திய ஆட்சித் தலைவர்களை பார்த்து உண்மை நிலவரங்களை விளக்க நேரம் கேட்டிருந்தார்.
லே நகரத்திலிருந்து தில்லியை நோக்கி நான்கு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட நடை பயணம் புது தில்லியின் எல்லையை தொட்டவுடன் காவலர்களால் தடுக்கப்பட்டது, வாங்சுக் தலைமையில் பயணித்த 150 க்கும் மேற்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் முதியவர்கள். இதனால் லடாக்கிலும், தில்லியிலும் பதட்டம் அதிகரித்தது.
இதை முற்றிலும் எதிர்பாராத வாங்சுக்கும் அவருடன் பயணித்த போராளிகளும் தங்களை விடுவிக்க கோரியும் , மூன்று தலைவர்களை சந்திக்க அனுமதி கோரியும் “ உண்ணாவிரத” போராட்டத்தை தொடங்கினர். லடாக் பகுதி முழுவதும்- லடாக்,லே மற்றும் கார்கில் பகுதிகள்- இதை கண்டித்து கடையடைப்பு நடத்தப்பட்டது, லடாக் யூனியன் பிரதேசமே முடங்கியது!
எதனால் பிரதமர் மோடி மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவரை சந்திக்க மறுக்கிறார்? இவர்கள் ஏன் அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்திற்கு செல்லவிடாமல் தடுத்து கைது செய்யப்பட்டனர்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த லடாக் பிரதேசம் பனிசூழ்ந்த மலைகளும், பசுமை சமவெளிகளும், கண்ணாடி போன்ற அழகிய நீரோடைகளும், அபூர்வ விலங்கினங்கள் வாழும் பகுதியாகும் .
இந்திய சீன எல்லையை ஒட்டிய இந்த பகுதி பல பனிப்பாறைகளை (glaciers) தன்னகத்தே கொண்ட பகுதி. இதன் விளைவாக இப்பகுதி முழுவதுமே நொறுங்கும் தன்மை கொண்டவை.
2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு , இரண்டு யூனியன் பிரதேசங்களாக – ஜம்மு காஷ்மீர் , லடாக் என – தரந்தாழ்த்தப்பட்டது, அரசியல் பிரிவு 370 மற்றும் 35A நீக்கப்பட்டது.
முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத லடாக் மக்கள் நாளடைவில் பாதிப்புகளை உணர்ந்த பின்பு,
# லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்றும்,
# பழங்குடியினரான தங்கள் நிலமும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட லடாக் பகுதியை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் இணைக்கப்பட வேண்டுமென்றும் ,
# தங்களது ஜனநாயக பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியும் ,
# உள்ளூர் மக்களின் வேலையின்மையை குறைக்க லடாக் பகுதிக்கு தனியான பொது சேவை ஆணையம் (public service commission) அமைக்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகளுக்காக 2020 முதல் போராடத் தொடங்கினர்.
அரசமைப்பு பிரிவு 370 மற்றும் 35A வழங்கி வந்த தனிப்பட்ட நிலம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் பறி போனதால் தங்களது தனித்தன்மையும் உரிமையும்பாதுகாத்துக் கொள்ள ஆறாவது அட்டவணையின் கீழ் இணைந்து அதை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர் .
இதற்காக லடாக் பகுதியிலுள்ள அனைத்து மக்களும் அரசியல், சமூக மற்றும் மத ரீதியான வேறுபாடுகளை புறந்தள்ளி “ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்கத்தில் (Peoples Movement for Sixth Schedule for Ladakh) தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதற்காகவும், காலநிலை மாற்றத்தால் இமய மலைப்பகுதி அழியும் அபாயம் உள்ள நிலையில் அந்த சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்த அம் மக்கள் இப்பகுதி கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்படாமல் தடுக்க தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என எண்ணுகின்றனர்.
இதற்காக பிரதமரை சந்திக்க சோனம் வாங்சுக் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் லே நகரிலிருந்து தில்லிக்கு 1000 கி.மீ நடைபயணத்தை செப்டம்பர் 1ல் மேற்கொண்டு செப்.30 அன்று தில்லியில் நுழைந்த பொழுது ‘மோட்டா பாய்’ அமீத் ஷாவின் தலைமையின் கீழ் இயங்கும் தில்லி காவல் துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்டு 36 மணி நேரம் சிறை வைத்தனர். பிறகு அவர்கள் அக்டோபர் 2 மாலையில் காந்தியடிகள் நினைவிடமான ராஜ்காட்டிற்கு அழைத்து வரப்பட்டு அஞ்சலிக்குப்பின் ‘லடாக் பவனிற்கு ‘ தில்லி காவல் துறையால் கொண்டு செல்லப்பட்டனர். சோனம் வாங்சுக்கை சந்திக்க யாருக்கும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தில்லி உயர்நீதி மன்றமோ வியாழக்கிழமை(அக்.3) விசாரணையின் போது வாங்சுக் அடைத்து வைக்கப்படவில்லை என வழக்கை தள்ளுபடி செய்தது!
காவல் துறையால் அக்டோபர் 4 ந்தேதி விடுவிக்கப்பட்ட சோனம் வாங்சுக் , செய்தியாளர்களை அன்றுதான் சந்தித்தார் .
“இந்த கால நிலைக்கான பேரணி (Climate March) லடாக்கிலிருந்து 1000 கி.மீ நடந்து தில்லியிலுள்ள தலைவர்களை சந்திக்க வந்துள்ளது. இந்த மூன்று தலைவர்களுள் ஒருவர் கூட எங்களை சந்தித்து எங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாவிடில் நாங்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று சொன்ன அவர் தற்போது காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார். ஆனால், உண்ணாவிரத்தத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேச பக்தர்களுக்கு காந்திய வழியிலான போராட்டங்கள் கூட ஏன் சாத்தியமற்றுப் போகின்றன..? என்ற கேள்வியை சோனம் வாங்சுக் எழுப்பி உள்ளார்.
நமக்கு முன் உள்ள கேள்வி என்னவெனில், அகிம்சை வழியில் உரையாடுவதற்கான வாய்ப்பை ஏன் மோடி தர மறுக்கிறார்? என்பது தான்.
வாங்சுக் தலைமையிலான காலநிலை பேரணியும் (Climate March) சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அம்மக்களின் போராட்டமும் லடாக் மக்களுக்கானது மட்டுமல்ல. இது இந்திய மக்களுக்கான போராட்டமும் கூட!
பனிப்பாறைகள் அதிகம் கொண்ட இமய மலைத்தொடர் நொறுங்குந்தன்மை கொண்டவை. காலநிலை மாற்றத்தால் மேக வெடிப்புகள் (cloudburst) , வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு போன்ற ஆபத்துக்கள் சமீப காலங்களில் பெருகி மனித உயிர்களும் உடமைகளும் அதற்கு பலியாகின்றன. ஆகவே அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதே வேளையில் பரந்துவிரிந்த இந்த லடாக் பகுதியில் ஏகப்பட்ட தாது வளங்கள் நிலத்தடியில் உள்ளன என்பது கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளின் கண்ணை உறுத்துகிறது என்பதை நாம் நினைவில் கொண்டால் நமக்கு சில முடிச்சுகள் அவிழும்.
# ஏற்கனவே லடாக்கிலுள்ள 50 முதல் 60 கி. மீ தொலைவு பரந்த சமவெளிப் பகுதி ஒன்றை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது என்ற செய்தியும்,
# லடாக்கில் உள்ள சாங்தங் பகுதியில் 12 கிகாவாட் எரிசக்தி தயாரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்ற செய்தியும்,
உள்ளூர் மக்களை கலந்து எடுக்கப்பட்ட முடிவல்ல இது, என்பதை உணர்த்துகிறது.
லடாக்கில் உள்ள லே பிரதேச உயரமைப்பும் (Leh Apex Body) கார்கில் ஜனநாயக கூட்டமைப்பும் (Kargil Democratic Alliance) இணந்து இந்த நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Also read
இவ்வாறு உள்ளூர் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களது விருப்பத்திற்கெதிராக ‘வளர்ச்சி ‘ என்ற பெயரில்,
இயற்கை வளங்கள் கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்படுவதும், அத்தகைய சுரண்டலை முன்னின்று நடத்தி கார்ப்பரேட்டுகளின் நண்பனாக மோடி அரசு செயல்படுவதும் தான் மக்கள் கொந்தளிப்புகளுக்கு காரணம்.
லடாக் மக்கள் உரிமை பெற்றால் அவர்கள் வாழ்வு செழிக்கும்!
இமய மலை இடிபாடுகளில் இருந்து மீண்டு நிமிர்ந்து நிற்கும்!
இமயம் நிலைத்தால், இந்திய ஆறுகள் செழிக்கும், இந்தியாவின் வளம் பெருகும்.
இந்தியாவும் இமயமும் நிமிர்ந்தால் உலகம் உய்யும்.
ஆகவே, பாஜக அரசு மக்கள் போராட்டத்தை மதித்து மனம் மாற வேண்டும்.
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
Leave a Reply