போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் பறிபோய்க் கொண்டுள்ளன. எட்டு மணி நேர வேலை இனி எட்டாக்கனியோ..? உழைப்புக்கேற்ற ஊதியம் கனவோ? நிரந்தர வேலை என்பதே நிர்மூலமாக்கப் பட்டுவிட்டதோ, தொழிற்சங்கம் காண்பதற்கே அனுமதி மறுப்போ…பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையோ நம் அரசுகள்..?
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாள் 55 நாடுகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து உலக தொழிற்சங்க சம்மேளனத்தை (உ.தொ.ச) உருவாக்கின.
‘கண்ணியமான வேலை,
வாரத்திற்கு 35 மணி நேர வேலை,
நல்ல சம்பளம், சுகாதாரமான வாழ்நிலை.
போன்றவைகளுக்கான ‘நடவடிக்கை நாளாக’ அக்டோபர் 3 ம் நாள் இருக்க வேண்டும்’ என உதொச கேட்டுக் கொண்டுள்ளபடி, சென்னையில் நடந்த நிகழ்ச்சி நடைபெற்றது; அதில் பல முக்கிய தலைவர்கள் பேசினர்;
ஸ்ரீ குமார்; (உதொசவின், ஆசிய பொறுப்பாளர், துணைப் பொதுச்செயலாளர்)
குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட பெற முடியாத சூழ்நிலையில் இப்போது இருக்கிறோம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என ஒரு குடும்பத்திற்கு ஆகும் செலவின் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதில் பெற்றோர்களை சேர்க்கவில்லை.
ஒரு மனிதனுக்கு 2,700 கலோரி சத்து தரும் உணவுச் செலவை குறைந்தபட்ச ஊதியத்திற்கு கணக்கிட வேண்டும் என்று டாக்டர். அக்ராய்டு சூத்திரம் சொல்கிறது. ஆனால், உரிய சம்பளம் இல்லாததால் மனிதனின் நுகர்வு குறைந்து வருகிறது. இப்போது தொலைக்காட்சி, செல்பேசி போன்றவைகள் அவசியமானவை ஆகிவிட்டன. இதற்கு ஆகும் செலவுகளையும் சேர்த்து குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.
தொழிற்சாலை சட்டங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகளைத் தான் கணக்கில் கொண்டு நிவாரணம் தருகின்றன. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண், வேலை அழுத்தம் காரணமாக மூளையில் கோளாறு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது தாயார் கூக்குரலிட்டு பிரச்சினையை எழுப்பிய பிறகுதான் இந்த சம்பவமே வெளி உலகுக்கு தெரிந்தது. இதில் வேடிக்கை என்ன வென்றால் அந்த தனியார் நிறுவனம் அராசங்கத்திடம் பதிவு செய்து கொள்ளவில்லை. அத்தகைய ஒரு நிறுவனத்திடம்தான் பொதுத்துறை நிறுவனமான பொது காப்பீட்டுக் கழகம் வாடிக்கையாளராக உள்ளது.
ஒரு வங்கி மேலாளர் வங்கி கொடுத்த கடனை வசூலிக்க மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். படித்த இவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண தொழிலாளர்கள் நிலை இன்னும் மோசம். வெளியில் தெரியாத சம்பவங்கள் இதுபோல எத்தனையோ இருக்கிறது!
job security அவசியம் என உதொச கருதுகிறது. ஒரு காலத்தில் நாங்கள் போராடும் போது, இப்படியே போனால் இராணுவத்தையே தனியார்மயமாக்கி விடுவார்கள் என்று வேடிக்கையாக கூட்டத்தில் பேசுவோம். ஆனால், அது இன்று நடந்துவிட்டது.
அக்னிவீர் என்று மத்திய அரசு நடைமுறைபடுத்தியுள்ள திட்டமானது நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிக்குப் பிறகு, ஒருவருடைய சம்பளத்தில் இருந்து பிடித்து வைத்த ஒரு தொகையை தந்து வீட்டிற்கு அனுப்பி விடுகிறது. இந்த திட்டத்தினால் இராணுவ வீரர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று முப்படைத் தளபதிகள் கொடுத்த அறிவுரைகளையும் மீறி, ஒன்றிய அரசு அக்னிவீர் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிய தொழிலாளர் சட்டம், குறைந்த கால வேலை வாய்ப்பை (Fixed Term Employment) சட்டமாக்கி உள்ளது. நிரந்தர வேலை என்பதும்,, தற்காலிகமாக பணிக்கு பிறகு பணி நிரந்தரம் என்பதும் கானல் நீராகி விட்டன.
பொருத்துநர், மின்கம்பியாளர், இயந்திர பராமரிப்பாளர் என்பது போன்ற ஐடிஐ படித்தவர்களுக்கு, பயிற்சியாளர் சட்டம் 1961 ன் படி இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகையோடு பயிற்சி கொடுத்து பின்னர் வேலையில் எடுத்துக் கொள்வதாகும்.
ஆனால், தற்போதோ திறன் மேம்பாடு (Skill development) என்ற பெயரில் பல்வேறு திட்டங்களில், படித்த இளைஞர்களை ஆலைகளில் ஆண்டுக் கணக்கில் பயிற்சியாளர்களக குறைந்த சம்பளத்தில் நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலைகளைச் செய்ய வைக்கிறார்கள்.
உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) முதல் இணக்க விதியே, 1920 ல் நாளொன்றுக்கு எட்டுமணி நேர வேலை என்பது தான். அதன்படி வாரத்திற்கு 48 மணி்நேர வேலை என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால், இது தற்போது பல இடங்களில் மீறப்பட்டு வருகிறது.
சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை என உலகத் தொழிலாளர் அமைப்பின் (ILO) இணக்க விதி 87 கூறுகிறது. இந்தியா உலகத் தொழிலாளர் அமைப்பின் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்று. ஆனால் இதுவரை அந்த இணக்க விதியை ஏற்றுக் கொள்ளவில்லை. இணக்க விதியை ஏற்றுக் கொண்டால் சட்டமாக்க வேண்டும். ஏனெனில், சங்கம் அமைக்கும் உரிமையோடு இணைந்தது தான் வேலை நிறுத்த உரிமை. எனவே தொழிலாளர் உரிமையை ஏற்றுக் கொள்ளாத அரசாக இந்தியா உள்ளது.
தற்போதுள்ள UPS (Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டத்தில் கூட விருப்ப ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஓய்வூதியம் கிடைக்கும்.(உடனே ஓய்வூதியம் வராது). தொழிலாளர் செலுத்திய கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் முழுவதும் திரும்ப கிட்டாது. எனவே தான் பழைய ஓய்வூதிய திட்டம் தான் சாதகமானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
சங்கம் அமைக்கும் உரிமையோடு வேலை நிறுத்த உரிமையும் இணைந்தது என்பது தான் இதுவரை இருந்த புரிதலாகும். ஆனால், முதலாளிகள் தற்போது அதனை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே இணக்க விதி அமலாவது குறித்த (supervising body) முத்தரப்பு குழுவில் இருந்து முதலாளிகள் வெளி நடப்பு செய்தனர். சங்கம் அமைக்கும் உரிமையோடு வேலை நிறுத்த உரிமையும் இணைந்ததா என்பதை முடிவு செய்யுமாறு சர்வதேச நீதிமன்றத்தை உலக தொழிலாளர் அமைப்பு (ILO) அணுகியுள்ளது. அந்த வழக்கில் உலக தொழிற்சங்க அமைப்பும் (WFTU) ஒரு எதிர் மனுதாரராக இணைந்து வேலை நிறுத்த உரிமைக்காக வழக்காடும்.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஏஐடியுசியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் தனது உரையில், ”கடந்த காலங்களில் டங்கல் ஒப்பந்தத்தை எதிர்த்தும், காட் ஒப்பந்தத்தை எதிர்த்தும், உலக வர்த்தக அமைப்பை எதிர்த்தும் (WTO) இந்தியாவில் தொழிற்சங்கங்கள் கடுமையாக போராடின” என்றார்.
திருவட்டை (சிஐடியு); சாம்சங் என்ற நிறுவனப் பெயர் இருப்பதால் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய முடியாது என்று தொழிலாளர் துறை கூறுகிறது. அப்படியானால் இவர்கள் யாருடைய நலனுக்காக பேசுகிறார்கள் என்றார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான் சங்கம் வேண்டும் என்று தென்கொரிய நிறுவனமான சாம்சங்கை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் என்றார்.
சிவக்குமார் (ஏஐயுடியுசி);தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவானதால் வாங்கும் சக்தி இல்லை. இதனால் சந்தையில் பொருட்கள் விற்பனை ஆவதில்லை. தான் விரித்த வலையில், முதலாளித்துவம் தானே வீழ்ந்துள்ளது. தொழிலாளர்கள் உரிமையைப் பறிக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளை இந்தியா சுரண்டி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நமது பொறுப்பு கூடுதலாகிறது என்றார்.
திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு); அரசாங்கம் ஒரு உதாரண முதலாளியாக (Model Employer) இருக்க வேண்டும். புதிய தொழிலாளர் சட்டம் குறைந்த பட்ச ஊதியத்தை 5000 ரூபாயாகக் கூட இருக்கலாம் என்று சொல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் கேட்டுக் கொண்டதால் தான் தமிழக அரசு வேலை நேரத்தை உயர்த்த சட்டம் கொண்டுவர முயற்சித்தது’’ என்றார்.
Also read
உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் நிதிக்குழு தலைவரான சி.எச்.வெங்கடாசலம், இராணுவத்திற்கு ஆகும் செலவில் சரிபாதியை குறைத்தால் மக்களின் தேவைகளை நிறைவேற்றிட முடியும். அதனால் தான் உதொச, உலக அமைதிக்காக, ஜனாநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது. வளர்ந்த நாடுகளிடம் தொழில்நுட்ப வசதி உள்ளது; வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்கள் சம்பளம் அதிகமாகவும், வளரும் நாடுகளிலோ குறைவாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் நன்றாகவும், ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சியற்றும் உள்ளன. இப்படிப்பட்ட வேறுபாடுகளை எதிர்க்கிறோம்’’ என்றார்.
148 நாடுகளில் தமது இணைப்பு சங்கங்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள உலக தொழிற்சங்க சம்மேளனம், கொரோனா காலத்தில் மேற்குல நாடுகளின் இலாப வேட்கையையும், மனிதகுலத்திற்கு எதிரான மனநிலையும் தோலுரித்துக் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு; பீட்டர் துரை ராஜ்
காலத்தின் தேவையை வலியுறுத்தும் கட்டுரை.