ஊராட்சி தலைவர்கள் என்றால் கிள்ளுக் கீரையா?

-நந்தகுமார் சிவா

எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை நினைத்த போது பறித்துவிட முடியுமா? ஊராட்சி தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே!  கலெக்டருக்கு பிடிக்கவில்லை என்றால், ஊராட்சித் தலைவர் பதவியை காவு வாங்குவதா?  ஊராட்சித் தலைவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக சட்டப் பிரிவு 205 ஏன்? மிரட்டவா? அடிமைப்படுத்தவா?

முதலாளித்துவ நாடுகளான அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகள் கூட தங்கள் உள்ளூர் அரசுகளை வலுப்படுத்தி,  அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறன. நியூயார்க் நகரின் காவல்துறை அந்த நகர மேயரின் பொறுப்பில் தான் இயங்குகிறது.

ஆனால், உலகின் மிகப் பழமை வாய்ந்த உள்ளாட்சி சென்னை  மாநகராட்சி  என்கிறோம்,  இந்திய ஜனநாயகத்தின் முன்னோடியான  குடைவோலை  முறையை அறிமுகப்படுத்திய  சோழப் பேரரசு என்கிறோம்.. ஆனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி பதவிகள் எப்படி அதிகாரமற்ற அலங்காரப் பதுமைகளாக பாவிக்கபடுகின்றன ..? என்பது அதிர்ச்சியளிக்கிறது. மூச்சுக்கு முன்னூறு முறை மாநில சுயாட்சி குரல் ஒலிக்கும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி உரிமைகள் ஊனப்படுத்தப்பட்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மக்களுக்கு நெருக்கமாக இயங்கக் கூடிய இந்த உள்ளாட்சிகளில் அதன் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்று. சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களை விட மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருப்பது இவர்களே! ஆகவே, இப்படியான உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது என்பது  தனி நபரின் நன்மைக்கானது மட்டுமல்ல, மொத்த ஊரின் நன்மைக்கானதாகும்.

நிதி பகிர்வின் மூலமாக, பொறுப்புகளை வழங்குவதன் மூலமாக அவர்கள் பணி சிறக்க, மற்ற இரண்டு அரசுகளான மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய அணுகுமுறைகளை – அரசியல் கடப்பாடுகளை – உறுதிப்படுத்த வேண்டும்.

ஊராட்சித் தலைவரை தண்டிக்கும் 205

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 205 என்பது ஊராட்சித் தலைவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம்.

இந்த சட்டப்பிரிவு 205 என்பது ஊழல் செய்யும்  ஊராட்சி தலைவர்களை நீக்குவதற்கானதாம். இதைக் காட்டியே மக்களின் உரிமைகளை கேட்கும் உள்ளாட்சித் தலைவர்களை மிரட்டுகிறார்கள், அதிகாரிகள்.  ‘’சட்டப்பிரிவு 205 யின் கீழ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என அடிக்கடி கேட்கிறார்கள்!  ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஊராட்சித் தலைவர்களூக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. மாறாக, மாவட்டம் / வட்டாரம் வித்தியாசம் இன்றி நியாயமாக செயல்படும் பல ஊராட்சி பிரதிநிதிகள் எதிர் கொள்ளும் மிரட்டல் இது.

தணிக்கைகள் பல உண்டு

ஊராட்சி தலைவர்களின் பணியினை ஆய்வு செய்வதற்குப் பல கட்ட நிர்வாக மற்றும் நிதி தணிக்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை  ரீதியான தணிக்கை, உள்ளாட்சி தணிக்கையான லோக்கல் பண்ட் ஆடிட் மூலமான தணிக்கை,  இவற்றையெல்லாம் தாண்டி திட்டங்களின் சமூக தணிக்கை முறைகளும், அதற்காக சமூகத் தணிக்கை சங்கமும்  தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு ஊராட்சியில் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது, ஊழலற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுவது என்பது ஒரு ஊராட்சித் தலைவரின் பொறுப்பில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மாவட்ட, வட்டார அளவிலான நிர்வாக முறையோடு இணைந்த ஒன்று. நிலைமை இவ்வாறு இருக்க, துறை அலுவலர்களே ஊராட்சித் தலைவர்களிடம் இந்த 205 சட்டப்பிரிவைச் சொல்லி ஏன் மீண்டும், மீண்டும்  மிரட்டுகிறார்கள் என்றால்,  மக்கள் பிரதிநிதிகளை விட, அலுவலர்களின் கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ”உங்கள் லகான் நீதித்துறையிடம் இல்லை, எங்களிடம் தான் இருக்கிறது’ என சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு ஊராட்சி தலைவர் அதனை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், குற்றம் செய்யாத ஒருவரின் பதவியைப் பறிக்கலாமா? அது முறையாகுமா? குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அலுவலர் மூலமாக பறிக்கப்படுகிறது என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அந்த அலுவலர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம். ஆனால், நாம் ஒரு குடியரசு.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவர் பதவியினை சட்டப் பிரிவு 205 ஐ பயன்படுத்திப் பறித்திருக்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர். அந்த ஊராட்சித் தலைவர், அதற்கு முன் அவரது ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் நிறுவனங்கள் முறையாக வரிகளைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதைச் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார். பிறகு, உயர்நீதிமன்றத்தில் வழக்கும்  தொடுத்திருக்கிறார். வழக்கில், வரி ஏய்ப்பு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊராட்சிக்கு முறையான தொகையினை செலுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவரிடம் நாம் பேசிய போது, “நான் ஊழல் செய்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், இந்த நடவடிக்கையானது வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களின் அழுத்தத்தினாலும், கட்சிகாரர்களின் அழுத்தத்தாலும், நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்த நான் வலியுறுத்தியதாலும் தான் ! இதைத் தவிர வேறு காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”என அழுத்தமாகச் சொல்லுகிறார்.

“நான் வழக்குத் தொடுத்த பின், எனது ஊராட்சியைப் பலமுறை அலுவலர்கள் ஆய்வு செய்தார்கள். ஆனால் எந்த முறைகேட்டினையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார், அருந்ததியர் சமூகத்தினை சேர்ந்த இந்த ஊராட்சி தலைவர். ஆக, நியாயத்திற்காக போராடியவரை கலெக்டர் எப்படி தண்டிக்க முடியும்? யாருக்கு ஆதரவாக, யாரை பலிகடா ஆக்குகிறார்கள்..?

2023 செப்டம்பரில், இதே போல தென்காசி பக்கத்தில் சீவநல்லூர் கிராம பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டது தான் நினைவுக்கு வந்தது.

மிரட்டுவது தான் சமூக நீதியா?

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பட்டியல் இன, பட்டியல் பழங்குடி தலைவர்கள் இருக்கிறார்கள்.  அதே போல 50 சதவீதத்திற்கும் மேலான ஊராட்சி  பெண் தலைவர்களும் உள்ளார்கள். பல்லாண்டுக்கால அடக்கு முறைகளை தாண்டி இந்த தலைமுறையினர் தான் நிர்வாக  வாய்ப்பினை உள்ளாட்சிகளில்  பெற்றிருக்கிறார்கள். அவர்களை வலுப்படுத்துவது தானே தமிழ்நாட்டின் சமூக நீதி பயணத்தில் முக்கியமானதாக இருக்கும். 205… 205… என அவர்களை மிரட்டிக் கொண்டிருப்பது சமூக நீதியாகுமா?

மாவட்ட  நிர்வாகம், உண்மையில் ஊராட்சிக்கான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த விரும்பினால்  முதலில்  திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும். வலுக்கட்டாயமான கமிஷன் முறைகளைக் கட்டுப்படுத்துவது, ஊராட்சி மன்ற,  கிராமசபை தீர்மானங்கள் வாயிலாக மக்கள் கோரிக்கைகளை  நடைமுறைப்படுத்துவது என மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்த வேண்டும்.

தன்னை பதவி நீக்கம் செய்து விடுவார் என்ற அச்சம் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கோ, அமைச்சருக்கோ தரப்படுவதில்லை. அப்படி அவர்களை அச்சத்தில் வைக்க முடியுமா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்ப ஊராட்சித் தலைவர் என்றால் இவர்களுக்கு கிள்ளுக் கீரையா? அவ்வளவு இளக்காரமா?

ஊராட்சிகள் என்பது அலகில் சிறிதாக இருந்தாலும், அது செயல்பாட்டில் மிக முக்கியமான அலகு. இந்தியச் சுதந்திரம் என்பது நகரங்களிலிருந்து மட்டும் உருவானது அல்ல. ஒவ்வொரு சிற்றூரிலிருந்தும், இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு குடிசையிலிருந்தும் புறப்பட்ட எழுச்சி தான் நமக்கு சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. அது தான் வரலாற்று உண்மை.

2016, அக்டோபர் முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் சுமார் 27 மாவட்டங்களில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறாமல், தனி அலுவலர் காலம் இருந்தது. மற்ற 9 மாவட்டங்களில் 2021 வரை, ஐந்து ஆண்டுகள் தனி அலுவலர் காலம் தான். இந்த காலகட்டத்தில் ஊராட்சித் தலைவரின் அதிகாரங்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்பட்டிருந்தது. பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த இந்த தனி அலுவலர்கள் மீது எழ்ந்தனவே? அந்த காலகட்டத்தில்  எத்தனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவியினை  பறித்துள்ளீர்கள்?

ஊராட்சிகளில் அலுவலர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து இயங்கினால் தான் மக்களுக்கு முன்னேற்றம் வரும். ஆனால், சம வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஊராட்சி பிரநிதிகள் வெறும் டம்மிகளாக  முடக்கப்படுவதே தொடர்கிறது.

சட்டத்தை நீக்க முன்வருமா அரசு?

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில், வெளிப்படைத் தன்மைக்கு பல வாய்ப்புகள் இருக்கும் போது,  ஒரு மக்கள் பிரதிநிதியை நிரூபிக்கப்படாத நிர்வாக குற்றங்களுக்காகப் பதவி பறிப்பது என்பது இந்த 2024ல் பொருத்தமான ஒரு ஜனநாயக முறையாக இருக்க முடியாது. இன்றைக்கு ஊராட்சிகளின் வங்கிக் கணக்குகள்  மையப்படுத்தப்பட்டு , ஒரே வங்கி கணக்கில் தான் அனைத்து கிராம ஊராட்சிகளின்  நிதிகளும் பராமரிக்கப்படுகின்றன. சென்னையில் இருந்தவாறு அலுவலர்கள் ஒவ்வொரு ஊராட்சியின் வரவு – செலவு கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த முறை கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிடும் இந்த காலகட்டத்தில் இன்னும் இந்த 205  சட்டப் பிரிவினை வைத்துக் கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைத் தவறான முறையில் முடக்கி விடக்கூடாது என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளோரின் விருப்பமாகும்.

வரும் டிசம்பர் மாதத்தில் சுமார் 27 மாவட்டங்களுக்குப் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்க  வேண்டும். அந்த தேர்தலுக்கு முன்பு இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை.  இதற்கான அதிகாரம் மாநில அரசிடம் தான் இருக்கிறது. ஊராட்சிகளை முடக்கியிருக்கும் இந்த சட்டப்பிரிவை  நீக்க முன்வருமா தமிழ்நாடு அரசு?

நந்தகுமார் சிவா

சமூக செயல்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time