திமுகவின் உண்மையான தலைவர் யார்?

சாவித்திரி கண்ணன்

இன்றைய திமுகவிற்கு உண்மையான தலைவர் யார் என்ற குழப்பம் அந்த கட்சிக்குள்ளும்,கூட்டணி கட்சிகளுக்கும் எழுந்துள்ளது?

இன்னின்ன தொகுதியில் இன்னார் தான் திமுக வேட்பாளர்!

இவருக்கு வாய்ப்பில்லை, இவருக்கு வாய்ப்பு!

இன்ன வயதுக்குள்ளானவர்கள் மட்டுமே வேட்பாளராக தேர்வாவார்கள்!

திமுக இத்தனை இடங்களில் நிற்கும், அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு சீட்டுகள் தரப்படவுள்ளன.

இந்த மாதிரி செய்திகளையெல்லாம் சொல்லும் அதிகாரம் அந்த கட்சித் தலைமைக்குத் தான் கருணாநிதி காலம் வரை இருந்தது. ஆனால்,அந்த அதிகாரம் தற்போது பிரசாந்த் கிஷோரின் ’ஐபேக்’ நிறுவனம் வசம் சென்றுவிட்டதா? தெரியவில்லை.

அந்த அளவுக்கு அந்த தனியார் நிறுவனத்தின் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்கிறது!

விநாயகர் சதுர்த்திக்கு உதய நிஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்து சொன்னதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் உள்ளதாக சொல்கிறார்கள்!

அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்காக தேர்தல் வியூகம் வகுத்து செயல்பட பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி என்ற‘ஐபேக்’ நிறுவனத்திடம் சுமார் 350 கோடியில் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது.

தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பொறுத்துத் தான் அரசியல் கட்சிகளின் எதிர்காலமே உள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வெற்றி என்பது அந்தந்த கட்சிகளின் கொள்கை, மக்கள் சேவை, தலைவர்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வந்தது அந்தக் காலத்தில்! ஆனால்,இன்றைய தினம் வலுவான பிரச்சார யுத்திகளும்,பணபலமும் தான் முக்கிய தேவையாகிவிட்டது. சிங்கிள் டீ குடித்துவிட்டுபசியோடு லட்சிய நோக்கத்துடன் கட்சிப் பணியாற்றிய தொண்டர்கள் காலம் மலையேறிவிட்டது. பணம் செலவழித்து தான் எதையும் செய்யமுடியும் என்ற நிலை தோன்றிவிட்டதால்இன்றைய தினம் பிரசாந்த் கிஷோர் போன்ற கார்ப்பரேட் அறிவாளிகள் தேவைப்படுகிறார்கள்.

எனினும் திமுக போன்ற களப் பணியாளர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியை எங்கேயோ இருந்து வந்த ஒரு கார்ப்பரேட் ஆட்டிவைப்பதா? மக்களிடையே கலந்து உறவாடி களப்பணியாற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும் உள்ள ஒரு பாரம்பரிய கட்சிக்கு வட நாட்டிலிருந்து வேலை செய்ய தனியார்  நிறுவனம் எதற்கு?’’ என்று கட்சிக்குள் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஒரு அதிருப்தி இருக்கிறது!

எவ்வளவு தான் தொண்டர்கள் இருந்தாலும்,இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நவீன விளம்பரங்களின் வழியே மக்கள் மனதைக் கவர, தேர்தல் வியூகங்களை வகுக்க அதற்குத்தக்க  நிபுணர்களை பயன் படுத்த வேண்டியது அவசியம் தான் என்றும் சிலர் கட்சிக்குள் வாதம் வைக்கிறார்கள்!

பிரசாந்த் கிஷோர் நம்பத்தக்கவரா?

கிஷோர்  தேர்தல் வெற்றிக்கான சூத்திரதாரியாக ஒரு பக்கம் போற்றப் பட்டாலும், அவர் சில மோசமான தோல்விகளையும் பெற்றுத் தந்துள்ளார் என்பதை புறந்தள்ள முடியாது.

2017 ஆம்ஆண்டு உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் வேலை பார்த்தும் அக்கட்சி மொத்த இடமான 319  ல் வெறும் 7  இடங்களை மட்டுமே பெற்று படு தோல்வியை சந்தித்தது. இதனால், ’’காணவில்லை பிரசாந்த் கிஷோர், கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் பரிசு’’ என்று காங்கிரசார் அங்கு போஸ்டர் ஒட்டினார்கள்! இதனால்,உ.பி பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார் பிரசாந்த் கிஷோர்!

2019 ஆம்ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனைக் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் வேலை பார்த்து தந்தார்.ஆனால்,அக்கட்சி சென்ற தேர்தலில் வென்றதை விடவும் ஒன்பது  தொகுதிகள் குறைவாக வென்றது.அதாவது  124  இடங்களில் போட்டியிட்டு வெறும்  54  இடங்கள் மட்டுமே  வென்றது. பாதி இடங்களில் கூட வெல்ல முடியவில்லை. இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதால் மகாராஷ்டிரா பக்கமே கிஷோர் தலை காட்டவில்லை.

பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை அவர் எந்த கட்சி காசு தந்தாலும் அவர்களுக்கு வேலை பார்ப்பார். நாளை அதிமுக அழைத்தாலும் செய்வார். இதற்குள் திமுகவின் உள் விவகாரங்கள் அவருக்கு அத்துப்படியாகிவிடும் என்பதால், திமுகவிற்கு பாதுகாப்பில்லை!

நிதீஸ் குமாருக்கு நிகழ்ந்த துயரம்

பிரசாந்த் கிஷோரின் சொந்த மாநிலத்திலேயே அவருக்கு நல்ல பெயரில்லை! கிஷோரின் பராக்கிரமங்களை கேள்விப்பட்டு 2015 ஆம் ஆண்டு பீகார் முதல்வர் நிதீஸ்குமார் தன்  ஆலோசகராக  பிரசாந்தை நியமித்து, கல்வி, மருத்துவம், மின்சாரம்  உள்ளிட்ட ஏழு அம்ச திட்டம் ஒன்றை அமல்படுத்த வாய்ப்பளித்தார். பிரசாந்த் கிஷோர் அரசிடம் அதற்கான தொகையையும் பெற்றார். ஆனால், அதற்குப் பிறகு அவரால் இந்தப் பணிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. முதலமைச்சரே பிரசாந்த் கிஷோரின் அப்பாயிண்மெண்ட் கிடைக்காமல் நொந்து போனார். இறுதியில், ’’பிரசாந்த் கிஷோர் வேண்டாம்’’ எனகட்சி தரப்பிலும், ஆட்சி தரப்பிலும் அழுத்தம் வரவே பிரசாந்த் கிஷோரை நீக்கினார்.

பிரசாந்த் கிஷோர் ஏன் விரும்பப்படுகிறார்?

இவ்வளவு பின்னடைவுகள் கொண்டவராக இருந்தாலும், ஏதாவது ஒருசில பெரிய கட்சிகள் அவரை பயன்படுத்தவே செய்கின்றனர்.

காரணம், அவர் கட்சித் தலைவர்கள் மீதான ஈர்ப்பை சினிமா கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு மாற்றுவார்! அதை மோடி சிஷயத்தில் செய்து காட்டினார். அதாவது முதலமைச்சர் அல்லது பிரதமர் வேட்பாளரை  பிராண்ட் பிரமோட்டராக மாற்றிவிடுவார்..!

தலைவர்களின்  தோற்றப் பொலிவு ,நடை, உடை பாவனைகள் குறித்த ஆலோசனைகள் தருவார்.  பத்திரிகையாளர் சந்திப்புகளில் எப்படி பேச வேண்டும்,எதை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை சொல்வார். மக்கள் சந்திப்பு,பேரணி போன்றவற்றை திட்டமிட்டு,பொது மக்களிடம் எப்படி பழக வேண்டும் எனக் கூறுவார்.

தலைவரின் பிரச்சார வியூகங்களை வகுப்பார்,மேடைபேச்சுகளை தயாரிப்பார், வெற்றிக்கான சுலோகங்களை பிரபலப்படுத்துவார். வெற்றிக்கான தீம் பாடல்களை உருவாக்கி கொடுப்பார்..

இரவு,பகல் பாராமல் பேஸ்புக்,வாட்சப்,இண்டர்காம்,டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் ஆதரவான செய்திகளை பரப்புவார்.

பிரபல பத்திரிகைகளில் ஆதரவாக எழுத செய்வது, தொலைகாட்சிகளில் பேசுபவர்களை ஆதரவு நிலை எடுத்து பேசவைப்பார். விளம்பரங்களை வடிவமைப்பது ஒளிபரப்புவார்.

எதிர்கட்சிகள் தொடர்பான எதிர்மறைசெய்திகளை பரப்புவதையும் செய்வார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கட்சிக்காரர்கள் தலைமையை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு கேடயமாக இவர் இருப்பதால்,தங்களுக்கு பிடிக்காதவர்களை ஓரம் கட்ட,ஒழிக்க கட்சித் தலைமைக்கு உதவுகிறார்.

‘அறம்’ சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time