ஹரியானா, காஷ்மீர் தேர்தல் முடிவுகள்; ஒரு அலசல்

ச.அருணாசலம்

ஹரியானாவில் பாஜகவின் சூழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகப் பூர்வமான தேர்தலையும், ரிசல்ட்டையும் உறுதிபடுத்த முடியாத தேர்தல் ஆணையம் சாபக் கேடு. காஷ்மீரிலோ மக்கள் படு விழிப்புணர்வுடன் தில்லுமுல்லுகளுக்கு இடம் தராமல் தில்லாக பாஜக வை புறக்கணித்து தீர்ப்பு தந்துள்ளனர். இரு மாநில தேர்தல் ஒரு அலசல்;

ஹரியானா ரிசல்டின் போது தேர்தல் ஆணையம் நீண்ட நேரம் தனது இணையத்தில் தகவல்களை மேம்படுத்தாமல் இருந்தது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இ.வி.எம்.மெசின்கள் குறித்து பல இடங்களில் புகார்களுக்கு மேல் புகார்கள் சென்றும் தேர்தல் ஆணையம் பொருட்படுத்தவில்லை. விளைவு, ஹரியானாவில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதை பாஜக தொண்டர்களாலேயே நம்ப முடியவில்லை.

சிவசேனாவின் சாம்னா பத்திரிகை எழுதியுள்ளபடி, ’வெற்றியை எப்படி தோல்வியாக்க வேண்டும் என்ற கலையை காங்கிரஸிடமிருந்துதான் கற்க முடியும்’

இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒருவர் விடாமல் அனைவரும் ஆருடம் சொன்ன விடயம், காங்கிரஸ் கட்சி எளிதாக அறுதி பெரும்பான்மையாக வெற்றி பெரும் என்பதே!

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்ணியுடன் இணைந்து களம் கண்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் வென்றது . அந்த ஐந்து தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 42 ஆகும். இம்முறை காங்கிரஸ் தனியாக களமிறங்கியது.

விவசாயிகள் போராட்டம், வேலையின்மை, அரசியல் வன்முறை, நிருவாகக் கோளாறு தொடர்ந்து ஆட்சியிலிருந்ததால் மக்களிடையே ஏற்பட்ட வெறுப்பு போன்ற காரணிகள் பத்திரிக்கையாளர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரிதாகத் தெரிந்ததால், இந்த அதிருப்தியை காங்கிரஸ் அறுவடை செய்யும். இயல்பாக அதிருப்தியடைந்த மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்வர் என எண்ணி இறுமாந்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சி முன்னிறுத்திய ஜாட் இனத் தலைமை தான் என தெரிகிறது. ஜாட் இனத்தை சார்ந்த பூபிந்தர் ஹூடா தான் அறிவிக்கப்படாத ஆனால், தீர்மானிக்கப்பட்ட நாளைய முதல்வராக முன்னிறுத்தப்பட்டார். மாநிலத்தில் தேர்தலை அவர் தலைமையில் தான் காங்கிரஸ் சந்தித்தது, அவர் கை காட்டிய ஆட்களுக்கே போட்டியிட “சீட்” கொடுக்கப்பட்டது. இவர் ஏற்கனவே இருமுறை – 2005, மற்றும் 2009- முதல்வராக இருந்தவர் , 2014 லிலும் 2019 தேர்தலிலும் இவர் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவியது.

ஹரியானா மாநிலத்தில் ஆளுமை மிக்க ஆதிக்க சாதியான ஜாட் வகுப்பினருக்கும் பிற சாதியை சார்ந்த மக்களுக்கும் உள்ள முரண்பாடு, அரசியல் களத்தில் எதிரெதிர் முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் யாதவ் வகுப்பிற்கும் பிற வகுப்பினருக்கும் உள்ள முரண் அல்லது ‘பகை’ போல ஹரியானாவில் ஜாட் வகுப்பினருக்கு எதிராக பிற வகுப்புனர் (பிற்படுத்தப்பட்டோர்) அரசியலெதிரணியில் திரளுகின்றனர்.

விவசாயிகள் போராட்டம், ஒலிம்பிக் வீராங்கனைகளை அவமதித்தல், போன்ற காரணிகள் இந்தியா முழுவதும் பல உணர்வுகளை எழுப்பினாலும் ஹரியானாவில் இவை ஜாட் இன மக்களின் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டதாக தெரிகிறது.

மீண்டும் ஜாட் இன மக்களின் ஆதிக்கமும், அதிகாரமும் ஹூடா தலைமையில் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவிருப்பதை உணர்ந்த பிற வகுப்பினர் தங்களது பத்தாண்டு கால வேதனைகளை பின் தள்ளி, இந்த ஆதிக்கத்தை எதிர்க்க பாஜக வை சார்ந்தே இத் தேர்தலை அணுகியதாக தெரிகிறது.

ஏறத்தாழ 22 விழுக்காடு உள்ள ஜாட் வகுப்பினர் நில உடமையாளர்களாகவும் அரசு மற்றும் சமூக நிலைகளில் உயர் நிலைகளில் இருப்பவர்களாகவும் உள்ளனர் , இவர்களை சௌதாலாக்களிடமிருந்து மீட்டு ஓரணியில் திரட்டுவது காங்கிரஸ் கட்சிக்கு லாபமானதாக இருந்தாலும், ஆட்சியை பிடிக்க அது மட்டும் போதாது.

பிற்படுத்தப்பட்ட சாதிய தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை உரிய இடம் கொடுக்காததால், ’’34 சமூகத்தினரையும் உள்ளடக்கி முன்னேறுவோம்’’ என்ற ராகுல் காந்தியின் பரப்புரை களத்தில் செயல்படாமல் வெறும் கூக்குரலாகவே பூபிந்தர் ஹூடா தலைமையால் நடத்தப்பட்டது.

ஜாட் ஆதிக்கத்தை எதிர்த்த பிற்படுத்தப்பட்ட சாதிய மக்களை ஒன்று திரட்டியே பாஜக 2014-ல் வென்றது, அஹிர் மற்றும் குஜ்ஜார் மக்களையும் இந்த சமூக கூட்டணியில் இணைத்தே பாஜக தனது அரசியல் வியூகத்தை வகுத்தது. இதை இந்த தேர்தலில் ஹரியானா முதல்வராக இருந்த கட்டாரை மாற்றி விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த நயாப் சிங் சைனியை மார்ச்சில் முதல்வராக்கியதன் மூலம் மீண்டும் முன்னிறுத்தியது அவர்களுக்கு கை கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், 16க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நபர்களுக்கு சீட் கொடுத்து தேர்தலை சந்தித்தது பாஜக.

குர்கான் மற்றும் நகரப் பகுதிகளில் தனது மத ரீதியாக மக்களை திரட்டுவதை இந்துத்துவா நடைமுறைகள் மூலம் கூர்மைப்படுத்தி ‘ இந்துக்களை’ தனது கொடியின் கீழ் திரட்டியது.

கிட்டத்தட்ட 22 விழுக்காடு உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருந்தாலும், அந்த வகுப்பை சார்ந்த தலைவர் குமாரி செல்ஜா அவர்களுக்கு உரிய இடமோ, முக்கியத்துவமோ பூபிந்தர் ஹூடா தரவில்லை. இதை கண்டிக்கவோ அல்லது தலைமை மாற்றத்தை அறிவிக்கவோ காங்கிரஸ் மேலிடம் தவறியது இத் தேர்தல் தோல்விக்கு முக்கியமான காரணியாக தெரிகிறது.

இறுதி கட்டத்தில் செல்ஜாவை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளில் செல்ஜா ஈடுபட நிர்ப்பந்தித்தாலும் ஹூடா கும்பலின் அதிகப் பிரசங்கி தனத்தால் வெளிப்பட்ட பிளவு தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை, ஒரு மாநிலத் தலைமைக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு கண்டிப்பு காட்ட வேண்டும் எப்பொழுது உறுதியாக மாற்றங்கள் கொணர வேண்டும் என்பதில் காட்டிய தடுமாற்றங்கள் இன்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் தோல்வியைத் தழுவியதன் மூலம் வெளிப்படுகிறது. ஆம் ஆத்மியுடன் கூட்டணி கண்டிருந்தால் சுமார் 20 க்கு மேற்பட்ட தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணி அள்ளியிருக்கும் என தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.

பாஜக வின் தொகுதி மேலாண்மையும், வேட்பாளர்களை மட்டுமல்ல, முதல்வரையும் கூட மாற்றி தேர்தலை சந்திக்கும் நேர்த்தி காங்கிரசுக்கு இன்னும் கைவரவில்லை என்றே தோன்றுகிறது.

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் பாஜக வென்றாலும், பல அதிகார அழுத்தங்கள் மற்றும் ‘ தில்லு முல்லுகள்’ மூலம் வெற்றியை பெற்றாலும், எட்டு அமைச்சர்கள் ஒரு சபாநாயகர் உடபட பல பாஜக தலைகள் இத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது ஒரு சாதனையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த வெற்றியால் மோடி-ஷா பெருமைப் பட முடியுமா?

மற்றொரு தேர்தல் களமான ஜம்மு காஷ்மீரில் மோடி ஷா கும்பலின், பாஜக வின் அனைத்து சித்து வேலைகளும், சித்தரிப்புகளும் தவிடு பொடியாகி, யார் வரக்கூடாது என கங்கணம் கட்டி காய் நகர்த்தினார்களோ, அதே அப்துல்லா காங்கிரஸ் கட்சியடன் சேர்ந்து அமோக வெற்றி பெற்றுள்ளது மோடி ஷாவின், ஆர்.எஸ்.எஸ் ஸின் அரசியல் தோல்வி இல்லையா?

தேசீய அளவிலும், சர்வதேச அளவிலும் ‘காஷ்மீர் பிரச்சினையும் ‘ அதில் மோடி ஷாவின் முன்னெடுப்பும் பேசு பொருளல்லவா?

காஷ்மீரில் இத்தேர்தல் மூலம் மக்கள் முன் வைக்கப்பட்ட கேள்வி என்ன?

காஷ்மீர் மாநிலத்தை உடைத்து , அதன் தனித்தன்மையை சீரழித்து , கொஞ்ச நஞ்சமிருந்த சுயாதீனத்தை பறித்து , காஷ்மீர் மக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிய நடவடிக்கைகளை

இந்தியாவுடன் காஷ்மீரை ஒருங்கிணைத்தல் என்ற சித்தரிப்பை அம்மக்கள் ஆதரிக்கிறார்களா என்பதுதான் .

சியாமா பிரசாத் முகர்ஜீ காலமுதல் , முதலில் ஜனசங்க கட்சியும் பிறகு பாரதீய ஜனதா கட்சியும் , ராஷ்டிரிய சுயம் சேவக்சங் கும்பலும் விரும்பியதெல்லாம் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட தனித் தகுதியை (பிரிவு 370) ரத்து செய்ய வேண்டும்,

இந்தியாவுடன் காஷ்மீரம் ‘ஒருங்கிணைக்கப்பட  வேண்டும். பிரிவினைவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும், அம்மாநிலத்தின் முதல்வராக ஒரு ‘இந்து’ அமர வேண்டும்’ என்பதுதான்.

இதை அவர்கள் தொடர்ந்து கூச்ச நாச்சமின்றி, தங்கள் கட்சியின் அடிப்படை நிலைப்பாடாக அறிவித்து வந்தனர். இதனைத் தான் 2019 ஆகஸ்டு 5,6 தேதிகளில் அமீத் ஷா கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டம் (2019) நடைமுறைபடுத்தியது.

அன்று முதல் ஐந்தாண்டுகள் காஷ்மீரிகளுக்கு எந்த சுய மரியாதையும் மாண்பும் கிடையாதென்றும், அவர்களுக்கு வழங்கிய தனித் தகுதி என்பது பிரிவினைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் வழி கோலுகிறது என்றனர்;

இதை நீக்கி, சோரம் போனவை எனக் கூறி மாநிலகட்சிகளை( தேசிய மாநாடு கட்சி, பி. டி.பி கட்சி மற்றும் ஹூரியத் கட்சி) அனைவரையும் சிறையிலடைத்தது, ஏராளமானவர்களை ‘தேச பாதுகாப்பு’ என்பதின் பெயரால் கைது செய்தது,

இதன் மூலம் அமைதியை ஜம்மு காஷ்மீரில் ஏற்படுத்தி “ வளர்ச்சி” யை அங்கு கொண்டு வருவோம், பிரிவினையை வேரறுப்போம் , இந்தியர்கள் அனைவரும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என எக்காளமிட்டது பாஜக.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளையெல்லாம் காஷ்மீர் மக்கள் அங்கீகரிக்கிறார்களா? அதற்கு ஒப்புதல் கொடுக்கிறார்களா? என்பதே இம் மக்களின் முன் விடப்பட்ட சவால், இந்திய மக்களின் முன்னே உள்ள சித்தரிப்பு (narrative) ஐந்து நெடிய ஆண்டுகள் கடந்த பின்னரும் துப்பாக்கி முனைகளின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு இந்த தேர்தல் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக வாய்த்தது.

இத் தேர்தலுக்கு முன்னால் இந்துக்கள் வாழும் ஜம்மு பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை கூட்டியும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பகுதியின் சட்டமன்ற தொகுதிகளை குறைத்தும் ‘ தொகுதிகள் மறு சீரமைப்பு ஆணையத்தின் ‘ மூலம் களத்தை மாற்றியது ஒன்றிய அரசு. அடுத்து புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் தேர்தல் களத்தில் ஏகப்பட்ட ‘ புது முகங்கள்’ சுயேட்சைகளாக களமிறக்கப்பட்டனர்.

இஞ்சினீயர் ரஷீது மற்றும் ஜமாத் கட்சிகளும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கெதிராக களமிறங்கினர். சிறைக் கதவுகள் ‘இவர்களுக்கு’ எப்படி திறக்கப்பட்டன என்பது ‘இந்துக் கடவுளுக்கே’ தெரியும்!

எப்படியும் தாங்கள் தனிப் பெருங்கட்சியாக வென்று அதையே ஜம்மு காஷ்மீர் மக்கள் மோடி ஷா வின் “வளர்ச்சி” பாதைக்கு கிடைத்த வெற்றியாக பறை சாற்ற கனவு கண்டனர்.

அந்த கனவை பகல் கனவாக்கி விட்டனர் ஜம்மு காஷ்மீர் மக்கள். எப்படி நோக்கினும் இந்த தோல்வி பாஜ கவின் -மோடியின்- தூக்கத்தை கலைத்த தோல்வி என்றே கூற வேண்டும்.

ஜம்மு காஷ்மீர், அதிக அதிகாரம், தனித் தன்மை போன்ற விடயங்களுக்கு முற்று புள்ளி வைத்து விடலாம் என்ற மோடியின் அடாவடி முயற்சிக்கு விழுந்த அடி – இவர்கள் இது வரை காஷ்மீரத்தில் எடுத்த அனைத்து அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இதன் எதிரொலி வருங்காலங்களில் பிரதிபலிக்கும்.

ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றியை கோட்டை விட்டது ஒரு பின்னடைவு தான்! ஆனால், அது மாபெரும் தோல்வியல்ல! ஒரு களத்தில் ஏற்பட்ட பின்னடைவே ஒழிய போரில் அடைந்த தோல்வியன்று! காங்கிரசின் வாக்கு சதவிகிதம் 39.03 விழுக்காடாக இருப்பதும், பாஜக வாக்கைவிட 0.60 விழுக்காடே குறைவாக பெற்றுள்ளதும் மேற் கூறிய கூற்றை உறுதி செய்கிறது எனலாம்.

இதனால், இந்தியா கூட்டணியில் காங்கிரசின் பலம் குறைந்துவிடும் என்றோ, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல்களில் காங்கிரசின் வீச்சு குறைந்து விடும் என்று சிலர் கருதுகின்றனர், அவர்கள் மனப்பால் குடிப்பதை நாம் தடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி இந்தியாவின் முது பெருங்கட்சியாக இன்றைய பல்வேறு மாநில கட்சிகளின் தாய் கட்சியாக திகழ்ந்தது .

அன்று தங்களது அசல் வாக்கு வங்கிகளான உயர் சாதி இந்துக்கள் , சிறுபான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டிருந்தது.

பிற்படுத்தப்பட்ட மக்கள் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருந்த தில்லை. உயர்சாதி இந்துக்கள் ஓட்டை பாஜக வடமும், தலித்துகள் வாக்கை மாயாவதி போன்றோரிடமும் இழந்ததனால் செல்வாக்கிழந்த காங்கிரஸ் இன்று ராகுல் காந்தி பிற்படுத்தபட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் அரவணைத்து திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுப்பதே இதற்காகத் தான். இந்த முன்னேற்பாடுகளில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முன்வந்து அனைத்து மக்களுக்கான களமாக காங்கிரசை மாற்ற வேண்டும், ராகுல்காந்தி பிரச்சாரத்தோடு நில்லாமல், கட்சியின் அமைப்புகளில், அதன் பல்வேறு தலைமை தளங்களிலும் ஒரு சாதி ஆதிக்கத்தை தவிர்த்து அனைத்து சமுதாய மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.

அது போன்று பழைய நினைப்பை மறந்து இன்றைய களநிலையை கருத்தில் கொண்டு, பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ‘இறங்கி’ முன்வர வேண்டும் .

இதை மறந்தால் மோடியையும் சங்கப்பரிவாரங்களையும் வீழ்த்த முடியாது! ராகுல் காந்தி சொல்வதை களத்தில் செயல்படுத்த வேண்டும்!

வெறும் பேச்சு வெற்றிகளைத் தராது!

ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time