மேற்குத் தொடர்ச்சி மலையும் காலநிலை மாற்றமும்!

-பீட்டர் துரைராஜ்

காடுகளையும், மலைகளையும் காக்காவிட்டால் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியாது. மானுட வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீரையும், தூய காற்றையும் இவையே தருகின்றன. இவற்றை காப்பாற்றத் தவறும் போது அச்சுறுத்தும் கால நிலை மாற்றங்களை நாம் சந்தித்தாக வேண்டும்;

‘காடும் காலநிலை மாற்றமும்’ என்ற பொருளில் சுற்றுச் சூழல் கருத்தரங்கு சமீபத்தில் சென்னையில்  நடைபெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின்  தாக்கம் ஒட்டுமொத்த தெ இந்தியாவையே பாதிக்கும். புவி வெப்பம் அடைவதால் பருவ மழை தவறுகிறது. நிலச் சரிவு, பெருமழை ஏற்படுகிறது. இதனை எதிர் கொள்ள , புவி வெப்பத்தை சமச்சீராக வைத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன..? என்பதை இந்தக் கருத்தரங்கு அக்கறையுடன் விவாதித்தது.

இக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன், தாவரவியலாளர் நரசிம்மன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், பிரபல சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பேசியவர்களின் உரைகள் :

ஆதி்.வள்ளியப்பன்; (பத்திரிக்கையாளர்)

புவி வெப்பமயமாதல் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரப்புரை நடந்து வருகிறது. இது குறித்து நாம் புரிந்து கொள்வது அவசியமானது. விடுமுறையின் போது நாம் மலைவாச இடங்களுக்குச் செல்கிறோம். மலைகளின் மீது நாள்தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும் என்றதும், எதிர்ப்பு வந்தது. இது ஆளும் வர்க்கத்தின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையின்மையால் வருகிறது. ஆனால், கணக்கெடுப்பது ஒரு வகையில் நல்லது தான். கணக்கிலடங்கா வாகன ஓட்டம் மலைகளின் சுற்றுச் சூழலை பாதிக்கும். மாதவ் காட்கில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புப் பற்றி ஒரு அறிக்கை கொடுத்தார். பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் கேரளாவில் 2018 ல் ஏற்பட்ட நிலச்சரிவின் போதும், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போதும் மாதவ் காட்கில் என்ன சொல்கிறார் என்று பத்திரிகையாளர்கள் அவரது கருத்தை எதிர்பார்த்தனர்.

காட்கில் அறிக்கையில் மலைவாழ் மக்கள், உயிரியல் பண்பு, தாங்கு திறன், பருவ நிலை, அரிய தாவரம், அழியும் தாவரம் என பல்வேறு காரணிகளை கணக்கிட்டு மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க, மூன்று பகுதிகளாக பிரித்தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறப்பு இனப்பெருக்க பகுதி, செங்குத்தான சரிவு மலை, ஆறுகள், காட்டுயிர் வழித்தடம் என பல தனித்தன்மைகள் உள்ளன. இந்த மலையில் இருந்து 58 ஆறுகள் உருவாகின்றன. இதனை நம்பி தென் இந்தியாவின் 25 கோடி பேர்  வாழ்கின்றனர். உள்ளது.  இந்த நீண்ட மலைத் தொடர் பாதிப்புக்குள்ளானால், பருவ மழை தவறும். பருவமழை தான் நமது நாட்டின் வரவு செலவு அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் முடிவு செய்கிறது என்று நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஒருமுறை குறிப்பிட்டார்.

எனவே, மலைத் தொடரைப் பாதுகாப்பதன் மூலம் மழை குறிப்பிட்ட காலங்களில் பொழிவதை உறுதி செய்ய இயலும். கேரளாவின் பெரும் பகுதி காடும், மலையும், கடற்பகுதியுமாக உள்ளது. 9 % மட்டுமே சமவெளியில் உள்ளது. ஆனால் கேரளா, காட்கில் அறிக்கையை கடுமையாக எதிர்த்த மாநிலமாகும். மலைவாழ் மக்களின் வாழ்வுரிமை என்ன ஆவது என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் 22 % மரங்கள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை 34 % கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக் கொள்கிறது.

கனிம வள ஆசையிலும், உயிரின கடத்தலாலும் மேற்குத் தொடர்ச்சி மலை சிதைக்கப்படுவதால், பசுமை மாறாக் காடுகள் வறண்ட காடுகளாக, முட்புதர் காடுகளாக மாறும். காட்கில் கொடுத்த அறிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கஸ்தூரி ரங்கன் அறிக்கை பெறப்பட்டது.  ( கஸ்தூரி ரங்கன் ஒரு விண்வெளி விஞ்ஞானி என்பது ஒரு விநோதம்). இந்திய அரசு உருவாக்கிய வன உரிமைச் சட்டப்படி, தமிழக அரசின் வனத்துறை, வன மக்களுக்கு உரிமைகளைத் தர தயராக இல்லை.

நரசிம்மன், தாவரவியலாளர்

பசுமை மாறாக் காடுகள் குறைகின்றன என்று உலக நாடுகள் அறை கூவல் விடுத்துள்ளன. புவி வெப்பமயமாதலால் பூ பூக்கும் காலம் மாறும். அந்தக் காலத்தில் வரவேண்டிய பூச்சிகள் வராது. இதனால் செடிகளின் இனப் பெருக்கம் சரிவர நிகழாது. புல்வெளி குறைவதால் மான்கள் குறைகின்றன. எனவே, மான்கள் குறைந்தால் சிங்கங்களுக்கு உண்ண வழியில்லை. அவை சமவெளியை நோக்கி வரும்.

கிராமங்களைச் சுற்றி மரங்கள் இருந்தன. எனவே, விலங்குகள் ஊருக்குள் வராது. குரங்குகள் ஊரின் எல்லையிலேயே இருக்கும். காடுகள் அழிவதினால் தான் காட்டிற்குள் இருந்த மலேரியா ஊருக்குள் வந்தது. எபோலோ வைரஸ், எச்ஐவி போன்ற நோய்களும் அப்படித் தான். குரங்கிலிருந்து நோய் மனிதனுக்கு வருகிறது. ஒன்றின் அமைப்பிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் போது சிக்கல் கூடுதலாகிறது.

மழை குறைவதால் அரிசி உற்பத்தி குறைகிறது. காடுகளில் கிடைக்கும் அரிய வகை உணவுப் பொருட்கள் மறைகின்றன. சத்தியமங்கலம் காடுகளில் உள்ள கரு நெல்லியைத் தான் அதியமான் அவ்வைக்கு கொடுத்திருக்க வேண்டும். தோட்டக் கலை பூக்கள் மலராது. கடுங்குளிரில் தான் குங்குமப் பூ மலரும். கடந்த சில ஆண்டுகளாகவே டிசம்பர் பூ தள்ளிப் போகிறதே என்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார். கடந்த 50 ஆண்டுகளில் எப்போது பூத்தது என்ற தரவு நம்மிடம் இல்லை. தரவுகளே இல்லாத போது எப்படி நாம் சிக்கல்களை புரிந்து கொள்ள முடியும்…?

தமிழ்நாட்டில் மட்டுமே 270 இடவரை தாவரங்கள் (ஓரிட வாழ் தாவரங்கள்) உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை சிதைந்து போனால் இவை அழிந்து போகும். நம்மிடம் அடிப்படை  தரவுகள் குறைவு. இதை உருவாக்க வேண்டும். அலையாத்தி காடுகள் அல்லது சதுப்பு நில காடுகள் மாயவரம், பிச்சாவரம், முத்துப் பேட்டை பகுதிகளில் உள்ளன. எண்ணூர்  மின்நிலையம் வந்த பிறகு  அங்குள்ள சிற்றினங்கள் அழிந்து போயின.

ஜெகநாதன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 

சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் பெயரோடு காலநிலை மாற்றம் என்பதை சேர்த்து வைத்திருப்பதே நமது சாதனை தான். மயில் அதிகளவில் இங்கு  நடமாடுவது சுற்றுச் சூழல் மாறுவதைத் தான் காட்டுகிறது. புல்வெளிகள் இல்லாததால் கீரி, ஓநாய்கள் மறைந்து போகின்றன. இவையெல்லாம் சுழற்சியைப் பாதிக்கும்.

ஒருகாலத்தில் ஏப்ரல் மாதங்களில் கிடைத்த மாம்பழம், இப்போது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. வெளி நாடுகளில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் காலத்தில் என்ன பூத்தது என்பதை நாட் குறிப்புகள், பயணக் குறிப்புகள் போன்றவை வாயிலாக ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளனர்.நம்மிடையே ஆராய்ச்சி குறைவு. தகவல்கள் இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்புள்ள விவரங்கள் கூட நமக்கு கிடைப்பதில்லை. தேவையான மரங்கள், தேவையான இடங்களில் இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பருவ காலங்களில் தாவரங்களும், உயிரினங்களும் எப்படி உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். நமக்கு குற்ற உணர்ச்சி தேவையில்லை. முதலாளித்துவம் தனது இலாப வேட்டைக்காக இயற்கையை அழிக்கிறது. இயற்கையைப் பாதுகாக்க லாடாக் பகுதியில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

நக்கீரன்

1991 ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் கூடிய யுனெஸ்கோ மாநாடு – உலக காடுகள் பேராயம்,  கோவில் காடுகள் குறித்து இனி கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. பல்லுயிரியம் (Bio diversity) என்றால், பெரிய காடுகள் தான் நினைவுக்கு வரும். சிறிய கோவில் காடுகள் நினைவுக்கு வராது. ஆனால் கோவில் காடுகளில் தான் ஓரிட வாழ் உயிரினங்கள் உள்ளன. பூச்சி தின்னும் தாவர வகைகள் சிவகங்கை வெப்ப மண்டல காடுகளில் உள்ளன. கோவில் காடுகள் பெருமளவிலான கரிமில வாயுவை உள் வாங்குகின்றன. இக்காடுகள் கார்பன் சேமிப்புத் தளங்களாகும். கோவில் காடுகள் ஆதிகாடுகளின் மிச்சமாகும். எனவே, அவை நீர்ப்பாங்கான பகுதிகளிலும், நீர்பிடிப்பு பகுதிகளிலும் இயற்கையாகவே அமைந்துள்ளன. அந்தந்த பகுதிக்கேற்ற தாவர வகைகளையும், உயிரினங்களையும் இயற்கையாகவே கொண்டுள்ளன. சூழலியல் பார்வையோடு இவை அமைந்தவையாகும்.

பெரிய காடுகளையும், மலைப்பகுதிகளையும் பாதுகாப்பதை விட, கோவில் காடுகளை நம்மால் எளிதாக பாதுகாக்க முடியும். ஏனெனில், இவை நம் அருகே உள்ளவை. நுண் காலநிலை மாற்றத்தோடு (micro climate change) தொடர்புடையவை. இக் கோவில் காடுகள் நகரில் கூட இருக்கலாம். சென்னை போன்ற இடங்களில் உள்ள கோல்ப் கிளப் போன்றவைகளை  பெருங்காடுகளாக மாற்ற இயலும். ஏரிகளை வெட்டலாம். வன உயிரினச் சட்டம் போல, கோவில் காடுகளுக்கு ஒரு சட்டம் உருவாக வேண்டும். கோவில் காடுகளைப் பேசும் போது தூய்மை வாதம் உதவாது. அனைத்து சாதியினரையும் கோவில் காடுகளை பயன்படுத்துவதில் உள்ளடக்க  வேண்டும். கோவில் காடுகளை கார்பன் காடுகள் என்று கூடச் சொல்லலாம். இதனை நாம் மியாவாகி காடுகளைப் போல வளர்த்தல் ஆகாது.

குலதெய்வ வழிபாடு நமக்கு இருந்த காரணத்தால் பல கோவில் காடுகள் இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகின்றன. இனக்குழு முறை கோவில் காடுகளை பாதுகாக்கிறது. ஒரு மரத்தையாவது வெட்டாமல் விடுவது என்ற பழக்கம் குலதெய்வ வழிபாட்டில் இருந்து வருவது தான். காடுகளில் கடவுள் வாழ்ந்தார் என நம்பப்பட்டது. தமிழ் மக்கள் மட்டுமே கோவில் நிலங்களில் உரிமை கொள்ள முடியும்;

வைதீக மதம் அத்தகைய உரிமையைக் கோர முடியாது. தமிழ் மக்களும், வைதீகமும் ஒன்றல்ல. நவீன காலத்தில் சொல்லப்படும் சமூகம் (society) என்பது தனி மனிதர்களின் தொகுப்பு. மன்பதை என்பது பல குடிகளின் கூட்டு. மதம், கடவுள், பல்லுயிரியம் என அனைத்தையும் உள்ளடக்கியது. அதனால்தான் தொல்காப்பியம் இதனை அகத்திணையில் வைக்கிறது. சுற்றுச்சூழல் பார்வை கொண்ட ஒரே தலைவர் காந்தி.  ஆனால் அவரிடம் சனாதனப் பார்வை இருந்தது. சில கிராமங்களில் சாதிக்கோவில்கள் உள்ளன. குலதெய்வங்களைத் தேடுங்கள்; கோவில்காடுகளை மீட்டெடுக்கலாம். நாகமலையில் உள்ளவை கோவில் காடுகள். அவை மக்கள் தலையீட்டால் காப்பாற்றப்பட்டுள்ளது.

இது சுற்றுச் சூழலில் ஆர்வம் உள்ளவர்கள் நடத்திய இரண்டாம் ஆண்டு கூடுகை. கடந்த ஆண்டு கிழக்குத் தொடர்ச்சிமலை, கால நிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசினர். இந்த முறை மேற்குத் தொடர்ச்சி மலையை மையப்படுத்தி பேசினர். ஒவ்வொருவர் பேசுவதற்கு முன்பும் சுற்றுச்சூழல் குறித்த முக்கியமான நூல் ஒன்று குறித்து பேசப்பட்டது. இளைஞர்கள் முன்முயற்சி எடுத்து செய்த கூடுகை இது.

தொகுப்பு; பீட்டர் துரைராஜ்
 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time