மக்கள் நெரிசலுக்கும், சாவுகளுக்கும் காரணம் யார்?

சாவித்திரி கண்ணன்

மெரினாவில் கூடியது எதிர்பாராத கூட்டமல்ல, மூன்று நாட்களின் ஒத்திகைகளிலே போக்குவரத்து திணறியதே..! இது திட்டமிட்ட சதியா? திட்டமிடாததால் ஏற்பட்ட விபத்தா? அலட்சியத்தால் நேர்ந்த தவறா? ‘மக்கள் அவதிபடட்டுமே’ என்ற வக்கிரமா..? எங்கு தவறு நடந்துள்ளது? ஒரு ஆத்மார்த்தமான அலசல்;

கேளிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் கட்டுக் கடங்காத மோகம் அவர்களின் அடிப்படை அறிவைக் கூட மழுங்கடித்து விடுகிறது என்பது ஒருபுறமென்றால், முதல் மூன்று நாள் ஒத்திகைக்கே மெரீனா சாலை போக்குவரத்து நெரிசலில் திணறிய அனுபவத்தை கருத்தில் கொள்ளாததும், பெரும் கூட்டம் சேரும் இடங்களில் அடிப்படை வசதிகளான குடி நீர், கழிவறைகள் வசதிகள் இல்லாததும் மற்ற காரணங்களில் பிரதானமாகும்.

வழக்கமாக மெரினாவில் இருக்கும் குளிர்பானங்கள், குடி தண்ணீர், நொறுக்கு தீனிகள், உணவுக் கடைகள் அத்தனையையும் அப்புறப்படுத்தியது அதிகார வர்க்கத்தின் அடாவடி நடவடிக்கையாகும். இந்த மாதிரி நேரங்களில் தான் அவர்கள் அத்தியாவசியமாகிறார்கள். அதிகார வர்க்கம் அவர்களை நடை பாதை வியாபாரிகளாக மாத்திரமே பாவித்ததே அன்றி, பசிக்கு உணவளிக்கும் அன்னதாதாக்களாக அங்கீகரிக்கவில்லை.

கோவில் திருவிழாக்களில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள், மோர் பந்தல்கள், அன்னதான பந்தல்கள் பக்தியின் பெயரால் செய்யப்படும் மானுட சேவைகள் தானே. இங்கே இந்த நாளில் விமான சாகச நிகழ்ச்சிக்கு பல லட்சம் மக்கள் வரவுள்ளனர் என்பது பிரதியட்சமாக அரசுக்கு சொல்லப்பட்ட பிறகும், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எதையுமே கருத்தில் கொள்ளாமல் பெருந்திரள் கூட்டத்தை அனுமதித்தது எப்படி?

பல லட்சம் மக்கள் சில மணி நேரங்கள் தங்கிச் செல்லும் இடங்களில் போதுமான தற்காலிக கழிவறைகள் மிக, மிக அத்தியாவசியமாகும். சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கித் தவித்தவர்கள் எத்தனை பேரோ..? வயிற்றை கலக்கி கழிவறைகளைத் தேடியவர்கள் எத்தனை பேரோ..? வெயிலின் தாக்கம் தாங்காமல் நிழல் தரும் இடங்களை தேடியவர்கள் எத்தனை பேரோ…?

’’முன்பு மெரினாவில் நெடிதுயர்ந்த மரங்கள் வழி நெடுக இருந்தன. அவை நிழல் தருவதுடன் ஆக்சிசஜனை வெளியேற்றின… தற்போதோ பயன்படுத்தவே கூடாத தடை செய்யப்பட்ட குட்டை மரங்களை அழகியல் கருதி வைத்துள்ளனர். இவற்றில் மக்கள் கூட்டம்  நிழல்களுக்காக ஒதுங்க கூட முடியாதே..’’ என்கிறார் இயற்கை மருத்துவர் மரிய பெல்சின்.

கொரானோ காலகட்டத்தில் நிர்பந்தித்து செலுத்தப்பட்ட வேக்சின்களால் இதய பாதிப்பு, மாரடைப்பு, மற்றும் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவது போன்ற பல பாதிப்புகளால் இது போல திடீர் மரணங்கள் நாளும் நடந்த வண்ணம் உள்ளன. பல லட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் ஐந்து பேர் மரணம் நடந்துள்ளதால் கவனம் பெற்றுள்ளன அவ்வளவே..’’என்கிறார், சித்த மருத்துவர் விஜய் விக்கிரமன்.

அரசாங்கத் தரப்பில் மருத்துவ சேவைக் குழுக்களும், ஆம்புலன்சுகளும் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், மயக்கடைந்தவர்களை தூக்கிச் செல்ல ஸ்டெரக்சர்கள் போதுமானதாக இல்லை. பெரும்பாலோரை கைத்தாங்களாகவே தூக்கி செல்ல வேண்டி இருந்தது.. அப்படியும் சுமார் 240 பேர் மருத்துவமனை தூக்கிச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியதே!

சரி விசயத்திற்கு வருவோம். காலை 11 மணி நிகழ்வுக்கு காலை எட்டு மணிக்கே மெரினா திணறத் தொடங்கியதே.. அப்போதே சுதாரித்துக் கொண்டு, மக்கள் மேன்மேலும் வர வேண்டாம். இப்போதே மெரினா நிரம்பிவிட்டது. ஆகவே வீட்டில் இருந்தபடியே தொலைகாட்சியில் கண்டு களியுங்கள் என்ற அறிவிப்பை அரசு தரப்பில்  ஊடகங்களில் தந்திருந்தால் கூட்ட நெரிசல் ஓரளவேனும் மட்டுபட்டிருக்குமே..!

வண்டிகளை தொலை தூரத்தில் நிறுத்திவிட்டு இரண்டு கீ.மீ அளவுக்கு நடந்து வந்தவர்களும், திரும்பியவர்களுமே இறந்துள்ளனர் என்பது கவனத்திற்கு உரியதாகும். இந்த நிகழ்வில் மெரீனா மட்டுமல்ல, ஒட்டு மொத்த தென் சென்னையுமே போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டது. சின்னச் சின்ன தெருக்களில் எல்லாம் கார்களும், ஒரு சக்கர வாகனங்களும் நூற்றுக்கணக்கில் நுழைந்து வெளியேறவும், முடியாமல் நகரவும் முடியாமல் திணறின.

எந்த ஒரு திருவிழாவின் போதும் கூடுதல் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டு செய்வது அரசின் வாடிக்கையாகும். ஆனால், இந்த நிகழ்வுக்கு பேருந்து வசதிகளையும் செய்யவில்லை. ரயில் சேவைகளையும் செய்யவில்லை. அப்படி செய்யாததால் ரயில் நிலையங்களில் மக்கள் பிதுங்கி வழிந்ததை பார்க்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. அதிக கூட்ட நெரிசலால் ரயில் பெட்டிகளுக்குள் கூட மூச்சு முட்டி வயதானவர்களோ, குழந்தைகளோ இறக்க வாய்ப்புள்ளது என்பதை ஏனோ அரசு கவனத்தில் கொள்வதில்லை.

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மாலை ஐந்து மணி வரை நீடித்தது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் தொடர்பாக முன் கூட்டிய திட்டமிடல் இல்லாமல் மிகவும் அலட்சியமாக டிராபிக் போலீசார் இருந்துள்ளனர் என்பது உண்மையிலும், உண்மையாகும். நமது போக்குவரத்து போலீசார்கள் வழிப்பழி கொள்ளையர்களாக தினமும் அபராதங்கள் விதித்து மக்களை அல்லாட வைப்பதில் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்கு செய்வது தான் தங்களின் தலையாயப் பணி என்பதை அவர்கள் மறந்து பல நாட்களாகின்றன.

 

நிகழ்ச்சி கடும் வெயில் நேரமான காலை 11 மணி முதல் 1 மணி வரை எனும் போது ஆங்காங்கே சிறு,சிறு துணி பந்தல்கள் வைத்து இருந்தால், அதில் வயதானவர்களும், பெண்களும் ,குழந்தைகளும் தஞ்சம் அடைந்து சற்று நிம்மதி அடைந்திருக்க கூடும் அல்லவா?

ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர், முதல் அமைச்சர், துணை முதல்வர் குடுமபத்தினர் , அமைச்சர் பெருமக்கள்.. அமர்ந்து பார்க்க சொகுசான சோபாக்களும், பந்தல்களும் அமைத்திருந்தார்கள்..! தங்களை சுற்றிலும் பெரும் மக்கள் திரள் சந்தித்த நெருக்கடிகள் குறித்த எந்த பிரக்ஜையும் இன்றி, இந்த பெரிய மனிதர்கள் சந்தோஷமாக வந்து சிரமம் இல்லாமல் திரும்பிவிட்டனர். இன்ன வரைக்கும் முதல்வர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குறித்து எந்த வார்த்தையையும் உதிர்க்கவில்லை.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மக்கள் துயரங்கள், சாவுகள் குறித்து எந்த பாதிப்பும் இல்லாதவராக அழகு பதுமை போல பொதுவெளியில் வலம் வருவதும், அமைதி காப்பதும், எழுதி கொடுக்கப்பட்ட வாசகங்களை மட்டுமே உதிர்த்துச் செல்வதும் மக்களாட்சியின் வினோதங்களில் ஒன்றாகும்.

வாழ்க மக்களாட்சி தத்துவம்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time