ஓ..! விபத்திற்கு இவையே உண்மைக் காரணங்களா?

-சாவித்திரி கண்ணன்

அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள்! இது போன்ற விபத்துக்கள் தொடரக் காரணம் என்ன..? நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள காலத்தில் சுலபத்தில் தவிர்க்க முடிந்த இந்த விபத்துக்கள் தொடர் கதையாக என்னென்ன காரணங்கள்? யார் பொறுப்பு? என்பதை விளக்குகிறார் தோழர் இளங்கோவன் (DREU):

மைசூரில் இருந்து பீகாரின் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில்  ஜோலார்பேட்டை, அரக்கோணம் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நேற்று இரவு எட்டரை மணியளவில் வந்து கொண்டிருந்த போது கவரைப் பேட்டையில்  நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மற்றும் சிலர் அதிக பாதிப்பில்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. ஆனால், இதெல்லாம் விபத்து நடக்கும் போது ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும் சடங்காகவே உள்ளதேயன்றி, நடைமுறையில் முன்னேற்றம் கிடைப்பதில்லை.

2023- 24 ஆம் ஆண்டுகளில் சுமார் 40 ரயில் விபத்துக்களை இந்திய ரயில்வே கண்டது. அதிலும் குறிப்பாக 2023 ஜூனில் மட்டுமே இரு கோர விபத்துக்கள்; கந்தன் ஜுங்கா விபத்தில் 16பயணிகள் சாவு. 60 பயணிகள் காயம். ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதலிலோ 293 பேர் உயிரிழப்பு, 1,200 பேர் படுகாயம்…இவை கடுமையான விமர்சனங்களை உருவாக்கின. இந்த ஆண்டு மார்ச்சில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ராஜஸ்தானில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. இப்போதும் விபத்து தொடர்கிறது.

’’இந்த விபத்திற்கு ரயில்வே அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும். பல விபத்துக்கள், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், இவற்றில் இருந்து தற்போதைய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டுமோ..’’என ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

இது போன்ற விபத்துக்கள் தடுக்க முடியாதவையா? தவிர்க்க கூடியவையா?

என்பதற்கு தெளிவாக விளக்கமளிக்கிறார் தோழர் த.இளங்கோவன்; (தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தலைவர்,- DREU)

தற்போதைய பாக்மதி அதிவிரைவு ரயில் விபத்தை பொறுத்த வரை சிக்னல் பெயிலியரே காரணம். இதே காரணம் தான் சென்ற வருட பாலாசூர் எக்ஸ்பிரஸ் விபத்திலும் சொல்லப்பட்டது. தற்போதைய ரயில் கும்மிடி பூண்டியில் இருந்து புறப்பட்ட போது சிக்னல் மெயின் லைனில் செல்லும் படி காட்டுகிறது. அந்தப்படியே ரயில் போய்க்கொண்டு இருக்கும் போது சிக்னல் பாயிண்டோ லூப் லைனுக்கு செட்  ஆகிவிட்டது. இது சிக்னல் பெயிலியரால் ஏற்படுவதாகும்.

ஒவ்வொரு வருஷமும் இந்திய ரயில்வேயில் 55,000 சிக்னல்கள் ‘பெயிலியர்’ ஆகின்றன. அப்படி பெயிலியர் ஆனவற்றை உடனடியாக பழுது பார்க்க துரித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், போதுமான பணியாட்கள் பலம் இல்லை. ஆகவே, பழுதடைந்த சிக்னல்கள் தப்புத் தப்பாகத் தான் வழி காட்டும். இத்துடன் வருடத்திற்கு 200 சிக்னல்கள் பழுதே பார்க்க முடியாமல் முற்றிலும் வீணாகிவிடுகின்றன. இவற்றில் சுமார் 100 சிக்னல்களை மட்டுமே ரயில்வே நிர்வாகம் புதுப்பித்து தருகிறது. புதுப்பிக்காமல் விடப்பட்டவை விபத்துக்களை உருவாக்கும்.

இவை தவிர, வருடத்திற்கு 4,500 கி.மீ தூர ரயில்வே டிராக்குகள் பழுதடைவது வாடிக்கையாகும். ஆனால். அவ்வாறு பழுதடைவதில் 3,000 த்தில் இருந்து 3,500 கீ.மீ வரை தான் பழுது பார்த்து புதிப்பிக்கபடுகின்றன. அந்த வகையில் தற்போது 15, கீ.மீ ரயில்வே டிராக்குகள் பழுதடைந்துள்ளன. இவ்வாறு டிராக்குகள் இருக்கும் பட்சத்தில் தான் தண்டவாளத்தில் ரயில்கள் தடம் புரள்கின்றன.

விபத்துக்கள் நடைபெறாமல் தவிர்க்க ‘கவச்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால். அந்த கவச் தொழில் நுட்பத்தை எல்லா என்ஜின்களிலும் பொருத்த ரூ 45,000 கோடிகள் செலவாகும். ஆனால், அதற்கு இது வரை வெறும் 1,112 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி தந்த அறிக்கையின்படி, ‘2017 – 2022 காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சம் கோடிகள் ரயில்வே துறைக்கு ஒதுக்கி அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவு செய்யும்படி’ அறிவுறுத்தல் கிடைத்தது. ஆனால், மத்திய பாஜக அரசோ, 45,000 கோடிகள் மட்டுமே ஒதுக்கியது. இதனால், பணிகள் அரைகுறையில் உள்ளன என்பதோடு, தற்போது அந்தப் பணிகளை முழுமைப்படுத்த மேலும் ஒரு லட்சம் கோடிகள் தேவைப்படுகின்றன.

இவற்றையெல்லாம் விட, மிக முக்கியமான விஷயம் ரயில்வே டிரைவர்கள் மிக மோசமான பணிச் சூழல்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருவர் அதிகபட்சம் தொடர்ந்து 8 மணி நேரம் பணி செய்ய முடியும் என்றால், ரயில்வே டிரைவர்கள் 14 மணி முதல் 16 மணி நேரங்கள் தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். இது மனித சக்திக்கு மீறிய வேலைப் பளுவாகும். இத்தகைய வேலை பளுவால் அவர்கள் அயர்ச்சியில் தங்களை மறந்து அயர்ந்துவிடுவதற்கு வாய்ப்புண்டு.

ஆகவே, அவர்கள் வேலை நேரத்தை சரியாக வரையறுத்து, அவர்களை போதிய இடைவெளிவிட்டு வேலை வாங்க வேண்டும். இதை நமது பாராளுமன்ற எம்.பி.சு.வெங்கடேசன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசினார். ராகுல்காந்தியும் இதில் உள்ள நியாயத்தை எடுத்துரைத்தார். ஆயினும், ரயில்வே டிரைவர் காலி பணியிடங்கள் சுமார் 18,000 இன்று வரை நிரப்பப்படவில்லை. இப்போது தான் அதற்கான நோட்டிஸ் வந்துள்ளது. ஆகவே, ரயில் விபத்துக்களை தவிர்க்கும் அம்சங்கள் அனைத்தையும் நாம் தொடர்ந்து அலட்சியபடுத்திவிட்டு, ஐயோ…, ரயில் விபத்துக்கள் தொடர்கின்றனவே.. என்று வருத்தப்பட்டு ஆவதென்ன?” என்றார் இளங்கோவன்.

எதிரிகளிடம் இருந்து இந்திய மக்களை காப்பாற்றுவதாகச் சொல்லி, இந்திய இராணுவத்திற்கான செலவை வருடா வருடம் அதிகரித்து இராவணுவத்திற்கு பல லட்சம் கோடிகள் செலவழிக்கும் பாஜக அரசு, ரயில்வே பட்ஜெட்டிற்கு உரிய நிதியை ஒதுக்காமல், எதிரிகளின்றி தன் அலட்சியத்தாலேயே சொந்த நாட்டு மக்கள் உயிரை காவு வாங்குகிறது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time