தமிழ் மொழி கற்பதை தலையாய அறமாக்குவோம்!

கவிஞர் வைரமுத்து

தமிழ் வழி கல்வி கற்பதும், தமிழ் மொழியை கட்டாயம் கற்பதும் தமிழ் மொழியின் மீது நம்பிக்கை கொள்வதும் நம் தலையாய கடமை.

’தமிழனமே  தமிழ் மொழி மீது நம்பிக்கை கொள்ளவில்லை எனில், எந்த இனம் நம்பிக்கை கொள்ளும். முதலில் பெற்றோர்கள் தமிழின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பெருகிவரும் ஆங்கில வழி பள்ளிகளால் 50 ஆண்டுகளுக்கு பின், நம் மொழி வெறும் பேச்சுமொழியாக மட்டும் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு இந்த ஆபத்து வரலாம். வரக்கூடும். எந்த மொழிக்கும் வரக்கூடாது என்பது நமது பொதுவான எண்ணம். தமிழ்மொழிக்கு வரக்கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட எண்ணம். உலக மயமாதல் என்னும் பூதத்தை விழுங்கும் சக்தியை தாய்மொழிக்கு நாம் அனைவரும் தர வேண்டும். இதற்காக தமிழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம்.

தமிழுக்கென சில திட்டங்களையும், கொள்கைகளையும் வகுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். உலக மயமாதல் என்ற பெரும் பூதம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புகுந்து உள்ளூர் கலாசாரத்தை, பண்பாட்டை தின்கிறது. கடைசியாக தற்போது மொழியின் மீது வாய் வைக்கிறது. மொழியை விழுங்கி விட்டு தன்னுடைய சுவடுகளை பதிப்பதற்கு முயற்சிக்கிறது.

ஒரு தலையாய செய்தி சொல்கிறேன். “இனி எந்த மொழி தொழில்நுட்பத்தின் தோள்களில் ஏறித் தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலைக்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியைத் தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் மூன்று மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங்கிலம் – சீனம் – ஜப்பான். இந்த மூன்று இனங்களுமே தொழில்நுட்பத்துக்குத் தங்கள் மொழியைக் கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்தத் தகுதி இருக்கிறது. தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்.

பிரதமரே, செயல் வேண்டும்

“விதியே விதியே என்செய நினைத்தாய் தமிழச் சாதியை” என்ற பாரதி வரியைப் பாடிப் பாடி நெஞ்சுடைந்து நிற்கிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால்தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், அதிலும் வாரத்தில் மூன்றே வகுப்புகள் என்றும், தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள் என்றும் நடுவண் அரசு விதிகள் வகுத்திருப்பதைப் பார்த்துத்தான் ‘விதியே விதியே’ என்ற பாரதி பாடல் எனக்குள் வினைப்பட்டது. நாமிருப்பது உள்நாட்டிலா உகாண்டாவிலா என்ற வெட்கம் எங்கள் தலைமுடியை இழுத்துத் தலையைத் தின்கிறது.

இந்தியப் பிரதமர் உலகமெல்லாம் தமிழ் வரிகளை உச்சரிக்கிறார்; மகிழ்ச்சி; நன்றி. ஆனால், மேற்கோள்களால் மட்டுமே தமிழர்கள் மெய்சிலிரிக்க மாட்டார்கள்; செயல் வேண்டும். இந்தியாவின் தேசிய இனங்களின் எல்லாத் தாய் மொழிகளையும் உயர்த்திப் பிடிக்கும் உரிமை வேண்டும்.

தமிழ் அடையாளம் மட்டுமல்ல, அதிகாரமுமாகும்!

தாய்மொழியை ஓர் இனத்தின் அடையாளம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், மூளையின் மறுபக்கத்தால் யோசித்தால் அது அடையாளம் மட்டுமன்று அதிகாரம் என்பது புலனாகும். தமிழ்மொழியை எங்களை விட்டுப் பிரிப்பது அதிகாரத்தை மெல்ல மெல்லப் பறிப்பது என்றே புத்திமான்களால் புரிந்துகொள்ளப்படும்.

உலகின் சரிபாதி மொழிகள் இந்த நூற்றாண்டில் இறந்துவிடும் என்ற மொழி விஞ்ஞானிகளின் எச்சரிக்கையிலிருந்து நாங்கள் விழிப்பதற்குள்ளே இப்படி எங்கள் விழிகளைப் பிடுங்கினால் எப்படி? இதை ஓர் எளிய செயலாக எடுத்துக்கொள்ள இயலாது.

சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று இந்தியப் பிரதமரால் கொண்டாடப்பட்டது தமிழ். ஆனால், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 600கோடி ஒதுக்கியபோது, அதனினும் தொன்மையான தமிழுக்கு ஒதுக்கப்பட்டது எவ்வளவு என்பது நாடாளுமன்றத்திற்கு நினைவிருக்கிறதோ இல்லையோ நாட்டுக்கு நினைவிருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தி திணிக்கப்படுவது கண்டு எரிந்த உடம்பில் இன்னும் எரியாதிருக்கும் எலும்புகள் மீண்டும் தீக்குளிக்க எத்தனிக்கின்றன.

பிரிட்டிஷ் தீவின் பழங்கலாசாரத்தை அழித்த ரோமானியக் கலாசாரத்தைப் போல், ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மொழியை அழித்த ஆங்கில ஆதிக்கத்தைப்போல், சமஸ்கிருதத்தால் இன்னும் அழிக்க முடியாத எங்கள் கலாசார எச்சங்களை இந்தித் திணிப்பின் மூலமாய் அழிக்கத் துடிப்பதைக் கண்டு எங்கள் கருவில் உள்ள பிள்ளையும் கண்ணுறங்காது.

தமிழ்நாட்டில் பெருந்தலைகள் இல்லை என்று தவறாகக் கருதாதீர்கள். அவர்கள் விதைத்த தத்துவங்கள் இந்த மண்ணில் இன்னும் சாகவில்லை. நாங்களும் கடந்த காலத்தில் சில பிழைகள் செய்திருக்கிறோம். ஆனால், அவையெல்லாம் எங்கள் தோல்விகளால் நேர்ந்தவை. இப்போது நேர்பவை துரோகத்தால். இந்தியாவின் பூகோளம் செய்த துரோகத்தால் எங்கள் சரித்திரம் தண்டிக்கப்பட்டிருக்கிறது.  போதும்! நாங்கள் பட்டழிந்தது போதும்; கெட்டழிந்தது போதும்; இன்னும் எங்களைச் சுட்டழிக்கப் பார்க்காதீர்கள்.

இதயம் நடுங்குகிறது

தமிழில் நம்பிக்கை இல்லாத – தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாத – ஏன் தமிழைப் பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பது கண்டு பனிக்காற்றின் தளிரைப்போல் எங்கள் இதயம் நடுங்குகிறது. தமிழுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வருவது – தமிழர்கள் எதிர்த்த பிறகு அதை மாற்றிக்கொள்வது என்ற நடைமுறை நல்லதல்ல. போராடும் பாம்பைக் கொத்தவிட்டுக் கொத்தவிட்டு அது களைத்துப்போன பிறகு அதன் கழுத்தைக் கவ்வும் கீரியைப்போல, தமிழர்களைக் களைக்க வைக்கும் முயற்சிகளுள் இதுவும் ஒன்றோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் படிப்போரின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகப் போவதற்குப் பெற்றோர்களும் ஒரு பெருங்காரணம் என்று கவலையுறுகிறோம். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஓர் அறமாகவே கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழனின் வரம்

வானத்தில் இருந்து வரும் மழைத்துளி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பூமியில் வந்து விழுகிறது. அது போல் கடந்த மூன்றாயிரம்  ஆண்டுகளாக தமிழ் மொழியில் மட்டும் தான் கவிதைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆயிரம் கவிஞன் கிடைப்பான். வேறு எந்த மொழியிலும் இது போல் கவிஞர்கள் கிடைக்கமாட்டார்கள். தமிழ்மொழியின் சிறப்பை வேறு எந்த மொழியிலும் பார்க்க முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை கவிதையாகவும், கற்பனையாகவும், மொழியாகவும் வாழக்கூடிய வாழ்வு தமிழனுக்கு என்று வகுக்கப்பட்ட வரம்.

தமிழ்மொழி களப்பிரர்கள், ஆங்கிலம், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கடந்து வந்துள்ளது. இன்று தமிழ்மொழி தன்னைத்தானே கடக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. தமிழ் மொழிக்குள் எல்லாம் அடங்கி விட்டது என்று பூட்டு போட்டு விடாதீர்கள்.

இதில் ஆராய்ச்சி, விஞ்ஞானம், தத்துவம் போன்றவை இல்லை. தமிழ் மொழியில் கண்டுபிடிப்புகள் இ்ல்லை. யாரோ கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு நாம் பெயரை தான் கண்டுபிடிக்கிறோம். சில நேரங்களில் பெயரை கண்டுபிடிப்பதே பெரிய போராட்டமாக உள்ளது. மொழிபெயர்ப்புகளில் சில நேரங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகிறது. நம் வாழ்க்கை மொழிபெயர்ப்பில் முடிந்து விடக்கூடாது. தமிழ் மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி குறித்துச் சிந்திக்கும் இதே வேளையில்  ‘தாய்மொழியும் தமிழ்நாடும்’ என்பது குறித்து ஒட்டுமொத்த அறிவுலகமும் கல்வி உலகமும் ஓர் உறுதிச் சிந்தனை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் – மாநில அரசின் தடைகளைவிடத் தமிழர்கள் தங்களின் மனத்தடையை உடைத்தெறிய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் பிள்ளைகள் தமிழ் படிப்பார்கள். தமிழைப் பாடமாய் அல்ல பயிற்றுமொழியாய்ப் படிப்பவர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது எழுதிய சட்டமாகவும் எழுதாத சட்டமாகவும் திகழ வேண்டும். இல்லையெனில் 50 ஆண்டுகளில் தமிழ் பேச்சு மொழியாகச் சுருங்கிப்போகும் விபத்து நேர்ந்தாலும் நேரும்; 3000 ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் சேர்த்துவைத்த ஞானச் செல்வங்கள் புதைத்த இடம் தெரியாத புதையலாய் மறைந்தொழியும்.

தமிழுக்கு எங்கே ஊறு நேர்ந்தாலும் அரசியல் – சாதி – மொழி – மதம் கடந்து தமிழ்நாட்டுக்குள் வாழும் எல்லா இனங்களும் ஒற்றைக் குரலாய் ஒலிக்க வேண்டும். ‘தமிழைக் காப்போம்; தமிழரை மீட்போம்’.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time