தொழிற்சங்க வரலாறே பெரும் தலைவர்களான வ.உ.சி, திரு.வி.க, சிங்கார வேலர் போன்றோரில் இருந்தே தொடங்குகிறது. ‘குரலற்றவர்களின் குரலே தொழிற்சங்கத் தலைவர்கள்’. அரசியல் இல்லாமல் தொழிற்சங்கம் எங்கிருக்கிறது? ஆயினும், அரசியல் கடந்து தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டியுள்ளதை அலசுகிறார் ம.ராதாகிருஷ்ணன்(AITUC);
‘தொழிற்சங்கத்தில் வெளியாட்கள் இருக்கக் கூடாது’ என்றால், முதலாளியும், நிர்வாகமும், அரசாங்கமும், ஏனையோரும் தொழிற்சங்கத்துக்கு வெளியாட்கள் தானே!
பி&சி மில் ( பக்கிங்காம் கர்னாடிக்) வாசலில் துணிக்கடை வைத்திருந்த ஜி. செல்வபதி செட்டியார், அரிசி வியாபாரம் செய்து வந்த ஜி. இராமாஞ்ஜுலு நாயுடு இருவரும் வெளியாட்கள் தான் இவர்கள் இருவரும் தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ’மெட்ராஸ் லேபர் யூனியன்’ உருவாக காரணமாக இருந்தார்கள்.
தொழிற்சங்கம் வைப்பது குற்றம் என்று தான் சட்டம் சொன்னது. தொழிற்சங்கம் வைக்க சட்டம் கேட்டு போராடினர். பிரிட்டிஷ் அரசாங்கம் 1926 ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டம் இயற்றியது. நிர்வாகிகளில் 50 சதவீதம் பேர் வெளியாட்கள் இருக்கலாம் என்று தான் இச்சட்டம் சொன்னது. இப்போதும் இந்த சட்டம் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு எதிராக பலமான தொழிற்சங்க இயக்கம் தொழிலாளர்கள் இல்லாத வெளியாட்களால் உருவாகி வளர்ந்த நேரத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது.
தொழிற்சங்க சட்டப்படி தொழிற்சங்கத்தில் வெளியாட்கள் இருக்கலாமா? கூடாதா? என்பதை அந்த சங்கத்தின் தொழிலாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரொருவருக்கும் உரிமை இல்லை.

மேலும், ‘தொழிற்சங்கத்தில் வெளியாட்கள் இருக்க கூடாது’ என்று ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றி உள்ள சட்ட தொகுப்பில் உள்ளது. ‘அந்த சட்டத் தொகுப்புகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்’ என்று தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தையும் திமுக ஆதரித்ததெல்லாம் என்ன?
தமிழ்நாட்டில் இந்த சட்ட திருத்தங்களுக்கு இது வரை தமிழ்நாடு அரசு விதிகள் உருவாக்கவில்லை.
தமிழ்நாடு போன்று 15 மாநிலங்களில் விதிகள் உருவாக்கவில்லை. விதிகள் உருவாக்காத மாநில அரசுகள் அனைத்திற்கும் ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர் அமைச்சர் அவர்கள் ”தொழிற்சங்கங்கள் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு பொதுமக்கள் கருத்து கேட்டு வரைவு விதிகள் வெளியிடமாட்டோம்” என்று சொன்ன ஓரிரு நாட்களில், தொழிற் சங்கங்களுக்கு தெரிவிக்காமலே எடப்பாடியார் ஆட்சியில் தயாரித்து வைத்திருந்த வரைவு விதிகள் பொது வெளியில் வெளியிடப்பட்டது.
தொழிற்சங்கங்கள் அனைத்தும் கடுமையாக ஆட்சேபித்ததால், தமிழ்நாடு அரசு இது வரை விதிகளை உருவாக்காமல் இருக்கிறது. மாநிலங்கள் அனைத்தும் விதிகள் உருவாக்காததால் தான் ஒன்றிய அரசு நிறைவேற்றிய நான்கு சட்டத் தொகுப்புகள் அமுலுக்கு வரவில்லை என்றாலும், மோடி அரசு குறுக்கு வழிகளை தேடிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ, ஒன்றிய மோடி அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் அமுலில் இருப்பதாகவே பாவித்து செயல்பட்டு வருகிறது.
உறுப்பினர்கள் தனக்கான தலைவர் யார் என்று முடிவு செய்வது தானே ஜனநாயகம். தொழிற்சங்கத்தில் தங்களுக்கான தலைவர் யார்? என்று முடிவு செய்யும் உரிமை அதன் உறுப்பினர்களான தொழிலாளர்களிடம் இருப்பது தானே ஜனநாயகம்.
அடுத்து ‘அரசியல் சார்புள்ள தொழிற்சங்கம் என்பதால் ஏற்க முடியாது’ என்று ஒரு வாதம். அரசியல் இல்லாமல் தொழிற்சங்கம் என்பதே இல்லை. இந்தியாவில் பல கட்சிகள் தொழிலாளர் அணி என்று தான் வைத்திருக்கிறது. கட்சி துவங்கும் போதே தொழிலாளர் அணி பிறந்து விடுகிறது. ஆனால் எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர் அணி வைத்திருக்கவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வருவது அந்த தொழிற்சங்கத்தில் அவர்கள் பொறுப்பில் இருக்கிற காரணத்தால் அல்லாமல் கட்சி தலைவர்கள் என்பதால் அல்ல.
தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கிற அரசியல் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இயல்பாகவே தொழிலாளி வர்க்க அரசியலை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஆதரவு தந்து உடனிருக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லாத பிற கட்சிகளில் பல தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கிற அரசியலை வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன.
அதற்காக கட்சிக்கு தொழிற்சங்கம் துவங்கி அந்த தொழிற்சங்கம் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கிற அரசியலை முழுமையாக முன்னெடுத்து விடாமல் கட்டுப்படுத்துகின்றன. இதனால் தங்கள் கட்சி தொழிலாளர்களுக்கு எதிராக போகும் போது அதன் தொழிற்சங்கங்கள் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடிய போது பாஜகவின் பிஎம்எஸ் சங்கமும் இணைந்து போராடியது.
2014 இல் மோடி ஆட்சி அமைந்ததும் இப்போது தான் ஆட்சி அமைந்துள்ளது. ஒராண்டு அவகாசம் தர வேண்டும் என்று கேட்டது. மத்திய தொழிற்சங்கங்கள் ஓராண்டு மோடி அரசு தொழிலாளர்கள் நலனுக்கு எதாவது செய்யும் என்று எதிர்பார்த்து பிஎம்எஸ் சொன்ன ஓராண்டு காலம் காத்திருந்தன. மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப்பட்ட நிலையில் 2015 செப்டம்பர் 2 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்த திட்டமிட்டன. மோடி அரசு எவ்வாறெல்லாம் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்று விரிவான பரப்புரை மேற்கொண்ட போது பாஜகவின் பிஎம்எஸ் தோழர்களும் மோடி அரசை தோலுரித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.
ஆனால், வேலை நிறுத்தத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தொழிலாளர் அரசியல் செய்வதாக (labour politics) மற்ற சங்கங்களை குற்றம் சாட்டி பிஎம்எஸ் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று விலகிப் போனது. ஆனால், மன்மோகன் சிங் ஆட்சியில் தொழிலாளர் அரசியல் செய்வதற்கு தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடியது போலும்! பிஎம்எஸ் அறிவிப்பை மீறி, அந்த சங்க தொழிலாளர்கள் காவிகொடியுடன் பல இடங்களில் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பிஎம்எஸ் கூட்டு போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டது பிஎம்எஸ் விருப்பத்தால் அல்ல. அதன் பின்னரும் வெவ்வேறு துறைகளில் துறை ரீதியான ஒன்றிய அரசை எதிர்த்த கூட்டு போராட்டங்களில் பிஎம்எஸ் பங்கேற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
நாற்பத்து நான்கு சட்டங்களை நீக்கி, நான்கு சட்டத் தொகுப்புகளாக தன்னிச்சையாக நிறைவேற்ற முடிவு செய்த மோடி அரசு 2019 இல் ஊதிய சட்டத்தொகுப்பை நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதனை எதிர்த்து வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மட்டுமே. இதில் இடது சாரிகள் எண்ணிக்கையை கழித்தால் மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் எத்தனை பேர் என்று தெரிகிறது அல்லவா! இடதுசாரிகள் தவிர்த்த பிரதான கட்சிகள் எவையுமே இதை எதிர்த்து வாக்களிக்கவில்லை.
மற்ற மூன்று சட்டத் தொகுப்புகளை 2020 செப்டம்பர் 22 அன்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த சில நிமிட நேரத்தில் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி நிறைவேற்றியது பாஜக அரசு.
தமிழ்நாடு அரசு 8 மணி வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேரம் அல்லது எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்க சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
ஏஐடியுசி தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதில் திமுகவின் தொமுச பங்கேற்கவில்லை. மூன்று அமைச்சர்கள் தொழிற்சங்கங்களோடு பேசினர். தொமுச பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சண்முகம் அவர்கள் சட்டத்திருத்தம் எவ்வாறெல்லாம் தவறானது. ஏன் திரும்ப பெற வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்து பேசினார். கலந்து கொண்ட மூத்த தொழிற்சங்க தலைவர் இரா.குசேலர், கட்சியின் பிரதிநிதியாகவும், ஆட்சியின் பிரதிநிதியாகவும் மூன்று அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்தை நியாயப்படுத்தி பேசினர். அதே கட்சியை சேர்ந்த சண்முகம் தொழிற்சங்க தலைவராக தொழிலாளர்கள் பக்கம் நின்று பேசினார். ” என்று குறிப்பிட்டார்.
நான்கு சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெர்iவித்து செப்டம்பர் 23 ஆம் தேதியை கருப்பு நாளாக கடைப்பிடிக்க ஐஎன்டியூசி, ஏஐடியுசி,எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று 23,24 தேதிகளில் தமிழ்நாட்டின் மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து கருப்பு நாள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இதற்கான திட்டமிடல் கூட்டம் செப்டம்பர் 11 இல் தொமுச அலுவலகத்தில் அதன் பொருளாளர் தோழர் கி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் தொழிலாளர் துறையும், காவல்துறையும் நடந்து கொண்ட அத்துமீறல் குறித்து விவாதிக்கப்பட்டது. செப்டம்பர் -18, 2024 அன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே சாம்சங் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்தது காவல்துறை. கூடும் தொழிலாளர்களிடம் ’அனுமதி மறுக்கப்பட்டது’ என்பதை தெரிவித்து, கலைந்து போகச் சொல்கிறோம் என்று சொன்னதையும் காவல் துறை ஏற்கவில்லை. வரும் தோழர்களை வர வர கைது செய்வோம் என்று பிடிவாதமாக நடந்து கொண்டனர். இந்த நிலையில் தொமுச பங்கேற்கவில்லை. மற்ற தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து வந்த தோழர்கள் செய்வதறியாது சென்றனர்.
செப்டம்பர் 23,24 தேதிகளில் கருப்பு நாள் ஆர்ப்பாட்டங்களிலும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையை தோழர்கள் பலர் பேசினர்.
அக்டோபர் -10, 2014 அன்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்தவாறு, தொழிற்சங்கம் அமைத்து விண்ணப்பித்தால் அதனை 45 நாட்களுக்குள் பதிவு செய்து தருவது தொழிலாளர் துறையின் கடமையாகும். தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்வது குறித்து, நிர்வாகம் ஒப்புதல் தர வேண்டிய அவசியமோ, ஆட்சேபனை செய்வதற்கான வழிமுறையோ சட்டப்படி இல்லை. காரணமே இல்லாமல் சங்கத்தை பதிவு செய்ய மறுப்பது சட்ட மீறலாகும். தொழிலாளர் துறையே சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும், காவல்துறை அத்து மீறல்களை கண்டித்தும், அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை பிரச்சினைகளை தீர்க்க உதவவில்லை என்ற நிலையிலும், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து தரவும், அத்துமீறிய காவல் துறை நடவடிக்கையை உடனே கைவிடவும், சங்கத்தோடு பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி, போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அக்டோபர் -16, 2024 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குறித்த அனைத்து சங்கங்களின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் தொமுச பங்கேற்கவில்லை. இது குறித்து சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் தொமுச குறித்து பரப்பப்படுகின்றன.
தொமுச 8 மணி வேலை நேரத்தை 12 மணி வேலை நேரமாக மாற்றிய போது அதனை நீக்குவதற்கு செலுத்திய பங்களிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் தொமுச பங்கேற்கவில்லை என்பதால் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு எதிராக தொமுச இருக்கிறது என்று முடிவு செய்து விட முடியாது.
ஒரு தொழிற்சங்கம் குறிப்பிட்ட போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால் மட்டும் உண்மை நிலையை ஆய்ந்து அறியாமல் அதனை துரோகம் செய்வதாக முத்திரை குத்துவது தொழிற்சங்க ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும்.
Also read
தொழிலாளிகள் சிவப்பு கொடி பிடித்திருந்தாலும், கருப்பு கொடி பிடித்திருந்தாலும், காவி கொடி பிடித்திருந்தாலும் வேறு என்ன நிறத்தில் கொடி பிடித்து இருந்தாலும் அவர்களுக்கு கோரிக்கைகள் ஒன்றே! இது தொழிற்சங்கங்களின் அரசியல். அதற்காகவே அவர்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கங்கள் தனித்தும், மற்ற தொழிற்சங்கங்களோடு இணைந்தும் போராடுகின்றன. போராட்ட வடிவங்கள் மாறுபடலாம். அது அந்தந்த தொழிற்சங்கத்தின் சூழல், அடிப்படை கொள்கை உள்ளிட்டவற்றை பொருத்தது. இந்த அடிப்படை புரிதலில் தான் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றன.
எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேசும் போது கட்சி அரசியல், தொழிலாளர் நலன் சார்ந்த அரசியல் அதனை வெளிப்படுத்துவதில் தொழிற் சங்கங்களுக்கு உள்ள கட்சி அரசியலின் நெருக்கடி யாவற்றையும் உணர்ந்து, தொழிற்சங்க ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காமல் விவாதித்து தொழிலாளர்கள் நலனில் உடன் நிற்பது பொருத்தமானது. அதுவே இன்றைய அவசிய தேவையாக உள்ளது. தொழிற்சங்க இயக்கம் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும்.
கட்டுரையாளர்; ம. இராதாகிருஷ்ணன்.
ஏஐடியூசி, தமிழ்நாடு பொதுச் செயலாளர்
சரியான ஆணித்தரமான பதில்களை அளிக்கக்கூடிய தொழிலாளர்கள் நலன் காக்கும் அவசியத்தையும் விவரங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை .. ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதுடன் 16ஆம் தேதி நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திலும் பங்கெடுக்க வேண்டும். கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள் !
என்ன கட்சி அரசியல் நெருக்கடி? 1960 களில் கம்யூனிஸ்டுகள் நிமிர்ந்து நின்றது யூனியன்களால் தான். பாட்டாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் போராடிய கம்யூனிஸ்ட் இன்று இல்லை.ஸ்டாலின் தொழிற்சங்கம் தொடங்க அனுமதித்தால் மோடி நிச்சயம் தடுக்க முடியாது.. அரசு போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்க எந்த யூனியனிடம் திட்டம் உள்ளது?